Entertainment lifestyles News

PHONEPE: மும்மூர்த்திகளின் மகத்தான வெற்றிக் கதை!

இன்றைய உலகில், நவீனத்துவத்தின் காரணமாக அனைத்திலும் எளிமையை தேடுவது இயல்பாகிவிட்டது. எந்தப் பொருளையும் தாமதமாக கிடைக்கவோ, வரிசையில் நின்று வாங்கவோ மக்கள் தயாராகவில்லை. வங்கிகள் விஷயத்திலும் அப்படிதான். நவீனத்துவம் இதற்கான காரணமாக அமைந்துவிட்டது. வங்கித் துறை இந்த விஷயத்தில் ஒரு புரட்சியைக் கண்டுள்ளது.

யுபிஐ (UPI) டிஜிட்டல் பேமென்ட் துறை வளர்ச்சிக்கு பின் வங்கிகளில் நீண்டநேரம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. யுபிஐ அடிப்படையிலான FinTech அப்ளிகேஷன்கள் இந்த மாற்றத்துக்கான வழிகளை உருவாக்கியுள்ளது என்றால், இந்த FinTech சந்தையில் முன்னணியில் இருந்து டிஜிட்டல் பேமென்ட் துறையில் புரட்சியை செய்த நிறுவனம் என கண்ணை மூடிக்கொண்டு PhonePe (ஃபோன் பே) நிறுவனத்தைச் சொல்லலாம்.




கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை எளிமையாக்கிய ஃபோன்பே தான் இந்த யூனிகார்ன் அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் நிறுவனம். PhonePe உருவான கதை யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) கட்டமைக்கப்பட்ட முதல் பேமென்ட் அப்ளிகேஷன்களில் ஃபோன் பே-யும் ஒன்று. பில்லியன் பரிவர்த்தனை என்ற மைல்கல்லைத் தாண்டிய முதல் யுபிஐ பேமென்ட் ஆப் என்கிற பெருமையை பெற்றதும் ஃபோன்பே தான்.

மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் ஃபோன் ரீசார்ஜ்கள் வரை அனைத்து சேவைகளும் ஃபோன்பேவில் கிடைக்கும். அதுமட்டுமில்லை, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் பராமரிப்பது, ஆன்லைனில் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங்… இவ்வளவு ஏன் தங்கத்தில் முதலீடு செய்வது, ஷேர் மார்க்கெட் முதலீடு, இன்சூரன்ஸ் என நிதி தொடர்பான பல சேவைகளை வழங்கி இந்திய டிஜிட்டல் பேமென்ட் துறை சந்தையில் முதலிடத்தில் இருப்பது PhonePe.

2022-ல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகம் ஃபோன் பே மூலமாக செய்யப்பட்டவையே. இதனால்தான், டிஜிட்டல் பேமென்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என அழைக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஃபோன்பே எட்டியதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் மூவர். சமீர் நிகம், ராகுல் சாரி மற்றும் பர்சின் என்ற இந்த மூவர்தான் ஃபோன் பே நிறுவனத்துக்கு அடித்தளம் இட்டவர்கள்.




சமீர் நிகம்

இந்தியாவின் மும்பை (பம்பாய்) பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் படிப்பு, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றவர் இந்த சமீர் நிகம். ஃபோன் பே-வில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சமீர், அதற்கு முன் Shopzilla, Inc நிறுவனத்தில் தயாரிப்பு மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ராகுல் சாரி

ஹைதராபாத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழர்தான் இந்த ராகுல் சாரி. ஃபோன் பே-வில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் இவரும் மும்பை பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பயின்றவர். அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்பாக இருந்த ராகுல், ஆண்டியாமோ சிஸ்டம்ஸ் இன்க் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சிஸ்கோ சிஸ்டம்ஸில் மூத்த மென்பொருள் பொறியாளராகவும் பாணியாற்றியிருக்கிறார்.

பர்சின் இன்ஜினியர்

பர்சின் இன்ஜினியர் மும்பை பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டப்படிப்பு, பின்னர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஃபோன் பே-வில் தலைமை நம்பகத்தன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் பர்சின் அதற்குமுன் Shopzilla.com, SoftAware Inc., MarchFirst Inc., Twin Sun Inc. மற்றும் AT&T குளோபல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் என பல நிறுவனங்களில் பணியாற்றிய பர்சினுக்கு டாட் காம் துறையில் மட்டுமே 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.




இந்த மூவருக்கும் பொதுவான விஷயமாக மும்பை பல்கலைக்கழகம் உள்ளது. மூவருமே மும்பை பல்கலைக்கழக மாணவர்கள். ஆனால், அது அவர்களை ஃபோன் பே நிறுவனத்துக்கான பயணத்தில் ஒன்றிணைக்கவில்லை. கல்லூரியை முடித்துவிட்டு பல நிறுவனங்கள் தனித்தனியாக பணியாற்றி இவர்களை மீண்டும் ஒருங்கிணைந்தது தொழில் ஆசைதான். இதனால், ஃபோன் பே தொடங்குவதற்கு பல வருடங்கள் முன்பாகவே ஒன்றாக இருந்த இந்த மூவர் கூட்டணி முதலில் உருவாக்கிய தயாரிப்பு இசை சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன். MIME360 என்கிற டிஜிட்டல் மீடியா விநியோக நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக ஃப்ளைட் (Flyte) என்ற மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டனர். ஃப்ளைட் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் ஒரு தளம்.

சமீர் நிகமும் ராகுல் சாரியும் இணைந்து நிறுவிய MIME360-ஐ 2011ல் ஃபிளிப்கார்ட் கையகப்படுத்தியது. இதுதான் சமீர், ராகுல் மற்றும் பர்சின் வாழ்க்கையில் திருப்புமுனை தருணம். ஆன்லைன் இசை வணிகத்திலும் இறங்கும் முயற்சியாக ஃபிளிப்கார்ட் MIME360-ஐ வாங்கிய நிலையில், அந்த எண்ணம் கைகூடவில்லை. சில மாதங்களிலேயே அதை இழுத்துமூட வேண்டியதாயிற்று. நிறுவனம் மூடப்பட்டாலும், சமீர் அன்ட் கோ-வுக்கு வேறொரு கதவு திறந்தது. அது ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள், சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரின் நட்பு.

சமீர் அன்ட் கோ குழுவின் தொழில்நுப்ட அறிவை புரிந்துகொண்ட சச்சின் மற்றும் பின்னி பன்சல் அவர்கள் மூவரையும் ஃபிளிப்கார்ட்டில் பணியாற்ற வைத்தனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்கு தகுந்த பதவிகள். உதாரணத்துக்கு சமீர் மற்றும் ராகுல் ஆகியோர் இன்ஜினியரிங் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு ஏற்ப சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை எட்ட மூவரும் நேர்மையான உழைப்பை வெளிப்படுத்தினர்.

ஃபோன்பேவுக்கான விதை… 2014-ல் பிக் பில்லியன் டேஸ் விற்பனை அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. அறிவித்தபடி விற்பனையும் தொடங்கியது. ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய சமயம் என்பதால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஆர்டர்களை குவித்துக்கொண்டிருந்தது ஃபிளிப்கார்ட். எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருப்பதாக நினைத்தநேரத்தில் புதிய பிரச்சினை வந்தது.




ஆர்டர்கள் வந்தாலும் வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிரமங்களை சந்தித்தனர். பல வாடிக்கையாளர்களின் பேமென்ட்கள் தோல்வியடைந்தன. இதனை கவனித்த சமீர் மற்றும் ராகுல் நிதிச் சேவைகள் மற்றும் பணம் செலுத்துவதற்கான தளத்தின் அவசியத்தை உணர்ந்தனர். பிரச்சனைகளைத் தீர்க்க தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தயாரிப்பை உருவாக்க திட்டமிட்டனர். அப்படியாக 2015-ல் ஃபோன் பே யோசனை உதித்தது.

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், நிதிச் சேவைகளை அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஃபிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறிய சமீர் அன்ட் கோ 2016-ல் UPI-ஐ அடிப்படையாகக் கொண்டு ஃபோன்பே செயலியை அறிமுகப்படுத்தினர். நிதிச் சேவைகளை அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் என்பது அச்சப்படக் கூடியதாகவே இருந்தது. இதனை மாற்றக்கூடிய நிகழ்வாக அமைந்தது தான். 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மத்திய அரசால் பழைய நோட்டுகள் செல்லாது என வெளியிடப்பட்ட அறிவிப்பு, மக்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்ய ஊக்கப்படுத்தவும் தவறவில்லை.

ஃபோன்பே எதிர்பார்த்திருந்ததும் இதுதான். மக்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நோக்கி திசை திருப்ப பல திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்த சமீரின் குழுவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை. பணமதிப்பிழப்புக்கு பின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மக்கள் விரும்பினர். இதன்பின், நிகழ்ந்தவை அனைத்தும் வரலாறு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!