Cinema Entertainment விமர்சனம்

வைபவின் ரணம் விமர்சனம் இதோ!

அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் கிடைக்கும் உடலை வைத்து, அவர் யார்? என்பதை வரைபடமாக வரையும் திறமை படைத்த நாயகன் வைபவ், காவல்துறையால் முடிக்க முடியாத சில வழக்குகளுக்கு குற்ற பின்னணி கதையை எழுதி கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். இதற்கிடையே, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடைக்கிறது. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.




திடீரென்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைபவை இந்த வழக்கிற்குள் வர வேண்டாம் என்று சொல்ல, மறு தினமே அவர் மாயமாகி விடுகிறார். இதையடுத்து, புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் வழக்கு விசாரணையை கையில் எடுக்க, அவருக்கும் வைபவ் பல உதவிகளை செய்வதோடு, இந்த மர்ம கொலைக்கான பின்னணியையும், கொலையாளியையும் கண்டுபிடித்து விடுகிறார். அவர் எப்படி கண்டுபிடித்தார்?, அந்த கொலையாளி யார்?, எதற்காக கொலை செய்கிறார்?, வைபவுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘ரணம்’.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ், இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தான் ஏற்ற வேடத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். விபத்தில் மனைவியை இழந்து விரக்தியில் வாழும் அவர், குழப்பம் நிறைந்த கொலை வழக்கின் பின்னணியை கண்டுபிடிக்கும் விதம் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அப்பாவித்தமான நடிப்பு நேர்த்தி. ஜாலியாக நடித்துவிட்டு போக கூடிய வைபவ், ஆக்‌ஷன் சாயல் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.




போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தன்யா ஹோப், தனது மிடுக்கான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்க முயற்சித்திருந்தாலும், குற்ற பின்னணியை கண்டுபிடிப்பதை விட, அதுகுறித்து வைபவிடம் உதவி கேட்பதையே வேலையாக வைத்திருப்பதால், அவரது வேடம் பெரிதாக எடுபடவில்லை.

கதையின் மையப்புள்ளியாக வரும் நந்திதா ஸ்வேதா, இளம் விதவையாக 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருப்பது ஆச்சரியம் என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவரது நடிப்பு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இறந்த மகளின் உடலைப்பார்த்து அவர் கதறும் காட்சி, ரசிகர்களையும் கண்கலங்க வைத்துவிடுகிறது.

வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதாவின் மகளாக நடித்திருக்கும் பிரனிதி, வைபவின் நண்பராக நடித்திருக்கும் டார்லிங் மதன், காவலராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, இரவு நேர காட்சிகளை அளவான ஒளியில் நேர்த்தியாக படமாக்கி, காட்சிகளோடு ரசிகர்களை பயணிக்க வைப்பதோடு, காதல் பாடலை கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருக்கிறது.




எரிந்த நிலையில் கிடைக்கும் உடல் பாகங்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரையின் பணி பாராட்டும்படி இருக்கிறது. படத்தொகுப்பாளர் முணீஷின் பணியும் சிறப்பு.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கு புதிய கோணத்தில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ஷெரிஃப், படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்து விடுவதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு முழுப்படத்தையும் பார்க்க வைக்கிறார்.

திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு மற்றும் யூகிக்க முடியாத திருப்பங்களை படத்தின் இறுதிவரை நகர்த்தி செல்லும் இயக்குநர், நந்திதா ஸ்வேதாவின் கதாபாத்திரத்தின் அறிமுகத்திற்குப் பிறகும், வைபவின் கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பது படத்தின் கூடுதல் பலம்.

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதை நகர்வதோடு, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கும், குற்றத்திற்கும் ஏதோ பின்னணி இருக்கிறது, என்பது போல் காட்சிகளை வடிவமைத்து நம்மை யூகிக்க வைக்கும் இயக்குநர் ஷெரிஃப், அடுத்தடுத்த காட்சிகளில் வைத்திருக்கும் திருப்பங்கள் மூலம் நம் யூகங்களை உடைத்துவிடுகிறார்.

இப்படி முழு படத்தையும் படு சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் ஷெரிஃப், இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியோடு, இதுவரை சொல்லப்படாத ஒரு குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வு மெசஜ் ஒன்றை சொல்லி பாராட்டு பெறுகிறார்.

மொத்தத்தில், இந்த ‘ரணம்’ நிச்சயம் ரசிகர்களின் மனதை தொடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!