Serial Stories Uncategorized

வா எந்தன் வண்ண நிலவே-10

  10

நித்யவாணனின் கூர் பார்வை அச்சடித்தாற் போல் தன் மீதிலேயே இருப்பதை உணர்ந்தவள் “அம்மா கூப்பிட்டது போல்…” என்றபடி எழ, அவள் கைப்பற்றி மீண்டும் அமர்த்தினான். “அதெல்லாம் யாரும் கூப்பிடவில்லை. நீ சொல்லு…”

“என்ன சொல்ல வேண்டும்?”

” மானசி உன்னிடம் என்ன சொன்னாள்? “

” திருமணம் முடிந்த மறுநாள் புது மனைவியிடம் அவள் தங்கையை பற்றி பேசுபவனின் கழுத்தை நெரித்தாலும் தகும் என்று சொன்னாள்” 

கோபப்படுவான் என்று நினைத்ததற்கு மாறாக வாய் விட்டு சிரித்தான். ” என் கழுத்தை நெரிக்கப் போகிறாயா செல்லம்?இந்த கைகளாலா?முடியுமா?” ஆட்காட்டி விரல் நீட்டி அவள் கையை வருடினான்.”நானே உன் கைகளில் நெரிபட தயாராக இருக்கும் போது…உனக்கு ஏன்டா ரிஸ்க்?” மீண்டும் சிரித்தான்.

பளபளவென  மின்னும் அவன் பல் வரிசையை பார்த்தபடி சிரித்து தொலையாதேடா மனதிற்குள் அரற்றினாள். அந்த மின்னல் சிரிப்பின் தாக்கத்திலிருந்து வெளியே வர “உங்களது திமிர்த்தனத்தை எனக்கு விளக்கியவளே மானசிதான்” அவன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கினாள்.

 தலையசைத்து அவற்றை ஏற்றுக் கொண்டவன் “அதென்ன திமிர்?” விளக்கங்களையும் கேட்டான்.

“மானசி ,வருணை கொஞ்சம் கூட மதிக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் கர்வமாக இருப்பீர்களே அதை சொன்னாள்”

” பள்ளியில் படிக்கும் சிறு வயதினர். அவர்களை மதித்துப் பேச எனக்கு என்ன இருக்கிறது?”

” சரி சமாளித்து விட்டீர்கள். ஆனால் சித்தப்பாவிடம் கூட அப்படித்தானே நடந்து கொள்வீர்கள்? தொழில் விஷயங்களோ பொது விஷயங்களோ சித்தப்பா தானே உங்கள் இடம் தேடி வந்து பேச வேண்டும்.நீங்கள் அவர் இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டீர்கள் தானே?”

 நித்யவாணன் தாடி அடர்ந்திருந்த தன் தாடையை வருடி விட்டுக் கொண்டான். “உன் சித்தப்பாவும் என் அப்பாவும் தொழில் நண்பர்கள். அப்பாவை விட சித்தப்பா இளையவர். அதனால் என்ன விஷயம் என்றாலும் அவர்தான் அப்பாவை தேடி வரும் வழக்கம்”

” ஆனால் நீங்கள் சித்தப்பாவை விட இளையவர்தானே?”

” ஆமாம்,ஆனாலும் உன் சித்தப்பா வீடு தேடி போவதில் எனக்கு பிடித்தம் கிடையாது” நித்யவாணனின் முகம் இறுகி இருந்தது.




” இதை…இந்த திமிரை.. கர்வத்தைத்தான் மானசி எனக்கு உணர்த்தி விட முயன்றாள்.” நித்யவாணன் பதிலின்றி இருக்க அவனிடம் விளக்கத்தை எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றம்.

 அவனை விட்டு  சட்டென நகர்ந்தாள். தன் தாயின் அருகில் போல் அமர்ந்து கொண்டாள். தள்ளி அமர்ந்திருந்தாலும் அவள் பார்வை நித்யவாணன் மேல்தான் இருந்தது. இரண்டு நிமிடங்கள்தான். நித்யவாணனின் முகம் மாறிவிட்டது. பழைய பிரகாசமும் உற்சாகமும் தோன்றி விட்டது.

 எவ்வளவு இலகுவாக இவன் தன்னை மாற்றிக் கொள்கிறான்.மீண்டும் வசீகரமாகிவிட்ட அவன் முகத்திலிருந்து தன் பார்வையை வலுக்கட்டாயமாக பிடுங்கி மற்றவர்கள் மேல் படர விட்டாள். 

சாப்பிடும்போதும் தொடர்ந்து நடந்த தம்பதிகளுக்கான விளையாட்டு போட்டிகளிலும் எழில்நிலாவின் மனம் செல்லவில்லை . குடத்திற்குள் போட்ட மோதிரத்தை தேடாமல் நீரளைந்த அவள் வெண்டை விரல்களை பற்றி வருடி குறும்புடன் ஒவ்வொரு விரலாக உருவிய நித்யவாணனிற்கு அவளிடம் பதிலில்லை.

“என்னாச்சு நிலா?” அவள் பக்கம் குனிந்து கேட்டவனை முறைத்தாள் பச்சை பிள்ளை போல் பாவத்தைபார்.

அன்று அவள் உயிரை அவன் வார்த்தைகளால் உறிஞ்சிய நாளன்றும் இதே முக பாவனையுடன்தான் இருந்திருப்பானோ? அவளுக்கு தெரியவில்லை.ஏனெனில் அன்று அவள் அவனது முகத்தை பார்க்கவில்லை.கொடூரமான அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு முகம் பார்க்கும் எண்ணமும் வரவில்லை.

மானசியின் பேச்சிற்கு பிறகு உடனே நித்யவாணனை சந்தித்து அவனுக்கு தன் மேலுள்ள அன்பை உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினாள்.அவனது வீட்டிற்கே செல்ல முடிவெடுத்தாள்.

அன்று மானசியின் துடுக்கு பேச்சிற்காக அவளை கடிந்து கொண்டாள் மைனாவதி . புரியாமல் எழில்நிலாவை ஏறிட்டான் வருண் .”என்னக்கா ஒரு சின்ன கேலி, இதுக்கு போயி இப்படி முகம் கோணுது உனக்கு?” 

 நல்லா வெள்ளை பூசணிக்கா மாதிரி இருக்கிற உனக்கும் உன் அக்காவிற்கும் இதெல்லாம் சின்ன கேலியாத்தான் தெரியும்டா …என மனதிற்குள் புழுங்கியபடி “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரவா சித்தி? டிரைவரை கூட்டிட்டு போறேன்” என்றாள் .

இன்று அனைவருமே வெளியே போக எண்ணிக்கொண்டிருந்த மைனாவதி ,எழில்நிலாவின் மனநிலையை எண்ணி ,அவள் தனிமையை விரும்பக்கூடும் என்று ,”சரிடாம்மா …நீ கிளம்பு என்றாள்.

தலைக்காவேரியாய் எழில்நிலாவுக்குள் பொங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் ஆடு தாண்டும் காவேரியாக அமைதியாக ஓடத்தொடங்கியது .

முதல் நாள் எழில்நிலாவுக்கும் ,நித்யவாணனுக்குமிடையே ஒரு உற்சாக சம்பவம் நடந்திருந்தது . குணா குகை பார்த்து விட்டு திரும்பும் வழியில் ,ஒரு சிறு மேட்டின் மேல் எழில்நிலா ஏற கை கொடுத்து தூக்கி விட்டவன்,மற்றொரு கையால்  அவள் இடை வளைத்தான்.




“அழகான இடுப்பு,என்ன ஷேப்!”  மென்மையாக வருடினான் .

இந்த தீண்டலை தடுக்கும் வகையற்று கண்களை அகல விரித்து அவன் கண்களுக்குள் ஊடுருவி “வேண்டாமே ப்ளீஸ்” என கண்களாலே வேண்டினாள். . நெற்றியில் கிடந்த கலைந்த கூந்தலை ஒதுக்கியவன் ,அவள் மூக்கு நுனியை தன் ஆட்காட்டி விரலால் வருடியபடி “நாளை உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன்” என்றான் . 

இன்னமும் பேச்சு வராமல் புருவங்களை உயர்த்தி என்னவென வினவினாள். “உனக்கும் பிடித்த செய்திதான் ,நீ எதிர்பார்த்துக்கொண்டிருந்ததும் கூட” என்றான் . 

அவள் கண்களை மேலும் அகற்ற “போதும் போதும் கண்களிலேயே என்னை விழுங்க பார்க்காதே ..நீ எப்படி பார்த்தாலும் அதனை நாளைதான் சொல்வேன்” என முடித்து விட்டான் . 

அந்த செய்தியை கேட்கத்தான் இன்று காலையே இவ்வளவு உற்சாகமாக கிளம்பினாள் எழில்நிலா .அநேகமாக தன்னை காதலிப்பதாக சொல்லி மணக்க கேட்க போகிறான் நித்யவாணன் எனும் எண்ணம் அவளுக்கு .

 ஆனால் வருண்,மானசியால் சிறிது தன்னிலை உணர்த்தப்பட்டாள் .பளபளவென மின்னும் நிறத்துடன் ஒரு ஹீரோவின் வசீகரத்துடன் இருக்கும் நித்யவாணன் மிக சாதாரண தோற்றத்துடன் இருக்கும் தன்னை எப்படி காதலிப்பான் . ஆனால் மூன்று நாட்களாக அவன் பழகிய விதம் அப்படித்தானே இருந்தது ?

தனக்குள்ளேயே எண்ணியெண்ணி குழம்பியவள் நித்யவாணனை நேரில் சந்தித்து விட்டால் எல்லா குழப்பங்களும் தீர்ந்து விடு்ம் என எண்ணி அவன் வீட்டிற்கே அவனை நாடி சென்றாள்.

அங்கே வானையே புரட்டிப்போடும் இடிகள் பலவற்றை ஒரு சேர எழில்நிலாவின் தலையில் இறக்கினான் நித்யவாணன் .

“இந்த கறுத்த குட்டி சும்மா இங்கே இருக்கிற வரை பொழுது போக்கத்தான்டா! .சென்னையில் தான் எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கொண்டிருக்கிறாளே” என யாரிடமோ விவரித்துக் கொண்டிருந்தான்.

புது மணத் தம்பதிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன.மியூசிக்கல் சேரில் முன்னால் ஓடிக் கொண்டிருந்த எழில்நிலாவின் கால்கள் தடுமாற, அவளை பின்னால் வந்த நித்யவாணன் தாங்கினான்.

” பார்த்து நிலா…கொஞ்சம் உட்காருகிறாயா?”

கத்தியால் குத்தி விட்டு பிளாஸ்டர் ஒட்டுவாயாடா நீ!அவன் கையை உதறி விட்டு ஒரு வித வேகத்துடன் ஓடினாள் எழில்நிலா.இதிலாவது இவனை ஜெயிக்க வேண்டும்.கடைசி ஆட்களாக நித்யவாணனும் எழில்நிலாவும் மட்டும் சுற்றிக்கொண்டிருக்க,அவனை முந்தி தானே அமர்ந்து விட வேண்டுமென அதீத கவனத்துடன் அவள் இருந்தாலும், மியூசிக் நிறுத்தப்பட்ட முதல் கணமே இருக்கையில் அமர்ந்து விட்டான் நித்யவாணன். அதே கணம் எழில்நிலாவையும் இழுத்து தன் மடி மீது அமர்த்திக்கொண்டான் .

” நாங்கள் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்க பிறந்தவர்கள்” என அறிவித்தான் .சிறியவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் ஆர்ப்பரித்தனர் .

 கண் கலங்க கணவன் கழுத்தை கட்டிக்கொள்ள துடித்த தனது கரங்களை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தி கொண்டாள் எழில்நிலா . 

இவன் இப்படித்தான் நடித்துக் கொண்டே இருப்பானா ? எப்படி இவனது ஆளுமையிலிருந்து மீளப் போகிறேன்.?




What’s your Reaction?
+1
34
+1
14
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!