Cinema Entertainment

எங்க வீட்ல பார்ட்டி விமர்சனம்

‘வில்லங்கமான மனிதர்கள் சந்திக்கிற விபரீதங்கள்’ என்ற ஒன்லைனில், புதுமுகங்கள் நடிப்பில், எளிமையான பட்ஜெட்டில் ‘எங்க வீட்ல பார்ட்டி.’

ஃபேஸ்புக் நண்பர்கள் சிலர் சந்திக்கிறார்கள்; குடிக்கிறார்கள்; உற்சாகம் தெறிக்கவிடும் பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடுகிறார்கள். அவர்களில் ஐந்து இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் ஒரு வீட்டுக்குப் போய் தங்குகிறார்கள். அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட, மற்ற ஆறுபேரில் ஒருவர் கொலைகாரர் என்பது கதை.




அவர் யார் என்பதையும், கொலைக்கான காரணத்தையும் அலசி ஆராய்கிறது பரபரப்பும் நகைச்சுவையும் இணைந்த திரைக்கதை.

யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இயக்கியிருக்கிறார் கே.சுரேஷ் கண்ணா (‘அகிலா முதலாம் வகுப்பு’, ‘கணினியும் கழனியும்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.)

ஆன்ட்டிகளை அணைக்கத் துடிக்கிற இளைஞன், ‘ஓரினச் சேர்க்கை’யில் ஈடுபடும் இளைஞர்கள், ‘லெஸ்பியன்’ உறவை விரும்புகிற இளம்பெண், பார்க்கிற ஆண்களையெல்லாம் ‘அந்த’ விஷயத்துக்கு அழைக்கிற நடுத்தர வயதுப் பெண், ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணிடம் கள்ளத் தொடர்பில் இருக்கிற போலீஸ்காரர் என கிட்டத்தட்ட கதையில் வருகிற அத்தனைப் பேரும் ஏடாகூட ஆசாமிகளாக இருக்க, அவர்கள் ஏற்ற பாத்திரங்களுக்குப் பொருத்தமாகவும் தேவைக்கேற்ப நகைச்சுவையாகவும் நடித்திருக்க,




ஒரு டூயட்டில் காதலனுடன் அழகாய் ஆடியசைந்துவிட்டு, பரிதாப முடிவைச் சந்திக்கிற சந்தியா கதாபாத்திரம் தனித்துத் தெரிகிறது.

காவல்துறை உயரதிகாரியாக, கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க களமிறங்கி நேர்த்தியான நடிப்பைத் தந்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவபிரகாஷ்.

இளைஞர்கள் வீட்டிலிருக்கும் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த முயற்சிக்கும்போது பால்காரர், வேலைக்கார பெண், பிளம்பர், மேல் வீட்டு அம்மணி, போலீஸ் என சிலர் வீட்டுக்குள் வந்து போவது, ஒரு இளைஞன் தன் பயந்த சுபாவத்தால் எதற்கெடுத்தாலும் பாத்ரூமில் ஒளிந்து கொள்வது, திருநங்கை போலீஸை வைத்துக் கொண்டு கான்ஸ்டபிள் ஒருவர் கிறுக்குத் தனமாக விசாரணை செய்வது என கடந்தோடும் காட்சிகள் சுவாரஸ்யம்!




நல்ல காதல் ஜோடிக்கு ‘பொம்முக்குட்டி என் பொம்முக்குட்டி’, கள்ளக் காதல் ஜோடிக்கு ‘மாயவா மதுசூதனா’ என பாடல்களை பாரபட்சமில்லாமல் பிரித்துவிட, அந்த பாடல்களை மெல்லிசையால் இனிமையாக்கியிருக்கிறார் கோபிஸ்ரீ!

‘பொம்முக்குட்டி’ பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றன!

பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்!

நடித்திருப்பது புதுமுகங்கள், பெரும்பாலான காட்சிகளை எடுத்திருப்பது ஒரே அறையில் என்ற இந்த எளிமையான படைப்பில், ‘ஏடாகூடமான பழக்க வழக்கங்களில் எல்லைமீறினால் ஏழரைதான்’ என எச்சரித்திருப்பது பாராட்டுக்குரியது!

‘எங்க வீட்ல பார்ட்டி’ சப்ஜெக்ட் கொஞ்சம் டர்ட்டி; ஆனா, சொல்ல வந்த விஷயம் ரொம்ப கெட்டி!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!