Serial Stories

விநாடி நேர விபரீதங்கள்-2

வினாடி…2

“மாம்! வாட் இஸ் திஸ்? ஏன் இப்படி படிக்காதவங்க மாதிரி உள்ள வரீங்க? கதவைத் தட்டணும். அண்டர்ஸ்டாண்ட்! யூ இண்டர்பியர் மை ப்ரைவசி!” பதின்ம வயதில் இருக்கும் கார்த்திக் ரோஜாமணியைப் பார்த்துக் கத்தினான்.

ரோஜாமணி ஒன்றும் படிக்காதவள் அல்ல. யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். என்ன.. பிள்ளை வளர்ப்புக்காய் வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஒய்ஃப் ஆகி விட்டாள். சமையலறையும் சாப்பாட்டு அறையும் அவள் வாழ்க்கையை ஆக்ரமித்ததால் அவள் படிக்காதவள் ஆகி விட்டாள். உண்மையில் அவள் கல்லூரி படிப்பு மட்டுமல்ல. வாழ்க்கையையும் படித்தவள் என மகன் அறிய வில்லை பாவம்.

“கார்த்திக்! உன் கிட்ட எனக்கு என்னடா ப்ரைவசி? நீ என் ஒரே மகன் டா! ஷோ மீ யுவர் புக்ஸ்! ஹோம் ஒர்க் முடிச்சுட்டியா?”

“டூ யூ திங் ஐம் யுவர் லிட்டில் பாய். இன்னும் பால் குடிக்கற பச்சைப் பிள்ளையா நான்? ஐ நோ வாட் ஐ அம் டூயிங்! இந்த மாதிரி ஹோம் ஒர்க் செஞ்சியா?  அசைன்மெண்ட் முடிச்சியான்னு மூக்கை நுழைக்காதீங்க. ஐ ஹேவ் லாட் ஆஃப் வொர்க்.” கத்தி விட்டு அம்மாவை வெளியில் போகச் சொல்லி தாழ்ப்பாள் இட்டான்.

“கார்த்தி இல்லையா ரோஜா? அவனுக்குன்னு  ஒரு ஐ-பாட் வாங்கி வந்தேன்!”  ரோஜாவின் அப்பா தெய்வநாயகம் உள்ளே வந்தார்.

“வாங்கப்பா. அவன் எங்கே தானுண்டு தன் வேலையுண்டுன்னு. அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. அத்தனை படிப்பு ப்ரஷர்ப்பா. சும்மாவா சேர்த்திருக்கோம். லட்சக் கணக்குல இல்ல இந்தப் படிப்புக்கு செலவாகுது. அதுக்கு தக்கன பாடமும் இருக்குது.”

“இருக்கட்டும். இருக்கட்டும். அவனைத் தொந்தரவு பண்ணாத. புள்ள படிச்சு படிச்சு உடம்பு சூடாயிடப் போகுது. அப்பப்போ பொறுப்பா ஏதாவது சாப்பிடக் கொடு.”

“என்னத்தப்பா? உள்ள போனாலே காச் மூச்சுன்னு கத்தறான். அவனே பசிச்சா வந்து சாப்பிடுவான். நீங்க வாங்க. சாப்பிடலாம்!” 

ரோஜாமணியின் வார்த்தைகள் தெய்வநாயகத்தை யோசனையில் ஆழ்த்தின.

மாப்பிள்ளை செல்வா வெளிநாட்டில் இருந்து லட்சத்தில் பணம் சம்பாதித்து அனுப்ப இங்கு மகளும் பேரனுமாய் சுகபோக வாழ்க்கை. இருக்கும் இரண்டு பேரும் இப்படி தனித்தனித் தீவாய் இருந்தால் என்ன சுவராசியம் இந்த வாழ்க்கையில்? நாமளும் தான் படிச்சோம். இப்படி ஒரேடியா கதவை மூடிக் கிடந்தோம். சொல்லப் போனால் கதவே இல்லை. வாசத் திண்ணையில் உட்கார்ந்து வர்றவன் போறவனோட பேசிக்கிட்டே ஓடிச்சு நம்ம படிப்பு. இந்தக் காலப் பசங்களுக்கு தனி ரூமு, கட்டில் ,ஏ.சி, வேண்டிய கம்ப்யூட்டர், போனு, டேப் அப்படின்னு எத்தனை வசதிகள்.திண்ணையில் படிப்பிருந்தும் அத்தனை பேர் நம்மை கண்காணிப்பார்கள். இங்க என்னடான்னா கதவையே தாழ்ப்பாள் போட்டு மூடிக்கறான். உள்ள என்ன செய்யறான்? படிப்பா? தூக்கமா இல்லை வேறு ஏதாவதா? ரோஜாமணி என்னடான்னா கண்மூடித் தனமா என் புள்ள கஷ்டப் பட்டு படிக்கறான்னு நம்பிக்கிட்டு இருக்கா.ம்ம்.. என் மனசுக்கு என்னவோ சரியாப் படலையே. தெய்வநாயகத்துக்கு பல யோசனைகள் ஓடின. எதுக்கும் ரோஜாவை எச்சரிக்கலாம் என நினைத்தவர்..




“அம்மா! ரோஜா! இந்தக் காலத்து பசங்களோட போக்கே புரிபடலம்மா. மாப்பிள்ளையும் வெளிநாட்டுல இருக்க வீட்டுல நீ ஒருத்தி தானே இருக்க. படிப்பு நேரம் போக உன் கிட்ட கொஞ்சம் பேசிக் கிடந்தா தான் என்ன? என்னத்துக்கு பொசுக்கு பொசுக்குன்னு கதவப் போட்டுக்கறான்? நீயும் இதை கண்டுக்க மாட்டியா?”

“அப்பா! உங்க காலம் வேற. என் காலம் வேற. கிடைச்சதை உண்டோம். முடிஞ்சதை படிச்சோம். இப்ப அப்படியா? ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைக்காம மேலேறி போயிக்கிட்டே இருக்கானே. இந்த மாதிரி காலத்துல டேய்.. படிச்சது போதும் . என் கிட்ட வந்து உட்காரு பேசலாம்ன்னா உலகம் என்னைத் தான் கிறுக்கச்சின்னு சொல்லும். இவனும் இவங்கப்பா மாதிரி வெளிநாடெல்லாம் போயி வேலை பார்க்க வேணாமா? படிக்கட்டும்ப்பா.”

“உள்ள படிக்க மட்டுமா செய்யறான்?” தெய்வநாயகத்தின் குரலில் கேலி இழையோடியது.

“அப்பா.. வேணாம். அவனை ஏன் கரிச்சுக் கொட்டுறீங்க? படிக்காம அவன் என்ன சட்டி பானை வைச்சு சமையலா செய்யறான்? படிச்சு மார்க் வாங்கிக் காண்பிப்பான் பாருங்க. அப்ப சொல்வீங்க!”

“அப்படியா? போன வாட்டி என்ன மார்க்கும்மா? அதுக்கு முத வாட்டி? அதுக்கும் முன்ன ஒரு மன்த்லி டெஸ்ட் வந்துச்சே. அதுல..”

“எல்லாம் குறைவு தான். இனி படிக்க ஆரம்பிச்சிட்டான்ல. பாருங்க. வாங்கிடுவான்.” 

ரோஜாமணி பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் பேச இனி திருத்துவதற்கில்லை எனப் பேசாமல் வீட்டுக்கு கிளம்பி விட்டார் தெய்வநாயகம். அவர் வீடும் அதே ஊரில் தானிருந்தது.  பெண்ணும் பேரனும் இழுக்க அவ்வப்போது வந்து செல்வார்.

“பார்த்துக்கோம்மா! இந்தா ஐ- பாட்! அவன் கிட்ட கொடுத்துடு!” என்று சொல்லிச் சென்ற தந்தையைப் பார்த்தபடி நின்ற ரோஜாமணிக்கு கண்ணில் நீர் பூத்தது.

அப்பா சொல்றது நியாயம் தான். ஆனாலும் இந்தக் காலத்துப் படிப்பு இருக்கற நேரம் கூட போதலையே!

பெருமூச்சுடன் கதவைச் சாற்றித் தாழ் போட்டுவிட்டு வந்தாள்.

கார்த்திக் டீனேஜ் வயதில் இருப்பவன். அப்படித் தான் தனிமையை நாடுவான். சப்பைக்கட்டு கட்டியது அவள் மனம்.  அவன் கதவைத் தட்டப் போனவள் அவனது படிப்பு தடைபடுமோ எனப் பேசாது சோபாவில் அமர்ந்து விட்டாள். அவள் மட்டும் தட்டி இருந்தால் கார்த்திக் ஒருவேளை அந்தப் புதைகுழியில் இருந்து மீண்டிருப்பானாய் இருக்கும்.

இப்போதோ கண்கள் விரிய கைக்குள் இருக்கும் கைபேசியில் பார்வை பதித்திருந்தான். 

“வாட் அ ஷார்ட்ஸ் யா! செம!” காட்சியின் சாகசத்தில் உள்ளம் துள்ளிக் குதித்தது. ஷார்ட்ஸே இப்படியெனில் முழு வீடீயோ.. ஹா.. இதற்கடுத்த பார்ட் வருமா? எப்பொழுது? இந்த யூட்யூபர் இதற்கு முன் என்ன செய்திருக்கிறான்? ஏன் சப்ஸ்க்ரைப் செய்திருந்தும் நோட்டிபிகேஷன் வரல? 

விரல் தன் போக்கில் கைபேசியைத் தடவிக் கொண்டிருக்கப் படிக்க வேண்டிய பாடங்கள் பார்வை பெறாமல் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

‘டொய்ங்க்..’ மெசேஜ் வ்ந்த ஒலி கேட்க வாட்ஸப்பை திறந்தான். 

பார்த்தா தான்!

“செம வீடீயோடா! பாரு!”. அனுப்பி இருந்தான்.




வாவ்! வாட் அ ஆங்கிள். எவ்வளவு பெரிய மலை. இதன் உச்சியில் இருந்து விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது போலயே. 

கார்த்திக் வெகு ஆர்வமாய் நகம் கடித்தபடி பார்த்தான்.

கேமரா வானின் நீலத்தையும் அது தொட்டுக் கொண்டிருக்கும் கோயில் முகப்பையும் காட்டியது. படியென ஒழுங்கில்லாது பாறைகளே படிகளாய் உச்சிக்கு வந்த கேமரா அப்படியே கீழே நதியைக் காட்டியது. பொருத்தமான பின்னணி இசை வேறு. 

பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிரம்மாண்ட மலையில் இருந்து உதிரும் சிறகாய் அவன் தன் கேமராவுடன் ..

“ஐயோ!” கண்ணை மூடிக் கொண்டான் கார்த்திக்.

சற்று பொறுத்து மீண்டும் ரீவைண்ட்  செய்தான். பின் மீண்டும்.. 

“தில்லுடா இவனுக்கு!” பார்த்தாவின் போனுக்கு பதில் மெசெஜ் பறக்க விட்டான். 

தன் அறையில் இருந்த ஸ்மார்ட் டி.வியில் தனது   அக்கவுண்டைத் திறந்தவன் விழுந்தவனின் வீடீயோவை இன்னும் பெரிதாகப் பார்க்க ஆரம்பித்தான். 

இவன் நிஜமாவே விழுந்தானா? இல்லை விழற மாதிரி நடிக்கறானா? இது ரீலா? இல்லை ரியலா? இப்படி நாமும் பண்ணினா என்ன? மலை மேல இருந்து வேணாம். நம்ம மேம்பாலம் மேல இருந்து கூட போதும். பார்த்தாவ கூப்புடுக்கலாம். நல்லா வீடீயோ எடுப்பான். வேற யாரு நம்ம கேங்ல? ம்ம்! 

பார்த்தாவுக்கு மெசெஜ் தட்டினான்.

“டேய்.. சஜஸ்ட் மீ சம் யூனிக் நேம் ஃபார் அவர் வீ ட்யூப் சேனல்.”

“நேமா? வீ ட்யூப் சேனலா? நாம ஆரம்பிக்கப் போறோமாடா?”

“ஆமாடா.. பெரிசா அனுப்பிட்டான் வீடீயோ லிங்க்! இவன் மட்டும் தான் மலையில இருந்து விழுந்து வீடீயோ செய்வானா? நாங்க மாட்டோமா? நாமளும் பண்ணலாம்டா. எத்தனை பார்த்துட்டோம் . இதைப் பண்ண மாட்டோமா? டேய்.. நாம இறங்கறோம்.. ஜெயிக்கறோம்!”

சத்தமில்லாது மெசேஜ் அனுப்பினான் கார்த்திக்.

“என்னடா பண்ணலாம்?”

“டூ வீலர்ல வீலிங் பண்ணலாம். மேம்பாலத்துல டைவ் அடிக்கலாம். அடேய்.. என்னென்னவோ மேஜிக் பண்ணலாம்டா. நாம ஆரம்பிக்கலாம். இதெல்லாம் என்னடா ஜூஜூபி! நாம பண்ற முதல் வீடீயோவே சும்மா வியூ அள்ளிக்கிட்டுப் போகும் பாரு. பாரு.. பாரு.. பார்த்துக்கிட்டே இரு!” 

தம்ஸ் ஸப் அனுப்பினான் பார்த்தா.

கார்த்திக் தன் டேபிளில் வீடீயோ செட் செய்தவன்  மணிக்கட்டு நரம்பை  கட் செய்வது எப்படி என வீடீயோ போடலாமா என  யோசித்தான்.

யோசனையின் தீவிரத்தில் விழிகள் பளபளத்தன.

(விபரீதம் தொடரும்)




What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!