Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-1

வினாடி..1.

“அம்மா! என்னம்மா உன் ப்ரச்னை நான்தான் பார்த்தி வீட்டுலே குருப் ஸ்டடி இருக்குன்னு சொல்லிட்டு வந்தேனே”

கோபிக்கு பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பார்க்க விடாமல் செய்த கோபம். அம்மாவின் அலைபேசி அழைப்பு எரிச்சலையூட்டியது.

“கோபி கண்ணா! கோச்சுக்காதேடா. மாமா வந்திருக்கிறாங்க. நீ கேட்டிருந்தியாமே! புது மாடல் மொபைல். அதை வாங்கிட்டு வந்திருக்கிறாங்க”

“ஹேய்! புது மாடல் போனா? இரு! இரு!    இப்பவே வரேன் “

“டேய்  ! வெயிட் பண்ணுங்கடா!  எங்கமாமா நான் கேட்ட  புது மாடல் மொபைல் வாங்கி வந்திருக்காராம். அதை வாங்கிகிட்டு படிக்கணும்னுட்டு வரேன்.    அதுல இன்னும் படமெல்லாம் க்ளியரா சூப்பரா  இருக்கும்டா ” 

கோபி ஓடினான். 

கோபி,பார்த்தாவுடன் இன்னும் இருவர் சேர்ந்து  ஒரு கேங்.

பாடம் படிக்கிறேன் பேர்வழியென்று ஓரிடத்தில் சேர்ந்து கொண்டு வீட்யூப்பில் (wetube)வரும் அத்தனை அக்கப்போர்களையும் பார்ப்பதும்,ரசிப்பதும் அதைக்குறித்தே  கருத்து பரிமாறிக் கொள்வதுமே பெரும் பொழுது போக்கு.

எல்லோருமே ப்ளஸ் ஒன் . ஒரே வகுப்பு ஒரே பெஞ்ச் தோழர்கள். இதில் கண்ணன் மட்டுமே அரசு பள்ளி மாணவன். அனைவரின் முகத்திலும் கொஞ்சம் குழந்தைத்தனமும் பெரியமனுஷத்தனமும் கலந்திருக்க லேசாய் மீசை கூட அரும்பியிருந்தது சிலருக்கு. அதில் பெருமை கலந்த வெட்கம் கூட. 

எப்போதுமே ஒரு கை உதட்டின் மேலேயே உறவாடிக் கொண்டிருந்தது சிலருக்கு.ஆனால் இந்தப்பருவம் கொஞ்சம் டெலிகேட்டான பருவம்தான் . ஹார்மோன் செய்யும் தாறுமாறு விளையாட்டு. எல்லாவற்றையுமே  அறிந்து கொண்டுவிட ஆசைப்படும் வயது.

செய்யாதே என்றால் செய்வேன் என்று துள்ளும் துடுக்கான துடிப்பு.

செய்துமுடி என்றால் முடியாது ஏன் செய்யணும் என்று எதிர்க்கேள்வி எகிறிக் கொண்டு வரும்.

கோபி கேங் இப்படி வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் கூட்டம் தான். விரல் நுனியில் உலகமே கையில் வந்திருப்பதை விபரீதம் புரியாமலே ரசித்தது.

கோபியின் மாமா அக்கா மகனின் ஆசைக்காக இன்னொரு நவீன அணுகுண்டை கொண்டு வந்து தந்தார். 

கையடக்கமாய் இன்னும் துல்லியமாய் இன்னும் நவீனத்துவத்துடன் கையில் மின்னியது அது. 

“தேங்க் யூ மாமா! “

“கோபி!  நல்லா படிக்கணும். அம்மா சொன்னா உனக்கு பாடமெல்லாம்  மொபைல்லேயே வருது. பழசு கஷ்டமாருக்குன்னு சொன்னியாம். அதான் மாமா வாங்கிட்டு வந்திட்டேன். அடுத்தவாரம் உன் பிறந்தநாள் வருதுல்ல. அதுக்குதான் இந்த பரிசு. அன்னிக்கு மாமா ஆபிஸ் விஷயமா டில்லி போறேன். அதான் இப்பவே வந்திட்டேன்.”




மாமாவின் பேச்சு ஏதும் காதில் ஏறவில்லை. கண்கள் மின்னின.  

அழகாய் அம்சமாயிருந்ததை பார்த்துக் கொண்டேயிருந்தவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு பார்த்தி வீட்டுக்கு ஓடினான்.

மகனைப் பார்த்தவள் தன் சகோதரனிடம்.

” படிப்பே கதின்னு கிடக்கான். எப்போ பாரு அஸைன்மெண்டு, டெஸ்ட்டுன்னு ஸ்கூலில் உயிரை வாங்கறாங்க. அடுத்தவருட பாடத்தையும் இப்பவே முடிக்கணுமாம். புள்ளைக்கு நேரமேயில்லை. இப்படியிருந்தா மூளை சூடாயிடாது. சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க “

என்று கணவனையும் சகோதரனையும் அழைத்தாள்.

“இந்த ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வந்திட்டாலே போதும். ஃப்ரீ சீட்டு கிடைச்சிடும். அதுக்குத்தான் இத்தனை பாடு.”

பேசியபடியே சாப்பிட்டு முடிக்க கோபியின் அன்னை மகனுக்காக விழித்திருந்தாள். ஒவ்வொரு தாயாருக்குமே பெற்ற பிள்ளைகள் மீது அலாதி நம்பிக்கைதான். என் வளர்ப்பு வீண் போகாது என்ற கர்வம் பெற்றெடுத்தக் குழந்தைகளாலேயே உடைக்கப்படும்போது அந்த வேதனையை என்னென்று சொல்வது.?

நால்வரும் ஆசையோடு புது போனை வாங்கித் தொட்டுப் பார்த்தனர். நால்வருமாய் செல்ஃபி எடுத்து முகப்பில் வைத்தனர்.

மேலும் சில தளங்களை தரவிறக்கிக் கொண்டனர். 

பார்த்தாவின் அம்மா நோயாளி. ஒரு பெண்மணி சமையல் செய்து வைத்து விட்டுப் போய்விடுவார் பார்த்தாவின் அம்மாவுக்கு மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டியிருப்பதால் நேரமே உண்டு விட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விடுவார். 

பார்த்தாவின் அப்பாவுக்கு சிறிய அளவில் ஜவுளிக்கடை உண்டு.  அவர் கடையடைத்து விட்டு வரத் தாமதமாகும். அதனால்தான் சிறுவர்களுக்கு பார்த்தா வீடு வசதியாகிப் போனது. பார்த்தாவின் அறையிலோ மொட்டைமாடியிலோ இவர்களின் ராஜ்யம்தான். குழந்தை படிப்பதாக அம்மா நினைத்து நிம்மதியாக உறங்கி விட,  மகனோ நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டு அப்பா வரும் நேரத்துக்கு சமர்த்தனாக அறையில் படித்துக் கொண்டிருப்பான். அப்பாவுக்கு உருகி விடும்.

“சாப்பிட்டியா ராசா! போதும்டாப்பா படிச்சது. தூங்குடாம்மா “என்று தலையை வருடிவிட்டு செல்வார் அப்பாவி அப்பா.

டீனேஜ் பிள்ளைகள் மட்டுமல்ல சின்னஞ்சிறுசுகளுமே ஆண்பெண் பேதமின்றி இந்த இருட்டுக்குள் வீழ்ந்து கிடக்கிறது. 

புதைகுழியென்று தெரியாமலே குழந்தைகள் விழுவதற்கும் பெற்றோர்களே காரணியாகி விடுகிறார்களே!

கேட்டதுமே எல்லாமும் கிடைத்து விடுவதால் எல்லாமே அலட்சியம் தான். 

வாங்கித் தந்ததோடு கடமை முடிந்ததாக நினைக்கும் பெற்றோரின் கண்காணிப்பில்லா பொறுப்பற்றதனத்தை என்ன சொல்வது.?

யாரை சொல்வது? என்னத்தை சொல்வது.?

பார்த்தா  எதையெதையோ ஒற்றை விரலால் தள்ளிக் கொண்டே பார்த்திருக்க ஓரிடத்தில் விரல்  நகராமல் நின்றது. மற்றவர்களை அழைக்கக் கூட வாயெழாமல் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.

தொண்டை வறண்டது.




பார்த்தாவின் விழிகள் வெளியே தெறித்து விடுவதுபோல்  பெரிதாகியது. மற்ற மூவரும் ஜெர்க்காகி நோக்கினர். 

“என்னடா? “

பார்த்தா முகம் வியர்த்தது.  உடம்பு நடுங்கியது.இமை கொட்டவில்லை . கண்மணிகள் கையிலிருந்த மொபைலைப் பார்க்க மற்ற மூவருமே ஒருவர் மேலே ஒருவர் விழுந்து போனைப் பார்க்க 

விடலைப்பருவத்தினர் கண் முன்னே விரிந்தது காணக் கூடாதக் காட்சியொன்று.  …..!

“ஹாய்ஹாய் வ்யூயர்ஸ்.!

எல்லோரும் எப்படியிருக்கிறீங்க? தீபாவளி ஸ்வீட்டெல்லாம் சாப்பிட்டீங்களா?  தீபாவளி சேஃபா கொண்டாடுளீங்களா?  நம்ம ………. சேனல்லே ஏற்கெனவே சொல்லியிருந்தோம் இல்லையா? பாதுகாப்பா கொண்டாடனும்னு. அநேகமா அதையெல்லாம் ஃபாலோவ் பண்ணிருப்பீங்கன்னு நம்புறேன்.

ஓக்கே…

இன்னிக்கு  நான் ஒரு  அழகான காட்சியை உங்களுக்கு கேப்ச்சர் பண்ணி காட்டப்போறேன். வாங்க என்னோடு.

அதற்கு முன்னாலே என்ன செய்யணும்னு தெரியும் தானே? ஹாங்…!அதேதான் . அந்த பட்டனை ப்ரெஸ் பண்ணிடுங்க.அப்பதான் உங்களுக்கும் எனக்குமான உறவு அறுந்து போகாமல் நீடித்துக் கொண்டேயிருக்கும்.

நான் இப்போ எங்கேயிருக்கேன் தெரியுமா? “

அந்த  இளைஞன் பேசிக் கொண்டே நடந்தான். கூடவே காட்சிகளும் பயணித்தது.

கீழே நதி சலசத்து ஓடிக் கொண்டிருந்தது. எதிரே  ஒரு மலைக்குன்று  ரிஷபம் படுத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.ரிஷபத்தின் திமில் மாதிரி அங்கே குன்று ஓரிடத்தில்  குறுகி விரிவாகி கம்பீரமாய் நின்றது. அந்த இடைவெளியினூடே அஸ்தமனச்சூரியனின் ரேகைகள் வெளிர் ஆரஞ்சும்  அடர் சிவப்பும் லேசான வெளிறிப்போன  சிவப்பும் நீலமும் சாம்பலுமாய் ஒன்றின் மீதொன்றாய் படிவங்களாய் இருக்க படிவத்தின் விளிம்புகள் வெள்ளியாய் ஒளிர்ந்து கண்ணைக் கூச வைத்தது. பெரிய வட்டவடிவமாய் ததகத்தது.

அந்த இளைஞன் அதை வர்ணித்துக் கொண்டே  கேமிராவை சரியான கோணத்திற்காக. கையிலேந்தியபடியே மேற்குத்திசையை பார்த்தபடியே எதிர்ப்புறமாய் பின்புறமாகவே அடியடியாய் நகர்ந்தான். 

ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் ரிஷபம் நிமிர்ந்து அமர்ந்திருப்பது போலும் எதிர்ப்புறத் தோற்றம் லிங்கம் மாதிரியும் தோன்றும். லிங்கமொன்றின் முன்னே நந்தி அமர்ந்திருப்பது போன்றதொரு தெய்வீகத் தோற்றம் புலப்படும். 

கதிர்களின் ஒளியில் அந்த இடமே ஜாஜ்வல்யமாய்  ஜொலிக்கும். தாவரங்கள் பொன்னாய் பொலிந்து கண்ணைப் பறிக்கும்.! சில நொடிகள் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி அது. 

சூரியன் இறங்க இறங்க. இயற்கை தன் நிறத்தை மாற்றிக் கொண்டு விடும். 

அவன் வேகமாக எட்டு வைத்து பின்னேறி மேலேற உச்சிக்கே வந்து சேர்ந்திருந்தான். 

அவன் நினைத்திருந்த வண்ணம் காட்சி கண் முன்னே விரிந்திருக்க கேமிரா சுழன்று விழுங்கியது.  

நினைத்ததை சாதித்து விட்ட ஆனந்தத்தில் கூச்சலிட்டு நகர பாதம் வழுக்கத் துவங்கியது.

பிடிமானமின்றி கீழ் நோக்கிச் சரிய கேமிரா கையிலிருந்து துள்ளியோட உடம்பு சுழன்றடித்து சறுக்கிக் கொண்டு வந்து ஒரு புதரில் செருகிக் கொண்டது. 

தலை பாறையிலோ எதிலோ ‘ணங்’கென்று அடிவாங்க அந்த இளைஞன் மெல்லமெல்ல மயக்கத்திற்குப் போனான். 

அவனுடைய குழுவினர் அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் களைத்தனர்.

“இங்கே பாருங்கடா! கேமிரா கீழே கிடக்குது. 

அய்யோ!  அப்போவே சொன்னேனே! கவனம் கவனம்ன்னு! காதுலேயே வாங்கிக் கிடலையே இப்போ என்னடா பண்றது. “

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்க கண் கலங்கியது. ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டனர் மற்றொருவன் கேமிராவை எடுத்துவர அது சில்லுசில்லாக உடைந்திருந்தது.

மெல்ல மெல்ல சுற்றிலும் இருள் பரவத் தொடங்கியிருந்தது .

காற்றில் ஒருவிதமான அமானுஷ்யம் கலந்து ஒவ்வாமையைத் தந்தது. மூவரும் அடர்த்தி இன்னும் கவிழாத இருட்டில் வரிவடிவமாய் நின்று கொண்டிருந்தனர்.

(விபரீதங்கள்  தொடரும்)




What’s your Reaction?
+1
6
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!