Serial Stories

வா எந்தன் வண்ண நிலவே-7

7

“கொஞ்சம் மேக்கப் சரி செய்து விட்டு வருகிறேன்” குறைந்த குரலில் அவனிடம் முணுமுணுத்து விட்டு வேகமாக அவனை விட்டு அகன்றாள் எழில்நிலா.

” ஷுயர், மேக்கப் சரி பண்ணி விட்டு வந்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு போதும்”மனோகரமாய் முறுவலித்தான்.இப்போதைக்கு தப்பித்து விடலாம் என்று அகன்றவளின் மனக் கோட்டை மேல் ஒரு லாரி மண்ணள்ளி போட்டான்.

 அடிக்கடி இப்படி இளித்து தொலையாதேடா எமகாதகா! முணுமுணுத்தபடி மணமகள் அறை பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டாள். இப்போதெல்லாம் நாலு வார்த்தை சேர்ந்தாற் போல் இவனிடம் பேச முடியவில்லை,ஆனால் அன்றெல்லாம் வாயை மூடாமல் அவ்வளவு பேசினோமே, எப்படி முடிந்தது! என்னதான் பேசினோம்! எழில்நிலாவிற்குள் குழப்பம் தீரவில்லை. குளியலறை சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றாள்.மனதிற்குள் நித்யவாணன் அவளிடம் அக்கறை காட்டி பேசிய நிமிடங்கள் தோரணங்களாக ஆடின.

என்னைத்தானா ?என்னிடந்தானா பேசினான் ?எழில்நிலா சுற்றி சுற்றி பார்த்தாள் .”உன்னிடம் தான் கேட்கிறேன்..” என்றான் நித்யவாணன் .

 “அ..அ…அது ..வந்து “என திணறினாள் எழில்நிலா . “என்ன வந்து …போயி …பாம்புகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திசையை மாற்றி விடும் தெரியுமா ?”என்றான் நித்யவாணன் . 

எதிலோ படித்த ஞாபகம் வர ‘தெரியும்’ என தலையாட்டினாள் எழில்நிலா . “தெரிந்தும்..” என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சாருகேசியும் ,மானசியும் வருவதை பார்த்ததும் “அப்புறம் பேசலாம்” என அவளிடம் முணுமுணுத்து விட்டு அங்கிருந்து அகன்றான் .

 வீட்டிற்கு திரும்பிய பின்னும் நெடுநேரம் எழில்நிலாவுக்கு நடந்த சம்பவங்களை நம்பவே முடியவில்லை . நேற்று இந்நேரம் அவனை சந்திக்கவே முடியாது என நினைத்தோமே … இன்று சந்தித்ததோடு அவனோடு பேசியுமாயிற்று , அவனும் பேசி விட்டான்,அதுவும் வெகு அக்கறையாக … நினைக்க நினைக்க உருகிப்போனது அவள் உள்ளம்.

 மறுநாள் வெளியே கிளம்பும் போதே இன்றும் நித்யவாணனை சந்திக்க நேர்ந்தால் நன்றாயிருக்குமே என தோன்றியது . கடவுள் கருணையிருந்தால் நடக்கும் என எண்ணியபடி காலை உணவுக்காக வந்த போது “எழில் இன்னைக்கு எங்க எல்லோருக்குமே வேலை இருக்கேடா ,இன்னைக்கு ஒரு நாள் வீட்டிலேயே இருக்கிறாயா ?நாளை போட்டிங் போகலாம் “என்றாள் மைனாவதி.

 காலை எழுந்த போது இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது எழில்நிலாவுக்கு .”ம் …”என்றாள் குரல் எழும்பாமல் . “என்ன மைனா ,நம்ம ஊரை சுற்றி பார்க்கவே ஆசையா வந்த பொண்ணு .வீட்டுக்குள்ள இருன்னா எப்படி ?எவ்வளவு நேரந்தான் சும்மா மரத்தையும் மட்டையையும் பார்ததுக்கிட்டிருப்பா ?”என்றார்  சாருகேசி .

 “இல்லங்க இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாண வீடு இருக்கு .வருணுக்கும் ,மானசிக்கும் கிளாஸ் இருக்கு .அதான் ..”




 “நம்ம வேலை என்னைக்கும்தான் இருக்கு .ஆசையா நம்ம ஊருக்கு வந்த பிள்ளையை ஏமாற்றலாமா ?எழில் சின்ன காரை  ,சாமிதுரையை ஓட்ட சொல்லிட்டு போறோம் .நீ அவன் கூட போட்டிங் இல்லைன்னா வேற இடத்துக்கு போயிட்டு வர்றியா ?”எனக் கேட்டார்.சிறிது தயங்கினாள் எழில்நிலா. 

இதுவரை பெரியவர்கள் துணையில்லாமல் அவள் எங்கும் வெளியே சென்றதில்லை .இப்போது எப்படி … எண்ணமிடும்போதே அவள் ராஜகுமாரன் மனதுக்குள் தோன்றி அப்புறம் பேசலாம் என புன்னகைத்தான். 

சரி சொல்லிவிடுவோம் என எண்ணி வாயை திறந்த போது ,”இல்லையில்லை தனியாக எப்படி அனுப்புவது ? அக்காவிற்கு தெரிந்தால் திட்டுவாள்.அதெல்லாம் வேண்டாம் “என ஆட்சேபித்தாள் மைனாவதி.

 “தனியா என்ன? சாமிதுரை நம் வீட்டு ஆள் போல ,நம்மிடம் பதினைந்து வருடங்களாக வேலை செய்பவர் .நல்ல விசுவாசி .அவரை நம்பி தாராளமாக எழிலை அனுப்பலாம்.நீ கிளம்பும்மா “என்றார். வானத்து விண்மீன்களை கை நிறைய அள்ளியது போல் மகிழ்ந்தாள் எழில்நிலா .

 லேக்கில் போய் காலை வைத்தவுடன் பார்வையை அங்குமிங்கும் மேய விட்டாள் . “யாரை தேடுற ?”என்றபடி பின்னால் வந்து நின்றான் நித்யவாணன் .

எப்படி இங்கேயும் வந்தான் ? யோசிப்பதற்கு பதில் முகம் முழுதும் பற்களை காட்டி விழி விரித்தாள் எழில்நிலா . 

போட்டிங்கிற்கான டிக்கெட்டுடன் வந்த சாமிதுரையிடம் டிக்கெட்டை வாங்கியபடி “போகலாமா..?” என்று ஒரு போட்டை நோக்கி நடத்தான்.மறுக்க தோன்றாமல் ஆட்டுக்குட்டி போல் பின்னால் சென்றாள். 

முழுவதுமாக இரண்டு மணி நேரங்கள் போட்டிலேயே ஏரி முழுவதும் சுற்றினர் . பேசினர் …பேசினர் ..என்ன ..எதை பேசுகிறோம் என அறியாமல் ,இப்பூமியில் இருக்கும் அனைத்தை பற்றியும் பேசினர் . பத்து நிமிடங்களே இருக்கும் என அவள் எண்ணிய இருமணி நேரங்களுக்கு  பிறகு , மனமின்றியே வீட்டிற்கு கிளம்பினாள்.”உன்  நம்பர் சொல்லு” கேட்டு வாங்கி கொண்டான் நித்யவாணன் .

 இரவில் எதிர்பார்ப்புடன் போனை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ‘நல்ல இரவுடன் ,இனிய கனவுக்கான வாழ்த்து’ வந்தது நித்யவாணனிடமிருந்து . தானும் பதிலுக்கு வாழ்த்தி விட்டு “யாஹூ ..!”என கைகளை உயர்த்தி கத்தினாள்.

உண்மையிலேயே அன்றைய இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது அவளுக்கு . தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் சித்தி ,சித்தப்பாவிற்கு வேலை ,வருண் ,மானசி படிப்பு என அமைய ,எழில்நிலாவின் ஊர்சுற்றலுக்கு சாமிதுரையே துணையாகி போனார். 

வீட்டின் வெளியே நித்யவாணன் இமையாகி போனான் .கொடைக்கானலின் ஒவ்வொரு இடத்தையும் ஒரு தேர்ந்த கைடின் திறமையுடன் விளக்கினான் . உலகத்து விசயங்கள் அனைத்தையும் எளிதாக விவரமாக  நித்யவாணன் பேசும்போது ,இவன் அறியாத விசயங்களே இந்த உலகில் கிடையாது என்றே நம்பினாள் எழில்நிலா . 

இரவுப்பொழுதுகள் நித்யவாணனுடன் ,வாட்ஸ்அப்பில் கழிந்தது. அதெல்லாம் காதலா என்று எழில்நிலாவிற்கு தெரியவில்லை. மிக அழகான கம்பீரமான ஆண் ஒருவன் அவளை தேடி வந்து பேசும் போது அவளுக்கும் அவனுடன் சேர்ந்து பேச ஊர் சுற்ற மிகவும் பிடித்திருந்தது. செய்தாள். அப்போது அவளுக்கு தெரியவில்லை நித்யவாணனுக்கு பொழுது போவதற்காக அவன் பெருமையை புகழை கேட்டுக் கொண்டே தலையாட்டிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பொம்மை தேவைப்பட்டது. தன்னை அதற்கு உபயோகித்துக் கொண்டான் என்பது.

 இப்போது தெரிந்த பிறகும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. ஆக நான் நித்யவாணனை காதலிக்கிறேன். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தபடி தன்னைத் தானே உறுதிப்படுத்திக் கொண்டாள்.




 அவன் உன்னை ஜெயித்து விட்டானடி கண்ணாடி உருவம் கிண்டல் செய்ய, இல்லை தாலி கட்டி விட்டதால் மட்டுமே அவன் ஜெயித்ததாக ஆகிவிடாது. இந்த வெற்றியை அவனுக்கு கொடுக்க மாட்டேன் தனக்குள் தானே ஓர் உறுதி எடுத்துக் கொண்டாள்.

 பின் மேக்கப் கலையாமல் தலையை முகத்தை கண்ணாடி பார்த்து சீர்திருத்திக் கொண்டிருக்கையில் சன்னலின் மறுபுறம் அந்த பேச்சு சத்தம் கேட்டது

“என்ன நம்ம சந்திராக்கா இப்படி பண்ணிட்டாங்க ?”யாரோ ஒரு பெண் யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தாள் . 

“அதானே ஏதோ உலகத்துல இல்லாத மருமகளை கொண்டு வரப் போறதா பெரிசா பீத்திக்கிட்டு இருந்தாங்க .இப்ப என்னன்னா இந்த கறுப்பியை கொண்டு வந்து உட்கார வச்சிருக்காங்க “..இது வேறொரு பெண் .

 சுரீரென்றது எழில்நிலாவுக்கு . யாரைப்பற்றி பேசுகிறார்கள் ? தன்னையா ?..காதுகளை கூர்மையாக்கினாள் . 

“ஆமா நம்ம நித்யா தம்பி அழகுக்கும் கலருக்கும் இந்த கறுவாச்சி எந்த மூலைக்கு ?சரி விடு இதெல்லாம் நமக்கெதுக்கு? காசு இருக்குறவங்க கரிக்கட்டையை காட்டினாலும் வெண்ணைய் கட்டின்னு சொல்லனுங்கிற பொழப்பு நமக்கு.ம்…இந்த பந்தி முடியப்போகுது வா போய் சாப்பிடலாம்” என்றது அடுத்த குரல் .

ஆக்ரோச அருவியாய் ஆர்ப்பரித்தது எழில்நிலா உள்ளம் .எவ்வளவு திமிர் என்னைப்பற்றி இப்படி பேச, அவர்களை… பல்லை கடித்தபடி கதவை திறந்து வெளியே செல்லும்போதே மனம் மாறிவிட்டது . 

அவர்கள் சொன்னதில் என்ன தப்பு? நான் கறுப்புதானே …இந்த நினைவு வரவும் கால்கள் நடுங்குவதாய் உணர்ந்தவள் அருகிலிருந்த கைப்பிடி கம்பியை பிடித்து கொண்டாள்.

இந்த கறுப்பியை தேடிப்பிடித்து மநம் முடிக்க வேண்டிய கட்டாயம் பேரழகான அவனுக்கு ஏன் வந்தது என்ற போராட்டம் தானே அவளுள்!

 சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக நடந்து போய்  நித்யவாணனின் அருகில் அமர்ந்தாள் . உடனே இருவருக்குமான இடைவெளியை குறைத்தான் அவன்.கணவன் மனைவி  கைகள் உரசி கொண்டன . வெள்ளை வெளேரென்ற அவனது கைகளுக்கு அருகே தமிழர்களின் சராசரி நிறமான மாநிற கைகள் . கண்ணீர் தளும்பியதால் கைகள் மங்கலாக தெரிந்தன எழில்நிலாவுக்கு.




What’s your Reaction?
+1
31
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!