Serial Stories

வா எந்தன் வண்ண நிலவே-6

6

“மாப்பிள்ளை மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ” அய்யர் தாலியை நித்யவாணன் கையில் கொடுக்க கோடி மலர்களுடன் ,சொந்த பந்தங்களின் வாழ்த்துக்களுடன் , தாய் தந்தையரின் நெகிழ்வுடன் ,தோழிகளின் கேலியுடன் கழுத்தின் பின்புறம் நித்யவாணனின் சூடான விரல் ஸ்பரிசத்துடன் அவனின் மறுபாதி ஆனாள் எழில்நிலா . 

வலதுகையை அவளை சுற்றி வளைத்து கொணர்ந்து அவள் நெற்றியில் ,வகிட்டில் குங்குமம் இட்டான் நித்யவாணன் .அந்த சிறு அருகாமையே அவளை திணறடித்தது . 

ஒரு நொடி அவன் கைகளை தள்ளி விட்டு ஓடிவிடலாம் என்று பயந்தவள் ,மறுநொடியே தலை திருப்பி அவன் மார்பில் புதைந்து கொள்ளலாமா ? என ஏங்கினாள் .தாலி கட்டியானதும் ஐய்யய்யோ எனும் பரிதவிப்பும் ,அப்பாடா எனும் பெருமூச்சும் ஒன்றாக தோன்றின . 

தனது உணர்வுகளை வெகு பாடுபட்டு மறைத்துக் கொண்டு அடிக்கண்களை சுழற்றி மானசியை தேடினாள். முதல் நாள் இரவு அவள் கேட்ட கேள்விக்கு இன்னமும் எழில்நிலாவிடம் பதில் இல்லை. ஆனாலும் இதோ நித்யவாணனின் மனைவியாகிவிட்டாள்.

 மாலை மாற்றும் சாக்கில் அவள் பக்கம் குனிந்தவன்  “யாரை தேடுகிறாய்? உன் அருமை தங்கையையா? அவள் நம் திருமண சடங்குகள் முழுவதும் முடிந்த பிறகுதான் இந்த மண்டபத்திற்கு வருவாள்” என்றான் மயக்கு புன்னகை ஒன்றை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டு.திடுக்கிட்டு  நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

” கவலை வேண்டாம் டார்லிங், எந்த தீய சக்தியும் நம்மை பிரிக்க முடியாது” சொல்லிவிட்டு இதழ்களை குவித்தான். இப்போது அவன் மாற்றி போட்ட மாலை கல்லாய் கனத்தது எழில்நிலாவிற்கு.

முதல் நாள் இரவு பேசிக் கொண்டிருந்த அக்கா தங்கைக்கு இடையில் விளக்கு பூதம் போல் திடுமென தோன்றி நின்றான் நித்யவாணன்.

“உன்னுடைய டூர் அதற்குள் முடிந்து விட்டதா?” மானசியை பார்த்து கேட்க, அவள் கொஞ்சம் தடுமாறி பிறகு “அக்காவின் கல்யாணத்திற்காக பாதியில் வந்து விட்டேன்” என்றாள்.

“ஓ சரி வா, உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” அதிகாரமாய் அழைத்தவனுக்கு பயந்து எழில்நிலாவின் கையை பற்றினாள் மானசி.

“நான் போகவில்லை அக்கா, எனக்கு பயமாக இருக்கிறது”

” எதற்காக அவளை பயமுறுத்துகிறீர்கள்?” தங்கையை தனக்கு பின்னால் மறைத்துக் கொள்ள முயன்றாள். சட்டென அவள் தோள் பற்றி தள்ளியவன் மானசியின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.

இதென்ன அநியாயம்! இதை கேட்க யாரும் இல்லையா? மறுநாள் காலை எனக்கு தாலி கட்டப் போகிறவன் இன்று தங்கையை கைப்பற்றி இழுத்துப் போவதை யாரிடம் சொல்ல பதறியபடி அவள் நின்றிருந்த போது, மைனாவதி அந்தப் பக்கம் வர வேகமாக அவளிடம் ஓடினாள். “சித்தி நம்ம மானு…”

“ஊரிலிருந்து வந்துட்டாம்மா. ஹோட்டல் ரூமில் இரவு தங்க வைக்க உன் சித்தப்பா கூட்டிப் போயிருக்கிறார். காலையில் கல்யாணத்திற்கு வந்து விடுவாள்” சொல்லிவிட்டு ஆரத்தி தட்டுகளை சரி பார்க்க போய்விட்டாள் மைனாவதி. 




சாருகேசியே மானசியை அழைத்துப் போனதையும் விசாரித்து தெரிந்து கொண்டவள் அமைதியாய் இருக்க வேண்டியவளானாள்.ஆனால் இதோ இப்போது வரை மானசியை காணவில்லை.

“ஏன் இப்படி செய்கிறீர்கள்? அவள் சின்னப்பெண். அவளை ஒன்றும் செய்து விடாதீர்கள்” குரலில் மன்றாடலுடன் தன் கழுத்து மாலையை அவன் கழுத்திற்கு மாற்ற கை தூக்கினாள்.நித்யவாணனின் நண்பர்கள் பட்டாளம் ஓ என்ற கூச்சலுடன் அவனை பின்னுக்கு இழுத்தது.

அவர்கள் இழுவைக்கு பின்னால் போனவன் “வா” என இவளுக்கு கண் ஜாடை காட்ட எழில்நிலா பாதங்களை தரையில் ஊன்றினாள். “போடி” பின்னிருந்து அவளை தள்ள முயன்ற தோழிகளை தவிர்த்து கால்களை பூமியில் ஊன்றி அவனை அழுத்தமாக பார்த்தாள்.

இதில் நண்பர்கள் கூட்டம் திகைத்து நிற்க, அவர்கள் பிடியிலிருந்து விடுபட்ட நித்யவாணன் எழில்நிலா அருகே வந்து அவள் உயரத்திற்கு தன்னை குறுக்கி தலை குனிந்து நின்றான்.இப்போது ஓரளவு திருப்தியான எழில்நிலா மாலையை அவன் கழுத்தில் போட்டாள்.

“சின்னப் பெண்ணா…? உன் தங்கையா…?” அவனது கேள்வி கூர்முள்ளாய் அவளை தைத்தது.

ப்ச்…மானு சொன்னது சரிதான்.இவனை போற்றி உயர்த்தி பிரமித்து பேசாத பெண்களெல்லோரும் இவனது விரோதிகள்.

“ஏய் பார்த்தியாடி அவனை! வயதுப் பெண்கள் இரண்டு பேர் நிற்கிறோம். கொஞ்சமாவது திரும்பி பார்க்கிறானா பாரு. பெரிய கர்வி இவன்” மானசி சொல்ல போனை பார்த்தபடி நின்ற நித்யவாணனிடமிருந்து பார்வையை திருப்பி தங்கையை ஆச்சரியமாக பார்த்தாள் எழில்நிலா.

” இவரை உனக்கு முன்பே தெரியுமா?”

” ஏன் தெரியாமல்..? நம்ம பக்கத்து எஸ்டேட்காரன் தானே? பிசினஸ் விஷயமா அடிக்கடி அப்பா கூட பார்த்திருக்கேன். ஒரு நாள் கூட நிமிர்ந்து மூஞ்சியை பார்க்க மாட்டான்.  பேரழகன் நான், என் பார்வை விழும் தகுதி கூட இங்கே யாருக்கும் கிடையாதுங்கிற மாதிரி நடந்துப்பான். இந்த மாதிரி தலைக்கனம் பிடித்தவனுக்கெல்லாம் பொண்டாட்டியாக வரப் போகிறவள் கண்ணைக் கொண்டு பார்க்க முடியாத அளவு இருக்கப் போகிறாள் பாரேன்..”

அன்று மானசியின் சாபம் எழில்நிலாவின் மனதிற்குள் இறங்கவில்லை. அவளவன் பெண்களை நிமிர்ந்தும் பார்க்காத குணமானவன் என்ற அளவோடு அவளுள் நின்று போனது மானசியின் வார்த்தைகள்.

நித்யனுடன் காபியா !சித்தப்பா அழைத்ததும் ஆவலுடன் மானசியின் கையை பற்றியபடி சாருகேசியை நோக்கி நடந்தாள்.

அவர்கள் இருவரும் அருகில் வருமுன் நடக்க தொடங்கியிருந்தான் நித்யவாணன் .முகம் சுண்டிப்போனது எழில்நிலாவுக்கு .மானு சொன்னது சரிதானோ! நான் இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டேன் என்கிறானே வருந்தினாள்.

பார்த்தாயா நான் சொல்லவில்லை! என மானசி ஜாடை காட்ட அதை கவனிக்காதது போல் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

ஹோட்டலில் சாப்பிடும் நேரம் முழுவதும்  அவன் பார்வை  சாருகேசியிடமே இருந்தது .ஏதேதோ பிசினஸ் சமாசாரங்கள் பேசினர் இருவரும் .தட்டிலிருந்த சமோசாவை மெல்ல முடியாமல் எழில்நிலா தவித்துக்கொண்டிருக்க நித்யவாணனும் சாருகேசியும் உண்டு முடித்து விட்டு கை கழுவ எழுந்து விட்டனர் .

பின்னாலேயே மானசியும் சென்று விட அவசரமாக சமோசாவை ஒதுக்கினாள் எழில்நிலா .சாருகேசியும் மானசியும் கை கழுவி விட்டு வந்தமர்ந்து பில்லுக்காக காத்திருக்க ,நித்யவாணனை காணவில்லை.

கண்களால் அவனை தேடியபடி கை கழுவிக்கொண்டிருத்தவள் “இப்படித்தான் அந்த பாம்பு முன்னால் திடீரென்று வந்து நிற்பாயா ?” கண்டிப்புடன் கேட்ட கரிசனக்குரலில் திடுக்கிட்டு திரும்பி ஆச்சரியமாய் பார்த்தாள்.

“என்ன யோசனை? அந்த பாம்பை பற்றியா?” கேள்வி கேட்ட நித்யவாணன் உரிமையோடு அவள் தோளை உரசியபடி அமர்ந்திருந்தான். தோளை சுருக்கி சற்று அவள் நகர மேலும் அழுத்தமாக ஓட்டினான்.

“உங்கள் அழகை புகழாத பெண்களை எல்லாம் எதிரியாக பார்ப்பீர்களே, அந்த குணத்தை யோசித்தேன்” மானசியை மனதில் நினைத்து வார்த்தைகளை இரைத்தாள். ஒரு நிமிடம் கடுமையான அவன் முகம் அடுத்த நொடியே மாறியது. கண்களில் குறும்பு வந்து அமர்ந்து கொண்டது.

” உன்னை எதிரியாகவா பார்த்துக் கொண்டிருக்கிறேன்? தாலியை கட்டி மனைவியாக்கிக் கொண்டேனே!” 

எழில்நிலா திகைத்தாள். இவனை… இவனது இந்த கவர்ச்சிகரமான அழகை நான் சொன்னதில்லையா? தலை சாய்த்து யோசித்தாள்.

” ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. பார்த்து பார்த்து கவனமாக அலங்காரம் செய்து கொண்டு உன் முன்னால் வந்து நின்றதெல்லாம் வீணாகத்தான் போனது. இப்போது வரை…” ஏக்கமான பேச்சுடன் பெருமூச்சு ஒன்றும் விட்டவனை  ஏறிட்டு நோக்கினாள்.

 வெண்ணிற பட்டு வேட்டி சட்டையில் ஷார்ட் டக்டைல் பாணி தாடியுடன்,நெற்றியில் கீற்றாக மின்னிய சந்தனம்,குங்குமத்துடன் மணமகனாக அமர்ந்திருந்தவனை விட்டு விழிகளை எடுக்க முடியவில்லை அவளால்.அவள் மனம் கவர்ந்தவன்தான்…பார்த்த நொடி முதல் தன் அழகால் அவளை திணறடித்துக் கொண்டிருப்பவன்தான்.அவனிடம் மதி மயங்கி கிடப்பதற்கான சான்று…அன்றைய அவனது பேச்சைக் கேட்ட பின்னும் இன்று அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டு செய்வதறியாது விழித்து நிற்கிறாளே,இந்த நிலைதான்.

ஆனாலும் ஒரு முறை கூட அதனை வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லையா என்ன? முயன்று தேடிப் பார்த்தும் அது போன்ற நிகழ்வுகள் ஞாபக அடுக்குகளில் இல்லாமல் போக,எழில்நிலா மானசீகமாக தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்.எழில் பரவாயில்லைடி நீ , உள்ளுக்குள் காதல் பித்தேறி கிடந்தாலும்,வெளியே அதை… அட்லீஸ்ட் இவனிடமாவது  வெளிப்படுத்தாமல் இருந்தாயே அந்த மட்டும் சந்தோசம்.

அவளது இந்த சந்தோசத்தை உடனே முறித்து போட்டான் நித்யவாணன்.”பார்த்த உடனே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தோணுதில்ல?” 




What’s your Reaction?
+1
38
+1
15
+1
3
+1
0
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!