Serial Stories

கடல் காற்று-23

 ( 23 )

” தோசை பிடிக்கவில்லையென்றால் இந்த புட்டு வேண்டுமானால் ருசித்து பாரேன் ” உபசாரத்துடன் புட்டினை சமுத்ராவின் தட்டில் வைத்தான் யோகன் .

புட்டின் மேல் ஊற்றப்பட்ட  கொண்டைக்கடலையை பார்த்த சமுத்ரா ” உன்னை யார் இதை வைக்க சொன்னது ? நான் தேங்காய் துருவல் போடலாமென நினைத்தேன் ” என குழம்பு ஊற்றிய மேகலாவிடம் எரிந்து விழுந்தாள் .

பதிலுக்கு மேகலா கரண்டியை அவள் மண்டைக்கு திருப்பியிருப்பாள் .யோகனை நினைத்து தன் வேகத்தை அடக்கிக் கொண்டாள் .

” மேகலா வேறு தட்டு வைத்து அதில் தேங்காய் துருவல் போடு ” என்றான் யோகன் .

“இல்லை வீணாக்க  வேண்டாம் ,இதையே சாப்பிட்டு விடுகிறேன் .” முணுமுணுத்தபடி உண்ண முயற்சித்தாள் .

இப்படி ஒரு வார்த்தை சொல்லாமல் தனா கிளம்பி போவானென நினைக்கவில்லை அவள் .கைகளால் உணவை  அளைந்தபடி இருந்தாள் .

” இந்த குழந்தைகளின் மேல் படிப்பிற்காக சில ஏற்பாடுகள் செய்திருக்கிறேன் சமுத்ரா .ஆந்திர மீனவர்கள் பிரச்சினை பற்றி இன்று விரிவாக பேசலாம் .நீ அந்த போர்ச்சுகீசிய கல்லறைகளை பற்றி கேட்டாயே ? இன்று எனக்கு ் கொஞசம் வேலை குறைவுதான் .போய் பார்க்கலாமா ?”

” ம் …” என்றாள் ஏதோ நினைவில் .

” சமுத்ரா …” அழுத்தமான குரலில் அழைத்தான் .நிமிர்ந்து அவனை முறைத்தாள் .

” இன்று நான் எங்கும் வருவதாக இல்லை .நீங்கள் ஓய்வாக இருந்தால் , நீங்கள் மட்டும் போய் கொள்ளுங்கள் ” படபடவென பொரிந்துவிட்டு பாதி உணவில் எழுந்து சென்று அறையினுள் புகுந்து கொண்டாள் .

இவளுக்கெல்லாம் அமைதியாக சொன்னால் தெரியாது .அதிரடியாக முடிவெடுக்க வேண்டியதுதான் .என எண்ணிக் கொண்டான் அவன் .

அறையினுள் சன்னல் திண்டில் அமர்ந்து வெளியே பார்த்தபடி இருந்தாள் சமுத்ரா .எப்போதும் போல் இப்போதும் கதவை தட்டாது முன்னறிவுப்பின்றி உள்ளே நுழைந்தான் யோகன் .




” எப்பொழுதுதான் கொஞ்சம் நாகரீகத்தோடு நடந்து கொள்வீர்கள் .ஒரு பெண் தனித்திருக்கும் அறைக்கு இப்படித்தான் முன்னறிவிப்பின்றி வருவீர்களா ?” கோபமாக கேட்டாள் .

அலட்சியமாக கைகளை அசைத்தான் அவன் .” உன்னிடம் பேச வேண்டும் .அதனால் வந்தேன் “

” நான் இப்போது பேசுவதாக இல்லை .வெளியே போங்கள் ” வாசலை நோக்கி கை நீட்டினாள் .

நிதானமாக நடந்து வந்து உரிமையாக கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். ” எனக்கு பதில் கிடைக்கும் வரை இங்கிருந்து போகும் எண்ணமில்லை ” என்றான் .

” அப்படியே உட்கார்ந்திருங்கள் .நான் போய் கொள்கிறேன் ” வேகமாக எழுந்து வெளியே போக முயன்றாள் .அவள் கால்களின் இடையே தன் கால்களை நீட்டி இடறி விட்டான் .தடுமாறி அவன் மேலேயே விழுவதை எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை சமுத்ராவால் .

தன் மேல் பூங்கொத்தாய் சரிந்த சமுத்ராவை மென்மையாக பற்றி , தன்னருகிலேயே அமர வைத்தான் யோகன் .

” நான்தான் பேசலாமென்றுதானே கூறிக்கொண்டிருக்கிறேன் .அதற்குள் என்னம்மா மேலே விழுந்து வேண்டுமளவு  அவசரம் ?” கிண்டலாக கேட்டான் .

அளவில்லாமல் எழுந்த ஆத்திரத்தில் மீண்டும் எழுந்து வெளியே செல்ல முயன்றாள் சமுத்ரா .அவள் தோள்களை இருந்த பற்றி அமர வைத்தவன் ” வீண் முயற்சி வேண்டாம் சமுத்ரா .இப்போது உன்னுடன் பேசியே தீருவேன் .இல்லை எழுந்து போவதை சாக்கிட்டு இது போல் என்னுடன் உரசிக் கொண்டிருப்பது உன் பிரியமெனில் அதில் எனக்கு எந்த அபிப்ராய பேதமுமில்லை .ஏனெனில் இந்த நிலைமை எனக்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது ” என்றவன் கரங்கள் ஆவலுடன் சமுத்ராவின் தோள்களை வருடியபடி இருந்தன .

அப்போதுதான் அவனுடனான தன் நெருக்கத்தை உணர்ந்த சமுத்ரா சட்டென அவன் கைகளை தட்டி விட்டு மீண்டும் சன்னல் திண்டின் மேல் அமர்ந்து கொண்டாள் .

” அசுரர்களெல்லாம் இப்போது மறு அவதாரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள் .அதில் முதலிடம் உனக்குத்தான் ” என வெறுப்பை உமிழ்ந்தாள் .

” மிக்க நன்றி ..” என தலை குனிந்தான் ஏதோ அவனை பெரிதாக பாராட்டியது போல் .

” எனக்கு லாவண்யா பற்றிய விபரங்கள் வேண்டும் .அவள் இருப்பிடம் சொல்லாமல் உன்னை நான் விட மாட்டேன் ” என்றாள் மிரட்டலான குரலில் .

” சரிம்மா சொல்கிறேன் .இதற்காகவா உன்னை இப்படி வருத்திக் கொள்கிறாய் …ம் …” என்றான் சமாதானக் குரலில் .




” எனக்கு இப்போதே …உடனடியாக தெரிய வேண்டும் .எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் அவளை …?”

” நீ எனது நிபந்தனைகளை மறந்துவிட்டு பேசுகிறாய் ” இப்போது அவன் முகத்தில் விளையாட்டுத்தனம் முற்றிலும் மறைந்துவிட்டது .

” அதையெல்லாம் மூட்டை கட்டி உன்னோடே வைத்துக் கொள் ..கண்டிப்பாக அது நடக்காது .”

அவளது ஆங்கார  கத்தலை காதில் வாங்காமல் தனது செல் போனில் ஏதோ ஆராயத் தொடங்கினான் .

” நீ சுற்றி விடும் போது சுழலும் பொம்மையென என்னை நினைத்தாயோ …? இந்த உலகத்திலேயே நான் அதிகமாக வெறுக்கும் நபர் நீதான்  .உன்னைப் போல் ஒருவனை திருமணம் செய்ய எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள் .எந்த தகுதியை வைத்துக் கொண்டு என்னிடம் திருமணம் பேசுகிறாய் ? எதைக் காட்டியும் என்னை பணிய வைக்க உன்னால் முடியாது …” அளவற்ற ஆத்திரத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தாள் சமுத்ரா .

யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் பாவனையில் போனை ஆராய்ந்து கொண்டிருந்தவன் ” உன் போனை எடுத்து பார் ” என்றான் .

திடீரென சம்பந்தமில்லாமல் அவன் பேசவும் தன் பேச்சை நிறுத்திவிட்டு விழித்தாள் சமுத்ரா .

” ம் …பார் ….” அதிகாரமாக உறுமினான் .

யோகேஷ்வரன் அவனது போனிலிருந்து ஒரு வீடியோ சமுத்ராவிற்கு அனுப்பியிருந்தான் .அதனை திறந்து பார்த்த சமுத்ரா அதிர்ச்சியடைந்தாள் .இது எப்படி சாத்தியம் …?இதனை இவனால் எப்படி செய்ய முடிந்த்து …?என முதலில் அவள் குழம்பியது ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது .

அதற்குள் சே …என்னைப் போல் ஒரு அறிவற்றவள் எங்கும் இருக்க மாட்டாள் .இப்போதுதான் எல்லா இடங்களிலும் கேமரா மாட்டி விடுகிறார்களே …இதனை எதிர்பார்க்காத்து எனது தவறுதானே ….தனது தலையில் தானே கொட்டிக் கொண்டாள் .

அந்த வீடியோவில் சமுத்ராவும் , தனசேகரனும் மாடி அறைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக அலசியது அழகாக பதிவாகியிருந்த்து .இவர்கள் முகங்களோடு தெளிவான பேச்சுக்களோடு …

” ஆஹா …பெரிய சாதனைதான் …இதனை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாய் ? ” போனை அலட்சியமாக தூக்கி போட்டாள் .

கட்டிலில் பின்னால் சாய்ந்து கைகளை ஊன்றிக் கொண்டவன் ” போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் ” என்றான் நிதானமாக .

” என்னவென்று …? உனது சொத்துக்களை திருடி விட்டோமென்றா ? அப்படி திருடியவை என எந்த சொத்துக்களை காட்டுவாய் ? நீ கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருக்கிறாயே அந்த பழமையான பொருட்களையா ..?எங்களுக்கு முன் நீதான் சிறையில் இருப்பாய …” அலட்சியமாக உதடு சுழித்தாள் .

சுழியும் அவள் உதடுகளில் பார்வையை பதித்தபடி ” நீ என்ன படித்தாய் சமுத்ரா …? ஜர்னலிசமா …?அந்த அளவு அறிவு உனக்கு இருப்பது போல் தெரியவில்லையே ..அந்த வீடியோவில் பழங்கால பொருட்கள் எங்கேயிருக்கிறது ? எனது படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து எனது அம்மாவின் நூறு பவுன் நகைகளை திருடி விட்டீர்களென சொல்லுவேன் …” என்றான் .

உள்ளுக்குள் திக்கென்றாலும் ” சொல்லிக் கொள் .உன்னை திருமணம் செய்து கொள்ளும் கொடுமையை விட கொஞ்சநாள் சிறையிலேயே இருந்து விட்டு வருகிறேன் ” வெறுப்புடன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள் .




எழுந்து நின்று உடலை பின்னே வளைத்து சோம்பல் முறித்தவன் ” சரி அப்போது நான் போலீஸ் ஸடேசன் போகிறேன் ” என்றான் .முகத்தை திருப்பவில்லை சமுத்ரா .

வாசல் வரை போய் நின்றவன் திரும்பி ,” ஏன் சமுத்ரா யார் பெயரிலாவது கோர்ட்டில் கேஸ் இருந்தால் அவர்களால் , வெளிநாடு போக முடியுமா என்ன ? ” போகிற போக்கில் கேட்பது போல் கேட்டு விட்டு வெளியே போய்விட்டான் .

திக்கென்ற மனத்துடன் ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து விட்டாள் சமுத்ரா .ஆக எல்லாமே யோகனின் திட்டம்தான் .அன்று வரை மாடியேற முடியாமலிருந்த நிலை அன்று மட்டும் திடீரென மாறிய காரணம் இப்போது புரிந்த்து சமுத்ராவிற்கு .

அந்த சாவி சரியாக அவளது அறை முன்னால் , அவளது காலடியிலேயே கிடைத்த காரணமும் .

கொஞ்ச நேரம் கழித்தே அவன் வார்த்தைகளின் தீவிரம் உறைக்க , அவசரமாக எழுந்து அவன் பின்னே ஓடினாள் .

அதற்குள் அவன் வெளியேறியிருந்தான் .ஜீப்பில் ஏறியிருந்தான் .இவளை வாசலில் கண்டதும் ஜீப்பை சுற்றி கொண்டு வந்து இவளருகே நிறுத்தி அவள் பக்க கதவை திறந்து விட்டான் .பேசாமல் ஏறிக் கொண்டாள் சமுத்ரா .

பிரச்சனை எனக்கும் , யோகனுக்குமிடையேதான் .இதற்கு ் என் வாழ்க்கையை பணயமாக வைப்பேனே தவிர, தனாவினுடேய வாழ்வை அல்ல .இந்த வெளிநாட்டு பயணம் அவரது நீண்டநாள் கனவு .இதனை என்னை பழிவாங்குவதற்காக இவன் பறிக்க நினைத்தால் அது நடக்காது .

எதிரே தெரிந்த சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்த சமுத்ராவை இரண்டு முறை திரும்பி பார்த்தான் யோகன் .மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டான் .

” இன்னமும் இரண்டு நாட்களில் ஒரு நல்ல நாள் இருக்கிறது சமுத்ரா .அன்றே நமது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் .அதற்குள் நகை , தாலி , உடைகள் போன்றவற்றை சென்னைக்கு போய் வாங்கிக் கொள்ளலாம் .நம் ஆதிநாராயண பெருமாள் கோவிலிலேயே திருமணத்திற்கான  ஏற்பாடுகளை செய்துவிட்டேன் .உன் அண்ணனுக்கு தகவல் சொல்லி விடு …”

சமுத்ராவின் உடல் அதிர்ந்து அடங்கியது .தங்கை தூய்மையான மனத்துடன் மிக நேர்மையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையுடன் நாட்டின் எல்லையில் காவல் நிற்கும் அண்ணனிடம் திடீரென இதுபோல் ஒருவனை திருமணம் செய்து கொள்ள போவதாக எப்படி கூறுவாள் .? 

” என்ன சொல்ல …? இதோ பார் இந்த உத்தம புத்திரனை , இந்த உயர்ந்த குணத்தவனை நான் திருமணம் செய்ய போகிறேன் என உனது எந்த தகுதியை வைத்து நான் சொல்லட்டும் …?” சொல்லும் போதே கண்கள் கலங்கி விட ,முகத்தை மறுபுறம் திருப்பி கண்ணீரை மறைத்தாள் .

சிறிது மௌனமாக இருந்தவன் ,” உன் அண்ணனின் நம்பர் கொடு .அவரிடம் நான் பேசுகிறேன் ..” என்றான் .

முடியாது என மறுத்து விடத்தான் ஆசை சமுத்ராவிற்கு .ஆனால் இப்போது மலையரசனுடன் பேசும் தைரியம் அவளுக்கில்லை .அதனால் பேசாமல் இருந்தாள் .

” உங்கள் வீட்டில் இந்த திருமணத்திற்கு அனைவரும் சம்மதித்து விட்டனரா …?” பெண்கள் மூவரின் விரட்டலையும் நினைவு கொண்டபடி கேட்டாள் சமுத்ரா .

” யாருடைய சம்மதமும் எனக்கு தேவையில்லை ” அலட்சியமக கூறினான் .

” உனக்கு திருமணம் செய்து கொள்ள போகிறவளின் சம்மதமே தேவையில்லையே .மற்றவர்கள் சம்மத்த்தை
மதிக்கவா போகிறாய் ” வெறுப்பை உமிழ்ந்தாள் .

பதிலே சொல்லாமல் முறுவலுடன் ஜீப்பை வளைத்து திருப்பி கடற்கரையில் நிறுத்தினான்.

” அப்படியாவது யாருக்கும் பிடிக்காமல் இந்த திருமணம் நடக்க வேண்டுமென என்ன அவசியம் …? இதனால் உனக்கு என்ன கிடைக்க போகிறது ்..? ” உண்மையாகவே புரியாமல்தான் கேட்டாள் .

முறுவல் மறைந்து அவன் முகம் தீவிரமானது .” என் நிறைய ரகசியங்களை நீ தெரிந்து கொண்டு விட்டாய் சமுத்ரா .இனி உன்னை நான் என்னைவிட்டு அனுப்புவதாக இல்லை “

இதற்காகவா …என் வாழ்வை பலியாக்கினான் .இல்லை இனி இவன் நிம்மதியாக வாழக்கூடாது .அப்பொழுதே தன் மனதிற்குள் அந்த முடிவை எடுத்தாள் சமுத்ரா .எடுத்த முடிவு மனதிற்கு புது தெம்பு தர,” என் கழுத்தில் நீ தாலி மட்டுந்தான் கட்ட முடியும் …” எனக் கூறி நிறுத்தினாள் .

” தாலி கட்டினால் மனைவிதானே …வேறென்ன …?”

” ஒரு மனைவிக்குரிய கடமைகள் ….உனக்கு மூன்று வேலையும் சமைத்துக் கொட்டுவது , உன் துணிகளை துவைத்து போடுவது , உன் வீட்டை சுத்தம் செய்வது .இவையெல்லம் நான் கண்டிப்பாக செய்ய மாட்டேன் “

” வேண்டாம் இதற்கெல்லாம் தான் மேகலை இருக்கிறாளே …அவள் பார்த்துக் கொள்வாள் ” என்றான் புன்னகையுடன் .




தாலியை என் கழுத்தில் கட்டி விட்டு வீட்டு வேலைகளை அவளை செய்ய சொல்வாயா …?இரு முதலில் அவளை அந்த வீட்டை விட்டு கிளப்புகி்றேன் என்று மனதினுள் எண்ணிக் கொண்டாள் .அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் .இப்போது மிக முக்கிய விசயமொன்றை இவனுடன் தெளிய வேண்டும் .

நாவினால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு எச்சில் விழுங்கியபடி ” அப்புறம் …..” என இழுத்தாள்.

” ம் ….” என மாறா புன்னகையோடு அவளை ஊக்கினான் .

விரிந்த அவன் புன்னகை எரிச்சலூட்ட நினைத்ததையெல்லாம் முடித்து விட்டு என்ன புன்னகை மன்னன் போஸ் வேண்டிக் கிடக்கிறது என புகைந்தபடி ” என்னை எதற்காகவும் எந்த விசயத்திலும் கணவனென்ற போர்வையில்  கட்டாயப்படுத்த கூடாது “

” எதற்கு கட்டாயப்படுத்துவேன் என்கிறாய் …?” கவனமான அவன் கேள்வியின் பின்னே ஒரு ரகசிய புன்னகை ஒளிந்திருந்த்து .

இவன் தெரியாத்து போல் நடிக்கிறான் .பற்களை கடித்தபடி சிவந்த தனது முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள் .” இரவுகள் என் இஷ்டம் .மனைவியின் இரவுக் கடமைகள் எதையும் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் .” குறைந்த குரலில் என்றாலும் தெளிவாக தன் எண்ணத்தை கூறி விட்டாள் சமுத்ரா .

” என் இரவுகள் தோப்பு வீட்டில் கழியுமென நீ மறந்து விட்டாயா சமுத்ரா .? நம் திருமணத்திற்கு பிறகும் இதே நிலைதான் நீடிக்க போகிறது .அதனால் நீ கவலையை விடு “

ஏனோ இந்த பதில் சந்தோசம் தருவதற்கு பதில் சமுத்ராவின் தொண்டையை அடைக்க வைத்தது .இப்போது எதற்கு இந்த கலக்கம் .? இப்படித்தானே இவனை அலைக்கழிக்க வேண்டுமென நினைத்தேன் …? தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் .

” நான் எந்த பெண்ணையும் அந்த விசயத்தில் கட்டாயப்படுத்துவதில்லை சமுத்ரா .மனைவியாக இருந்தாலும் கூட …” மீண்டும் ஒரு புன்னகை .

இப்போது ஏனோ சொல்ல முடியாத சிறு நிம்மதி வந்த்து சமுத்ராவிற்கு .அந்த நிம்மதியில் யோகன் பொய் சொல்வதை சுவாசிப்பதற்கு அடுத்தபடியாக வைத்திருப்பவன் என்பது மறந்து போயிற்று .

” அப்போது திருமண ஏற்பாடுகளை செய்யலாமில்லையா ? ” என்றான் .

” செய்யுங்கள் .ஆனால் என்னை எதற்கும் எதிர்பார்க்காதீர்கள் .உங்கள் எண்ணப்படியே எல்லாம் செய்யுங்கள் …” சொல்லிவிட்டு கீழே இறங்கினாள் .

” நான் கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்திருந்து விட்டு வருகிறேன் .நீங்க போங்க ” அவன் பதிலை எதிர்பாராமல் இறங்கி கடலை நோக்கி நடந்தாள் .

சிறிது நேரம் அவளை பார்த்தபடி இருந்தவன் ஒரு பெருமூச்சுடன் ஜீப்பை திருப்பிக் கொண்டு சென்றான் .




What’s your Reaction?
+1
12
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!