Serial Stories கடல் காற்று

கடல் காற்று-22

( 22 )

ஒரு மணிக்கு கிளம்பி எனது அறை சன்னலின் பக்கம் வாருங்கள் .என தனசேகரனுக்கு போனில் மெசேஜ் அனுப்பி விட்டு கொட்ட , கொட்ட விழித்திருந்தாள் சமுத்ரா .அந்த மாடி அறையை திறந்து பார்த்து விடும் எண்ணத்திலிருந்தாள் .அங்கேதான் அந்த கொலுசு இருக்குமென்ற எண்ணம் அவளுக்கு .

இங்கு வந்த முதல் சில நாட்கள் மாடியறையை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தாள் .அதன் சாவி எப்போதும் போல் செல்வமணியின் இடுப்பில் சாவிக் கொத்தோடு சேர்ந்து இருக்கும் .இரண்டொரு முறை அந்த பழமையான ஜாடியை பார்க்கும் சாக்கில் மேலே செல்ல முயன்றாள் .ஆனால் அது நடக்கவில்லை .

செல்வமணியிடமே நேரில் கேட்டு பார்த்தாள் .” ஏன் அங்கே போய் என் தம்பிக்கு எப்படி சொக்கு பொடி போடலாமென நினைக்கிறாயா ? ” என்றாள் .

ஆமா உன் தம்பி பெரிய மன்மத வாரிசு பார் அவனை மயக்க நான் திரிகிறேன் என கடுத்தபடி , அதன் பின் அந்த மாடியேறும் எண்ணத்தை விட்டிருந்தாள் .ஆனால் இன்று நிச்சயம் போய்த்தான் ஆக வேண்டும் .

அவளுக்கு தோதாக அன்று எல்லா காரியங்களும் நடந்த்து .மாடியில் சிறு ரிப்பேர் வேலை பார்க்க வந்தவர்களுக்காக அறைக்கதவை திறந்து விட்டு அருகிலேயே இருந்த செல்வமணி சாவியை மீண்டும் தனது சாவிக் கொத்துடன் சரியாக இணைக்காத்தால்  அது சுழன்று கீழே விழுந்து விட்டது போலும் .

சமுத்ராவின் கால்கள் அந்த சாவியை உணர்ந்த போது யோகன் தோப்பு வீட்டிற்கு சென்று விட்டிருந்தான் .
பெரியதொரு கொட்டாவியுடன் தூக்கத்திற்கு ஆயத்தாமாகிக் கொண்டிருந்தாள் செல்வமணி .

அதனை எடுத்து வைத்துக் கொண்டுதான் சமுத்ரா தனாவுக்கு செய்தி அனுப்பினாள் .சொன்னபடி ஒரு மணிக்கு சமுத்ராவின் அறை சன்னவருகே வந்து மெல்ல கதவை தட்டினான் தனா .

சன்னல் கதவை திறந்து அவனை தன் அறைக்குள் அழைத்துக் கொண்டாள் சமுத்ரா .பின் இருவருமாக மெல்ல வெளியே வந்து மாடியேறினர் .முதலில் சும்மா சாத்தி வைக்கப்பட்டிருந்த அறை யோகனின் படுக்கையறையாக இருந்த்து .முன்னால் பெரிய சோபாக்களுடன் கூடிய வரவேற்பறையும் , பின்னால் நான்கு பேர் தாராளமாக படுக்க கூடிய கட்டிலுமாக வெகு அழகாக இருந்த்து அந்த அறை.

அங்கிருந்த அலமாரிகள் எதுவும் திறக்க வரவில்லை.அடுத்த அறை லைப்ர்ரி .அட எவ்வளவு புத்தகங்கள் ஆச்சரியமாக பார்த்தாள் சமுத்ரா .

” இவன் என்ன படித்திருக்கிறான் சமுத்ரா ? ” தனாவின் குரலிலும் மெல்லிய பிரமிப்பு .ஏனெனில் அங்கிருந்த புத்தகங்களின் தரம் அப்படி .இந்த உலகில் என்னென்ன விசயங்கள் இருக்கிறதோ அது அத்தனை பற்றிய விபரங்களும் அங்கே இருக்குமென எண்ணினாள் சமுத்ரா .

ஆர்வத்துடன் அந்த புத்தகங்களை வருடியபடி ” தெரியவில்லை தனா ” என்றாள் .” இவற்றையெல்லாம் படிப்பதானால் நிச்சயம் நிறைய படித்திருக்க வேண்டும் .இந்தாளை பார்த்தால் அப்படி தெரியவில்லை “

” ஒரு வேளை சும்மா அடுக்கி வைத்திருக்கிறானோ ?”

” இருக்கலாம் ..” என்று சொன்னாலும் அது உண்மையில்லையென்றே தோன்றியது .ஏனெனில் அவற்றில் நிறைய புத்தகங்களில் அடிக்கடி பயன்படுத்திய அடையாளம் இருந்த்து .

மேலும் இரண்டு அறைகள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லாமல் காலியாக இருந்தன. வலது புறமிருந்த இந்த அறைகளணைத்துக்கும் இணையாக இடதுபுறம் நீளமாக ஓடிய அறை இறுக மூடியிருந்த்து .அந்த அறையை கையிலிருந்த சாவி மூலம் திறந்தாள் சமுத்ரா .

உள்ளே நுழைந்த இருவருக்கும் விழிகள் விரிந்தன . யோகனின் முக்கியமான தொழில் என்னவென று இப்போது சமுத்ராவிற்கு புரிந்த்து .

” சமுத்ரா இது சட்டவிரோதமில்லையா ?” மெல்லிய குரலில் கேட்டான் தனசேகரன் .

” தெரியவில்லையே …” சமுத்ராவின் குரலில் மெல்லிய நடுக்கம் .

அங்கிருந்தவை அனைத்தும் பழங்கால பொருட்கள் .அரசர் காலத்தவை கூட இருந்தன. அவர்கள் உபயோகித்த ஆடைகள் , வாட்கள் , பாத்திரங்கள் .ஆங்கிலேயர் காலத்தில் உபயோகித்த பல பொருட்கள் .கடிகாரங்கள் , டெலிபோன்கள் , ஆங்கிலேயர்கள் உடைகள் .இவற்றிற்கெல்லாம் மேலாக பல சாமி சிலைகள் .அந்த சிலைகளின் தோற்றத்திலேயே அவற்றின் பழமை தெரிந்த்து .




பழமைக்கு விலைமதிப்பே கிடையாது .அப்படிப் பார்த்தால் அங்கிருக்கும் பழம் பொருட்களுக்கு விலை போடமுடியாது .அந்த பொருட்கள் அனைத்தும் மிக அழகாக ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“இவற்றின் மதிப்பு  பல கோடிகளை எட்டும் சம்மு ” என்றான் தனா .

” எப்படி சொல்லுகிறீர்கள் ..?”

” என் அப்பா இந்த தொழில்தானே செய்கிறார் .அவர் பெரும்பாலும் பழமை போல் தோற்றமளிக்க கூடிய பொருட்களைத்தான் அவர் கடையில் வைத்திருப்பார் .அதுவே அநியாய விலைக்கு போகும் .இவையெல்லாம் நிஜமான பழம்பொருட்கள் போல் இருக்கிறது .அதனால் நிச்சயம் பல கோடி மதிப்புடையவைதான் ்” உறுதியாக கூறினான் .

கருணாமூர்த்திக்கும் , யோகேஷ்வரனுக்கும் உள்ள தொடர்பு இப்போது சமுத்ராவிற்கு புரிந்த்து .ஒரே தொழில் செய்பவர்கள் .அதனால் இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் .இவர்களுக்கிடையே லாவண்யா பலியாகிவிட்டாள் .

அப்பாவின் ஏமாற்று வேலை பிடிக்கமல் தனசேகரன் அவரது தொழிலை பார்க்க மறுத்து விட்டான் .அதனால் லாவண்யாதான் அவனிடத்திலிருந்து தொழிலைப் பார்த்து வந்தாள் .கடையில் அமர்பவளும் அவள்தான் .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யோகேஷ்வரனின் வலையில் சிக்கி விட்டாள் போலும் .பாவம் .

” தனா அந்த கொலுசும் இங்கேதான். இருக்க வேண்டும் .நன்றாக தேடிப்பார்ப்போம் ” என்றாள் .

கிட்டதட்ட ஒரு மணி நேரம் செலவழித்து அந்த அறையையே புரட்டிப் போட்டு பார்த்து விட்டனர் .பலன் பூஜ்யம்தான் .வேறு வழியின்றி கதவை பூட்டிவிட்டு வெளியேறினர் .

” விடு சம்மு , அந்த கொலுசு வந்து என்ன ஆகப்போகிறது ..?எனக்கென்னமோ இதில் இஷ்டமேயில்லை .உனக்காகத்தான் வந்தேன் .” சமுத்ராவின் முகத்தை பார்த்தே அகத்தை உணர்ந்து அவளை சமாதானப் படுத்தினான் தனா .

” ஆனால் நான் விட மாட்டேன் தனா .கொலுசையும் , லாவண்யாவையும் கண்டுபிடித்தே தீருவேன் ” சூளுறைப்பது போல் கூறினாள் சமுத்ரா .மௌனமாக இருந்தன் தனா .

” லாவண்யா மட்டுமில்லை .இன்னும் அந்த யோகனிடம் தீர்க்க வேண்டிய கணக்கு எனக்கு நிறைய இருக்கிறது தனா .எல்லாவற்றையும் முடிக்காமல விட மாட்டேன் .ஏன்னு எதிர்த்து கேட்க ஆளில்லாமல் அவன் இப்போது ஆடிக்கொண்டிருக்கலாம் .ஆனால் ஒருநாள் எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் ” ஒரு மாதிரி தீவிரத்துடன் சமுத்ரா கூறினாள் .

ஒரு பெருமூச்சுடன் எழுந்த தனா ” சரி சம்மு நான் வர்றேன் ” என சன்னலை நோக்கி நகர்ந்தான் .

சன்னல் கதவை திறந்து வெளியே ஒரு காலை தூக்கிப் போட்டவன் அவளை நோக்கி ” நான் நாளை ஊருக்கு கிளம்புகிறேன் சம்மு ” என்றான் .

” நாளையா …? “சொல்லவேயில்லையே …?” குறைபட்டுக் கொண்டாள் .

நீ கேட்கும் நிலையிலில்லையே ….என நினைத்தபடி ” ஆமாம் திடீரென்றுதான் முடிவு செய்தேன் ” என்றான் .

மெல்ல தலையசைத்தபடி ” பார்த்து இறங்குங்கள் தனா .இந்த சன்னலில் அதோ அங்கே ஒரு ஆணி நீட்டிக் கொண்டு உள்ளது …மெல்ல ” என்றாள் .

லேசாக சிரித்தபடி அவளை அருகே வருமாறு சைகை செய்தான் .வந்தவளின் தலையை அன்பாக வருடினான் .” நீ பத்திரமாக இருந்து கொள்ள வேண்டும் .ஜாக்கிரதையாகவும் .இப்போது கூட உனது முடிவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை .ஆனால் விதியை மாற்ற யாரால் முடியும் ..? நமது வாழ்க்கை பாதை ஒன்றாக நான் கொடுத்து வைக்கவில்லை .நீ  நன்றாக இருக்க அந்த மருதமலை முருகனை வேண்டியபடி இருப்பேன் .சிறு துயரென்றாலும் ஒரு நண்பனாக என்னை தொடர்பு கொள்ள மறக்காதே ….” குரல் தழுதழுக்க பேசியவன் சட்டென அந்த பக்கம் இறங்கி வேகமாக நடந்து மறைந்தான் .

அவன் சென்ற திசையை கண்கள் தளும்ப பார்த்தபடி நின்றாள் சமுத்ரா .

அன்று யோகன் அதிகாலை திரும்பி வரும்போதே அவனுக்காக அவன் புல்லட்டை நிறுத்துமிடத்தில் காத்திருந்தான் தனசேகரன் .

” என்ன தனசேகரன் ,அதற்குள்ளா எழுந்து விட்டீர்கள் ? இன்னும் வெளிச்சம் கூட வரவில்லையே ?” யோசனையோடு அவனை பார்த்தபடி கேட்டான் யோகன் .

” உன்னிடம் பேச வேண்டும் .அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் …” நிறைய இறுக்கம் தெரிந்த்து தனாவின் குரலில் .

” வாங்களேன் உள்ளே போய்விடுவோம் ” என கதவை திறக்க முயன்றான் .

” வேண்டாம் …தூங்குபவர்கள் விழித்துக் கொள்வார்கள் ” தடுத்தான் தனா .

” சமுத்ராவிடம் சொல்லாமலேவா கிளம்புகிறீர்கள் …?,” தனாவின் பயணபையை பார்த்தபடி கேட்டான் யோகன் .

” உன் விருப்பம் அதுதானே …அது தான் இப்போதும் நடந்து கொண்டிருக கிறது “

” இல்லை நான் அப்படி நினைக்கவில்லை .நாம் ஒருவரோடொருவர் பேசி …”

” போதும் …” கையுயர்த்தி தடுத்தான் .” உன் பேச்சு வல்லமைகளை வேறு யாராவது எதிராளியிடம் வைத்துக் கொள் .என்னிடம் வேண்டாம் …” என்றான் .

” ஓ…அப்போது நீங்கள் என் எதிராளியில்லைதானே …சமுத்ராவின் நண்பர் எனக்கும் நண்பரதான் …” கை குலுக்குவதற்காக கை நீட்டினான் .




நீண்ட அவன் வலிய கரங்களை வெறித்தபடி ” சமுத்ராவிற்காக என்று சமாதானம் செய்து கொள்ள நினைத்தாலும் இந்த நட்பை இப்போதைக்கு ஏற்க முடியவில்லை என்னால் .சம்மு புது மலரை போன்றவள் அவளை புயலாக அலைக்களித்து விடாதே …”

” சமுத்ரா இன்னமும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை தனா …” நிதானமாக கூறினான் யோகன் .

” ம் …சீக்கிரமே சம்மதித்து விடுவாள் .ஆனால் ஒரு நல்ல நண்பனாக நான் எப்போதும் அவள் பின்னே இருப்பேன் .அதனை தடுக்க உன்னால் முடியாது “

” நட்பினை என்றுமே நான் மதிப்பவன் தனா .கவலையின்றி போய் வாருங்கள் ” வலிய அவன் கரங்களை பற்றி குலுக்கினான் யோகன் .

” நிச்சயம் எனது தோழியை காண திரும்பி வருவேன் …” யோகனிடமிருந்து தனது கைகளை உருவிக் கொண்டு திரும்பி நடந்தான் தனசேகரன் .

சிறிது நேரம் அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றவன் ,பிறகு தனது வழக்கமான அலட்சிய தோள் குலுக்கலுடன் வீட்டினுள் சென்றான் .

 




What’s your Reaction?
+1
18
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!