Serial Stories கடல் காற்று

கடல் காற்று-21

 ( 21 )

” அ… அம்மா …ஆ…ஆடு ….இ…இலை ….உ…உரல்
மழலை மொழியில் பாடம் சொல்லிக் கொண்டிருந்தனர் பள்ளிக் குழந்தைகள் .அவர்களின் மழலைக்கு மேலாக கொஞ்சு தமிழ் பேசிக் கொண்டிருந்தனர் ஒலிவியாவும் , மார்ட்டினாவும் .

இருவரும் அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களாம் .ஆவலுடன் தமிழை ஆசிரியரிடம் கேட்டு கற்று அதனை அந்த குழந்தைகளுக்கு படித்துக் கொண்டிருந்தார்கள் .ஒரு அரிய சாதனையை செய்யும் உற்சாகம் இருவரிடமும் .

பள்ளிக்கூடங்களை பார்வையிட வேண்டுமென்றவர்களுக்கு துணையாக சமுத்ராவையும் அனுப்பி வைத்திருந்தான் யோகன் .சமுத்ரா ஓரமாக அமர்ந்து அந்த இரு மழலை மொழிகளையும் ஆவலாக ரசித்து கொண்டிருந்தாள் .

இதென்ன மொழியோ …?என்ன பேச்சோ …?எரிச.சலுடன் தள்ளி அமர்ந்திருந்தான தனசேகரன் .இரண்டு நாட்களாக அவனும் சமுத்ராவிடம் பேச வேண்டுமென முனைந்து கொண்டுதான் இருக்கிறான் .ஐந்து நிமிடங்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது .ஒன்று சமுத்ரா ஏதோ வேலையென ஓடிக் கொண்டிருந்தாள் .ஓயும் நேரம் அவளை அங்கேயிங்கேயென ஏவிக் கொண்டிருந்தான் யோகன் .
” தனா ரொம்ப ஆச்சரியமா இருக்கில்ல.இவுங்களுக்கு நம்ம மொழியை கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வத்தை பாருங்களேன் ” கண்களை அவர்களிடமிருந்து எடுக்காமல் இவனிடம் பேசினாள் .

” ம் …ம் …” வெறுப்புடன் தலையாட்டினான் தனசேகரன் .

” பழகுவதற்கும் ஒலிவியாவும் , மார்ட்டினாவும் ரொம்ப இனிமையானவங்களா இருக்கிறார்கள் தெரியுமா ? நாங்க மூன்று பேரும் ரொம்ப ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் .”

” ம் ….எனக்கு இது போரடிக்கிறது …” சலிப்புடன் கூறினான் .

” அப்போ நீங்க கிளம்புங்க.நாங்க இதெல்லாம் முடிச்சுட்டு வர்றோம் ” அவன் பக்கம் திரும்பாமலேயே கூறியவள் ” வற்குட்ரே ” என்ற மார்ட்டினாவிற்கு வரிக்குதிரை என விளக்கம் சொல்ல துவங்கினாள் .

சட்டென அங்கிருந்து எழுந்து வந்துவிட்டான் தனசேகரன் .அவனுக்கு அமெரிக்கா கிளம்ப இன்னமும்  ஒரு வாரம்தான் இருக்கிறது .எவ்வளவோ ஏற்பாடுகள் பண்ண வேண்டியிருக்கிறது .அதையெல்லாம் அப்படியே போட்டு விட்டு இந்த பட்டிக்காட்டில் மீன் நாற்றத்தில் கிடந்து காய்ந்து கொண்டிருக்கிறான் .

அடிக்கடி அவனுக்கு தோன்றும் கேள்வி அன்றும் தோன்றியது .சமுத்ரா என்னை காதலிக்கிறாளா , இல்லையா ? பலமுறை தனக்குள்ளாக அவன் கேட்டுக் கொள்ளும். கேள்வி இது .முன்னெப்போதும் போல் இப்போதும் அவனுக்கு இதற்கு விடை கிடைக்கவில்லை .

இப்படி அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம் அங்கே கடற்கரையில் ஒலிவியாவும் சமுத்ராவிடம் அதையேதான் கேட்டுக் கொண்டிருந்தாள் .
” நீ தனசேகரனை காதலிக்கிறாயா ?”

ஒரு மௌனம் சமுத்ராவிடம் .பிறகு ” அப்படித்தானென முன்பு நினைத்திருந்தேன் .இப்போது அப்படியில்லையோ என தோணுகிறது .அவருடைய வாழ்க்கை முறை வேறாக இருக்கிறது .எனக்கு ஒத்து வருமா என தெரியவில்லை ” உள்ளத்தை ஒளிக்காது தோழிகளிடம் தெரிவித்தாள் சமுத்ரா .

” அப்போ யோகனை காதலிக்கிறாய் தானே …?” இது மார்ட்டினா .

திணறித் தடுமாறி விட்டு அவசரமாக ” இல்லை ” என்றாள் ..

” அப்படியா …?” யோசனையுடன் அவளை பார்த்தனர் இருவரும் .

” ஆனால் உங்களிருவரையும் பார்த்தால் காதலர்கள் என எளிதாக யாரும் சொல்லி விடுவார்கள் …” மார்ட்டினா .

” அதெப்படி …நாங்களிருவரும் எப்போதும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்கிறோம் …” ரோசத்துடன் கூறினாள் .

” காதலர்கள் சண்டை போட மாட்டார்களென யார் சொன்னார்கள .? அந்த சண்டைக்கு பின் வரும் கொஞ்சல்தான் காதலின் உயிர்ப்பே .என் மேத்யுவுடன் இதனால்தான் நான் அடிக்கடி வம்பிழுத்து சண்டையிடுவது …” ஒலிவியா .

” சண்டைக்கு பிறகு ஜான்சன் தரும் முத்தம் பீரை விட அதிக போதையாக இருக்கும் தெரியுமா ..?” கண்களை சொக்கியபடி மார்ட்டினா கூற கன்னங்கள் சிவந்தன சமுத்ராவிற்கு .

” அப்படி ஒரு முத்தத்தை இதுவரை நீங்களிருவரும் பரிமாறிக்கொண்டதே இல்லையென கூறி விடாதே சமுத்ரா .நாங்கள் நம்ப மாட்டோம் .” ஒலிவியா .

” அந்த முதல் சந்தர்ப்பத்தை கொஞ்சம் எங்களுடனும் பகிர்ந்து கொள்ளேன் .ஏனெனில் நீங்களிருவரும் ” மேட் பார் ஈச்  அதர் ” ஜோடிகள் .உங்கள் காதலை நாங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறோமே …” மார்ட்டினா .




 

” அப்படியில்லையென்ற  சமுத்ராவின் மறுப்பினை கண்டு கொள்ளாது அப்படித்தான் என்ற முடிவோடு அந்த பெண்கள் செய்த கேலி சமுத்ராவை ஒரேடியாக சிவக்கடித்துக் கொண்டிருந்த்து .கன்னங்களிலிருந்து முகம் முழுவதும் பரவி , அவள் உடலையே சிவக்கடித்துக் கொண்டிருந்த்து அவர்களின் சில எல்லை மீறிய சொற்கள் .

பதில் சொல்ல வழியின்றி சூடான கன்னங்களை கைகளில் தாங்கியபடி செய்வதறியாது அமர்ந்து விட்டாள் அவள் .” ஹாய் …” என்றபடி ஜீப்பிலிருந்து இறங்கி வந்தான் யோகன் .அவன் பார்வை சமுத்ராவின் கன்னச்சிவப்பை கணக்கெடுத்தது .

அப்போதைய நிலையில் அவனே ஆபத்பாந்தனாய் தோன்ற காப்பாற்றும்படி அவனையே கண்களால் இறைஞ்சினாள் .

” ஹாய் ப்ரெண்ட்ஸ் , என்ன இங்கே உட்கார்ந்திட்டீங்க உங்கள் ஜோடிகள் உங்களை காணோமென்று அங்கே தேடி அலையுறாங்களே . இன்றைக்கு ஏதோ ஸ்பெசல் ட்ரீட்டாமே …ரம் ,பீர் எல்லாம் ரெடி  .இன்று மாலை பயர ் ரவுண்ட்ஸ் சாமே .அதற்காக இன்னும் ஏதோ புதிய ஐடியாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் .நீங்கள் போகவில்லை …?” என்றான் .

” வாவ் , எல்லாம் தயார் செய்து விட்டார்களா ? இதோ …இதோ …கிளம்பி விட்டோம் ” என பரபரத்தவர்கள் தங்களுக்குள் சில ஐடியாக்களை பரிமாறியபடி ஜீப்பில் சென்று ஏறினர் .

” என்ன விஷயம் சமுத்ரா …?யோகன் தாழ்ந்த குரலில் குறும்புடன் சமுத்ராவை ஆராய்ந்தான் .

” ம் …இந்த கடல் தண்ணியெல்லாம் எப்படி தேனாக மாற்றுவதுன்னு திட்டம் போட்டுக் கொண்டிருந்தோம் ” எரிந்து விழுந்தாள் அவன் மேல் .

” ஆஹா …தேன் பற்றிய பேச்சினால்தான் உன் கன்னங்கள் கள்ளுறங்கும் மலராக மாறி விட்டதோ ?” அவனது கேலியில் மீண்டும் சிவக்க துவங்கிய கன்னங்களை முகம் திருப்பி மறைத்தாள் .இவன் இப்படியெல்லாம் கவிதையாக கூட பேசிவானா ? என்றிருந்த்து .

” அழகான பெண்களை பார்த்தால் கவிதை தானாக வந்து விடுகிறது முத்ரா …” குறைந்த குரலில் முணுமுணுத்தான் .

அந்த குரலில் நிமிர்ந்தவள் ” இப்படி எத்தனை பெண்களிடம் கவிதை மழை பொழிந்திருப்பீர்கள் …?” என படபடத்தாள் .

” அது …இதற்கு முன் யாரிடமும் இப்படி கவிதை பொழிந்த நினைவில்லை .ஒரு பொண்ணை பார்த்தோமா ? வேலையை முடிச்சிட்டு கிளம்பினோமான்னுதான் இருந்திருக்கேன் …” 

சை …பேச்சை பார் .எப்படித்தான் இப்படியெல்லாம் கூசாமல் ் பேசுகிறானோ ? நிமிர்ந்தவள் அவன் முகம் பார்க்கவும் மீண்டும் குனிந்து கொண்டாள் .

பார்க்கிற பார்வையை பார் .அப்படியே ஆளை விழுங்குவது போல் .இவன் இந்த பார்வை பார்த்தானானால் எல்லாரும் காதலர்கள் என்றுதானே முடிவு கட்டுவார்கள் என எண்ணியபடி ஜீப்பினுள் பார்த்தால் அங்கே மார்ட்டினாவும் , ஒலிவியாவும் அதே எண்ணத்தில்தான் இவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர் .

இப்போது சமுத்ரா அவர்களோடு போய் ஏறினால் , அவளை கிண்டல் செய்தே ஒரு வழி பண்ணி விடுவார்கள் .

” வா சமுத்ரா போகலாம் ” என்ற யோகனுக்கு பதிலாக நான் வரவில்லையென்றாள் .

” ஏன் ? “

” தனா என்னோடு பேச வேண்டுமென்றார் .அவரை பார்க்க நான் வீட்டிற்கு போகிறேன் .நீங்கள் விருந்தினர் விடுதிதானே போவீர்கள் .போங்கள் …” என்றபடி யோகனின் பதிலை எதிர் பாராமல் ஆட்டோவிற்காக நடந்து விட்டாள் .

சிறிது நேரம் அவள் சென்ற திசையை முறைத்து நின்றவன் , பின் ஒலிவியா , மார்ட்டினாவை இறக்கி விடுவதற்கு அவர்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு ஜீப்பை செலுத்தானான் .

” என்ன விசயம் தனா ? ஏதோ பேச வேண்டுமென அழைத்துக் கொண்டேயிருந்தீர்களே ? ” என்ற கேள்வியோடு தன் எதிரே வந்து  அமர்ந்த சமுத்ராவை தனா சற்றும் எதிர்பார்க்கவில்லை.மௌனமாக அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் .

” சீக்கிரம் சொல்லுங்க தனா .எனக்கு அடுத்த வேலை இருக்கிறது .” வாட்ச்சை திருப்பி பார்த்தபடி கூறினாள் .

” என்ன வேலை இருக்கிறது உனக்கு ..?” வெறுப்பாய் கேட்டான் .

” யோகன் அவருடன் வர சொன்னார் .செல்லியின் படிப்பு விசயமாக எதுவும் பேச அழைத்தாரோ என்னவோ ? நான் அந்த நினைவு இல்லாமல் இங்கே வந்து விட்டேன் ” மீண்டும் கையை திருப்பி வாட்ச்சை பார்த்துக் கொண்டாள் .

உண்மையிலேயே யோகனிடம் வர மறுத்து விட்டு இங்கே வந்த்திலிருந்தே எதற்காக உடன் வரச் சொன்னானோ ? என்ற எண்ணம்தான் அவளுக்கு .

” அப்போது நீ அவனுடன் பேசி விட்டே வந்திருக்கலாமே …?”

மௌனமானாள்

” இவன் சரியானவன் இல்லை சமுத்ரா .இவன் சென்னைக்கு வரும் போதெல்லாம் அங்கே என்ன செய்வானேன தெரியுமா ? இங்கே தினமும் வெளியே தங்க போய்விடுகிறானே , எங்கேயென தெரியுமா ? “




” தெரியும் ” ஒற்றை வார்த்தையில் பதில் கூறினாள் .

” தெரிந்தும் நீ ….” ஆரம்பித்தவன் நிறுத்தினான் .

” அன்று உங்களிருவருக்குமிடையே என்ன தகராறு ?” கண்டிப்புடன் கேட்டான் .

எச்சிலை விழுங்கிக் கொண்டாள் சமுத்ரா .” அன்று …அவர் …எ…என்னை தி….திருமணம் செய்ய கேட்டுக் கொண்டிருந்தார் …”

” ஓ…நீ என்ன சொன்னாய் …?”

” மறுத்துக் கொண்டிருந்தேன் …”

” ம் …இப்போ நம் திருமணத்தை பற்றி பேசலாமா …?”

” இல்லை …வேண்டாம் …”

” ஏன் …?”

” அது சரி வராது …”

நீயே பேசு என அவளை பார்த்தபடி இருந்தான் தனா .

” எங்கள் அம்மா , அப்பா ஒன்று போல் விபத்தில் இறக்கும் போது எனக்கு வயது ஏழு .அண்ணணுக்கு பன்னிரென்டு .மிக சிறிய குழந்தைகளென்பதால் பொறுப்பேற்க உறவினர்கள் தயங்க நானும் அண்ணனுமாகவே வறண்ட எங்கள் வாழ்வை துவங்கினோம் .வாடகை வருமானமென நிறைய இருந்ததால் பணத்திற்கு பிரச்சினையில்லை ்ஒரு தூரத்து பாட்டி ஒருவருடன் வாழ்க்கையை ஒப்பேற்றி ஒரு வழியாக தேற்றி விட்டோம் .இப்போது நல்ல நிலைமையில் இருந்தாலும் முந்தைய எங்கள் வாழ்வை நான் மறக்கவில்லை .

இப்போது உங்களை திருமணம் செய்து கொண்டு உங்களோடு அமெரிக்கா வந்து விட்டால் நம் குழந்தைகளுக்கும் இதேதான் கிடைக்கும் .அதே எனது பழைய வறண்ட வாழ்வு .உறவினரகளற்ற வாழ்வு …”

” ஓ….அதுதான் உன் பிரச்சினையென்றால் நான் எனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விடுகிறேன் . வேலையை கூட விட்டு விடுகிறேன். “

அதிர்ந்தாள் .” என்ன …? உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா …? யாராவது வாழ்வில் முன்னேற கிடைத்திருக்கும் இப்படி ஒரு சான்ஸ்சை தவற விடுவார்களா ..?” கோபமாக கத்தினாள்.

” தூய்மையான அன்பிற்கு முன்னால் எதுவுமே பெரிதில்லை சமுத்ரா ” மிக வறண்டிருந்த்து தனாவின் குரல் .

” வேண்டாம் தனா ….விட்டுவிடுங்கள் இவ்வளவு அன்பிற்கு நான் தகுதியானவளில்லை ” உண்மையான வருத்தம் அவள் குரலில் .

” இப்போது நான் என்ன செய்யட்டும் ..?” கைகளை குறுக்கே கட்டியபடி அவளிடமே கேட்டான் .

என்ன சொல்வாள் ..? பார்வையை சன்னலுக்கு வெளியே இருந்த வேப்ப மரக்கிளை அணிலிடம் அனுப்பினாள் .தனா காத்திருந்தான் .

” லாவண்யா விசயத்திலாவது ஏதாவது முடிவெடுக்க விரும்புகிறேன் தனா .லாவண்யாவின் இருப்பிடம் யோகனுக்்கு தெரியும் .சொல்ல மறுக்கிறார் .அவர் மனம் போல் பேசி நிச்சயம் அதை கண்டுபிடித்து விடுவேன் .லாவண்யாவை கண்டிப்பாக அத்தை , மாமாவிடம் ஒப்படைப்பேன் .”

” ம் …சரி …?” சலனமற்ற தனாவின் இந்த பதில் மேலும் சமுத்ரவை திணறடித்தது .” மேலும் உங்கள் அப்பா அன்று அனுப்பிய கொலுசு படம் .இதோ பாருங்கள் …” போனில் காட்டினாள் .

” இது மிகவும் விலையுயர்ந்த்தாம் .இதனை கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக மாமா வாங்கினாராம் .அதை தெரிந்து கொண்டுதான் லாவண்யாவிற்கு காதல் வலை விரித்து யோகன் அவளோடு இந்த கொலுசையும் சேர்த்து கடத்திக் கொண டு வந்து விட்டதாக கூறுகிறார்கள் “

” ம் …ஓரளவு எனக்கும் தெரியும் …லாவண்யாவிற்கு வந்த காதல் கடிதங்களை நாமிருவரும் சேர்ந்து தானே பார்த்தோம் .ஏதோ ஈஷ்வர் …என்ற பெயரிட்டு ….”

” இவர் பெயர்தான் யோகேஷ்வரன் தானே …அந்த கொலுசு இவரிடமிருப்பதை இவரே ஒத்துக் கொண்டார் .ஆனால் இருக்குமிடம் தெரியவில்லை.சரியாக திட்டமிட் ்டோமானால் அதனை அவருக்கு தெரியாமலேயே நாம் எடுத்து விடலாமென நினைக்கிறேன் …”

” என்னது திருட்டா …?” முகம் சுளித்தான் .

” ஒரு புத்த பெருமானிடம் நாம் திருடப் போவதில்லை தனா …அதனால் நாம் நிச்சயம் அதை திருடத்தான் போகிறோம் ” உறுதியாக கூறினாள் .

” அப்புறம் …? “

” அதனை எடுத்து உங்களிடம் தந்து விடுகிறேன் .நீங்கள் உங்கள் அப்பா , அம்மாவிடம் சேர்த்து விடுங்கள் .இந்த கொலுசின் தொடர்ச்சியாக நிச்சயம் லாவண்யாவையும் கண்டுபிடித்து விடுவேன் “

” அதுவரை நீ இங்கிருந்து கிளம்ப போவதில்லை அப்படித்தானே …?”

சிறிது தயங்கினாலும் ” ஆமாம் …” என்றாள் உறுதியாக .
” அதாவது இப்போதைக்கு இந்த கொலுசினை வைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுங்கள் என்கிறாய் .அப்படித்தானே …?”

உதட்டை கடித்துக் கொண்டாள் சமுத்ரா .அவள் நினைத்ததும் அதைத்தானே.

” என்னைத் தாண்டியும் உங்களுக்கான வாழ்க்கை இருக்கிறது தனா …”

” ம்..ம் ..அதை நான் பார்த்துக் கொள்கிறேன் ” இருவரின் பார்வையும் இப்போது அந்த வேப்ப மர அணிலிடம் இருந்தது .




What’s your Reaction?
+1
11
+1
12
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!