Serial Stories கடல் காற்று

கடல் காற்று -11

11

” எனக்கு கல்யாணம் முடிஞ்சப்ப பதினேழு வயசு .இப்போ அறுபது ஆகுது .என் வீட்டுக்கார்ர் இருந்த வரை வாழ்க்கை நல்லாத்தேன் போச்சு .எங்களுக்கு அஞ்சு புள்ளைங்க .நாலு பொண்ணு .ஒத்த பையன். அவர் இருக்குறப்பவே என் பொண்ணுங்்களை நல்ல எடமா பாத்துதேன் கட்டிக் கொடுத்தோம் .இந்த கடலம்மா வாரி வாரி கொடுக்குற வரை அவுங்களும் நல்லாத்தேன் இருந்தாக .

அதென்னவோ இந்த தாயி கொடுத்து கொடுத்து ஓஞ்சிட்டாளோ என்னவோ .இப்போல்லாம் வெறும் மடியத்தேன் காட்டுறா .என் பொண்ணுங்க கட்டி கொடுத்த எடத்துல சோத்துக்கு திண்டாட்டம் .அதுங்களும் பாவம் எங்கே போகும் .இந்த கடலம்மா கை விட்டா  பெத்த அம்மாட்டதான வந்து நிற்கும்.இப்பவும் அதுகளுக்கும் சேர்த்துதான் ஒளச்சிட்டு இருக்கேன் “

பேச்சு பேச்சாக இருந்தாலும் கை அங்கே அடுக்கப் பட்டிருந்த மீன்களை பக்குவம் பார்த்து பிரித்தெடுத்து கூடைக்குள் அடுக்குகிறது அந்த மூதாட்டிக்கு .

” ஏன்மா உங்கள் மகள்களின் கணவர்கள் என்ன ஆனார்கள் ?” சமுத்ரா கேட்டாள் .

” அல்லாரும் கடலுக்கு போறவுகதான் தாயி .இல்லை இந்த கடலை நம்பி வேலை பாக்குறவுக. இப்போதான் கடலோடிகள் பொழப்பு புதஞ்ச கருவாடா கிடக்கே .அதுங்க மட்டும் என்ன பண்ணும் “

தள்ளாத வயதிலும் தன் மருமகன்களுக்கும் சேர்த்து உழைத்து கொண்டு , அவர்களை விட்டு கொடுக்காமல் பேசினாள் அந்த பெண்மணி .

” அதுக்கு வேணும் ,இதுக்கு வேணும்னு அனுப்புவாங்க .முடிஞ்சளவு பணம் பொரட்டி குடுப்பேன் .”,அடுத்த கூடையை இழுக்கிறாள் .

” உங்க பையன் என்ன பண்றாரு ?”

” அவன் மீன் புடிக்கத்தான் போனான் .இப்போ அது உடம்புக்கு ஆகலைன்னு அங்கன போட்ல வேல பாக்குறான் “

அதாவது இந்த பெண்ணின் பையனும் சோம்பல் பட்டு ஒழுங்கான வேலைக்கு போவதில்லை .இந்த மூதாட்டி அவனுக்கும் சேர்த்து உழைக்கிறாள் .

” பேரப்புள்ளங்களுக்கு இஸ்கூலு பீசு கட்டனுமாம் .நேத்தைக்கு இளையவ வந்தா .இன்னைக்கு ஒரு ஐநூறாவது பாக்காம  வூட்டுக்கு போக முடியாது “

சமுத்ராவின் கைகள் தாமாகவே கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து விட்டன.அவள் பணத்தை நீட்டியபோது அந்த மூதாட்டி நிமிர்ந்து பார்க்காது வேலையலேயே கவனமாக இருந்தாள் .

” அதுக்கு  கண்ணு தெரியாதுங்க .பிறவி குருடு ” பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தெரிவித்தாள் .

கடவுளே …சமுத்ராவின் கை நடுங்கியது .எப்பேர்பட்ட இமாலய சாதனை .இப்பெண் செய்த்து .கையெடுத்து கும்பிட தோணியது அவளுக்கு .

” ந்தா …இந்த அம்மா பணம் குடுக்காக பாரு ….” பக்கத்து பெண் கூற…

” எதுக்கும்மா ? மீன் வாங்கிக்கிறீகளா …? ” ஆர்வம் அந்த மூதாட்டியின் குரலில் .

” இல்லைம்மா …இது உங்க பேரப் புள்ளைங்க …படிப்புக்கு .வாங்கிக்கோங்க .போய் உங்கள் மகளை ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லுங்க “




அந்த பெண் தலையை குனிந்து கொண்டு வேலையை தொடர்ந்தாள் .” நான் பிச்சை எடுக்கலம்மா ,”

மெல்லிய தாழ்ந்த குரல் தான் .எவ்வளவு வலு அந்த குரலில் .சிலிர்ப்போடு பணத்தை மீண்டும் கைப்பையினுள் வைத்தவள் ்உண்மையாக கை எடுத்து வணங்கினாள் அந்த பெண்ணை .

” ந்தா ….அந்தம்மா கும்புடுது…..” பக்கத்து பெண் கூறினாள் .

கைவேலையை விட்டு விட்டு தானும் கை கூப்பினாள் அந்த மூதாட்டி .” போய்ட்டு வாங்கம்மா “….

பக்கத்து பெண்ணிடம் திரும்பினாள் .” நீங்க சொல்லுங்க ….?” என்றாள் .

அந்த பொடி மீன்களை தராசில் போட்டு எடை போட்டபடி ” என் பேரு இருளாயி.இதோ இந்த பாட்டி மாதிரி என்கிட்ட பெரிய சோக கதையெல்லாம் கெடையாதுங்க .என் புருசன் ஒழுங்கா கடலுக்கு போறாரு .எனக்கு மூணு புள்ளைங்க .இரண்டு கூலுக்கு போவுது .மூணாவது அதோ …”

அவள் கை காட்டிய இடத்தில் ஒரு வயது மதிக்கதக்க பெண் குழந்தை ஒன்று மணலில் விளையாடியபடி இருந்த்து .

” என் புள்ளைங்க இங்கிலீசு பள்ளிக்கோடத்துல படிக்குது ” பெருமை இருளாயி குரலில் …

” இந்த  கடலம்மா சில நேரம் மடியை மூடிடுறா.அப்போல்லாம் கொஞ்சம் சோத்துக்கு திண்டாடுறோம் .ஆனா எம்புருசன் அப்போ  நம்ம சின்னய்யாவை பாத்து  ஏதாவது வேலய இழுத்து போட்டு செஞ்சி உலை கொதிக்க அரிசி கொண்டாந்திடும் .ஏதோ எங்க பொழப்பு ஓடுது ….”

இவ்வளவு நேரம் சந்தித்த பெண்களுள் இந்த இருளாயி பரவாயில்லை .மற்ற பெண்கள் எல்லோரும் மலையளவு சோகத்தை முழுங்க முயன்றபடி கடலோரம் நின்றிருந்தனர் .

” இந்த குடிப்பழக்கம் இல்லைன்னா இங்கன நெறையா குடும்பங்க வாழ்ந்திடும்மா .நீங்க உங்க பேப்பர்ல அத எழுதி அரசாங்க கடய மூட வச்சிங்கன்னா கோடி புண்ணியம்மா உங்களுக்கு ” அந்த பெண் கையெடுத்து கும்பிட்டாள்.

முயற்சி செய்வதாக கூறி விட்டு எழுந்து நடந்தாள் சமுத்ரா .அரசாங்கம் மட்டுமா ? இவர்கள் முதலாளியே இவர்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறானே ்அதனை இவர்கள் உணரவில்லையா ? இல்லை அதை பற்றி பேச பயமா ? ….

உச்சிவெயில் நேரடியாக தலையில். இறங்கியது .மணல் பாதங்களை செருப்பை தாண்டி சுட்டது .ஸ்கார்பை எடுத்து தலையை சுற்றி கட்டிக் கொண்டு , கூலிங்கிளாசால் கண்ணை மறைத்தாள் .காலையிலேயே சாப்பிடாத வயிறு சத்தமிட்டது .யோகேஷ்வரனின் வீட்டிற்கு போய் சாப்பிட பிடிக்கவில்லை .

இன்று காலை நான் கேட்க கேட்க கைகளை கட்டிக் கொண்டு எவ்வளவு அலட்சியமாக நின்றான்.அவனே வந்து பேசாமல் அங்கே சாப்பிட போவதில்லை .பேசாமல் இங்கேயே சாப்பிட ஏதாவது கிடைக்குமா ? என பார்க்க வேண்டியதுதான் எண்ணியபடி விழிகளை சுழற்றினாள் .

” அக்கா  ….” ஆவலான இளங்குரல் ஒன்று .

” செல்லி …” அந்த சிறு பெண்ணிற்கு இணையான ஆர்வம் சமுத்ராவின் குரலிலும் .அந்த கடற்கரை மணல் அனுமதித்த அளவு வேக நடையுடன் விரைந்து வந்து சமுத்ராவின கை பற்றிக் கொண்டாள் செல்லி .

நான் லைப்ரரி போயிருந்தேன் .இப்போதான் நீங்க இங்க வந்திருக்கிறதா கோமதி சொன்னா .வெரசா ஓடியாறேன் ” மூச்சி வாங்கியது அவளுக்கு .

” மெல்லம்மா …எதற்கு இந்த அவசரம் ? ” அவளை தோள் தடவி ஆசுவாசப்படுத்தினாள் .

” உங்க்கிட்ட மன்னிப்பு கேட்கனுங்கா …” முகம் கூம்பியது அச்சிறுமிக்கு .

” எதுக்கும்மா …?,”

” நேற்று அம்மா …” மேலே வார்த்தை வரவில்லை .

,” அட.  ..இதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா .நான் இதெல்லாம் மறந்துட்டேன்.

” அக்கா அம்மா முதல்லெல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க .தம்பி பிறந்த பிறகு இப்போ கொஞ்ச நாளாத்தான் இப்படி …”

” ஓ….ஏன்மா …ஏதாவது ட்ரீட்மென்ட் பார்க்கிறீங்களா ? “

” ஆமாம் …அப்பா கூட்டிட்டு போவாரு …ஆனா அம்மா போகாது …எப்போ பாத்தாலும் சண்டை ….”




” எதனாலம்மா உங்க அம்மாவுக்கு இப்படி ஆச்சு ? ” நீ தேவையில்லாமல் அடுத்தவர் குடும்ப விசயத்தில் தலையிடுகிறாய் ? ” மனசாட்சி எச்சரிக்கும் போதே இந்த கேள்வி சமுத்ராவின் வாயிலிருந்து பிறந்து விட்டது .

செல்லி பதில் சொல்ல எடுத்து கொண்ட சில விநாடிகள் சில யுகங்களாக தோன்றின. கடல்லைகளை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு ” யார் யாரோ என்னென்னவோ சொல்றாங்க்க்கா .ஆனால் எனக்கு ஒன்னு மட்டும் தெரியும் .எங்க அப்பா ரொம்ப நல்லவரு .என் தம்பியை மாதிரியே  என்னையும்  நல்லா பாத்துக்கிடுறாரு ” மிக திருப்தி அவள் குரலில் .

அந்த குரலிலேயே திருப்தியுற்று ” லைப்ரரி எங்கேம்மா இருக்கு ? ” பேச்சை மாற்றினாள் .

” மேலே படிக்க சில விவரங்களுக்காக போனேன்கா .லைப்ர்ரி அதோ அந்த ஸ்கூலுக்கு பின்னால் இருக்கு .முந்தி மூடிக்கிடந்த்து .நம்ம சின்ன முதலாளிதான்கா யார்கிட்டேயோ பேசி இப்போ திறந்து விட்டிருக்காரு .ஆனால் நிறைய புத்தகங்கள் இல்லை .ஏதோ இருக்குறதை வச்சு படிக்கிறோம் “

” ஏன் உங்க முதலாளி அதுக்கு வழி பண்ணலையா ? “

” ஓ…பண்ணுறேன் …பேசிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே நிறைய புக் வைக்கிறேன் சொல்லியிருக்காக .கண்டிப்பாக பண்ணுவாக ” எவ்வளவு உறுதி இவள் குரலில் ….

” நெட்டில் படிப்பு விபரம் பார்க்கலாமேம்மா …லேப்டாப்பில் …..” ஆரம்பித்ததை பாதியில் நிறுத்தி விட்டாள் .பாவம் இந்த எளிய மக்கள் லேப்டாப்பிற்கு எங்கே போவார்கள் ?

” ம் …எங்கிட்ட இருக்கேக்கா …அரசாங்கம் கொடுத்தாங்களே ….அது .ஆனால் அது ரொம்ப யூஸ் ஆகலை .ஏதாவது தகராறு பண்ணிட்டே இருக்கும் .அதனால் என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வித்துட்டாங்க …”

அரசாங்கத்தின் சில திட்டங்கள் இது போன்ற கீழ்தட்டு மக்களை சென்றடைவதில்லையே …மனத்தாங்கலுடன் எண்ணிக்கொண்டாள் .

” சரி உன் சர்ட்டிபிகேட் கேட்டிருந்தேனே .அதை கொடுத்தால் உன் மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறேன. “

” இல்லைக்கா அது சரி வராது “

” ஏன்மா உன் அம்மாவை நினைத்து பயப்படுகிறாயா ?”

” அம்மாவை அப்பா பார்த்துக் கொள்வார் .ஆனால் நான் மட்டுமா படிக்க ஆசைப்படுகிறேன். கோமதி , ரோசி , நிவேதா , பீட்டர் , சந்தானம் நாங்க எல்லோரும் நல்லா படிக்கிறவங்கதான். எங்கள் எல்லோருக்கும் உங்களால் காலேஜ்ல சீட் வாங்கி தர முடியுமா ?”

உச்சந்தலையில் யாரோ ஓங்கி கொட்டியது போல் உறைந்து நின்றாள் சமுத்ரா .

அவர்கள் அருகில் ஒரு ஜீப் ப்ரேக் அடித்து நின்றது .இறங்கியவன் யோகேஷ்வரன்.

” என்ன செல்லி உங்க அக்கா என்ன சொல்றாங்க ? ” பார்வையை சமுத்ரா மேல் பதித்தபடி கேள்வியை செல்லிக்கு தந்தான் .

” அக்காகிட்ட எங்க படிப்பு பத்தி பேசிட்டிருந்தேன்யா ” பணிவுடன் சற்று ஒதுங்கி நின்று பதிலளித்தாள் செல்லி .

” ம் …இந்த அக்கா ரொம்ப படிச்சவுங்க இவுங்களை விட்டுறாதீங்க உங்க சந்தேகம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் கேட்டுக்கோங்க .” என்றான் .

” அது பத்திதான்யா கேட்டுட்டு இருந்தேன் ….அக்கா …”

” ஆனால் அதை கொஞ்சம் நேரம் கழித்து கேட்கலாமே .ஏன்னா  உங்க அக்கா இன்னும் சாப்பிடலையே .அவுங்களுக்கு பசிக்குமில்லையா ? “

” அக்கா …நீங்க இன்னும் சாப்பிடலையா ? சாரிக்கா அதை கூட விசாரிக்காம நான் பாட்டுக்கு பேசிட்டிருந்திட்டேன்.எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கனும். ஆனால் ….” தன் அன்னையை நினைத்து அந்த சிறுமி தயங்குவது புரிந்து அதற்கு சமாதானப்படுத்த சமுத்ரா வாயை திறந்தாள் .

” அட்டா செல்லி …உங்க அக்கா இப்போ எங்க வீட்லதானே தங்கியிருக்காங்க .நீங்க உங்க வீட்ல கூட்டிட்டு போய் சாப்பாடு போட்டா  எங்க அம்மா என்னையில்ல கோவிச்சிக்குவாங்க .அதனால் நீங்க இப்போ உங்க அக்காவை நான் கூட்டிட்டு போக எனக்கு அனுமதி கொடுக்கனும் ” என்றான் குரலில் சிறிது பணிவு கலந்து .

தன்னிரக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை சமாளிப்பதற்கான வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கையில் மிக எளிதாக அவளை அழகாக அவன் சமாளித்த விதம் சமுத்ராவிற்கு ஆச்சரியமளித்தது .

இவன் அம்மா இவனை கோபிப்பார்களாம் .சிரிப்பு வந்த்து சமுத்ராவிற்கு .செல்லிக்கும் அதே எண்ணம்தான் போலும் .

” ஐயே போங்கய்யா ்..நீங்க பெரியவங்க .உங்களையெல்லாம் அம்மா கோபிப்பாங்களா ? .நீங்க இப்போ அக்காவை கூட்டிட்டு போங்க ” என்றாள் .

” போலாமா …ஏறு ….” என அவள் பக்க கதவை திறந்தான் .ஏறி அமர்ந்தவள் மனம் முழுவதும் செல்லி கேட்ட கேள்வியே நிறைந்திருந்த்து .

அங்கே தட்டில் போடப்பட்ட உணவில் கவனம் செல்லவில்லை .சற்று முன் இருந்த பசி போய் உணவை அளைந்தபடி இருந்தாள் .

” ஏன் ? …சாப்பிடவில்லை ? …காலையிலும் சாப்பிடலையே ….? பசிக்கவில்லை….?” அவள் அருகே அமர்ந்தபடி கேட்டான் யோகேஷ்வரன்.

ஆமாம் காலையிலும் சாப்பிடவில்லையே …இவன் எனக்கு ஒழுங்காக பதில் சொல்லும் வரை சாப்பிடுவதில்லை என நினைத்திருந்தேனே ….இப்படி சமுத்ரா எண்ணும்போதே ….

” சமுத்ரா காலையில் செல்லியின் அப்பாவிடம் அவள் அம்மா சாயாதேவிக்கு மனநிலையை சரி பண்ணுவதற்காக பணம் கொடுத்தேன் .போதுமா …? இப்போ சாப்பிடு ” என்றபடி அவள் தட்டிலிருந்த சாத்த்திற்கு மீன் குழம்பு ஊற்றினான் .

அவனை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தாள் சமுத்ரா .




What’s your Reaction?
+1
18
+1
16
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!