Serial Stories

யுகம் யுகமாய்..! -9

9

உத்திர நட்சத்திரம் கன்னி ராசி

ஏதோவொன்று பொறி தட்டியது

திருமுருக பாண்டியனுக்கு.

நல்ல களையான முகம்.ஒரு ராஜ கம்பீரம் தெரிகிறது அவளது வதனத்தில். ஓரளவு சாமுத்ரிகா லக்ஷணம் அறிந்தவராதலால் அவளது குணாதிசியத்தையும் அவரால் கணிக்க முடிந்தது‌.

நல்ல பெண். மஹாலக்ஷ்மியின் அருட்கடாட்சத்தோடு பிறந்திருக்கிறாள்.ஆனால் அவள் கண்களில் ஏதோ ஒரு இருள் படர்ந்திருக்கிறது.நிச்சயம் இந்தப் பெண்ணை ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

“அம்மையே! நீ தான் காக்க வேண்டும்” 

சாப்பாட்டு மேசையில் கலகலப்பும் சிரிப்புமாய் உணவருந்தி கொண்டிருந்தவர்களை ஆறுதலாய் பார்த்தபடியே மனதுள் வேண்டி கொண்டார்.

“எங்கம்மா கையால் சாப்பிட்ட மாதிரியே இருந்தது.ஸோ கைண்ட் ஆஃப் யூ தாத்தா”

கைகளைப் பற்றிக் கொண்டவளை தன் பூஜை இடத்துக்கு அழைத்துச் சென்றவர் அங்கிருந்த குங்குமத்தை‌ அவள் நெற்றியில் இட்டு உள்ளிருந்து மஞ்சள் கிழங்கொன்றை அவளிடம் கொடுத்தார்.

சட்டென்று அவரை நமஸ்கரித்து வாங்கிக் கொண்டவளை ஆதுரத்துடன் பார்த்தவர்

“எப்போதும் நீ கவனமா இருக்கணும் மா. இந்த மஞ்சளை உன்னோடு எப்போதும் வைத்துக்கொள். அன்னை உன் மனக்குழப்பத்துக்கு தீர்வளிப்பாள்.”

என்றவரை வியப்போடு பார்த்தான் ப்ருத்வி.

“தாத்து! இதென்ன வர்ஷாவிடம் இத்தனை அக்கறை?நீங்க யாரையும் பூஜையிடத்துக்கு அனுமதிக்கமாட்டீங்களே!”

“இல்லை பா.அந்தப் பெண்ணுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கு. ரொம்ப கவனமா இருக்கணும்.சர்ப்பத்தினால் உயிருக்கு ஆபத்து வரலாம்.அதனால் தான் நம்ம வல்லத்து நாயகியின் மஞ்சள் கொடுத்தேன்.”

சட்டென ப்ருத்விக்கு அங்கத் நினைவுக்கு வந்தான். அவனால் ஏதாவது தொல்லை வருமோ?

ஆனால் சர்ப்பம் என்கிறாரே தாத்தா!

மலையுச்சியில் மலையெழிலைக் கண்டுகளித்தபடி நின்றிருந்தாள் வர்ஷா.மெல்லிய தூறலும் காற்றும் வீச மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் அவள் மீது வர்ஷிக்க தேவதை மாதிரி நின்றிருந்தவள் மீது தொப்பென ஏதோ விழுந்தது.

பெரிய நாகம்!

கழுத்தில் மாலை போல் கிடந்த

அது இரட்டை நாக்கை நீட்டி அவளைத் தீண்ட‌ 

“வர்ஷா!” என அலறினாள் வந்தனா.

“என்னாச்சு வந்தனா?ஏன் இப்படி கத்தறே?”

ராஜசேகர் தட்டி எழுப்ப

மலங்க மலங்க விழித்தாள் வந்தனா.

“ராஜ் ! நான் எங்கேயிருக்கேன்?வர்ஷாவை…”

சொல்ல முடியாமல் திக்கினாள்.

“ஹோ!ஏதாவது கனவா? மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?”

“இல்லை ராஜ்.ரொம்ப பயங்கரமா இருந்தது.வர்ஷா இந்தியாவுக்கு போகவேண்டாம்.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.எத்தனை பெரிய நாகம் தெரியுமா?”

“வந்தனா.இது யு.எஸ்.இங்கு வந்த பின்னும் பழைய பஞ்சாங்கமா இருக்காதே.உனக்கு எப்போதுமே எங்க சைட் பீப்பிள் மேலே நல்ல அபிப்ராயம் கிடையாது. அதுதான் இப்ப கனவா வருது.”




அதற்குமேல் கணவனிடம் விவாதிக்க விரும்பாதவள் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டாள்.

“இப்ப தான் நம்ம ஜோஸியரிடம் வர்ஷா ஜாதகத்தை காட்டினேன்.

அவளுக்கு ஒரு பரிகாரம் செய்யணும்.முடிஞ்சா ஒருமுறை இந்தியாவுக்கு வந்து போ.இங்கே வல்லத்தில் இருக்கும் அம்மனை தரிசிக்கணும்.ராகு கேது தோஷம் இருந்தா கூட சரியாயிடும்.”

“சரி மா.உடனே டிக்கெட் பார்க்கிறேன்.”

————————

“என்னடி சொல்கிறாய்?என் மகளுக்கு என்ன பிரச்சினை?”

அரசி பங்கயக்கண்ணியை வணங்கியமர்ந்த செவிலி.

“கொஞ்சநாளாக இளவரசி கலக்கமுற்று இருக்கிறார் தேவி.

ஏதாவது கிரகக்கோளாறாக இருக்கலாமோ? எனக்கு சற்று அச்சமாகவே உள்ளது.”

“என்னடி இப்படி அச்சமூட்டுகிறாய்?அவளுக்கு மணம் செய்ய உத்தேசித்திருக்கும் இந்நேரத்தில் என்ன குழப்பம் இது? ஒருவேளை இளவரசர் பூபால வர்மன் மீது நாட்டம் இல்லையோ”

“அப்படியல்ல தேவி! நாகபஞ்சமியன்றிலிருந்து தான் இளவரசியார் இப்படியிருக்கிறார்.”

பூஜையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ.அரசரிடம் சொல்லி மறுபூஜைக்கு ஏற்பாடு செய்வோம்.

உடனே துரித ஏற்பாடுகளை செய்தார் அரசி.

ராஜகுருவின் ஆலோசனைப்படி ஸூவாசினி பூஜைக்கும் நாகப்ரீதிக்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்க யௌவன காந்தி அரண்மனை நிகழ்வுகளை குழலிக்குத் தெரிவித்தபடி இருந்தாள்.

அதே நேரம் பன்னகப்பிடாதியும் அமைதியாய் இல்லை.

கையில் லிகிதத்துடனும் ஐயத்துடனும் தன் முன்னே நிற்கும் இளவரசரைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சவுமில்லை 

இளவரசரிடம் குழலியை மிரட்டியதாய் பகிங்கிரமாய் ஒப்புக் கொள்ளவும் செய்தான்.

“இளவரசே ராஜ்ய விவகாரங்களுக்காக சில காரியங்களை நான் செய்தாக வேண்டும். நம் ராஜ்யத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல தங்களின் நலமும் பாதுகாப்பும் எனக்கு முக்கியமானது. நாளை இந்த ராஜ்யத்தை பரிபாலனம் செய்யவேண்டியவர் நீங்கள்‌. உங்களுக்குப் பொருத்தமான வதுவை தேர்வு செய்வதும் இம்மந்திரியின் கடமை இளவரசே!”

பவ்யமான அவன் பதிலுரை இளவரசரை சற்று குழப்பியது.

“அரசே! இளவரசியார் வீரதீரத்தில் நம் இளவரசருக்கு சற்றும் சளைத்தவரல்ல .மேலும் நல்ல மதியூகியாகவும் இருக்கிறார்.ஆனால்…”

“ஆனால் என்ன மந்திரியாரே?”

இளவரசர் பதற..

“பதறவேண்டாம் இளவரசே.நமது அரண்மனை ஜோதிடரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது என நினைக்கிறேன்.

அவரது ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாக குடிமக்கள் பேசிக்கொள்கிறார்கள். அஞ்ச வேண்டாம் இளவரசே.சிறு பரிகாரபூஜை செய்து விடுவோம்.”

பன்னகப்பிடாதியின் சமத்காரமான பேச்சு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தது.

மந்திரி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.உடனடியாக அரண்மனை ஜோதிடரை‌ வரவழைத்து ஆவன செய்ய உத்தரவிட்டார் அரசர்.

பூபால வர்மனுக்கும் மந்திரியின் பேச்சு ஏற்புடையதாக இருக்க 

“கவலை வேண்டாம் கண்மணி. விரைவில் நாம் மணம் காணுவோம். மந்திரியார் நமக்கு ஏற்றவரா என பரிசோதிக்கவே அப்படி சொல்லியிருக்கிறார்”

என பதில் லிகிதம் அனுப்பி வைத்தான்.

குழலிக்கும் அந்த லிகிதம் ஆறுதலளித்தாலும் இயல்பாகவே பெண்ணுக்குள்ள எச்சரிக்கையுணர்வு அதுவும் அவள் இளவரசி என்பதால் சற்று கூடுதலாக இருக்க அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கலானாள்.

இனி பூபாலனிடம் கூறிப் பயனில்லை.ஒரு நாட்டு இளவரசி அதுவும் தன் நாட்டு இளவரசனின் மனங்கவர்ந்தவளை அச்சுறுத்தத் துணிந்தவன் அதற்கேற்றாற் போல பேசவும், காய்களை நகர்த்தவும் தெரிந்தவன். நாமும் அவன் வழியிலேயே போய்தான் ஜெயிக்க வேண்டும். ராஜகுரு சொல்லும் பூஜைகளை சிரத்தையாக முடித்தபின் அவனைப் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தாள்.




————————–

“வர்ஷா! உன்னை வீழ்த்துவதற்கான ஆயுதத்தைக் கண்டுபிடித்து உன்னை என் வழிக்கு கொண்டுவருகிறேன் பார். அதற்கு பிளாக்மாஜிக் செய்யக்கூட ரெடி.”

அங்கத் வெகு தீவிரமாக வர்ஷாவை தன் கட்டுக்குள் வைக்க முயற்சியை ஆரம்பிக்க

ப்ருத்வியும் அங்கத்தைக் கண்காணிக்க ஒருத்தரை ஏற்பாடு செய்தான்.

வர்ஷா பத்திரமாக தன் அபார்ட்மெணாட்டுக்குப் போய் சேர்ந்தாளா என உறுதிப் படுத்திக்கொள்ள அவளை அழைத்தான்  ப்ருத்வி.

“ஆர் யூ ஸேஃப்?”

அவன் கரிசனமான குரலில் கரைந்தாள் வர்ஷா.

“ஹா ஷ்யூர்.”

மெலிதாய் முணுமுணுத்தவள்

“தாத்தா கேட்கச் சொன்னாரா?”

“ஏன் நானாக கேட்கக் கூடாதா?”

“அப்படியில்லை.தாத்தா என்னை அவர் வீட்டுப் பெண்ணாகவே நினைக்கிறார்.அதுதான்…”

மாட்டுப்பெண்ணாக….நாக்கு வரை வந்ததை சட்டென நிறுத்திக் கொண்டவன்

“அது ஊர்ப்பாசம்.தமிழாச்சே!”

“அப்ப எல்லாத் தமிழ்ப்பெண்களையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போவீர்கள் போல..”

“ஓ..நோ…நோ..இதுவரை யாரையும் அழைத்துப் போனதில்லை.இனிமேலும்….”

“என்ன சொன்னீர்கள் காதில் விழவில்லை.”

“மன்னியுங்கள் தேவி.இனி எதுவும் பேசவில்லை.”

அவன் விளையாட்டாய் சொல்ல…

அண்டசராசரமும் சுழன்றது .

——————————-

“பிராணநாதா!அந்த பன்னகப்பிடாதி…”

“நமக்கு நல்லது தான் செய்வார்.

எதுவும் பேசாதே தேவி.நமக்கு கிடைத்த இந்த தருணத்தை வீணாக்க வேண்டாம்.இந்த வானும் புவியும் சாட்சியாக நம் திருமணத்தை உறுதிப்படுத்துவோம் .

நாளை முதல் நீ விரதம் மேற்கொள்ளப்போகிறாய். அதற்குள் உனைக் காண ஓடோடி வந்திருக்கிறேன். உனக்காக எமது ராஜ்யத்திலும் பரிகாரம் செய்ய உத்தேசித்திருக்கிறோம்.”

“ஆம் நாதரே! நானும் அருவிக்கரையின் நாயகி சப்தகன்னியரை வணங்கவே இவ்விடம் வந்தேன்.”

இருவரின் விழிகளும் ஒருவரையொருவர் பருக இனி இப்படியொரு வாய்ப்பே கிட்டாதோ என்பது போல் அவளை இறுகத் தழுவி ஆலிங்கனம் செய்தான் இளவரசன்.

எங்கோ யானையின் பிளிறல். மெலிதாய் வானத்தூறல்…

ததாஸ்து..ததாஸ்து…என் வானவர் ஆசிர்வதிப்பது போல் இளங்காற்று வீச…

இந்த க்ஷணம் இப்படியே நீளாதா? இருவரும் இப்படியே மாயமாய் மறைந்து தேவருலகத்தில் வாழலாகாதா?

ஏதேதோ எண்ண அலைகள் சோணைக்குழலியின் உள்ளத்தில் அலைமோத மனமயங்கி நின்றாள்.அவளது ராஜ்யம்..அரசர்…அரசியார்…அவளை அச்சுறுத்தும் பன்னகப்பிடாதி யாருமே அவள் நினைவில் இல்லை.

இப்படி மெய்மறந்து மனமகிழ அவளை விடலாமா? பின் தன் மகளை எப்படி மகாராணியாக்குவது? இப்போதே அவர்களைப் பிரிக்க வேண்டும் பன்னகப்பிடாதி விரைந்தான்.

தன் மூச்சுக் காற்றில் கலந்த இளவரசனின் குரல்….குழலி என இசைக்க….

———————————

கிர்ரென்று காலிங்பெல் விடாது அடித்தது.

கண்விழித்தாள் வர்ஷா.

ப்ருத்வியுடன் பேசிக் கொண்டிருந்த நான் எப்போது உறங்கினேன்? மீண்டும் மீண்டும் நோய்க்கு அடிமையாகிறேனா?

பன்னகப்பிடாதி…இதென்ன புது சொல்?

இதெல்லாம் எனக்கு ஏன் நினைவுக்கு வருகிறது? முன்பு இப்படித்தான் யவனா என பினாத்தினேன்..அதாவது யவனிகா என தெரிந்துவிட்டது.

இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ?அறியாத வயதில் நடந்தவை இப்போது ஏன் ஞாபகம் வருகிறது? தாத்தா வேறு கவனம் என்றாரே.மஞ்சளைக் கொடுத்து மனக்குழப்பம் தீருமென்றார்.ஆனால் மேலும் குழப்பமாகிறதே..

மீண்டும் காலிங்பெல் சத்தம்..

இந்நேரத்தில் யார்?

கதவைத் திறந்தாள்.

இவன் ஏன் இங்கு? சட்டென அவள் முகம் மாறியது.

யௌவனா! எடு அந்த கொடுவாளை!

குரலும் முகமும் மாற அவள் விநோத ஒலியெழுப்பி மயங்க..அவளைத் தாங்கிப் பிடித்தது ஒரு கை.

(தொடரும்)




What’s your Reaction?
+1
6
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!