Serial Stories

யுகம் யுகமாய்..! -7

7

சப்ரமஞ்சத்தின் மீது தன் கொடியுடலை சாய்த்துக் கொண்டு சிந்தனை வசப்பட்டிருந்தாள் சோணைக் குழலி.

இன்பத்துக்கும் துன்பத்துக்குமாய் ஊஞ்சலைப் போல ஊசலாடியது மனது. 

அழகிய மலர்களை சேர்த்ததெடுத்து தொடுத்து  கொண்டிருக்கும் நேரம் பூநாகமொன்று பூவிதழ் நடுவே நெருடிக் கொண்டு புரளுவது போல் தன்னவனோடு ஏகாந்தமாய் உரையாடும் நேரம் இடை வந்து தன்னை மிரட்டியவன் யார்? எத்தனை ஆணவம் அவனுக்கு? மேகமலையின் இளவரசியை அந்நியன் ஒருவன் அரட்டுவதா?  அருவருப்பும் சினமும் யாரிவன் என்ற அலைப்புறுதலும் உள்மனதிலெழுந்த சிற்சில சம்சயங்களுமாய் உணர்வுக் கலவைகளில் அல்லாடிக் கொண்டிருந்தாள் இளவரசி.

தோழியின் விற்புருவங்கள் எழுப்பிய முடிச்சுகளைக் கண்ட யௌவன காந்திக்கு மனம் பொறுக்கவில்லை.

காதலர்களுக்குள் ஏதும் ஊடலா? அது குறித்தே இளவரசியின் அமைதியின்மையா?

தன்னுடைய தளிர்விரல்கள் கொண்டு மென்மையாக புருவத்தை நீவிவிட்டு பிறைநுதலை லேசாய் பிடித்து விட்டாள்.

சோர்ந்த உள்ளத்திற்கும் உடலுக்கும் சிறு ஆறுதலைத் தந்தது அந்த மென் விரல்கள்.  இளவரசியின் உடல் இறுக்கத்தைத் தளர்த்தி லேசானது.

“என்னாயிற்று இளவரசியாரே “

“ப்ச்! ஒன்றுமில்லையடி! “

“குணமலைக் குன்று மேகமலையோடு மோதிக் கொண்டதா? அதனால்தான் மேகமலை குமுறுகிறதா? “

“தோழியின் சமத்காரப் பேச்சில் குழலியின்  வெண்ணிற முத்துகளை ஒளித்து வைத்திருந்திருந்த செந்நிற இதழ்கள்  விரிந்து நகைத்தன.

“மோதவுமில்லை குமுறவுமில்லை.  இது வேறு “

“கூறுங்கள் இளவரசி. உங்கள் மனதிற்குள் சிறுமணல் போலே உறுத்துவது யாதென இந்தப் பேதைக்குத் தெளிவுறுத்துங்கள் ஆவன செய்யக் காத்திருக்கிறேன். இவ்வாறு தங்களின் மலர் வதனம் நெருப்புக்கங்குகள் விழுந்ததைப் போலே வாடி வதங்கிக் கருகிக்  கிடப்பதை காணச் சகியேன் அம்மா “

“யௌவனா! கன்னத்தில் வெட்டுத்தழும்புடன் நம் படைவீரர்களில் புதிதாக எவரேனும் இணைந்துள்ளார்களா? “

“தெரியவில்லையே இளவரசி. ஒருநாள் அவகாசம் தாருங்கள்.  விவரம் சேகரித்து வருகிறேன் “




“…………”

“நீங்கள் எங்கேனும் பார்த்தீர்களா? ஐயம் கொண்டீர்களா? “

“ஹ்ம்.! யௌவனா! பூபாலரை மீண்டும் சந்திக்க வேண்டும் ஒரு முக்கியமான சேதியை சேர்ப்பித்தல் வேண்டும் மிகமிக அவசரம் அவசியமும் கூட! எனக்கு மனம் சரியில்லையடீ! “

“இளவரசி ! இளவரசர் பூபாலரை மீண்டும் உடனே சந்திப்பது இயலாத காரியம். அவர் பாதிவழி பயணப் பட்டிருப்பார்.  ஒன்று செய்யலாமே! லிகிதத்தில்  சேதியை அனுப்பிவிடலாமே! விரைவிலேயே போய்விடுமே! “

” சபாஷ்! இதுவுமே நல்ல யோசனைதான்.  நாளையே தகுந்த ஏற்பாட்டை செய்து விடு “”

“அப்படியே இளவரசி! இப்போது சிறிதளவு பாலைக் கொண்டு வருகிறேன்.  அருந்திவிட்டு கண்ணயருங்கள் “

சோணைக்குழலி மேலேறிக் கொண்டிருந்த நிலவை சாளரம் வழியே பார்த்தபடியே இருந்தாள்.

‘ஆ.அந்த மனிதன் என்னவோ வினோதமான. நாமத்தைக் கூறினானே! என்ன சொன்னான்? ஹாங்…!

“நான் பன்னகப்பிடாதி உன்னை ஆளவந்த யமன்”

இதே! இதே வார்த்தைகளைத்தான் உச்சரித்தான். பன்னகம்! பன்னகம்.  பன்னகம் சர்ப்பம். ஆம்!  இவன் ஒரு விஷப்பாம்புதான். 

கண்டுபிடிக்க வேண்டும் குணமலைக்குன்றின் இளவலுக்கு இது குறித்து நிச்சயமாய் எச்சரிக்கை தர வேண்டும்.’

உள்ளம் ஏனோ துடிதுடித்தது. வரப் போகும் ஆபத்தின் சூசகமா?  யாருக்கு? எங்களிருவருக்குமா? யாரிவன். என் மனத்தையே குழப்புகிறான். பார்வை பேச்சு நடத்தை எதுவுமே சரியில்லையே! 

 சோணைக்குழலி சோர்வுடன் இமை மூடினாள்.

————————-

                 

சின்னமனூரின் பழைமையான தொட்டிக்கட்டு வீடு.  மாடி வீட்டின் மேல்தளம் பாதிவரை செருகு ஓடுகள் வேயப்பட்டிருந்தது. கீழே சிவப்புத்தரை. மையமாக அழகிய கோலமொன்று பெயிண்ட்டால் தீட்டப்பட்டு பளிரென்றிருந்தது.

நீள் செவ்வக வடிவ இடத்தின்  நடுவே பித்தளைப்பிடிகளுடன் கூடிய ஊஞ்சல் ஆடியது.  ஓடு வேயப்பட்டிருந்த இடம் தவிர்த்து பாதிக்குமேல்  திறந்த வெளியாயிருந்தது விசாலமான அந்த மொட்டைமாடி. செண்கப் பூவின் மணமும் முல்லைப் பூக்களின்  வாசனையும் அந்த சூழலை ரம்யமாக்கின. உட்கார வசதியாக நாலைந்து  பிரம்பு நாற்காலிகளிருக்க அதிலொன்றில் அமர்ந்தபடி வானில் வேகமாய் நகரும் சந்திரனை பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த இளம் பெண்.  விழிகளில் கனவு மிதந்தது. 

திருத்தமான முகத்தில் நிலவொளி விளையாடி இன்னமுமே அவள் அழகை  அசர அடித்தது. பின்னலை முன்னால் போட்டுக் கொண்டு பின்னுவதும் பிரிப்பதுமாக விரல்கள்  வீணையை மீட்டுவதைப் போல சரசமாடின.

‘வர்ஷா வருகிறாளாம். எப்போதோ பார்த்தது. அவள் வெளிநாட்டுவாசியாகி விட்டாள் தாயும் தந்தையுமே அங்கேயே செட்டிலாகியாகியாயிற்று… ஏதோ இந்த அருகிலேயேயிருக்கும் பூர்வீக வீடுதான் விட்டகுறை தொட்டகுறையாய் இழுத்துக் கொண்டிருந்தது.

ராஜசேகர் மாமா அதை விற்றுவிடலாம் என்றிருக்கிறாராம். அப்பாவும் அதற்காகவே ரெண்டு மாதமாய் அலைகிறார்.

வர்ஷா இப்போது எப்படியிருப்பாள். அப்போதே அழகு.  இப்போதோ வெளிநாட்டு வாசமும் சூழலும் இன்னும் மெருகேறியிருப்பாள். 

இந்த அப்பாவும் மாமாவுடனே அமெரிக்கா ஆஸ்ட்ரேலியா என்று வேலை தேடிக் கொண்டு ஜம்மென்று போயிருந்திருக்கலாம். நானுமே வர்ஷாவைப்போல் நாகரிகமாய் நுனிநாக்கு இங்கிலீஷ் பகட்டுமாய் இருந்திருப்பேன். 

ஹ்ம்! இந்த சின்னமனூரும் இந்த அரதப்பழசான வீடும்  அப்பாவின் பழங்காலத்து பிரிண்டரும்  ச்சே!

உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. நாம மட்டுந்தான் தேங்கிப் போய் கிடக்கிறோம். 

இந்த வர்ஷா இங்கே வந்தால் என்ன நினைப்பாள்.? இந்த வீடு வசதிப்படுமா. இந்த அப்பா ஏன்தான் பழம் பஞ்சாங்கமாயிருக்கிறாரோ! அம்மா அதற்கு மேலே!




ராஜசேகருக்கு ஒன்றுவிட்ட சகோதரி என்றாலும் உடன்பிறப்புகள் வேறில்லாததால் நல்ல உறவு இருந்தது. அவள் கணவருமே அமைதியானவர். சின்ன அச்சகம்  வைத்திருந்தார். விவசாயம் கை கொடுத்தது. சின்ன ஊர் என்பதால்  செலவும் கட்டுக்கடங்கியிருக்க ஒரே மகளுக்கு கட்டும் செட்டுமாய் நகையும் ரொக்கமுமாய் குருவி சேர்ப்பது போல் சேமித்திருந்தனர் தம்பதியர். 

இதெல்லாம் மகளுக்கு போதவில்லை. எப்படியாவது இதிலிருந்தெல்லாம் தப்பிச்சிடணும். என் அழகுக்கு ராணி  சம்யுக்தாவை குதிரைமேல் கவர்ந்து போன ப்ருத்விராஜன் போல ஒரு தேவகுமாரன்  வரணும். என்னை கொண்டு போயிடணும்.  என் அழகில் கிறங்கிப் போகணும். 

“ஹைய்யோ! ச்சீச்சீ! நானும் என்ன குதிரை கதிரைன்னு யோசிக்கிறேன். ஒரு மெர்சிடீஸ் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் அட்லீஸ்ட்  ஒரு  பிஎம்டபிள் யூ  இப்படி கிராண்டா யோசிக்காம குதிரையாம் குதிரை.  சின்னமனூர் புத்தி போகுதா பார். ‘விரல் நுனியால் தலையிலடித்துக் கொண்டாள். 

அவளின் கனவுகள் வானத்தை விடப் பெரியவை. சின்னமனூர் வீட்டின் ஒற்றை இளவரசி. ஆனாலும் யதார்த்தமான எளிமை பிடிக்காது தொலைவில் உள்ள நட்சத்திரங்களைத் தேடித் தன்னைத் தொலைப்பவள். 

சராசரிப் பெண்ணாக கொண்டவனுக்கு மனைவியாக வாழத் துடிப்பவள்தான். ஆனால் அவளுக்கு வானில் பறக்க ஆசை!

யோசித்து அவசியமானவற்றுகு செலவு செய்கிற மத்தியதரக் குடும்பப் பெண்ணாக வாழப் பிடிக்காதவள். மேலே மேலே பறக்கவேண்டும். தன்னைப் பார்த்து மற்றவர்கள் வாய் பிளக்கவேண்டும். கணக்கின்றி செலவு செய்ய வேண்டும் தினமொரு காரில் வேளைக்கொரு உடையணிந்து வாரமொரு விருந்துக்குப் போய்வர வேண்டும். கோடிசுவர கணவன் வேண்டும். தன் காலாலிட்டதை தலையால் செய்யவேண்டும்.  

விழிகள் பேராசையில் பளபளத்தன.

கனவு…பிரம்மாண்டமான கனவு.! பெரிதினும் பெரிது கேள். இதே அவளின் கனவு. அல்லும் பகலுமாய் இதே எண்ணம். 

அதனாலேயே 

மதுரையில் கல்லூரிப்படிப்பை ஏனோதானோ என்று முடித்தவள் அடுத்து வேலைக்கு செல்லக்கூட விரும்பவில்லை.

மீரா கண்ட கனவு பலித்தது அல்லவா அப்போது என் கனவு ஏன் பலிக்காது என்று தனக்குத்தானே விதண்டா வாதம் செய்தாள்.

தகப்பனார் கொண்டு வந்த வரன்களையும் தட்டிக் கழித்துவிட்டு நாயனுக்காக காத்திருக்கிறாள் இந்த நவீனயுக கோதை! 

சொந்தத்திலேயே முறைப் பையன் இருந்தான். மதுரையில் சொந்தமாய் இரண்டு பிரௌசிங் சென்டர் அத்தோடு ஒரு ஸ்டேஷனரி ஷாப்பும் கூடவாம்.

அப்பாவும் அம்மாவும் சொல்லியே மாய்ந்து போக இவள் அசால்ட்டாக மறுத்தாள். 

அக்குதொக்கு இல்லாத இடம். பெற்றவர்கள் கிராமத்திலிருக்க மதுரையில் சொந்தவீடு தனிக்குடித்தனம் மகாராணியாயிருக்கலாம் என்று அம்மாதான் புலம்பிக் கொண்டேயிருந்தாள். மகளோ சிரித்துக் கொண்டாள். ‘அய்யோ அசட்டு அம்மாவே! உன் பெண்  மகாராணிக்கு ராணியாய் சக்கரவர்த்தினியாய் வாழப்போகிறாள். பொறுமையாயிரும்மா ‘

தாயும் தந்தையும் விட்டுப் பிடிப்போம் என்றிருக்க இவளோ பறப்பதைப் பிடிக்கும் முயற்சியிலிருந்தாள்.

வர்ஷா ஆபிசிலிருந்து மொத்த டீமுமே ஏதோ ஆராய்ச்சிக்காகவே மேகமலை வரப்போகிறதாமே.!  அதன் மூலம் எனக்குப் பிடித்த ராஜவாழ்க்கை கிடைக்குமா? 

வர்ஷா வந்தாலே போதும்.! அவள் அருகிலிருந்தால் போதும்!  முன்பு போலவே அதே பாசத்தோடுஇருப்பாளா? மாறியிருப்பாளா? ஆனால் என்மனம் சொல்லுதே? அவளோடுதானிருக்க வேண்டுமென்று.! அவளுடனே பறந்து போய்விடவேண்டும். சின்னமனூருக்கு பெரிய கும்பிடு போடணும்.

ஊர்க்குருவியான இந்த உலகமறியா பூங்குருவி கனவில் மீண்டும் தன்னை மூழ்கடித்துக் கொண்டது. நினைவுகளின் தித்திப்பில் நெஞ்சு நிறைந்தது.

அம்மாவின் குரல் கேட்டது

“யவனா.!ஏய் யவனிகா “

“படுத்தி வைக்கிறா! மாடியேறி வரதுக்குள்ளே பிராணன் போகுது”

“ஏ. யவனிகா “

        

(தொடரும்)




What’s your Reaction?
+1
7
+1
6
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!