Serial Stories கடல் காற்று

கடல் காற்று -1

   (1)

“இந்த இரண்டு சுடிதார் கூட எடுத்து வச்சிக்கோம்மா .” சற்று பளபளப்பான அந்த சுடிதார்களை எடுத்து வைத்தாள் செண்பகம் .

இவ்வளவு பளபளப்பான உடையணிந்து கொண்டு நானென்ன கல்யாணத்திற்கா போகப்போகின்றேன் ? சண்டையிட போகிறேன் .வாய் வரை வந்துவிட்ட
வார்த்தைகளை விழுங்கி விட்டு

” இவ்வளவு மினுமினப்பு வேண்டாம் அத்தை ” மீண்டும் பீரோவினுள் வைத்தாள் .

” இல்லைம்மா அங்கே கூட இரண்டு நாள தங்க வேண்டி வந்து விட்டால் நீ முழித்துக்கொண்டு இருக்க கூடாதில்லையா,? அதனால்தான் சொன்னேன் “

கூட இரண்டு நாள் ஏன் ஆகப்போகிறதாம் ? அவனை பார்த்து நாக்கை பிடுங்கி கொள்வது போல் பேசி தங்களுக்கு வேண்டிய தகவல்களை பிடுங்கிக கொண்டு ஓடி வந்து விட போகிறாள் .மற்றபடி அந்த குக்கிராமத்தில் அவளுக்கு வேறென்ன அதிகப்படி வேலை இருந்து விட போகிறது?

” பளபளப்பு வேண்டாமென்றால் இந்த காட்டன் புடவைகளை எடுத்துக்கொள்கிறாயா? “

நீங்களென்ன நான் அங்கேயே இருந்து விட வேண்டுமென நினைக்கிறீர்களா? சுள்ளென்று கேட்க துடித்த நாவை மீண்டும் கட்டுப்படுத்தினாள் .

அவர்கள் கவலை அவர்களுக்கு . ஆனால் அத்தை மாமா இருவருமே இது அவளுக்கும் மிகப் பெரிய முடிவு காண வேண்டிய கவலைதான என அறியாமலிருக்கிறார்களே என்ற குறைதான் அவளுக்கு .

” சம்மு …” உரக்க  அழைத்தபடி வந்தார் கருணாமூர்த்தி. பெயருக்கும் உருவத்திற்கும் சற்றும் சம்மந்தமில்லாத தோற்றம் .சிறுத்து சிவந்த அந்த கண்களில் கருணை துளியும் இல்லை.

ஆனால் ” சம்மும்மா ..கண்டிப்பாக நீ போகத்தான் வேண்டுமாடா ? ” என்ற போது தழுதழுத்த அவரது குரல் அவரது பாசத்தை கோடிட்டது.

,” என்ன மாமா இது நாம நால்வருமாக ஓரு மாதமாக சேர்ந்து பேசி எடுத்த முடிவுதானே ? இப்போது என்ன பின்வாங்கல் ? நான் கண்டிப்பாக போகத்தான் போகிறேன் .அத்தோடு வெற்றியோடு திரும்ப வருவேன்”  உயர்ந்த குரலில் அறிவித்தாள் .

அவள் கைகளை பற்றியபடி விம்மி விட்டாள் செண்பகம் . ,” உன்னை நான் வயிற்றில் தாங்கி பெறவில்லையே  தங்கம் .அந்த புத்தியில்லாதவளை பெற்று ..அதனால் இன்று எவ்வளவு பிரச்சினை ?

” அத்தை முடிந்த்தை பேச வேண்டாமே? ‘

” இந்தா செண்பா சும்மா இரு..கிளம்புற நேரத்தில் பிள்ளையை இம்சை பண்ணிக்கிட்டு்….” அதட்டினார் கருணாமூர்த்தி.

“இந்தாடாம்மா இது போகும் போது உனக்கு பொழுது போக வாங்கினேன் ” சில வார பத்திரிக்கைகளை நீட்டினார் .அவற்றையும் பேக்கினுள் திணித்துக்கொண்டு மணி பாரத்தாள் .

” தனா நேரடியாக பஸ்ஸடான்டிற்கே வந்து விடுவதாக கூறினானேம்மா.நீ கிளம்பும்மா .பஸ்ஸிற்கு நேரமாகி விட்டது ,” அவள் பேக்கை எடுத்துக் கொண்டார் கருணாமூர்த்தி.

பஸ்ஸடாண்டிற்கு சென்ற ஐந்து நிமிடங்களிலேயே பரபரப்பாக வந்து சேர்ந்தான் தனசேகரன் .

” சாரி சம்மு அந்த மேனேஜர்கிட்ட ஒரு மணி நேரம் அனுமதி வாங்கிவிட்டு வருவதற்குள் போதும் போதிமென்றாகிவிட்டது ,” என்றான் .




அவனது வேலை விபரம் தெரியுமாதலால் புரிந்து கொண்டதாக தலையசைத்தாள் .

தனது தந்தைக்கு மறுபுறம் அந்த பெஞ்சில் அமர்ந்தவன் ” சம்மு அங்கே உனக்கு சிறு மனக்குறை என்றாலும் தயங்காமல் உடனே ஓடி வந்து விட வேண்டும் .இங்கே உன் ..உனக்காக ..நாங்கள் ….” மேற்கொண் டு பேச முடியாமல அவன் சிறிது தடுமாற அவன் தோள்களை தட்டிவிட்டு ,” இதோ வருகிறேன் ” என எழுந்து போனார் கருணாமூர்த்தி.

தந்தை சென்றதும் நகர்ந்து அவளருகே அமர்ந்து கொண்டவன் அவள் கைகளையும் இறுக பற்றிக கொண்டான்

” எனக்கு இதிலெல்லாம் கொஞ்சமும் விருப்பமில்லை சம்மு .ஆனால் அம்மா ..கொஞ்சமும் புரிந்து கொள்ள மாட்டேனென்கிறார்கள் சம்மு . நான் எவ்வளவோ வாதாடி பார்த்து விட்டேன் ” மிகுந்த வருத்தம் அவன் குரலில்.

” இதில் வாதாட என்ன இருக்கிறது தனா. ? அவர்களின் தாய் மனதையும் நாம புரிந்து கொள்ள வேண்டுமல்லவா ? ,”

” ஆமாம்ம்ம் ….” மனமின்றியே இழுத்தவனின பிடி அவள் கைகளின் மீது இறுக்கமானது .

” நம லாவண்யாவின் நிலைமை பற்றி தெரிந்திருந்தும் அம்மாவின இந்த பிடிவாத்த்தில் நியாயமிருப்பதாக எனக்கு தோன்றவில்லை ” தனாவின் கருத்து மாறவில்லை.

” உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா தனா ? ” அவன் விழிகளுக்குள் கூர்ந்தாள்.

” இல்லை உன் மீதான நம்பிக்கையை விட அவன் மீதான பயம அதிகமுள்ளது .அவனை நாம் மிக நன்றாக அறிந்தவர்களாயிற்றே ” எல்லையில்லாத கசப்பு அவன் குரலில்.

“உன்னை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறேன்  ”
” உன்னை நம்பாவிட்டால் நான் என்னையே நம்பாத்து போல ” இது போன்ற உபசார வார்த்தைகளற்ற தனசேகரனது நேரடி பதில் இப்போதும் அவள் உள்ளம் கவர்ந்தது .

இது போன்ற சில சிறு சிறு காரணங்கள்தான் அவனை அவளது உள்ளம் கவர் நாயகனாக்கியது. தன் கைமேல் பதிந்திருந்த அவன் கரங்களின் மேல் தன கைகளை ஆதரவாக வைத்தாள் .

,,” உன் குணம் எனக்கு தெரியும் சம்மு . சிறு குறையும் பொறுத்துக் கொள்ளாத உன் நேர்மை…ஒவ்வொரு காரியத்திலும் உன் நேர்த்தி …இதெல்லாம் அந்த ஆளுக்கு அதிக கடுப்பேற்றி ஏதாவது ஏட்டிக்கு போட்டி நடந்தானானால் ….” 

” நடந்தானானால் ….” தானும் முடிக்காமலேயே நிறுத்தினாள் அவள் .

” லாவண்யாவை உனக்கு நான் நினைவு படுத்த வேண்டியதில்லையென நினைக்கிறேன் “,

“நடந்துவிட்ட ஒரு கோளாறினை சரிப்படுத்த போகிறவள் தானே அதில் மாட்டுவாளா தனா ?” 

தனசேகரன் மௌனமானான் .

” லாவண்யா உங்கள் தங்கை தனா ” அவனுக்கு நினைவூட்டினாள்.

” மற்றபடி உன்னை நான் ஏன் அங்கு அனுப்ப போகிறேன் சம்மு ” இயலாமையுடன ஒலித்தது அவன் குரல்.

” ம்..” புரிந்து கொண்ட தன்மையுடன் மௌனமானாள்.

பேச வேறின்றி இருவரும் சிறிது நேரம் அப்படியே அமரந்திருந்தனர் .

மிகப்பெரிய ஆறுதலை அளித்தன அந்த அமைதிப பொழுதுகள் அவர்களுக்கு.

” இந்தாம்மா உனக்கு தாகத்திற்கு ..” தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் கருணாமூர்த்தி.

,,” பஸ் வந்துவிட்டது வாம்மா ” அவள் பேகை எடுத்துக் கொண்டு நடந்தார் .

பழவேற்காடு பஸ் வந்து நின்று கொண்டிருந்த்து.

திடீரென தோன்றிவிட்ட சிறு பரபரப்பை உள்ளடக்கியபடி ஏறியவளை அனுப்ப மனமற்ற பார்வையுடன் நின்றான் தனசேகரன் .

பளிச்சென்ற தனது சிரிப்பால் அவனுக்கு நம்பிக்கையூட்டினாள் .பஸ் கிளம்பியது.

நன்கு பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டவள பஸ்ஸினுள் பார்வையிட்டாள் .

பெரும்பாலும் மிக எளிய மக்கள் .அங்கே முக்கிய தொழில் மீன் பிடித்தல்தானே .

கசங்கிய சிறிது அழுக்கான உடையணிந்த அந்த மக்கள் தங்கள் அன்றாட பிழைப்பு பற்றிய அங்கலாய்ப்பில் இருந்தனர் .

சிறிது மாறாக சற்று நாகரீகமாக தோற்றமளித்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தரவயது பெண் .நாற்பதிலிருந்து நாற்பத்தியைந்து வயது வரை இருக்கலாம் .இறுக்கமான பின்னலும் ஒழுங்காக பின் பண்ணிய சேலையுமாக திருத்தமான தோற்றம் காட்டினாள் .

நடத்துனரிடம் இவள் கேட்ட பழவேற்காடு டிக்கெட்டில் இவளை ஏறிட்டு நோக்கினாள் .

” அங்கே யாரை பார்க்க போகிறீர்கள் ? ” இவளிடம் வினவினாள் .

அவளை யோசனையாக நோக்கவும் அகலமாக புன்னகைத்து ” நானும் அந்த ஊர்தான்மா .அதுதான் ஒரு ஆர்வம் .தப்பாக ஒன்றுமில்லை ” விளக்கினாள் .

” நான் ” பெண்குரல் ” பத்திரிக்கையில் வேலை பார்க்கிறேன்மா. எங்கள் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரைக்காக உங்கள் ஊருக்கு வருகிறேன்மா “




” எதைப் பற்றிய கட்டுரை ?” மேலும் துருவல் அப்பெண்மணியிடம் .

” என்னம்மா உங்கள் ஊரில் எழுதுவதற்கு விசயங்களா இல்லை ?சரணாலயத்திலிருந்து கல்லறை வரை எங்வளவோ விசயங்கள் இருக்கின்றனவே….” சிறு சலிப்புடன் கூறினாள் .

” அதில் எந்த விசயமென்றுதான் கேட்டேன் ?” அவள் விடுவதாக இல்லை .

” உங்கள் ஊர் மீனவ பெண்களை சந்தித்து ஒரு பேட்டி …அவ்வளவுதான் ” எவ்வளவோ முயன்றும் அவள் குரலில் சிறு எரிச்சல் தெரிந்து விட்டதோ?

” சும்மா சும்மா நைக்கிறாளேன்னு தப்பா எடுத்துக்காதம்மா .நல்லா அம்மன் சிலையாட்டம் அம்சமா இருக்கிறாய் .கண்ட கண்ணிலேயும் விழுந்து ஏதாவது ஏடாகூடமா ஆயிடக்கூடாதேன்னு ஒரு தவிப்புதான்மா ” தனது துருவலுக்கு காரணம் சொல்கிறாள் அவள்.

ஏனோ இந்த பதிலில் அவள் மனதில்  குளிரடித்தது.

” எங்கள் பத்திரிக்கையில் எங்களுக்கு டிரைனிங் கொடுத்திருக்காங்கம்மா.யார்கிட்ட எப்படி நடந்துக்கிறதுன்னு எங்களுக்கு தெரியும் .”

” என்னத்த பெரிய டிரைனிங் …தளுக்கி குலுக்குறவளும் விழுந்திடுறா.அள்ளி முடியுறவளும் விழுந்திடுறா…என்னத்தை சொல்ல ” அந்த பெண்ணின் தனக்குள்ளான புலம்பலை கவனமாக கணக்கெடுத்துக் கொண்டாள் .

” உங்கள் ஊரில் பெரிய மனிதர யாரும்மா? அவரை பார்க்கனுமே ” மெல்ல நோட்டம் விட்டாள் .

கருமை படிந்த்து.அந்த அம்மாள் முகம் .” உனக்கு என்ன விபரம் வேண்டும்மா ? நானே சொல்கிறேன் .பெரியமனுசன்னு நம்பி யார் முன்னாலும் போய் நின்னுடாதே தாயி ” படபடத்தாள்.

” நீங்கள் மயில்வாகனன் ஐயாவை பற்றி சொல்றீங்களா?”

” ம்க்கும் …பெரிய ஐய்யா…” நொடித்தவள் ” அந்த பெரிய மனிதன் பெற்றெடுத்த புத்திர சிகாமணியையும் சேர்த்துதான் சொல்றேன் .அப்பனும் , மகனுமா சேர்ந்து தானே ஆட்டம் போடுறாங்க ..,”என்றவள் நிறுத்தி ” ஆமாம் அவுங்களை பற்றி உனக்கு …?” கேள்வியாக நிறுத்தினாள் .

” கொஞ்சம் விபரங்கள் தெரிஞ்சிக்கிட்டுத்தான்மா வந்திருக்கேன் “

” அதில் பாரும்மா …அந்த குடும்பம் செய்ற அநியாயம் இருக்கே..கேட்க ஆளில்லைம்மா…” சிறிது விபரம் தெரிந்தவளுக்கு நிறைய விளக்கம் சொல்லும் ஆர்வம் அந்த பெண்மணிக்கு.




அந்த ஆள் இருக்காரே…மயில்வாகன்ன் .அவரு முத சம்சாரம் செத்து போச்சு ” என்றவள் குரல் தழைத்து ” அதற்கே இந்தாள் தான் காரணம்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு உண்டு “

” இரண்டாவதா ஒரு லங்கினியை கல்யாணம் பண்ணிட்டு வந்தாரு .அவளும இந்தாளை மாதிரியே குயுக்தி புடுச்சவா.அதனால் இரண்டு பேருக்குமே நல்லாவே ஒத்து போச்சு.ரொம்ப லேசா இவா அதிகாரத்தை கையில் எடுத்துக்கிட்டா.”

” இது இரண்டு ஜீவனுக்கு புடிக்கலை .யாருக்கு…அந்த ஆளோட மொத சம்சாரம் பெத்த குலக்கொழுந்துங்களுக்கு..

அந்த முதல் சம்சாரம் அவ்வளவு அருமைப்பட்டவ.அவளை பார்த்த கண்ணு இந்த லங்கினியை பார்க்குமா? அந்த பொண்ணும் , பையனும் இவளை முறைச்சிக்கிட்டு நின்னதுங்க.

அவளை மதிக்காதவன எனக்கு வேணாமின்னு அப்பன் துரத்தி விட்டுட்டான் .பையன் ….ஆம்பளை வீட்டை விட்டு ஓடிட்டான் .பொண்ணு வேற வழியில்லாமல இங்கேயே முறைச்சிக்கிட்டு கிடந்தா..

பதினைஞ்சி வருடம் கழிச்சி பையன பணத்தோட வரவும் ,அப்பனும்  , சித்தியும் பல்லைக் காட்டிக்கிட்டே சேர்த்துக்கிட்டாங்க..

ஆனால் இரண்டு பிள்ளையும் அப்பனுக்கு கொஞ்சமும் குறையாததுங்க…பச்சத்தண்ணியில வெண்ணெய் எடுக்குங்க…

பண்ணுன பாவத்துக்கு அப்பனுக்கு கை கால் இழுத்துக்கிச்சு..இப்போ அப்பன் இடத்தை மகன் எடுத்துக்கிட்டான்  .அநியாயம் தொடர்ந்துக்கிட்டிருக்கு.ம்ம்ம்…” பெருமூச்சோடு நிறுத்தினாள் அந்த அம்மா.

இவையெல்லாம் ஏற்கெனவே அறிந்த விபரங்கள் தான் .இருப்பினும் உள்ளூர் ஆட்கள் கூற கேட்பது விபரங்களை உறுதிப் படுத்துவது போல் இல்லையா…எனவே  அலட்சியம் போல் காட்டியபடி அனைத்து விபரங்களையும் கிரகித்துக் கொண்டாள் .

” ஏன்மா அந்த ஆள் …அதுதான் அந்த பெரியவரோட பையன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம்… “

” அட பெண்ணே உனக்கே எல்லா விபரமும் தெரிந்திருக்ககே…அப்படித்தான் .. அவனுக்கு வீட்டுக்குள்ள வெளியில , போற இடம்,  வர்ற இடம் திரும்புற எடமெல்லாம் பொண்ணுங்க இருக்கனும் …

அதென்னமோ இந்த பொண்ணுங்களும் அப்படித்தான் அவன்கிட்ட போய் விழுந்தாங்க …அப்படி வராத பொண்ணுங்களையும் ஏதாவது பண்ணி இவன் பக்கம் இழுத்துக்கிடுவான் .

இப்படித்தான் ஒரு பொண்ணு .சென்னை பொண்ணு .எப்படியோ இவன் வசப்படுத்தி இழுத்திட்டு வந்திட்டான்.இரண்டு பேருக்குள்ளே என்ன தகராறோ இவன் ..அவளை கடைசியில் …”

இது அவளுக்கு மிக தேவையான தகவல் .ஆவலாக காதை தீட்டிக் கொண்டிருந்த போது, பாதியில் நின்றது பேச்சு…

பஸ் அப்போது ஒரு நிறுத்தத்தில் ் நின்று கொண்டிருந்த்து.அங்கே ஒரே சலசலப்பு .நீங்க போங்க ..ஏறுங்க….உட்காருங்க..என்பதான உபசார குரல்கள் …

” திரும்பாதம்மா…நான் சொல்வதை நல்லா கேட்டுட்டு ..அப்புறமா மெல்ல திரும்பி பார் .இப்போ பஸ்ஸில் ஏறியிருக்கிறாளே ஒரு பொண்ணு…அவதான் அந்த பையனோட வைப்பு…,” என்றாள்.

” என்னது …” என்றாள் முதலில் புரியாமல் …

” அட என்னம்மா புரியலையா ? அந்த பையனோட செட்டப் …கீப்புன்னு சொல்வீங்களே..அதான் .அங்கே தோப்புக்குள்ளாற வீடு கட்டிக் கொடுத்து வச்சிக்கிட்டிருக்கான் .இரண்டு பேருக்கும் பிள்ளை கூட இருக்கு.்”

இது அவளுக்கு புது தகவல் .உடனடியாக திரும்பி பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தாள் அவள் .

ஏனோ ஒரு கசப்பு மருந்து தொண்டையில் இறங்கி நெஞ்சமெங்கும் பரவியது.




What’s your Reaction?
+1
20
+1
10
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!