Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம் -1

1

நிருத்தமாய் தான் ஆடிய அபிநயத்தை இம்மி பிசகாமல் கடைப்பிடித்து பரதமாடிய ப்ரீத்தாவை ஆவலாய் பார்த்தாள் வைசாலி.நான்கே வயது குழந்தை…எவ்வளவு ஆர்வமாக பயில்கிறாள்!

குழந்தையின் இந்த ஆர்வத்திற்காகத் தான் இவர்கள் வீடு தேடி வந்து பரதம் கற்றுக் கொடுக்க சம்மதித்தாள் வைசாலி.

இல்லையென்றால் சொற்ப மாணவர்களை வைத்து வீட்டின் மொட்டை மாடியில் அவள் நடத்தும் நடனப்பள்ளிக்கு கொண்டு வந்து விடச் சொல்லியிருப்பாள்.

 ஆனால் இந்த பெரிய பணக்கார வீட்டினருக்கு அவ்வாறு அவள் வீடு தேடி வந்து தங்கள் குழந்தையை நடனம் பயில விடுவதற்கு ஆட்சேபம் இருந்தது. பத்து மாணவர்களுக்கு சேர்த்து மொத்தமாக வைசாலி ஒரு மாதத்திற்கு வாங்கும் ஊதியத்தை இந்த குட்டிப் பெண் ப்ரீத்தாவிற்கு மட்டுமே தருவதாக சொல்லி இவளை இங்கே வர வைத்திருந்தனர்.

 என்னுடைய கலை விற்பதற்கு அல்ல என்று மனம் முணுமுணுத்தாலும் அம்மாவிற்கு தெரிந்தவர் வீட்டு குழந்தை என்பதில் மறுக்க முடியாமல் இங்கே வர துவங்கினாள்.

 நடனம் வைசாலியின் ஆத்ம திருப்திக்காக பயின்று கொண்டது. தனக்காக மட்டுமே பயின்று கொண்டாளே ஒழிய அதனை காட்சிப்படுத்தவோ வியாபாரமாக்கவோ என்றுமே அவள் எண்ணியதில்லை. மாத வருமானத்திற்கான வேலை வேறு இருந்தாலும் இந்த நடனத்தை தினமும் சற்று நேரமாவது ஆடி பார்க்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.

 அவளது ஆட்டத் திறமையை பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓரிருவர் தங்கள் குழந்தைக்கு நடனம் சொல்லிக் கொடுக்குமாறு வேண்ட மறுக்க முடியாமல் முதலில் ஆரம்பித்தது,இதோ இந்த வசதி படைத்த வீட்டிற்கு நேரில் வந்து சொல்லிக் கொடுக்க வைத்திருந்தது. 

“எப்படி மிஸ் நல்லா ஆடினேனா?” லேசான மூச்சிரைப்புடன் ஓடி வந்து அவள் முன் நின்று அண்ணாந்து பார்த்து கேட்ட பிரீத்தாவை குனிந்து கன்னத்தில் முத்தமிடும் ஆவலை சிரமத்துடன் அடக்கி கொண்டாள். 

முன்பொருமுறை அப்படி அவள் பட்டு கன்னத்தில் லேசாக இதழ் பதித்து  நிமிர்ந்த போது குழந்தையின் அம்மா ரஞ்சனி முகம் சிறுத்து இருந்தது. “போய் முகத்தை நன்றாக கழுவு” மகளை அனுப்பியவள் பாராட்டுதலை வாயில் வார்த்தையாக சொன்னால் போதும் என்றாள் இவளிடம்.

 அதென்னவோ ரஞ்சனிக்கு ஆரம்பத்திலிருந்தே இவளை பிடிக்கவில்லை. அதன் காரணம் இங்கே கற்றுக் கொடுக்க வந்த இரண்டு மாதங்களில் இப்போதுதான் கொஞ்சம் வைசாலிக்கு புரிவது போலிருந்தது.

“ஆறு மாதங்களில் அரங்கேற்றம் வைத்து விடலாமா?” ரஞ்சனி ஆவலுடன் கேட்டாள்.




” சின்ன பிள்ளைதானே மேடம்! ஒரு வருடத்திற்கு மேல் போகட்டும்” 

ரஞ்சனியின் முகம் கறுத்தது. அவளுக்கு சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டத்திற்கிடையே மகளின் நடனத் திறமையை பெருமையாக மேடையேற்ற வேண்டும். பாவம் நிறைய வீடுகளில் இப்படித்தான் பெற்றோர்களின் ஆசைக்கும் வேகத்திற்குமிடையே திண்டாடி தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் பிள்ளைகள்.

இங்கே பரவாயில்லை பிரீத்தாவிற்கு நடனத்தில் ஆர்வம் இருக்கிறது.

” நான் கிளம்புகிறேன் மேடம்,வந்து… டிரஸ் சேஞ்ச்…”

 ரஞ்சனி லேசாக முகம் சுளித்தபடி பக்கத்து அறையை காட்டினாள். காலை எட்டு மணிக்கு நடனம் சொல்லிக் கொடுக்க இங்கே வரும் வைசாலி சுடிதாரில் இருப்பாள். அவளது அலுவலக உடை பேன்ட் ,ஷர்ட்.இங்கிருந்துதான் அலுவலக உடையை மாற்றிக் கொண்டு சென்றாக வேண்டும்.

 இந்த உடைமாற்றும் படலம் ரஞ்சனிக்கு சுத்தமாக பிடிப்பதில்லை, என்று தெரிந்தாலும் வைசாலிக்கு வேறு வழி இருக்கவில்லை. அறைக்கதவை மூடிக்கொண்டு  சுடிதாரில் இருந்து பேன்ட் சட்டைக்கு மாறினாள். நீளமான முடியை சுருட்டி கொண்டையாக்கிக் கொண்டவள், பெரிய மெருன் கலர் பொட்டை எடுத்துவிட்டு குட்டி கறுப்பு பொட்டை நெற்றிக்கு மத்தியில் ஒட்டினாள்.

 “அடடா வரும்போது டிரடிஷ்னல், போகும் போது வெஸ்டனா?” என்று கேட்டபடி வந்து நின்ற கிரிதரன் ரஞ்சனியின் கணவன். அவன் முகத்தில் டன் டன்னாய் ஜொள் வடிந்தது.

 நீ இப்படி இருந்தால் உன் மனைவி என்னை கண்டாலே காயத்தானே செய்வாள்… மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் ஒரு வார்த்தை பதில் கூட அவனுக்கு சொல்லாமல் அகன்றாள். அவளுக்கு தெரியும் எங்காவது ஓரிடத்தில் நின்று ரஞ்சனி இவளை கவனித்துக் கொண்டுதான் இருப்பாள். வைசாலி வீட்டிற்குள் இருக்கும் வரை ரஞ்சனி தன் நிலையிலேயே இருப்பதில்லை. 

பாவம்! ரஞ்சனிக்காக பரிதாபப்பட்டபடி தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு,நகரின் மையத்தில் புதிதாக ஆரம்பித்திருக்கும் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமை அடைந்தாள்.

இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன நிறுவனத்தில் அவள் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிகிறாள். தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தனியாக ஷோரூம் ஆரம்பித்திருந்த நிறுவனம் அதன் முழு பொறுப்பையும் வைசாலியிடம் ஒப்படைத்திருந்தது.

 கடந்த ஆறு மாதங்களாக இந்த புதிய வேலையில் மிக நல்ல ஊதியத்தை பெற்று வந்தாள் வைசாலி. ஸ்கூட்டரை ஷோரூம் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை கடுகடு முகத்துடன் எதிர்கொண்டான் சங்கரன். இருவரும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கின்றனர்.

 இந்த ஸ்பெஷல் ஷோரூம் முழுவதும் தன்னுடைய வசமே ஒப்படைக்கப்படும் என்ற அசையாத நம்பிக்கையில் இருந்தவன் ஹெட் ஆஃபீஸிலிருந்து அந்த வேலையை வைசாலிக்கு கொடுக்க அன்று முதல் இவள் மீது மறைமுகமாக வஞ்சம் வைத்துக் கொண்டிருக்கிறான்.

 “ஏன் இவ்வளவு நேரம்? இந்த பெண்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் அது இப்படித்தான் இருக்குமென்று யாருக்கும் தெரியவில்லை பாரேன்” சிடுசிடுத்தான்.

 வைசாலி ஆச்சரியத்துடன் தனது மணிக்கட்டை திருப்பி பார்க்க ஐந்து நிமிடங்கள் லேட் என்றது கடிகாரம். “சரியான நேரத்தில்தானே வந்திருக்கிறேன்?”

“நாம எல்லாரும் இங்கே ஸ்டாப்ஸ்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னாலேயே வந்து காத்திருக்க வேண்டும். அதுவும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே மிக அதிக ஆதரவை இப்போது பெற்றிருக்கிறது. அதோ பாருங்கள் கஸ்டமர் காலையிலேயே வர ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நேரத்தில் நாம் முன்பே வந்திருக்க வேண்டாமா?”

 ஒருவகையில் இது உண்மைதான் என்பதால் வைசாலி  தலையசைத்துவிட்டு கேபின் கதவை திறந்து உள்ளே சென்று ஆபீஸ் கம்ப்யூட்டரில் தன் ஐடியை லாகின் செய்து அன்று வந்த மெயில் விவரங்களை செக் செய்ய ஆரம்பித்தாள். நகரின் மையத்தில் இருந்த ஷோரூம் ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களாக மிகவும் பிசியாகவே இருக்கிறது. சங்கரன் சொன்னது போல் இந்த காலை நேரமே ஸ்கூட்டரை பார்வையிட ஆட்கள் வந்துவிட்டனர்.

அவளுடைய போன் சிணுங்க எடுத்தவள் “வணக்கம் சார் இப்பொழுது ஸ்கூட்டரை பார்க்க வருகிறீர்களா?” என்று முன் தினம் தான் பேசி வைத்திருந்த கஸ்டமரிடம் பேச்சை தொடர்ந்தாள்.

” நான் இங்கே உங்கள் ஷோரூமில்தான்  இருக்கிறேன். உங்களை எப்போது பார்க்கலாம்?”

“இதோ வருகிறேன் சார்” எழுந்து வெளியே வந்தாள்.

 இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நால்வர் நின்றிருக்க நடுவில் நின்றிருந்தவன் முன்னால் வந்தான் “ஐ அம் சித்தார்த்” கை நீட்டினான்.




” ஐ அம் வைசாலி” என்றபடி அவனுக்கு கை கொடுத்தவள் மனதிற்குள் யோசனை. இவனை எங்கோ பார்த்திருக்கிறோமே! அவன் கண்களும் அவள் முகத்திலேயே இருந்தன.

அவர்கள் நால்வருக்கும் ஸ்கூட்டியை பற்றிய விவரங்களை விளக்கினாள். “முழு தொகையையும் நீங்கள் செலுத்தினால்தான் சார் பத்து நாட்களுக்குள் உங்களுக்கு வண்டி டெலிவரி செய்ய எங்களால் முடியும்” அவள் சொல்ல சித்தார்த்தின் புருவங்கள் உயர்ந்தன.

” என்ன மேடம் அவ்வளவு டிமாண்டா உங்கள் ஸ்கூட்டர்?”

” நிச்சயம் சார், தினமும் 300, 400 என்று பாக்கெட்டை தடவி பணம் எடுத்துக் கொடுத்து பெட்ரோல் போடும் அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே சார்ஜிங் செய்து விட்டு ஹாயாக ஒட்டிப் போகலாம். எங்க ஸ்கூட்டருக்கு இப்பொழுது மிகவும் கிறாக்கிதான்” அழகாக புன்னகைத்தாள்.

” நீங்கள் கலர் செலக்ட் செய்து  பணம் கட்டி விட்டீர்களானால் டெலிவரி உங்கள் வீட்டிற்கே கொடுத்து விடுவோம்”

 அவனுடன் வந்த மூவரும் எழுந்து போய் முன்னால் ஷோவாக நிறுத்தி இருந்த ஸ்கூட்டர்களின் கலரை பார்க்கத் துவங்க, அவன் பார்வை வைசாலியிடம் குவிந்திருந்தது.

” யார் அந்த ஆள்? எதற்காக உன்னிடம் கோபமாக  பேசினார் ?”மற்றொரு டேபிளில் அமர்ந்து வேறு ஒரு கஸ்டமருடன் பேசிக் கொண்டிருந்த சங்கரனை காட்டி கேட்டான்.

வைசாலி திடுக்கிட்டு அவனைப் பார்க்க அவன் முகம் மிக சாதாரணமாக ஒரு உறவினன் போல் அவளிடம் கேள்வி சுமந்திருந்தது.




What’s your Reaction?
+1
62
+1
29
+1
3
+1
1
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!