Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-8

( 8 )

மெல்லியதாக நீல வண்ண ஒளியை சிந்திக்கொண்டிருந்த விடிவிளக்கை வெறித்தபடி படுத்திருந்தாள் முகிலினி .இதழ்கள் இன்னும் கூட எரிந்து கொண்டுதான் இருந்தன .ஏனிப்படி நடந்தது .?….இது அவளது முதல் முத்தம் …இது இப்படியா ..ஒரு இருளில் என்ன நடக்கின்றதென்றே தெரியாத சூழ்நிலையில் …இவ்வளவு முரட்டுத்தனத்துடன் நிகழ வேண்டும் ?

இவ்வளவு கோபமா …என் மீது….? ஏன் …ஏன் …மிக அவமானமாக உணர்ந்தாள் முகிலினி .என் பெண்மையை யதுநந்தன் மதிக்கவில்லையே …அன்பாய் , ஆதரவாய் , ஆசையாய் நிகழ வேண்டிய முதல் இதழ் ஒற்றுதல் இப்படி வெறுப்பிலா ….?

” என்னடா என்ன ஆச்சு ? ” பின்னாலிருந்து பதறிய தாய்க்கு தன் முகத்தை காட்டாமல் திரும்பியபடி ” இல்லைம்மா கால் கொஞ்சம் ஸ்லிப் ஆயிடுச்சு …” என  பதிலுரைத்தாள்

” அடி எதுவும் படலியேம்மா” என்ற தாயின் கவலைக்கு பதிலாக ” அதெல்லாம் இல்லைம்மா …கொஞ்சம் டயர்டா இருக்கு .நான்போய் படுக்கிறேன் ” என்றுவிட்டு வந்து படுத்தவள்தான் இன்னும் அந்த விடிவிளக்கினை ஆராய்ந்து கொண்டிருக்கிறாள் .

மறுநாள் காலை தன்னை சந்திக்க யதுநந்தன் முயலலாமென எண்ணி  , தலை வலிப்பதாக சாக்கு கூறி வெளியே போகாமல் உள்ளேயே இருந்தாள் .குளித்து விட்டு மீண்டும் ஒரு நைட்டியையே அணிந்து கொண்டு படுத்துக்கொண்டாள் .

ஹாலில் அப்பாவும் , யதுநந்தனும் ஏதோ பேசும் சத்தம் லேசாக திறந்திருந்த கதவின் வழியாக மெல்லியதாக கேட்டது .அலுப்போடு கண்களை மூடிக்கொண்டாள் .யாரோ கதவை திறப்பது போல் உணர்ந்தாள் .அப்பாவோ …? அம்மாவோ …? …இல்லையென உள்ளுணர்வு சொன்னது .

இல்லை இப்போது இவனுடன் பேசமுடியாது .தூங்குவது போல் கண்களை இறுக மூடிக்கொண்டாள் .ஒருவேளை சாரி கேட்பானோ ? என்ற எண்ணம் மனதினுள் ஓடியது .அவளை பார்த்தபடி  சிறிது நேரம் நின்றான் .பிறகு ….

“, நேற்று நடந்ததற்கு முழு பொறுப்பும் உன்னுடையதே .இதில் வருத்தப்பட எனக்கு ஏதுமில்லை ” தெளிவாக எந்த பிசிறுமின்றி கூறிவிட்டு போய்விட்டான் .

எவ்வளவு திமிர் ….செய்வதையெல்லாம் செய்துவிட்டு என்ன பேச்சு பேசுகிறான் ..நான் காரணமாமே …இருக்கட்டும் இதற்கு பதிலளிக்க எனக்கும் ஒரு காலம் வரும் .ஆத்திரத்துடன் அருகிலிருந்த தலையணையை குத்தினாள் முகிலினி .

அரைமணி நேரத்தில் வேறு ஏதோ அரவம் .அம்மாவிடம் அவளை விசாரிக்கும் சத்தம் .இது…வைஷ்ணவி  ….அவசரமாக ….
எழுந்து வரும்முன் அம்மாவும் வைஷ்ணவியும் உள்ளேயே வந்துவிட்டனர்.

” பாப்பா உன் ப்ரெண்ட் வளர்மதிக்கு சின்ன ஆக்ஸிடென்டாம் .வைஷ்ணவி கூடவே நீயும்
போய்  பார்த்திட்டு வந்திடுறாயாடா ? ” என்றாள் சரஸ்வதி .

திகைத்து அம்மாவின் பின்னால் நின்று கொண்டிருந்த வைஷ்ணவியை நோக்கினாள் .அவள் சரின்னு சொல்லு என ஜாடை காட்டி ” ப்ளீஸ் …”, என கை குவித்தாள் .
“, சரிம்மா …” மனமின்றி அம்மாவிடம் சொல்லிவிட்டு வைஷ்ணவியை முறைத்தபடி கிளம்பினாள் முகிலினி .தயாராக ஆட்டோவுடனே வந்திருந்தாள் அவள் .ஆட்டோ அவர்கள் தெரு முனை திரும்பியதும் நறுக்கென்று வைஷ்ணவியின் கைகளில் கிள்ளினாள் முகிலினி .

“, ஏன்டி பொய் சொன்ன …? எவடி அந்த வளர்மதி ? ” என்றாள் .

” முகி ப்ளீஸ்டி …எனக்காக நீ ஒரு வேலை செய்யனும் .மறுக்கக்கூடாது .”

“, முதல்ல என்னவென்று சொல்லு .செய்யவா ? வேண்டாமான்னு பார்க்கிறேன் ..”, தன் அம்மாவிடம் பொய் சொல்லி அழைத்து வந்ததற்காக அவள் மேல் கோபமாக இருந்தாள் முகிலினி .

“, சொல்றேன்டி …ஆனால் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே ” .அவசரமாக பின்னால் திரும்பிப்பார்த்துக் கொண்டாள் .பின் முன்னால் திரும்பி ஆட்டோ டிரைவரிடம் ” அண்ணே கொஞ்சம் சீக்கிரமா போங்கண்ணே ப்ளீஸ் ” என்றாள் .

” எங்கேடி போகிறாம் …?”

” சொல்றேன் …கொஞ்சம் பொறு “, என்று வைஷ்ணவி கூட்டிச்சென்ற இடம் ரிஜிஸ்டர் ஆபிஸ் .

ஆட்டோவில் இருந்து இறங்கி இடத்தை பார்த்ததும் அதிர்ந்தாள்  முகிலினி” அடிப்பாவி இங்கே ஏன்டி கூட்டி வந்தாய் ? ” என்றாள் .

” உள்ளே வாடி ப்ளீஸ்டி …” முகிலினியின் கைகளை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள் .

” ஏய் வைஷூ …நீ தவறான முடிவெடுத்திருக்கின்றாய் .என்ன விசயமென்றாலும் நாம் கொஞ்சம் உட்கார்ந்து பேசலாம் .பிறகு ….” என்றவளின் குரல் பாதியில் நின்றது .பின்னால் கேட்ட குரலினால் .

“நீ. எங்கே. இங்கே வந்தாய் ?” என்ற கேள்வியுடன் பின்னால் வந்து நின்றது யதுநந்தனேதான் .

திக்பிரமை பிடித்து நின்றாள் முகிலினி .முருகா …இவர் இங்கே இருக்கிறார் என்றால் …அப்படியென்றால் …ஐயோ …என்ன நடக்கிறது இங்கே …லேசாக தலை சுழல இது உண்மையா என்பது போல் அவனை வெறித்தாள் முகிலினி .

வினாடியில் அவள் மன ஓட்டங்களை புரிந்து கொண்ட யதுநந்தன் முகம் கடுத்தது .

” வைஷ்ணவி என்ன இது ? இவளையும் என்னை மாதிரியே பொய் சொல்லித்தான் கூட்டிட்டு வந்தீர்களா ? “சீறினான் .

” ஆ…ஆமாம் …சார் …ஆனால் சார் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை .இதற்கு வேறு யாரையும் கூப்பிட முடியாது சார் .நீங்கள் இருவருமென்றால் நம்பிக்கையானவர்கள் .அதனால்தான் சார்…ப்ளீஸ் ….” இறைஞ்சுதலுடன் ஒலித்தன இரண்டு குரல்கள் .

ஆம் இரு குரல்கள்தான் …அந்த மற்றொரு குரலுக்கு சொந்தக்காரனை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் முகிலினி .




அவன் யதுநந்தனின் பின்புறம் நின்று கொண்டிருந்திருக்கிறான்.முதலில் நந்தனின் உயரம் காரணமாக தெரியாமல் மறைந்திருந்த அந்த நபர் முகிலினிக்கு தெரிந்தவன்தான் .

அவர்கள் கல்லூரி லேப் அஸிஸ்டென்ட் பாலமுருகன் .இவனா …இவனையா வைஷ்ணவி விரும்புகிறாள் ? …ஒழுங்கற்று ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்த பல புதிர்கள் அதனதன் இடத்தில் பொருந்திக்கொள்ள தெளிவான உருவம் ஒன்று உருவாக தொடங்கியது முகிலினி மனதில் .

” இல்லை இது தப்பு..நீங்க கிளம்புங்க…வாங்க உங்க இரண்டு பேர் வீட்டிலும் நானே பேசுறேன் ” என்றான் யதுநந்தன் .

” ஐயைய்யோ சார் வேண்டாம் ….சார் …என் அண்ணனுக்கு மட்டும் தெரிந்தது எங்க இரண்டு பேரையும் வெட்டிப்போட்டுட்டுதான் வேறு வேலையே பார்ப்பான் ” அழுதாள் வைஷ்ணவி.

“,  ஆமாம் சார் என்னோட ஜாதி அவுங்களுக்கு வெறியை ஏற்படுத்தும் .ஏற்கனவே சந்தேகம் வந்ததால்தான் இவளுக்கு அவசரமாக கல்யாண ஏற்பாட்டை முடித்து விட்டார்கள். நாங்களும் முன்னெச்சரிக்கையாக இங்கே
பதிவு பண்ணி வைத்திருந்ததால் இன்று கல்யாணத்தை முடித்து விடலாமென எண்ணி வந்தோம் .

சாட்சிக்கு ஆள் வேண்டுமென்பதால்தான் …உங்கள் இருவரையும் தொந்தரவு பண்ண வேண்டியதாகிவிட்டது.இப்போது கூட எந்த நேரமும் அவர்கள் வந்து விடுவார்களோ என்ற பயம் இருக்கின்றது .அதனால் தயவு செய்து சீக்கிரமாக வாருங்கள் சார் “

கை கூப்பி வேண்டினார்கள் இருவரும் .முகத்தில் சிறு இளக்கமுமின்றி யதுநந்தன் நிற்பதை காணவும் ” சார் நான் தாழ்ந்த ஜாதிக்காரன் சார் …கண்டிப்பாக இதனால் பெரிய பிரச்சினைகள் வரும் சார் …” வேண்டிய பாலமுருகன் திடீரென அவர்கள் கால்களில் விழ முகிலினி துள்ளி யதுநந்தன் பின்னால் சென்று நின்று கொண்டாள் .

பாலமுருகனுடன் சேர்ந்து கால்களில் விழுந்த வைஷ்ணவியை ” என்ன இது நாடகம் …போல் …இதற்கெல்லாம் நான் மசிய  மாட்டேன் .எழுந்திருங்க முதலில் ” கோபத்துடன் குரல் உயர்த்திய யதுநந்தனின் சட்டையை பின்புறம் பற்றி இழுத்தாள் முகிலினி .

” யது அவுங்க சொல்றது சரிதான் .இந்த ஜாதி பிரச்சினை இவர்களை ஒன்று சேர விடாது …” என்றாள் சிறு கவலையுடன் .

முகிலினியின் வார்த்தைகளை கேட்டதும் தன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு புருவம் சுருக்கி யோசித்தான் யதுநந்தன் .

இப்போது யதுநந்தனின் நெகிழ்ச்சி மையம் வைஷ்ணவிக்கு புரிபட்டு விட , வேகமாக எழுந்து முகிலினியின் கைகளை பற்றி ” முகி ப்ளீஸ் சார்கிட்ட சொல்லுப்பா ” என கேட்க ஆரம்பித்தாள் .

தன்னை திரும்பி கேள்வி கேட்ட  யதுநந்தனின் பார்வை வினாவிற்கு விழி பதில் அளித்தாள் முகிலினி .அரைகுறை மனதுடன் யதுநந்தன்  திருமணபதிவு அலுவலகத்தினுள் வந்தான் .

அங்கே உள்ள விதிப்படி எல்லா விவரங்களையும் செய்து முடித்துவிட்டு , தயாராக வாங்கி வந்திருந்த மாலைகளை மாற்றி தாலி கட்டிக்கொண்டு தம்பதிகளானார்கள் பாலமுருகனும் , வைஷ்ணவியும் .சாட்சிக்கையெழுத்தை யதுநந்தனும் முகிலினியும் போட்டார்கள் .

குனிந்து கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த வைஷ்ணவியை ஆச்சரியமாக பார்த்தாள் முகிலினி .தொடர்ந்து அவளருகில் கணவனென்ற உரிமையோடு தோள் உரசி நின்ற பாலமுருகனையும் .

என்ன பொருத்தம் இருக்கிறது இருவருக்குள்ளும் ? அடுப்புகரியாய் அவனும் , தங்கத்தட்டாய் அவளும் …சதுரங்க கட்டங்கள் போல் கறுப்பும் , வெள்ளையுமாக …எதை வைத்து வந்திருக்கும் இந்த காதல் ?.

வைஷ்ணவியை பற்றி முகிலினிக்கு தெரியும் .அவள் அழகை ரசிப்பவள் .இதோ இந்த பாலமுருகனிடம் என்ன அழகை கண்டிருப்பாள் அவள் ? இவருக்கு ஒரு பல் கூட கொஞ்சம் தெற்றுப்பல் போல் தெரிகிறதே …எப்படி …இவனை போய் …அதுவும் வேற்று ஜாதிக்காரனை ….காதலுக்கு கண்ணில்லை என்று இதை வைத்துதான் சொல்லியிருப்பார்களோ ?…என்று எண்ணி குழம்பிக்கொண்டிருந்தாள் .

சிறு யோசனையுடன் கூடிய யதுநந்தனின் பார்வையை சந்தித்தாள் .என்ன என்றாள் சைகையில் …அவளருகில் ஒட்டி வந்து நின்றவன் குனிந்து ரகசியமாக ” உங்கள் வீட்டில் கூட இதுபோல் மிக தீவிரமாக ஜாதி பார்ப்பார்களா ? ” எனக்கேட்டான் .

எதற்கு திடீரென இப்படி கேட்கிறான் என யோசித்தபடி ஆமாம் என தலையசைத்தவளுக்கு சட்டென  உறைத்தது இவன் …யதுநந்தன் என்ன ஜாதி ..? தன் ஜாதியா …?…அவனது நடவடிக்கைகளை , செயல்பாடுகளை மெல்ல மனதிற்குள் ஆராய்ந்தபோது கிடைத்த எதிர்மறை பதிலால் கலவர பந்து ஒன்று அவள் நெஞ்சுக்குள் உருள தொடங்கியது .

நால்வருமாக வெளியே வரும்போது சர்…சர்ரென இரண்டு ஆட்டோக்கள் சடன் ப்ரேக் போட்டபடி அங்கே வந்து நின்றன .அவர்கள் மூவரையும் உள்ளே தள்ளி விட்டு தானும் மறைந்திருந்து கவனித்தான் யதுநந்தன் .வந்தது வைஷ்ணவியின் சொந்தக்காரர்கள்தான் .நடுநாயகமாக வைஷ்ணவியின் அண்ணன் மிகவும் ரௌத்திரமாக …கையை சட்டைக்குள் மறைத்தபடி ( கத்தியோ ?…துப்பாக்கியோ …? ) கூட வந்தவர்களுக்கு ஏதோ உத்தரவிட்டுக்கொண்டிருந்தான்.

பாலமுருகனும் , வைஷ்ணவியும் பதற தொடங்கினார்கள் .சிறிது யோசித்த யதுநந்தன் அவர்கள் இருவரின் கைகளையும் பற்றி அந்த அலுவலகத்தின் பின்புறம் இழுத்து போனான் .பின்வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் அவர்களை ஏற்றியவன் பேனாவை எடுத்து  ஒரு தாளில் எதையோ எழுதி பாலமுருகன் கைகளில் திணித்தான்.

சட்டைப்பைக்குள் கை விட்டு சில ருபாய் நோட்டுக்களையும்  எடுத்து “என்னிடம் இருக்கு சார் ” என்ற பாலமுருகனை காதில் வாங்காமல் அவன் சட்டைப்பையில் வைத்துவிட்டு ” இந்த முகவரிக்கு போங்க அங்கே உங்களுக்கு உதவி கிடைக்கும் ” என்று அனுப்பினான் .

முகிலினியின் கைகளை பிடித்தபடி மற்றொரு ஆட்டோவை அழைத்தான் .
” இல்லை அவுங்கல்லாம் ரொம்ப கோபமாக தெரிகிறார்கள் .உங்களை தனியாக விட்டுட்டு நான் மட்டும் போக மாட்டேன் ” தன் கைகளை அழுத்தமாக பற்றிய முகிலினியை உதறி, ஆட்டோவினுள் ஏற்றினான் .

” என்னை காப்பாற்ற எனக்கு தெரியும் .நான் போலீசிற்கு போன் போடப்போகிறேன் .அவர்கள் வரும்போது நீ இங்கே இருக்க வேண்டாம் .எப்போதாவது என்னையும் கொஞ்சம் நம்பலாம் ” பற்களை கடித்தபடி கூறினான் .

ஆட்டோ டிரைவரிடம் திரும்பி ” அண்ணே உங்கள் நம்பர் கொடுங்கண்ணே .எனக்கு திரும்ப ஆட்டோ வேண்டியிருக்கும் ” என கேட்டு வாங்கி தன் மொபைலிலிருந்து அழைத்து உறுதிப்படுத்திக்கொண்டான் .ஓரக்கண்களால் ஆட்டோ நம்பரை கவனித்துவிட்டு அவரிடம் விலாசம் சொல்லி முகிலினியை அனுப்பினான் .

அந்த ஆட்டோவில் வந்த கூட்டம் பதிவு அலுவலகத்தினுள் விசாரித்து விட்டு பின் வாயிலை நோக்கி வரும்போது , ”  ஐந்து நிமிடங்களில் வந்துவிடுகிறீர்களா ?”,என்று தனது போனிலிருந்து போலீசாரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

முகிலினி வீட்டின் படியேறுகையில் வீட்டு போன் ஒலித்தது .போனை எடுத்து ஹலோ என்றாள் .” வந்துவிட் டாயா ? ஓ.கே …” என போனை வைத்தான் யதுநந்தன் .

அவளுக்காகத்தான் போன் போட்டிருக்கிறான் .அவள் பத்திரத்திற்காக .உள்ளம் நெகிழ்ந்தது முகிலினிக்கு .வைஷ்ணவியின் விசயம் வேறு தெளிவானதில் மிக சந்தோசமாக இருந்தாள் .

அந்த வளர்மதியின் விபத்து விசயத்தை  அம்மாவிடம் சமாளித்து விட்டு பின்புற தோட்டத்தில் வந்து நின்றாள் முகிலினி .அவளது மனக்குளிர்ச்சி அறிந்தது போல் வானமும் பொழிய ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தது .

சொட்டு சொட்டாக விழுந்த மழைத்துளிகளை முகத்தில் வாங்கி சிலிர்த்தாள் .உடலை ஊடுறுவி நடுங்க செய்தது குளிர்காற்று .

வெண்மை புகையொன்று படர்ந்து பரவி நிற்க
தொடங்கி விட்ட குளிர் கால அறிவிப்பை காதருகில் ஓதி பறந்ததோர் பறவை
நாசி வெளியேற்றும் மூச்சிலும் குறைந்த வெப்பம்
கதிர்களுக்கான கவலையிலிருக்க
வெப்ப விதைகளுக்கான செடிகளை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்
கம்பளி இருட்டுக்குள் ஒளிர்கின்றன
உன் நினைவு நட்சத்திரங்கள்
மூக்கு நீண்ட அப் பறவையிடம்
உன் பேர் சொல்ல
உடல் சிலிர்த்து வானமடைகிறது
என் குளிர் கால அனுபவங்களை
சுமந்து கொண்டு
மெல்ல கலைகின்றன மேகங்கள் .




மழையின் குளிரோடு தன் காதல் கலந்து கவிதை வடித்தாள் .ஆண்மையும் , கம்பீரமும் , காதலும் ஒருங்கே கலந்த ஆண்மகன் தன் காதலன் …பெருமையாக எண்ணிக்கொண்டாள் .தன் மன ஏட்டில் அவனை எழுத ஆசையுடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள் .

அன்றொருநாள் அவன் மறைத்து வைத்து எடுத்து சென்ற துப்பாக்கியும் , இப்போது எழுந்துள்ள ஜாதி பிரச்சினையும் அவள் உள்ளத்தின் ஓரம் உறுத்தாமலில்லை .ஆனால் என்னவாக இருந்தாலும் தன்னவன்  பார்த்துக்கொள்வான் என்றோர் நம்பிக்கை செடி புதிதாக உள்ளத்தில் தளிர் விட்டிருந்தது .

முகிலினியின் ஆவலை அறிந்தானோ , இல்லையோ யதுநந்தன் அதன் பிறகு அவள் கண்ணில் படவேயில்லை.அடுத்த ஒரு வாரத்தில் முகிலினிக்கும் கல்லூரி இறுதித்தேர்வு தொடங்கிவிட அவளும் படிப்பில் ஆழ்ந்துவிட்டாள் .

இடையிடையே வைஷ்ணவியை பற்றிய கவலை எழும் .அவளது நான்கு வருட படிப்பு வீணாகி விட்டதே என வருந்துவாள் .

அன்று ஒரு தேர்வை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் .அந்த தெருவை அடைத்தபடி அவள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தது ஒரு வெளிநாட்டு கார் .யாராகயிருக்கும் யோசனையுடன் உள்ளே நுழைந்தாள் .

மாடியிலிருந்து இறங்கி வந்தார் ஒரு பெரியவர் .அறுபதிலிருந்து அறுபத்தைந்து வயதிற்குள் இருக்கும் .முன் மண்டை முடிகளை உதிர்த்திருக்க பளபள வெண்ணிறத்துடன் இருந்தது.மிக மிக உயரிய கனவான் போன்ற உடையமைப்பு .அழகான கைத்தடி கைகளில் .எல்லாவற்றையும் விட முகிலினியை குத்தியது அந்த பார்வை .

ஆம் உண்மையிலேயே அவரது பார்வை முகிலினியை குத்திக்கொண்டுதான் இருந்தது .
அவளைக்கண்டதுமே கைத்தடியை அழுத்தமாக அவர் கைகள் தரையில்  ஊனுவதை அவளால் உணர முடிந்தது .இவர்….இவர் …ஒருவேளை யதுநந்தனின் தந்தையோ ? ஆனால் அப்படி தெரியவில்லையே என யோசித்தபடி அவரை நோக்கினாள் .

” நீதான் முகிலினியா ?” கேட்டார் .இன்னாரென அறியக்கேட்ட கேள்விதான் .பெரியவர்தான் …பதிலளிப்பதில் தவறில்லை .ஆனால் குரலில் இவ்வளவு இகழ்ச்சி ஏன் ? கண்களில் தென்படும் அந்த அலட்சியமும் , அவமதிப்பும் …ஏன் …? இப்படி யாரென கேட்பவருக்கு பதிலளிக்கும் தேவை அவளுக்கென்ன இருக்கிறது .

மௌனமாக கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவரையே பார்த்தாள் முகிலினி .அந்த பார்வை அவரை தூண்டிவிட ,ஒரு வேகத்தை குரலில் கலந்து ” இந்தா பொண்ணு நான் கேட்டது உனக்கு காதில் விழலியா ? “அதட்டலாக வந்தது குரல் .
இந்தா வா ….இவரை ….முகிலினியும் ஏதாவது சொல்லியிருப்பாள் .அதற்குள் மேலிருந்து தடதடவென இறங்கி வந்தான் யதுநந்தன் .

” அங்கிள் இதுதான் முகிலினி .
முகிலினி இது என்னோட அங்கிள் .இப்போ கிளம்பிட்டார் “என்ற அவசர அறிமுகத்துடன்  அவர் கைகளை பிடித்து இழுத்தபடி காருக்கு நடந்தான் .திரும்பி அவளை முறைத்தபடி நடந்தார் அந்த அங்கிள் .

ஏதேதோ அவருடன் வாதித்தபடி அவருடன் காரிலேறி போய்விட்டான் .புரியாமல் நின்றாள் முகிலினி .

அன்று இரவு வெகுநேரம் யதுநந்தனும் , தமிழ்செல்வனும் அலுவலக அறையினுள் இருந்தனர் .தேர்வுக்காக அதிக நேரம் கண்விழித்து படித்துக்கொண்டிருந்தாள் முகிலினி .திடீரென தந்தையின் அறையிலிருந்து ஏதோ வாக்குவாதம் போல் கேட்க தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் .




ஆமாம் …வாக்குவாதம்தான் …அவள் அப்பாவிற்கும் , யதுநந்தனுக்கும் .தெளிவாக புரியவில்லை அவர்கள் குரல்கள் .ஆனால் தீவிரமான தர்க்கம் என்பது புரிந்தது .நெஞ்சில் சிறிது கலவரம் மூள மெல்ல கதவை தட்டினாள் முகிலினி.

பேச்சை நிறுத்தி விட்ட இருவரும் அவளை கேள்வியுடன் பார்க்க “, ஏதோ சத்தம் கேட்டது .அதான் என்னன்னு ….” கவலையுடன் அவர்களை பார்த்தாள் .

” ஒன்றுமில்லைடா …இது எங்கள் வேலை சம்பந்தப்பட்டது ” கலங்கி நின்ற மகளுக்கு ஆறுதல் அளித்தார் தந்தை .

” இங்கே பாருங்கள் சார் இனிமேல் என் விசயத்தில் நீங்கள் தலையிடுவதை நான் சிறிதும் விரும்பவில்லை .நான் இரண்டு நாட்களில் என் ஊருக்கு கிளம்ப போகிறேன் .இன்றோடு நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள் ” உறுதியாக அறிவித்து விட்டு மாடியேறினான் யதுநந்தன் .

என்னது …ஊருக்கு போகிறானா ?…எந்த ஊருக்கு ? ….ஏன் …? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே ?தவிப்புடன் அவன் போன திசையை பார்த்தபடி நின்றவள் திரும்பி தந்தையை பார்த்த போது திகைத்தாள் .

சொல்லொணா வேதனையை சுமந்திருந்தது அவர் முகம் .அந்த நிமிடம் யதுநந்தனை மறந்துவிட்டு தந்தையை நெருங்கினாள் முகிலினி .
” அப்பா …என்னப்பா …? ” ஆதரவாக அவர் தோள் பற்றினாள் .

“, ஒண்ணுமில்லடா …வா …நாம் போய் படுக்கலாம் .” அலுவலக அறையை விட்டு வந்தவர் , படுக்க படுக்கையறையினுள் செல்லாமல் ஏதோ யோசனையுடன் ஹால் சோபாவில் அமர்ந்து விட்டார் .

அவரருகில் சோபாவில் அமர்ந்த முகிலினி மெல்ல அவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள்

” கவலைப்படாதீங்கப்பா எல்லாம் நல்லபடியாக நடக்கும் ” தந்தையின் பிரச்சினை தெரியாமலேயே ஆதரவு சொன்னாள் மகள் .

” நடக்கனுன்டா …நல்லதுதான் நடக்கனும் …இல்லைன்னா கடவுள்னு ஒருத்தன் இல்லைன்னுதான் அர்த்தமாகும் ” என்றார் .ஏனோ அன்று தந்தையை விட்டு பிரிய மனமில்லை முகிலினிக்கு .

தன்னை நிமிர்ந்து பார்த்த மகளின் கன்னத்தில் தட்டியவர் ” உனக்கு நாளைதானே கடைசி தேர்வு ? போய் தூங்குடா .அப்பா பத்து நிமிடங்களில் படுத்து விடுவேன் ” என்றார் .

அப்பாவின் கேள்விக்கு ஆமோதித்தபடி அப்பாவை கண்களில் நிரப்பிக்கொண்டு காரணம் புரியா வேதனையுடன் படுக்க சென்றாள் முகிலினி .

மறுநாள் காலை யதுநந்தனை சந்திக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.அப்பாவும் அவசரமாக எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தார்.இவற்றோடு   அவளது பரீட்சை டென்சன் வேறு முகிலினிக்கு .

இருக்கட்டும் இந்த டென்சனை முதலில் இறக்கி வைத்துவிட்டு வந்து இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டும் .முதலில் இந்த அப்பாவை பிடிக்க வேண்டும் .

எனக்கு தெரியாது யதுநந்தனை பற்றிய விபரங்கள் முழுவதும் எனக்கு தெரியத்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க வேண்டியதுதான் .தான் அப்படி பிடிவாதம் பிடிக்கும்போது அப்பா செய்வதறியாது விழிப்பதை மனதிற்குள் ரசித்தபடி கல்லூரிக்கு கிளம்பினாள் முகிலினி .

ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவள் தந்தை அவளுக்கு தரப்போவதில்லை என்பதனை அவள் பாவம் அப்போது அறிந்திருக்கவில்லை .




What’s your Reaction?
+1
24
+1
17
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!