Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-14

( 14 )

மனைவியின் உடலில் மெல்லிய நடுக்கம் உணர்ந்த யதுநந்தன் அவளை மேலும் நெருக்கி அணைத்தபடி ” முகில் …நானிருக்கிறேன் ” என அவள்புறம் சாய்ந்து கிசுகிசுத்தான் .

அந்த வீட்டின் புது மருமகளை பார்க்க வேலையாட்கள் ஒவ்வொரு
வராக வர ஆரம்பித்தனர் .அருகில் வந்து பார்க்கவில்லையெனினும் ஆங்காங்கே நின்றபடி அவர்கள் ஆவலாக பார்ப்பது  தெரிய இப்போது கணவனின் இந்த நெருக்கம் லேசான கூச்சம் தர சிறிது அவனிடமிருந்து விலகிக்கொண்டாள் முகிலினி .

கேள்வியாக நோக்கியவனிடம் தான் சமாளித்து கொண்டதாக ஜாடை காட்டி புன்னகைத்தாள் .மெச்சும் பார்வையுடன் மனைவியின் கை பற்றியபடி வீட்டு படியேறினான் கணவன் .

ஆரத்தி தட்டுடன் உள்ளிருந்து வந்தாள் இளம்பெண்ணொருத்தி .கிட்டத்தட்ட யதுநந்தன் வயதிருக்கலாம் .மிக அழகாக செதுக்கப்பட்ட சிற்பம் போலிருந்தாள் .புடவையை அவள் நேர்த்தியாக கட்டியிருந்த விதம் அவ்வாறு கோவில் சிற்பத்தை நினைவூட்டியது முகிலினிக்கு .முடிந்தால் இவ்வாறு புடவை கட்டும் விதத்தை பின்னால்  இவர்களிடம் கற்கவேண்டுமென எண்ணிக்கொண்டாள் முகிலினி .

” நந்து உனக்கு ஆரத்தி எடுத்ததுக்கு எனக்கு பெரிய அமௌன்ட் வேணும் ” என பேரம் பேசியபடி ஆலம் சுற்றினாள் .

” அதற்கென்ன நல்லா பெரியதாகவே வாங்கிக்கொள்” என்ற யதுநந்தன்
” முகில் இது என் அத்தை பெண் சௌம்யா .திருமணம் முடிந்து மும்பையில் இருக்கிறாள் .இப்போது சில நாட்கள் இங்கே அவள் அம்மாவுடன் தங்கி செல்ல வந்திருக்கிறாள் ” என அறிமுகம் செய்வித்தான் .

வணக்கம் என கை குவித்தாள் முகிலினி .கையிலிருந்த ஆரத்தி தட்டினை வேலைக்காரியின் கையில் கொடுத்து விட்டு ” என்ன நீ இப்படி நாடகத்தனமாக கை குவித்துக்கொண்டு …இந்த பார்மாலிட்டியெல்லாம் வேண்டாம் .” என முகிலினியின் கைகளை பிடித்தவள் அப்படியே அவளை மெல்ல அணைத்துக்கொண்டாள் .

பிறகு அவளை தன்னிடமிருந்து விலக்கி மேலும் கீழுமாக ஆராய்ந்தவள் ” நந்து நீ இருக்குமிடம் கூறாமல் ஒரேடியாக ஆறு மாதங்களாக  காணாமல் போன காரணம் இப்போது தெரிகிறது .உன் மனைவி எவ்வளவு அழகு ?.எனறவள் யதுநநதனின் கைகளை பிடித்து இழுத்து முகிலினியை உரசியபடி நிறுத்தி ” எவ்வளவு அழகான ஜோடி நீங்கள் ? என் கண்ணே பட்டுவிடும் “, என கைகளால் திருஷ்டி கழித்தாள் .

.சௌம்யாவின் கள்ளமற்ற வெளிப்படையான பாராட்டில் மகிழ்ந்திருந்தனர்  தம்பதிகள் .மனைவியின் அழகை விழுங்கும் பார்வையுடன் பார்த்திருந்தான் கணவன் . அப்போது ” ஐய்யோ அம்மா ….” என சத்தமாக ஒரு பெண்குரல் ஒலித்தது.

சௌம்யா கணவனையும் மனைவியையும் நெருக்கமாக நிறுத்தியிருக்க , யதுநந்தனின் முழங்கை , முகிலினியின் இடையை தொட்டிருந்தது .கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் யதுநந்தன் முழங்கைகயால் மனைவியின் இடை வருடியபடி இருந்தான் .கணவனின் வருடல் தந்த இன்ப அவஸ்தையை வெளிக்காட்ட முடியாமல் கன்னங்கள் சிவக்க நின்றிருந்தாள் முகிலினி .

ஆனால் அந்த குரல் ஒலித்ததும் மனைவியை மறந்து ” அத்தை …” என அழைத்தபடி வேகமாக குரல் வந்த திசையில் நகர்ந்தான் யதுநந்தன் .

” என்னாச்சும்மா ? ” என்ற குரலுடன் பின்னேயே சென்று விட்டிருந்தாள் சௌம்யா .ஒரு நிமிடம் தயங்கி நின்ற முகிலினி அவளும் அந்த முன்னறையை விட்டு மெல்ல உள்ளே நுழைந்தாள் .

அங்கே ஒரு ஐம்பது அல்லது ஒன்றிரண்டு அதிகம் வயது மதிக்க தக்க பெண்மணி .தடுமாறி கீழே விழுந்து விட்டாள் போலும் .அவளை தாங்கி நிறுத்தியபடி ” என்ன அவசரம் அத்தை ? அதுதான் நாங்களே வந்து கொண்டிருக்கிறோமே ” என உருகிக்கொண்டிருந்தான் யதுநந்தன் .

அப்படி ஒன்றும் தள்ளாத வயதில்லையே இந்த அம்மாவிற்கு .பின் ஏன் இவ்வாறு கீழே விழவேண்டும் ? என எண்ணினாள் முகிலினி .

” நந்து இன்று நீங்கள் இருவரும் வரப்போகிறீர்கள் என்றதும் அம்மாவின் கால் தரையிலேயே நிற்கவில்லை .அதை செய் …இதை செய் …என வேலைக்காரர்களை ஏவியபடி ஒரு இடத்தில் நிற்கவில்லை .வீடு முழுவதும் சுற்றிக்கொண்டேயிருந்தார்கள் .” என்றாள் சௌம்யா .பரிவுடன் தன் அன்னையின் கரங்களை வருடினாள் .

” நீங்கள் வருவீர்கள் நந்து .எனக்கு அதுவரை  பொறுமை இல்லையே .என் மகளை நான் பார்க்கும் ஆவல் என்னை அப்படி தள்ளிக்கொண்டு வந்துவிட்டது .எங்கே உன் மனைவி ? “, எனக்கேட்ட போது மீண்டும் தடுமாற்றம் அந்த அம்மாவிடம் .அத்தோடு கைகளும் காற்றில் அலைய இப்போது அந்த அம்மாவின் நிலைமை முகிலினிக்கு புரிந்துவிட்டது .




எல்லையில்லா பச்சாதாபம் நெஞ்சில் ஊற்றெடுக்க அலைந்த அவள் கைகளை தானே முன் நடந்து பற்றிக்கொண்டாள் முகிலினி .” வணக்கம்மா .நான் இதோ இருக்கிறேன் .” என அவள் கைகளை எடுத்து தன் தோள்களில் வைத்துக்கொண்டாள் .

தோள்களை தடவியபடி உயர்ந்து ஆவலுடன அவள் முகத்தை வருடின அந்த அம்மாவின் கைகள் .” வாம்மா நீ தேவதை போல்  இருப்பாயென எங்கள்  நந்து கூறியிருக்கிறான் .ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி .உன்னை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை .எனக்கு பார்வை கிடையாது ” என்றாள் வருத்தத்துடன் .

” அத்தை இப்படி உங்களை நீங்களே குறைவாக பேசக்கூடாது என்று கூறியிருக்கிறேனில்லையா ? ” என்றான் யதுநநதன் கண்டிப்புடன் .

” ஆமாம் நந்து ..ஏதோ ஞாபகத்தில் அப்படி பேசிவிட்டேன் .இனி இல்லையப்பா .இந்த தங்கத்தை கண்ணார காண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு .” என்றவள் முகிலினியிடம் திரும்பினாள் .

” கண்ணம்மா என் பெயர் சந்திரவதனா .நானும் நந்துவின் அண்ணன் மணிமாறனும் உடன் பிறந்தவர்கள் .என் அண்ணி காயத்ரி வயிற்றில் பிறந்து விட்டதால் நந்து என் மருமகனாகி போனானே தவிர மற்றபடி அவன் என் மகன்தான் ” என்றாள் .

” ஆமாம் முகில் என் அம்மா இல்லாத குறையை அத்தை மூலமாகத்தான் நான் போக்கி கொள்கிறேன் ” என்ற யதுநந்தன் ” பாட்டி எங்கே அத்தை ? “,எனக்கேட்டான் .

” அம்மா மாலை பூஜைக்காக கோவிலுக்கு போயிருக்கிறார்கள் நந்து ” என்றவள் முகிலினியிடம் ” நமது குலதெய்வம்  கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து நம் வீட்டின் பின்னாலேயே ஒரு சிறு கோவிலை எங்கள் அப்பா சுந்தரவடிவேல் கட்டி வைத்திருக்கிறாரம்மா .அம்மாவிற்கு  தினமும் காலை , மாலை அங்கே சென்று பூஜை செய்து வந்தால்தான் திருப்தியாக இருக்கும் ” என தகவல் தந்தாள் .

” அத்தை நாங்கள் அம்மாவை கோவிலிலேயே சென்று பார்த்து வருகிறோம் .வா முகில் ” என முன்னே நடந்தான் யதுநந்தன் .கணவனை பின்பற்றினாள் முகிலினி .

வீட்டின் பின் வழியில் இறங்கி நடந்தனர் .அந்த வீட்டின் தோட்டம் பெரிய காடு போல் தோற்றமளிக்கும்படி இருந்தது .மரம் , செடி , கொடிகள் அவ்வாறு தோற்றம் தருவது போல் வளர்க்கப்பட்டிருந்தன புற்கள் , புதர்கள் என இல்லாமல் ஒழுங்காக அழகாக வளர்க்கப்பட்டிருக்கும் காடு .எவ்வளவு அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள் என ஆச்சரியத்துடன் எண்ணியபடி சுற்றி வேடிக்கை பார்த்தபடி நடந்தாள் முகிலினி .

“இது எல்லாம் அம்மாவின் யோசனைதான் முகில் .இயற்கையை மாற்றக்கூடாது .ஆனால் அதன் குறைகளை நிறைகளாக்க வேண்டும் எனக்கூறி இந்த தோட்டத்தை உருவாக்கினார்களாம் .அப்பா அடிக்கடி பெருமையாக கூறுவார் ” என்றான் யதுநந்தன்  .

” மிகவும் நல்ல ஐடியா ..இந்த தோட்டம் பிரமாதமாக இருக்கிறது .” என்றாள் முகிலினி .

இவ்வளவு பெரிய அழகான தோட்டத்தில் வளர்ந்து பழகியவன் .அங்கே சென்னையில் எங்கள் வீட்டு எளிய தோட்டத்தில் எப்படி மனம் கோணாமல் இருந்தான் ? அப்படி இருக்க வேண்டிய காரணம்தான் என்ன ?என யோசித்தபடி நடந்தாள் முகிலினி .

சிறியதாக அழகாக இருந்தது அந்த ஆலயம் .இங்கேயும் முழுவதும் வெள்ளை கற்களினால் இழைக்கப்பட்டிருந்தது .சுற்றிலும் பசுமையான செடி , கொடிகள் சூழ்ந்திருக்க , பச்சையும் , வெள்ளையுமாக மரகதத்தில் பதித்த வைரமென ஒளி வீசிக்கொண்டிருந்தது அக்கோவில் .

” எவ்வளவு அழகு ” என கைகளை கன்னத்தில் பதித்து அழகான அக்கோவிலை பரவசத்துடன் பார்த்தாள் முகிலினி .அவ்வாறு பரவசம் பொங்க முகிலினி நின்ற தோற்றம் அவள் கணவனை ஈர்க்க அவளருகே நெருங்கி ” என்னடா ரொம்ப பிடிச்சிருக்கா ? ” என்றான் அவள் கன்னங்களை தடவியபடி .

” ரொம்ம்ம் ப்பப …”, என விழி விரித்தவள் ” இதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் ஏன் எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்தீர்கள் ? “, என கேள்வியெழுப்பினாள் .

சிறிது யோசித்து விட்டு பின் குறும்பு வழியும் கண்களுடன் ” அதனால்தானே இந்த அழகுசிலையை சந்திக்க முடிந்தது .இதோ என் சொந்தமாக்கி கூட்டி வர முடிந்தது ” என்றான் .

கணவன் எதையோ மறைக்கிறான் என தோன்றிய போதும் அவனது புகழ்ச்சியில் மயங்கியது முகிலினியின்  மனம் .சிறு  ஊடலுடன் கூடிய பார்வையொன்றை கணவன் மீது அவள் போட்டு வைக்க , அதனால் யதுநந்தனின் கண்களில் குறும்பு மாறி காதல் வந்தது .மனைவியை நெருங்கி நின்று அவள் இதழ்களின் வடிவை தன் விரல்களால் அளந்தபடி ” என்ன பார்வை இது …?  ம்….” என கொஞ்சினான் .

லேசான செருமல் ஒலி கேட்டு மோன நிலையிலிருந்த ஜோடிகள் தந்நிலை மீண்டு அவசரமாக பிரிந்தனர் .கோவிலின் பின்னிருந்து வந்தார் அந்த அம்மையார் .பிரகார வலம் வந்திருப்பார் போலும் .தூய வெண்ணிற பட்டு .நெற்றியில் திருநீறு .கழுத்தில் தங்கமணி கோர்த்த பவளமாலை .கைகளில் கெட்டி வளையல்கள் .காதுகளில் வைர தோடு .ஊடுறுவும் பார்வையுடன் அவர்களை பார்த்தபடி நின்றார் .

” கோவில் வலம் வந்தீர்களா பாட்டி  ? ” என்றான் யதுநந்தன் .குரலில் லேசான தடுமாற்றம் .அவனுக்கு பதிலளிக்காமல முகிலினியை ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர் .
அவரது ஊடுறுவும் பார்வை உங்களை நான் பார்த்து விட்டேன் என்று தெரிவிக்க குற்றவுணர்வுடன் தடுமாறினார்கள் அவர்கள் .

” அவசரப்பட்டு திருமணத்தை முடிக்க வேண்டியது .எங்கே எப்படி நடந்து கொள்வது என தெரியாமல் நடக்க வேண்டியது ” கோபத்துடன் கூடிய அவரது பார்வை முகிலினியையே முறைத்தது .

” பாட்டி  …”, என அழைத்து ஏதோ சொல்ல முயன்ற யதுநந்தனை கையுயர்த்தி தடுத்தவர் சற்று தள்ளி கை நீட்டி காட்டினார் .” அந்த கிணற்றில் கை ,கால்களை கழுவிக்கொண்டு சுத்தமான மனத்துடன் உள்ளே வாருங்கள் ” என்றுவிட்டு உள்ளே திரும்பி நடந்தார் .

யதுநந்தனின் கம்பீரம் யாரிடமிருந்து வந்தது என்று முகிலினிக்கு இப்போது தெரிந்தது .கையில் ஒரு செங்கோலை கொடுத்து விட்டால் இவர்கள் ஒரு அரசியேதான் என மனதிற்குள் எண்ணியடி ஞாபகமாக கணவனை விட்டு மூன்றடி தள்ளியே நடந்தாள் .

அந்தக்கோவிலினுள் நுழைந்ததும் இனம் புரியாத அமைதி ஒன்று உள்ளத்தினுள் குடி கொண்டது .கூடவே எதுவாயினும் சமாளித்து விடலாமென்ற தைரியமும் வந்தது .ஒரேடியாக லைட்டுகளை போட்டு கோவிலை வெளிச்சமாக்கி விடாமல் அளவான லைட்டுகளை ஆங்காங்கே எரியவிட்டிருந்தனர் .கருவறையினுள் சற்றே பெரிய குத்துவிளக்கு ஒன்று மட்டுமே .

சிக்கனமான அந்த விளக்கு வெளிச்சத்திலும் தங்கமாய் மின்னிக்கொண்டிருந்தாள் அம்பாள் .அம்பாளை கண்டவுடன் தானாக குவிந்தன கைகள் .” அம்மா , தாயே என் கணவன் குடும்பத்தாருடன் நான் இனிமையாக வாழ வேண்டும் .அதற்கு அருள் புரி தாயே ” என கண்மூடி  உளமாற வேண்டிக்கொண்டாள் முகிலினி .

கற்பூர வாசமும் , மணி சத்தமும் கேட்க கண் திறந்தாள் .அம்பாளுக்கு ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்  .நன்றாக கற்பூர ஒளியில் அம்மனை காட்டியவர் மணியை கீழே வைத்துவிட்டு திரும்பினார் .மெலிதாய் அதிர்ந்தாள் முகிலினி .

இவர் ….சந்தேகமில்லை .அன்றொருநாள் முகிலினி வீட்டில் யதுநந்தனை சந்திக்க வந்தவர் .
அன்று முகிலினியிடம் ஏதோ அவள்தான் யதுநந்தனை மயக்கி வைத்திருப்பது போல் பேசியவர் .மெல்ல திரும்பி கணவனை நோக்கினாள் முகிலினி .அவன் பிறகு பேசலாம் என ஜாடை காட்டினான் .

மூவருக்கும் பிரசாதம் வழங்கியபின் அம்மனின் முன் வைத்திருந்த சிறிய பெட்டியை திறந்து வைத்துக்கொண்டு பூஜை செய்ய ஆரம்பித்தார் அவர் .

” பாட்டி எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க ” என்றபடி அவர்  பாதங்களை மனைவியுடன் பணிய வந்தான்  யதுநந்தன் .

” வேண்டாம் ….” கையுயர்த்தி தடுத்தார் அவர் .” இது கோவில் …இங்கு தெய்வத்தை மட்டுமே வணங்க வேண்டும் .இதையெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் ” என்றுவிட்டார் .

முகிலினியின் மனதை வருத்தம் சூழ்ந்து கொண்டது .இவர்களுக்கு என்னை பிடிக்கவில்லையோ ? ஏதோ காரணம் காட்டி என்னை தவிர்க்க முயல்கிறார்களோ ? என குழம்பினாள் .




அம்மன் முன் இருந்த அந்த பெட்டிக்கு பூஜை முடித்துவிட்டு அதனை மூடி பத்திரமாக பாட்டியிடம் ஒப்படைத்தார் அவர் .அந்த பெட்டியை வாங்கி அதனுள் சிறிது நேரம் பார்த்தபடி இருந்தார் பாட்டியம்மாள் .நிமிர்ந்து யதுநந்தனை ஒரு முறை பார்த்தார் .
நேர்பார்வையுடன் தன் பாட்டியின் விழிகளை சந்தித்தான் யதுநந்தன் .
பெருமூச்சுடன் பெட்டியை மூடி அந்த பெரியவரின் கைகளில் கொடுத்தார் .
” லாக்கரில் வைத்து விடு ” என்றார் .

” இது மோகனரங்கம் .எனக்கு தம்பி முறை .சிறு வயதிலிருந்தே நம் வீட்டில்தான் இருக்கிறான் .”, என முகிலினிக்கு அறிமுகம் செய்தார் .
கைகுவித்தாள் முகிலினி .தலையை மட்டும் அசைத்தார் அவர் .

” போகலாம் ” என்று கிளம்பினார் பாட்டியம்மாள் .மோகனரங்கம் கோவிலை பூட்ட ஆரம்பிக்க மூவரும் வெளியேறினர் .பாட்டியம்மாளுடன் இணைந்து நடக்க முயன்ற முகிலினியை பின்னால் வரும்படி சைகை காட்டிவிட்டு முன்னால் நடந்தார் பாட்டியம்மாள் .

கணவனுடன் நடந்தபடி அவனை ஏறிட்டாள் முகிலினி .” பாட்டி தனிமையைத்தான் அதிகம் விரும்புவார்கள் ” என்றான் யதுநந்தன் .

அது சரிதான் .ஆனால் புதிதாக மணமான பேரன் மனைவியை அறிமுகம் கூட செய்வித்துக்கொள்ளாமல் தனிமையா ? ஏதோ நெருடியது முகிலினிக்கு.

மாடியில் யதுநந்தனின் அறை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையின் சூட் போல் தோற்றம் காட்டியது .பளபளப்பான இந்த பகட்டுகள் யதுநந்தன் என்ன காரணத்தினால் இவற்றை விடுத்து அங்கே தங்கியிருந்தான் ? மேலும் எப்படி அவனால் அங்கே தங்க முடிந்தது ? என்ற கேள்வியால் மீண்டும் மீண்டும் முகிலினியை குடைந்தது .

இதற்கெல்லாம் விடையளிக்க கூடிய அவள் கணவன் , வேலை இருப்பதாக கூறி வெளியே சென்றாகிவிட்டது .ஆடம்பர அலங்காரங்களுடன் இருந்த அந்த அறையை கணவனின்றி சரியாக சுற்றி பார்க்க கூட எண்ணமில்லை முகிலினிக்கு .

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த ளௌம்யா ” முகிலினி வா , உனக்கு வீட்டை சுற்றிக்காட்டுகிறேன் ” என அழைத்தாள் .இந்த பங்களாவை அநியாயமாக வீடென்று சொல்கிறார்களே என நினைத்தபடி ” இல்லை அக்கா நான் நாளை பார்த்துக்கொள்கிறேன் ” என்றாள் .

யதுநந்தன் அருகிலில்லாமல் எப்படி வீட்டை சுற்றி பார்க்க முடியும் ? இது அவள் கணவன் பிறந்து வளர்ந்த வீடு .இதன் ஒவ்வோரு இடத்திலும் அவனது சிறுவயது கதை ஒன்று இருக்கும்தானே .அதனை அவன் சுவைபட விவரிக்க இந்த வீட்டை அவனுடன் பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் இவர்களுடன் போகும் போது இருக்குமா ? என எண்ணித்தான் முகிலினி அவ்வாறு கூறினாள் .

ஆனால் சௌம்யா அவளை விடவில்லை .விடாதே ….விடாதே என விரட்டி அவளை கிளப்பி கூப்பிட்டுக்கொண்டு போனாள் .அவள் காட்டிய இடங்களை மனதில் பதியாமல் அரைக்கண்ணால் பார்த்து வைத்தாள் .மனதில் யதுநந்தனை எப்போது பார்ப்போமென்று இருந்தது .

அப்போது ” இதுதான் நந்துவின் அலுவலக அறை.அவன் உள்ளேதான் இருக்கிறான் “என காட்டினாள் சௌம்யா .

“ஓ…நான் வெளியே போய்விட்டாரென்றல்லவா நினைத்தேன் .போய் பார்க்கிறேன் ” என ஆவலுடன் அறைப்பக்கம் திரும்பியவளை தடுத்தாள் சௌம்யா .

” இல்லை முகிலினி நந்துவுக்கு ஆபீஸ் வேலை பார்க்கும்போது வீட்டாள்கள் வந்தால் பிடிக்காது .அதுவும் காருண்யாவுடன் சேர்ந்து வேலை பார்க்கும்போது இடையில் போய்விட்டோம் கண்டபடி கத்துவான் “, என்றாள் .

” அது சரிதான் வேலை பாதிக்குமில்லையா ” ஏமாற்றத்துடன் கூறிவிட்டு தங்கள் அறைக்கு திரும்ப நினைத்தவளை ” எங்கே போகிறாய் ? இன்னும் பாதி வீடு இருக்கிறது .வா ” என இழுத்துச்சென்றாள் சௌம்யா .
என்னை அறைக்குள் போக விடாமல் செய்வதற்காக இந்த அக்கா இப்படி பண்ணுகிறார்களோ ? என லேசாக சந்தேகம் வந்தது முகிலினிக்கு .அதை உறுதிப்படுத்துவது போல் அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்த்தபடி அவளை அங்குமிங்குமாக இழுத்துக்கொண்டு நடந்தாள் சௌம்யா .

அப்படி தாமதித்து முகிலினியை அவளுடைய அறைக்குள் அனுப்பியபோது அங்கே …….????.




What’s your Reaction?
+1
19
+1
14
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!