Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-5

5

மொட்டை மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்து எதிரேயிருந்த வானத்தை வெறித்திதிருந்தாள் அஞ்சனா. யாரோ மாடிப்படி ஏறி வரும் சத்தம் கேட்டது. வருபவனை யூகித்தவளின் முகத்தோடு உடலும் இறுகியது.

“அஞ்சு” தயவான குரலில் அழைத்தபடி அவள் எதிரில் வந்து நின்றான் கோகுல். ஏறிட்டுப் பார்த்தவளின் கண்கள் சலனமின்றி இருந்தன.

“கொஞ்சம் யோசிம்மா, இது நம்முடைய வாழ்க்கை. கொஞ்சம் இறங்கி போவதில் தவறில்லை”

“யார் இறங்கி போக வேண்டும்?” அஞ்சனாவின் கூர்மையான பார்வைக்கு தலைகுனிந்து கொண்டான்.

“70 பவுன் நகை பத்து லட்சம் ரொக்கத்திற்கு அப்பா ஒப்புக்கொண்டார்.இன்னமும் கார், ஆடம்பரமான திருமணம் என்றால் எங்கே போவார்? அப்பாவின் நிதிநிலைமை உங்களுக்கும் தெரியும் தானே?”

“உனக்கும் என் நிலைமையும் அம்மா நிலைமையும் தெரியும்தானே அஞ்சு? இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்பாவை எதிர்த்து எங்கள் இருவராலும் பேச முடியாது”

அஞ்சனா கால்களை கட்டிக்கொண்டு முட்டியில் தலை சாய்த்து கொண்டாள்.

“அப்பா முதலில் இருந்தே அதிகாரமாக இருந்து பழகி விட்டார் அஞ்சு. நாங்களும் அவருக்கு அடங்கியே போய் விட்டோம். இப்போது திடீரென்று எதிர்ப்பதானால்… முடியாதும்மா”

அஞ்சனா அலட்சியமாக தோள்களை குலுக்கினாள். “அது உங்கள் பிரச்சனை. அதில் கருத்து சொல்வதற்கு எனக்கு எதுவும் இல்லை. அவரவர் தேவைகளுக்கு அவரவர் தான் போராடிக் கொள்ள வேண்டும்”

“பிறகு என் அம்மாவை திறந்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார் அப்பா. அது பரவாயில்லையா?

எனக்கு பிரச்சனையில்லை.நாள் முழுவதும் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கலாம், அம்மாவோடு சேர்ந்து நானும் இங்கேயே வந்து செட்டில் ஆகிவிடுவேன். அம்மாதான் என்ன நினைப்பார்களோ?” கோகுலின் கேலிக்கு அஞ்சனாவிற்குமே சிரிப்பு வந்தது.

“உன் அப்பா கூடப்பிறந்த அண்ணன்தான் அஞ்சு. ஆனாலும் இத்தனை வயதிற்கு பிறகு அம்மா இங்கே வந்து இருந்து கொண்டால் நன்றாகவா இருக்கும்?”

“இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது கோகுல்? நீங்கள்தான் உங்கள் அப்பாவிற்கு புரிய வைக்க வேண்டும்”

“இல்லைம்மா அவருக்கு ஆரம்பத்திலிருந்தே அம்மாவின் பிறந்த வீட்டினர் மேல் வெறுப்பு. இதுவரை உங்கள் வீட்டுப் பக்கமே வந்ததில்லையே, இப்போது நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பதால் நகை பணம் என்று ஏதேதோ கேட்கிறார்”

“அதாவது எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்”

” அப்படித்தான். ஆனால் நாம் அவர் கேட்ட நகையையும் தொகையையும் தூக்கி எறிந்து அவரை ஜெயித்து விடலாம்”




“அது எப்படியோ? எங்கள் அப்பாவிடம் கொட்டியா கிடக்கிறது?”

“ப்ளீஸ் அஞ்சு, நான் நம் வாழ்க்கைக்காகத்தான் சொல்கிறேன். என்னை தவறாக நினைக்காதே.வந்து… அஞ்சு…நம் மாது, அவன் ஃபாரின் படிப்பை தள்ளி வைத்தால்…”

“கோகுல்” கத்தியபடி கைப்பிடி சுவரிலிருந்து குதித்தாள். “இந்த பேச்சு இனி ஒரு முறை பேசாதீர்கள். மாதவனின் இந்த படிப்பு அவனது கனவு.ஐந்து வருடங்களாக அவனும் அப்பாவும் இதற்காக எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கறார்கள் என்பது எனக்கு தெரியும்.என் தம்பியின் படிப்பை சிதைத்து விட்டு அப்படி ஒரு திருமணம் எனக்கு தேவையில்லை”

“இதென்ன இப்படி பேசுகிறாய் அஞ்சு?. ஆண் பிள்ளையான உன் தம்பிக்கு படிப்பு முக்கியம் போல் பெண்ணான உனக்கு திருமண வாழ்வு முக்கியம்தானே?  தந்தையாக உன் அப்பாவிற்கு உன் வாழ்வையும் பார்க்கும் கடமை இருக்கிறதுதானே?”

” நிச்சயம் இருக்கிறது. என் அப்பா  எனக்கென்று ஒரு திருமண வாழ்வு  அமைக்கத்தான் போகிறார். நானும் அதனை ஏற்றுக் கொண்டு வாழத்தான் போகிறேன்”

” அஞ்சு” கோகுலின் குரலில் மிதமிஞ்சிய அதிர்ச்சி தெரிந்தது.

” ஏன் கத்துகிறீர்கள் கோகுல்? அதிக வரதட்சணையால் எத்தனையோ திருமணங்கள் பேச்சிலேயே முடிந்து போயிருக்கிறது. இதுவும் அப்படிப்பட்ட ஒரு திருமணமாக இருந்து விட்டு போகிறது”

“அவ்வளவு அலட்சியமா? நம் காதலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

அஞ்சனா அவனை முறைத்தாள். “காதலா?  அப்படி என்றாவது நான் சொல்லி இருக்கிறேனா… இல்லை காதலர்களாக நாம் பழகித்தான் இருக்கிறோமா?”

” என்ன அஞ்சு இப்படி சொல்கிறாய்?” கோகுல் இப்போது அழுது விடுபவன் போலானான். “நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் அஞ்சு”

” என்றால் உங்கள் அப்பாவை சமாதானப்படுத்தி இந்த திருமணத்தை முடிக்க பாருங்கள். அது இல்லையென்றால் என் அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை மணம் முடித்துக் கொள்வேன். ஏனென்றால் என் மனம் எந்த எதிர்பார்ப்புகளோ ஆசைகளோ இன்றி மிகவும் சுத்தமாக இருக்கிறது. இனிதான் எனக்குரியவனை அங்கே இருத்த  வேண்டும்” சொல்லிவிட்டு மடமடவென கீழிறங்கி வந்து விட்டாள் அஞ்சனா.

—————-




“கோகுலை உங்களுக்கு எப்படி தெரியும்?” விடிவிளக்கின் மெல்லிய ஒளியை பார்த்தபடி கேட்டாள் அஞ்சனா.

” ஏன் உன் சொந்தக்காரர்தானே? எனக்கு தெரியாமல் இருக்குமா?”

” நம் திருமணத்திற்கு கூட அவர்கள் யாரும் வரவில்லை. பிறகு எப்படி உங்களுக்கு தெரியும்?”

” எங்கேயோ வெளியில் பார்த்தேன். அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்று பொருட்காட்சியில் அவரையும் பார்த்தேன். அதனால்தான் அவரிடம் பேசப் போனாயா என்று கேட்டேன்”

” என்ன சொன்னார்?” உணர்ச்சி துடைக்கப்பட்டிருந்தது அஞ்சனாவின் குரலில்.

” நீ தானே அவரிடம் பேசினாய்? நீதான் சொல்ல வேண்டும். என்ன சொன்னார்?” பக்கத்தில் படுத்திருந்தவன் பக்கம் வெறுமையாய் பார்வையை திருப்பினாள்.

” உங்களிடம் என்ன பேசினார் என்று கேட்டேன்”

” ஒன்றும் இல்லையே. உங்கள் சொந்தத்தை அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவ்வளவுதான்” என்றவன் அஞ்சனாவை இடைப்பற்றி தன்னருகே இழுத்து இறுக்கிக் கொண்டான். “இது என்ன வாசம்?” அவள் கழுத்தடியில் முகர்ந்தபடி கேட்டவனை உதறித் தள்ளும் தெம்பு அஞ்சனாவிடம் இருக்கவில்லை.




What’s your Reaction?
+1
40
+1
30
+1
2
+1
3
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!