Serial Stories கொடியிலே மல்லிகை பூ தீயினில் வளர்சோதியே

தீயினில் வளர்சோதியே-7 (நிறைவு)

 7

பேரிளம்பெண் : கங்கா

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

மறுநாள் அக்கா ரெடியாகிட்டாங்களானு பாக்க மெதுவா அக்கா ரூமுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த அக்காவைப் பாத்ததும் ஒரு நிமிஷம் அப்பிடியே அதிர்ந்து போயிட்டேன். அப்பதான் குளிச்சிட்டுத் தலைமுடியை நல்லா வாரி எடுத்து உச்சியில கொண்டை போட்டிருந்தாங்க. இடதுபக்கம் கன்னம், காது, நெத்தி எல்லாமே நெருப்புல வெந்து போன மாதிரி, விகாரமா இருந்தது. இடப்பக்க செவிமடல் அப்படியே சின்னதா சுருண்டிருந்தது. அக்கா எப்பவுமே ரொம்ப சிம்பிளாத்தான் இருப்பாங்க. அதிக ஒப்பனையில்லாத முகம்.மையிடப்படாத  தீர்க்கமான கண்கள். அக்காவோட சிகையலங்காரம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு யோசிச்சிருக்கேன்..  இதனாலதான் அக்கா எப்பவுமே தன்னோட இடதுபக்க முகத்தை மறைக்கிற மாதிரி தான் ஹேர் ஸ்டைல் செஞ்சுக்கறாங்களா?




என்னைப் பாத்ததும் சிரிச்சுகிட்டே வந்த அக்கா

“உள்ளே வா பொன்னி..! நீ எம்முகத்தை இத்தனை நாள் முழுசா பாத்ததில்லைதானே. அதான் இப்பிடி அதிர்ச்சி அடைஞ்சிட்டே. ஒரு சின்னப் பொண்ணை அவங்க வீட்டு ட்ரைவர் அடிக்கடி தன்னுடைய வக்கிர ஆசைக்குப் பயன்படுத்திகிட்டு இருந்திருக்கான். அது பாவம் வாய் பேச முடியாத காது கேக்காத குழந்தை. அந்த வெறி புடிச்ச ட்ரைவருக்கு எதிரா வாதாடி அவனுக்கு நான் தண்டனை வாங்கிக் குடுத்தேன். அதுக்காக என்னைப் பழி வாங்க அவனோட கையாளுங்களை வெச்சு எம்மேல ஆசிடை ஊத்திட்டான். ம்ம்..என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கிற?

“நீங்க ஏன்க்கா ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுக்கல?”

“நியாயமான கேள்விதான். அநீதியை எதிர்த்துப் போரிடறவங்களுக்குக் கிடைக்கிற பரிசா நான் இதை ஏத்துகிட்டேன். இப்படி இந்த கோரத்தை மறைச்சு ஹேர்ஸ்டைல் செஞ்சுக்கறதுல எனக்கு மொதல்ல உடன்பாடில்லாமதான் இருந்தது. ஆனா என்னோட சீனியர்தான் நீ பொது வாழ்வில் ஈடுபடற பொண்ணாச்சேம்மா! உன்னை நேருக்கு நேரா பாக்கிறவங்களுக்கு உன்னோட தோற்றம் கொஞ்சம் நெருடலை, ஓர் அசௌகர்யத்தைத் தரக்கூடும். நீ உன்னோட ஹேர் ஸ்டைலை மட்டுமாவது மாத்திக்கோன்னு அட்வைஸ் பண்ணதுலதான் இப்படி!”

“சரி..நேத்து நீ கேட்டியே..பாரதியார் கவிதைல எனக்கு ஏன் இத்தனை ஈடுபாடுன்னு? அதுக்கு பதில் சொல்லணும்னா நான் என்னோட வாழ்க்கை வரலாற்றையே உனக்கு சொல்லணும். என்னுடைய சீனியரைத் தவிர வேற யாருக்கும் இதுவரை சொன்னதில்லை. கேக்க உனக்கு பொறுமை இருக்கா?” ன்னாங்க.

“என்னக்கா இப்படிக் கேக்கறீங்க? எங்களுக்கெல்லாம் ஒரு புது வாழ்க்கையை அமைச்சுக் குடுத்த உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கக் குடுத்து வெச்சிருக்கணுமே! ரொம்ப ஆவலா இருக்கேன்..சொல்லுங்கக்கா”

அக்கா முகத்துல ஒரு மலர்ச்சி!

“என்னோட தாத்தா ஆனந்த்சாகர், ஒரு பிரபலமான நீதிபதி. நேர்மை தவறாதவர். நீதி வழங்குறதுல எந்த பாரபட்சமும் காட்டமாட்டார். தேசபக்தர். இலக்கியவாதியும் கூட. அவருக்குப் பாரதியார் கவிதைகள்னா உயிர். அவர்கிட்ட இருந்துதான் எனக்கும் பாரதியாரை அவ்வளவு பிடிக்கும். அதே போல நதிகள் மேல எங்க தாத்தாவுக்கு அவ்வளவு ஒரு பக்தி.

“நதிகள் மேலயா..? அப்படி என்னக்கா சிறப்பு?”

“என்ன பொன்னி? உம்பேர் கூட நதியோட பேர்தானே?

மக்களோட தகாத்தைத் தீர்க்கவும், விவசாயத்துக்கும் நதிகளோட பயன்பாடு எவ்வளவு முக்கியம்.? நம்முடைய பண்டைய நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகள்லதானே தோன்றி இருக்கு. நதிகளைப் ப்ரபஞ்ச சக்தி தெய்வங்களாக நெனச்சு அவற்றுக்குப் பெண் பெயர்களா சூட்டினாங்க. நதிகள்ல நீராடுவதை புனிதமா நெனச்சாங்க.  எங்க தாத்தா காவிரிக்கரைல பிறந்தவரு. அதனாலதான் எங்கம்மாக்கு காவேரின்னு பேர் வெச்சாராம்.”

சொல்லும்போதே அக்காவுக்குக் கண்ணெல்லாம் கலங்கிருச்சு.

“உங்கம்மா இப்போ எங்க இருக்காங்க?”

அக்கா கைய மேல உயர்த்திக் காட்ட, “அடடா..! அவங்க மனச நோகடிச்சுட்டமேன்னு எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு.”

“ஃபீல் பண்ணாத..விடு. எங்கம்மா எங்க தாத்தாவுக்கு ஒரே செல்ல மகள். பாட்டிகூட சொல்வாங்களாம். பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் குடுக்காதீங்கன்னு!. அப்பல்லாம் எங்க தாத்தாவுக்கு கோவம் வந்துடுமாம். குழந்தைகள்ல ஆணென்ன..பொண்ணென்ன. ?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ!னு

முழங்குவாராம். ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீயே இப்பிடி பேதம் பாக்குறியே. பாத்துகிட்டே இரு..! எதிர்காலத்துல எம்பொண்ணு உன்னை மாதிரி சராசரி பொண்ணா இல்லாம பாரதி கண்ட புதுமைப் பெண்ணா இந்த வையகமே வியந்து வாழ்த்துற ஒரு பொண்ணா இருக்கப் போறான்னு சொல்வாராம். பாட்டியும்..”ஹ்க்கும் ரொம்பத்தான் பேராசை” னு மோவாயைத் தோள்பட்டைல இடிச்சுகிட்டுப் போவாங்களாம். ஆனா அவரோட ஆசை நிராசையா ஆகிடும்னு அவர் கனவு கூட கண்டிருக்க மாட்டார்”




“ஏங்க்கா..உங்கம்மா அவரோட ஆசைப்படி நடக்கலையா?”

“அம்மா மேல எந்த தப்பும் இல்ல! அம்மாவும் ரொம்பவே அறிவான, தெளிவான பொண்ணாதான் இருந்திருக்காங்க. அம்மாக்கு எல்லா சுதந்திரமும் குடுத்துதான் தாத்தா வளத்திருக்கார். வீட்ல ரெண்டு கார் இருந்தாலும் அம்மா காலேஜுக்கு பஸ்லதான் போய் வருவாங்களாம்.

அந்த சமயத்துல நடந்த ஒரு பிரபலமான கேசுல எங்க தாத்தா ஒரு முக்கியமான அரசியல் பிரமுகருக்கு எதிரா தீர்ப்பு சொல்லியிருகார். அதுக்குப் பழிக்குப் பழி வாங்க ..எங்கம்மா காலேஜுலருந்து வரும்போது அவங்களை மயக்க ஊசி போட்டுக் கடத்தி,  மும்பைல சிவப்பு விளக்குப் பகுதிக்கு வித்துட்டாங்களாம். இது தாத்தாக்கு முதல் அதிர்ச்சி.

தாத்தாக்கு செல்வாக்கு அதிகமா இருந்ததால, இந்த விஷயம் தெரிஞ்சதுமே..மும்பை போலீஸ் உதவியோட போய் மீட்டுகிட்டு வந்துட்டாங்களாம். ஆனாலும் அதுக்குள்ள எங்கம்மாக்கு நடக்கக்கூடாத வேதனையான சம்பவங்கள் நடந்து முடிஞ்சிருக்கு. வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தப்பௌறமும் அம்மா ஒரு மாதிரி பிரம்மை பிடிச்ச மாதிரியே இருந்திருக்காங்க.

“நடந்த தப்புக்கு நீ எந்த விதத்துலயும் காரணமில்ல காவேரி, என்னைப் பழி வாங்க உன்னை ஒரு பகடைக்காயா உருட்டி விளாயாடி இருக்காங்க அந்தப் பாதகர்கள்”னு தாத்தா எத்தனையோ எடுத்துச் சொல்லியும் அம்மா எதையும் காதுல வாங்குல. அது செவிடன் காதுல ஊதுனா சங்குங்கிற கதையாதான் இருந்திருக்கு. அதைப் பாக்க சகிக்காத எங்க பாட்டி, இதுக்கெல்லாம் காரணம் தாத்தாதான்னு மனசு வெறுத்து கொல்லைக்  கெணத்துல விழுந்து இறந்துட்டாங்களாம். இது தாத்தாவுக்கு ரெண்டாவது அதிர்ச்சி.

“அச்சச்சோ” னு நான் பதற

“ஆனா இது எல்லாத்தையும் விட , இரும்பு மனுஷரனான எங்க தாத்தாவையே அதிர வெச்ச அந்த சம்பவம்..! “

அக்கா அப்படியே மௌனமாக.. அந்த விஷயம் என்னவா இருக்கும்னு மனசு குறுகுறுத்தாலும் அவங்களாவே சொல்லட்டும்னு நானும் மௌனம் காத்தேன்.

அவங்களாவே சுதாரிச்சுகிட்டு..

“ஒருநாள் அம்மா திடீர்னனு மயங்கி விழுந்திருக்காங்க. தாத்தா எங்க ஃபேமிலி டாக்டரை வரச் சொல்ல அவங்க உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கான்னு ஒரு பெரிய இடியைத் தாத்தா தலைல இறக்கி இருக்காங்க. தாத்தா இந்த மாதிரி ஒரு விஷயத்தை யோசிச்சிருக்கக் கூட இல்ல. பயங்கரமா அதிர்ச்சி அடைஞ்சிட்டாராம்.

“இன்னும் மூணுமாசம் முடியல. கருவை அழிச்சிரலாம்”னு டாக்டர் சொன்னாங்களாம். உடனே தாத்தா பதறிப்போய்

ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு காரணத்துக்காக ப்ரம்மனால் படைக்கப் படுகிறது. அப்படி உருவான கருவை அழிக்கிறது மஹா பாபாமில்லையா? வேண்டாம்”னு தடுத்துட்டாராம்.

எங்கம்மாக்கு இதுல உடன்பாடில்லாம தினமும் தாத்தாக்கும், அம்மாக்கும் சண்டை வந்திருக்கு. தாத்தாவோட பிடிவாதம் ஜெயிக்க,  நான் வந்து பிறந்தேன் அப்பா யாருன்னு தெரியாமலே.! நான் பிறந்ததும் எம்மேல இருந்த வெறுப்பிலயும் தாத்தா மேல இருந்த கோபத்துலயும் அம்மா தற்கொலை செஞ்சிட்டாங்களாம்.

அதுதான் தாத்தாவை நிலைகுலையச் செய்திருக்கு.

“ஏன் எல்லாப் பெண்களும் இப்பிடி ஒரு தற்கொலை முடிவையே தேடிப் போறாங்க.? ப்ரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தியை, மனோவலிமையை ஆண்டவன் பெண்களூக்குத்தானே அதிகமா குடுத்திருக்கான். நான் என் பேத்தியை அப்படி ஒரு வலிமையான பெண்ணாத்தான் வளக்கப் போறேன்.

 அவள் கங்கையைப் போல சக்தி படைச்சவளா இந்த நாடு முழுதும் உள்ள அபலைப் பெண்களின் துயரை ஆற்றுவது மட்டுமல்லாமல் அவர்களோட வாழ்க்கைல மறுமலர்ச்சி ஏற்பட தன்னோட உயிர்,உடல் ஆன்மா அத்தனையையும் அர்ப்பணிக்கணும்.  சராசரிப் பெண்களைப் போல பணம் ,நகை இதுக்கெல்லாம் ஆசைப்படாத மனவுறுதி மிக்க பொண்ணா இருக்கணும். தனக்குப் பிறகு தன்னைப் போல சில பெண்களை இந்த நாட்டுப் பெண்கள் நலனுக்காக உருவாக்கி வைக்கணும்” னு மனசுக்குள்ள ஓர் உறுதி எடுத்தாராம்.

எனக்கு அவர் ஆசைப்படி கங்கான்னு பேர் வெச்சார். தனியொருவரா..தாயும் தந்தையுமா இருந்து என்னைச் செல்லமா மட்டும் வளர்க்காம, சகலகலாவல்லியா, உயர்வா வளர்த்தார். எனக்கு விவரம் தெரியற வயசுல நடந்த விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லித் தான் எடுத்திருந்த உறுதியையும் என்னிடம் சொல்லி..அவருடைய ஆசைப்படி என்னால் நடக்க முடியுமான்னு கேட்டார். கண்டிப்பா முடியும் தாத்தானு நானும் அவருக்கு சத்தியம் செஞ்சு குடுத்தேன். அவரோட வழியிலேயே நானும் சட்டம் படிச்சு வக்கீலானேன்.

அவருடைய கடைசி காலத்துல அவரோட சொத்துல பாதியைப் பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் பள்ளிக்கூடம் கட்டக் குடுத்துட்டார்.




அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு பாரதியார் சொல்லிருக்காரில்லையா?

“ஆனந்த சாகரம்” கிற இந்தப் பெரிய வீட்டையும், பேங்க்ல இருந்த பணத்தையும் எம் பேர்ல எழுதி வெச்சுட்டு, எங்கிட்ட.

“ கங்கா..! உன்னோட வாழ்க்கையை நீ உன்னோட சம்பாத்தியத்துல நடத்திக்கோ. பாதிக்கப்பட்ட பெண்கள் அவங்க எந்த வயசுல இருந்தாலும் சரி, அவர்களுக்கு உதவ என்னோட பணத்தைப் பயன்படுத்து. உனக்கு இந்த வீடு தேவைக்கும் அதிகம்தான். அதனால உனக்குத் தெரிஞ்சு நிர்க்கதியா இருக்கற பெண்களுக்கு இங்க அடைக்கலம் குடுத்து அவங்களுக்குத் தேவையான படிப்போ இல்ல கைத்தொழிலோ ஏதோ ஒண்ணைக் கத்துக் குடுத்து அவங்க வாழ்க்கைல ஒரு நம்பிக்கை ஒளியை ஏத்தணும். அவங்கள அப்படியே துன்பச்சுழல்ல விழ விட்டுடக்கூடாது. ஏன்னா இங்க நம்ம சமுதாயத்தால பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும்

தீக்குள் விழுந்தெழுந்த சோதிதான். அவங்களுக்கு வழிகாட்டினா அவங்க இன்னொருத்தங்களுக்கு வழி காட்டுவாங்க. ஒரு சங்கிலித் தொடரா இந்த சமூக சேவை தொடரும்.

.என்னம்மா! உன்னால என்னோட ஆசையை நிறைவேத்த  முடியுமா? இல்லே உனக்கும் கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு வாழணும்னு ஆசை இருந்தா அதையும் சொல்லிடு. நான் உன்னைத் தடுக்க மாட்டேன்” னு கேட்டார்.

“என்ன தாத்தா இப்படி சொல்லிட்டீங்க. நான் உங்க வளர்ப்பு. சராசரி ஆசைகள் இல்லாத ஒரு பொண்ணா, புன்னகையே பொன்னகையா அணிஞ்ச ஒரு மனவலிமை மிக்க கங்காவைத்தான் இது வரைக்கும் பாத்திருக்கீங்க. இனிமேலும் அப்படித்தான் பாக்கப் போறீங்க. நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் எம்மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சிருக்கு தாத்தா. உங்க ஆசைகளுக்கு எந்தவிதக் குந்தகமும் வராதபடி நான் நிறைவேத்தறேன்னு “ சொன்னேன். தாத்தாவும் திருப்தியா கண்ணை மூடிட்டார். இது வரைக்கும் தாத்தாவுக்குக் குடுத்த உறுதிமொழிப்படிதான் நான்  நடந்துகிட்டும் வர்றேன்”. சொல்லிட்டுத் தெய்வாம்சமா புன்னகைச்சாங்க.

அவங்க சொன்ன விஷயங்கள்ல அப்பிடியே ஆழ்ந்து போன எனக்குள்ள திடீர்னு ஒரு பொறி தட்ட..

“ அக்கா..! சாகரம்னா கடல்தானே அக்கா?”

“ஆமாம் பொன்னி..ஏன்?”

“அக்கா! என்ன ஒரு ஒற்றுமைன்னு பாத்தீங்களா? நர்மதா, சரயு, பவானி, பொன்னி, சிந்து, கோமதி, கங்கான்னு நம்ம எல்லோர் பேரும் நதிகள் பேரா தாத்தாவோட ஆசைப்படியே அமைஞ்சிருக்கு. அதுவும் ஆனந்த சாகரம் கிற அவரோட வீட்டுலயே  சங்கமமாகியிருக்கோம்.”

“ஆமாம் பொன்னி! எம் பேர் தாத்தா வெச்சது. நர்மதாவுக்குப் பாட்டியோட பேரை வெச்சேன். மத்தவங்க பேர்லாம் இப்பிடி அமைஞ்சது நிஜம்மாவே தற்செயல்தான் இல்ல? “

“ஆமாம்க்கா! அதே மாதிரி பேதை,பெதும்பை, மங்கை, மடந்தை,அரிவை, தெரிவை,பேரிளம் பெண் வரை ஏழு பருவத்தில் உள்ள பெண்களும் நம்ம வீட்ல இருக்கோம் அக்கா?”

“அப்படியா..ம்ம்…! பேதை-நர்மதா,  பெதும்பை-சரயு, மங்கை- பவானி, மடந்தை-பொன்னி, அரிவை-சிந்து, தெரிவை-கோமதி னு யோசிச்ச அக்கா..

“மத்த பருவங்கள் சரி..பேரிளம் பெண் யாரு”ன்னு நெத்தியைச் சுருக்கினாங்க.

“நீங்கதான் அக்கா” ன்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள,

“ஏய்..நான் பேரிளம் பொண்ணா?” ன்னு என்னை அடிக்க கையை ஓங்கிட்டு, கிட்ட வந்த அக்கா என்னை அப்பிடியே பாசமா அணைச்சுகிட்டாங்க.

“அக்கா ..என்னோட வேண்டுகோளை ஏத்துகிட்டு உங்க கடந்த காலத்தை என்னோட பகிர்ந்துகிட்டீங்க. அப்படியே இன்னொரு வேண்டுகோள் அக்கா..! தாத்தா உங்களோட தன்னலமற்ற சேவைக்கு வாரிசையும் உருவாக்கி வைக்கச் சொல்லி இருக்காருல்ல! அந்த வாரிசா என்னை ஏத்துக்கோங்க அக்கா!” னு நான் கேக்க..

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.

அக்கா ஆனந்தமா  தன்னோட இனிமையான குரல்ல பாட வீட்ல இருந்த எல்லோரும் அங்க ஒண்ணா கூடிட்டாங்க. எல்லோர் கண்கள்லயும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.! ஆனந்த சாகரத்துல ஆனந்த அலைதான் இனிமேல் எப்பவுமே!

முற்றும்.




What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!