Serial Stories தீயினில் வளர்சோதியே

தீயினில் வளர்சோதியே-6

 6

 

கோமதி.

 

“எனக்கு மதுரைப்பக்கம் வாடிப்பட்டி.. மூணு வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சவுக மூலமா வீட்டு வேலைக்காக சென்னைக்கு வந்தேன். வீட்டோட இருந்தா நெறைய சம்பளம் கிடைக்கும் னு கூட்டி வந்தாக. அந்த வீட்டுல ரெண்டே ரெண்டு பொம்பளைங்கதான் இருந்தாக. எனக்கு நல்ல சாப்பாடு, பொடவைனு குடுத்து பிரியமா கவனிச்சுகிட்டாக. சம்பளம் மட்டும் எதுவும் குடுக்கலை.. அதைப் பத்தி நான் கேட்க, கான்ட்ராக்ட் முடிஞ்சு நீ ஊருக்குப் போகையில மொத்தமா குடுத்துருவோம்னாக. ஒருநா..

“நாங்க டாக்டரைப் பாக்கப் போறோம்..நீயும் எங்களோட வா” ன்னு கூட்டிகிட்டுப் போனாக.

நான் வரலன்னு சொல்லவும், ரொம்ப பலகீனமா இருக்கே..சத்து ஊசி போட்டுகிட்டா உனக்கும் உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு கூட்டிகிட்டுப் போனாக. அப்புறம் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்த சொல்லி ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டு போவாக. எனக்கு நெறய டெஸ்ட்டெல்லாம் எடுத்தாக.. ஒரு நாள் தலை சுத்தல், குமட்டல்னு வர..அவுககிட்ட சொன்னேன். ஒரு நிமிசம் ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டவுக…என்னை டாக்டர்ட்ட கூட்டிகிட்டுப் போனாக. அவுக பேசிகிட்டதிலிருந்துதான் எனக்குத் தெரிஞ்சுது நான் கர்ப்பமா இருக்கேன்னு. என்னை வாடகைத்தாயா இருக்க யாருகிட்டவோ இவுக பணம் வாங்கி இருக்காகன்னு.!..

“அய்யோ..இது என்ன விபரீதம்..எங்க வூட்டுக்குத் தெரிஞ்சா என்னை எவ்வளவு கேவலமா நினைப்பாக..நான் எப்படி ஊருக்குப் போவேன்” னு கதற ஆரம்பிச்சேன்.

அதுக்கு அவுக

“இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம். இன்னும் எட்டுமாசத்துல குழந்தையப் பெத்து குடுத்துட்டு..நாங்க குடுக்கற பணத்தை வாங்கிட்டு ஊருக்குப் போய் நல்ல பையனாப் பாத்துக் கல்யாணம் பண்ணிகிட்டு உனக்குனு குழந்தையப் பெத்துக்கோ..அது வரைக்கும் இந்த மஞ்சக் கயித்தைக் கட்டிக்கோ”

சர்வ சாதாரணமா சொல்லிட்டுப் போயிட்டாக. இவுக வாடகைத்தாய் ஏற்பாடு பண்ணிக் குடுக்கற ஏஜன்டுகளாம்.  கிராமத்துப் பொண்ணுங்கன்னா நல்லா ஆரோக்கியமா இருப்பாக, வம்பு, வழக்கு ஏதும் வராதுனு பட்டிக்காட்டுப் பொண்ணுங்களா வலை விரிச்சுப் பிடிப்பாகளாம். எனக்கு ஒலகமே இருண்டு போச்சு. என்னை நம்பி..நான் பணம் அனுப்புவேன்னு நம்பியிருக்கற என் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வேன்.? கல்யாணமாகாமயே தாயாகப் போறேன்னு தெரிஞ்சா எங்க கிராமமே எம்மூஞ்சில காறித் துப்புமே..இதுல என்னோட தப்பு ஏதுமில்லைனு நான் எப்படி அவுகளுக்குப் புரிய வைப்பேன்? கதறி அழுதேன். கெஞ்சினேன். ஒண்ணும் பிரயோசனமில்லை. என்னை வீட்டுக்குள்ளவே பூட்டி வெச்சிட்டாக. சமையல்காரி, வேலைக்காரின்னு யாரோடவும் பேச முடியாது.

எனக்கு ஒம்பதாம் மாசம் முடியற நேரம்..கொரொனா ஊரெல்லாம் பரவ ஆரம்பிச்சுது. ஒரு நா ரொம்பக் காய்ச்சலா இருக்கு..டாக்டர்கிட்ட போய்ட்டு வாரோம்..சாக்கிரதையா இருனு சொல்லிட்டுப் போன அந்த ரெண்டு பொம்பளைங்களும் வீட்டுக்குத் திரும்பவே இல்ல.. ஒரு வாரம் போல பயந்துகிட்டு வீட்டுக்குள்ளாறவே இருந்த எனக்கு திடீர்னு ஒரு துணிச்சல். வீடெல்லாம்  தேடிப் பாக்க ஆயிரத்துச் சொச்சம் பணம் கிடைச்சுது.. இப்பிடிப் பணத்தைத் திருடுறோமேன்னு எனக்கு குத்தவுணர்ச்சியா இருந்துச்சு….? ஆனா..அந்தப் பொம்பளைக ஒண்ணும் நல்லவிய்ங்க இல்லையே..அப்பாவிங்கள ஏய்ச்சுப் பொழைக்கிறவங்கதானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிகிட்டு..என்னோட துணிமணிங்களை மட்டும் எடுத்துகிட்டு வாசலுக்கு வந்த நேரம்….

என்னோட அதிர்ஷ்டமோ என்னமோ..சமையல்காரம்மா ஒரு ஆட்டோவோட வந்து நின்னாக.

“தங்கச்சி…அந்த பஜாரிங்க ஆசுபத்திரிலருந்து வாரதுக்குள்ள உன்னை உங்க ஊருக்கு அனுப்பிரணும்னுதான் நான் ஓடோடி வந்தேன்.  .இன்னும் ரெண்டு நாள்ல பஸ்..ரயிலு எல்லாத்தையும் நிப்பாட்டப் போறாகளாம்… கொரொனா வந்து ஆஸ்பத்திரிக்குப் போனவுக நெறய பேரு..மூச்சுத் திணறி செத்துர்றாகளாம். அவுகள ஆஸ்பத்திரிக்காரங்களே அடக்கம் பண்றாகளாம்.  இன்னும் கிராமத்துல எல்லாம் அந்த நோவு பரவ ஆரம்பிக்கலையாம் . அதனால நீ உங்க கிராமத்துக்கே போயிரு  சாக்கிரதையா இரு” ன்னு பலதடவ புத்தி சொல்லிட்டுக் கையில கொஞ்சம் காசையும் குடுத்து கூடப் பொறந்த பொறப்பாட்டம் என்னப் பாசமா வழியனுப்பி வெச்சாக. பட்டணத்துல கெட்டவகதான் இருப்பாகன்னு நெனச்ச எனக்கு நல்லவுகளும் இருக்காகனு காமிச்சுக் குடுத்துட்டா எங்காத்தா மீனாச்சி.

யார்…யாரையோ கேட்டு மதுரைக்குப் போற ரயிலேறி…அங்கிருந்து எங்க கிராமத்துக்கு வாரதுக்குள்ள எனக்கு தல நோவும், காச்சலும் வந்திருச்சு. எங்க கிராமத்து சனங்க என்னப் புள்ளத்தாச்சியாப் பாத்ததும்.. அருவருப்போட மூஞ்சிய சுளிச்சாக…எங்க வூட்டுலயோ ..வாசப்படி கூட ஏற வுடல.

“உன்னால உந்தங்கச்சி வாழ்க்கை எல்லாம் வீணாப் போச்சுதேடி பாதகத்தி” னு வசவான வசவு. என்னை வாயத் தொறக்க வுட்டாதான என்ன நடந்துதுன்னு சொல்ல முடியும்? அப்படியே மயங்கி வுளுந்தவதான். கண்ணு முளிச்சுப் பாக்கறேன். பக்கத்து ஊரு கவருமெண்ட் ஆசுபத்திரியில கெடக்கறேன்…தாங்க முடியாத இடுப்பு நோவு எடுக்க.. இதோ  தங்கச் செலயாட்டமா பொண்ணு பொறந்தா. எங்க குடும்பத்தாரு என்னை இங்க கூட்டியாந்து விட்ட கையோடு கிராமத்துக்கே போயிட்டாகளாம். ஆசுபத்திரி ஆயா வந்து சொல்லித்தான் தெரியும்.. என்னை வூட்டுல சேத்துகிட்டா எங்க குடும்பத்த கிராமத்துலருந்து தள்ளி வெச்சிருவாகளாம். அதனால என்னைத் தலை முளுகிட்டதா சொல்லிட்டுப் போயிட்டாகளாம்.

அந்த ஆயாதான் என்னையும் பாப்பாவையும் பாத்துகிட்டாக. பாப்பாவுக்கு ஒரு மூணு மாசமாகறவரை கம்முனு இருந்தவுக மெதுவா அவுக சுயரூபத்தைக் காமிச்சாக.

“..இந்தக் குழந்தைய  வித்து நான்  ஒனக்குப் பணம் குடுக்கறேன் .வாங்கிகிட்டு சென்னைக்குப் போயிடு. அங்க பெரிய வூடுகள்ல வீட்டு வேலை கிடக்கும் போறியா?”னு அந்த ஆயா சொன்னதும்

“அய்யோ..திரும்பவும் மொதல்ல இருந்தா” னு எனக்கு பகீர்னு ஆயிடுச்சு பாப்பா பொறக்கற வரை..அது யாரோட கொழந்தையோ..பெத்துக் குடுத்துட்டா நம்ம வேலை முடிஞ்சுதுன்னுதான் நான் நெனச்சேன். ஆனா இப்ப அது என்னோட உசுரு. “எனக்கு அது..அதுக்கு நானு”னு வாழ்ந்து காலத்தை ஓட்டிரலாம்னு முடிவு பண்ணேன். சென்னைக்குப் போய் திரும்பவும் அந்த பொம்பளைக கண்ணுல படவேணாம்னு முடிவு பண்ணி..அந்த ஆயாவுக்குப் போக்கு காட்டிட்டு பெங்களூருக்கு வந்தேன். இங்ஙன பேசற பாசையும் புரிபடல..பசி மயக்கம் வேற..! அப்பதான்..!

“இரு கோமதி இதுக்கு மேல நடந்ததை நான் சொல்றேன்!” னு கங்கா அக்கா வந்து நின்னாங்க.




      கொரொனா முதல் அலை முடிஞ்சு ஜனங்க தைரியமா வெளியில நடமாடத் துவங்கியிருந்த சமயம். நான் என் தோழியைப் பார்க்க பெங்களுரு போயிருந்தேன். தினமும் நடைப் பயிற்சிக்காக கொஞ்ச  தூரத்திலிருந்த ஒரு பார்க்குக்குப் போவேன்.. கூட்டம் அதிகமா இருந்தா பார்க்க்குள்ள போகாம., தெருவையே ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வந்துடுவேன். அந்த மாதிரி ஒரு நாள்லதான். நடைபாதையோரமிருந்த ஒரு மரத்தடியில் கோமதியைப் பார்த்தேன். கண்ணு மூடினபடியிருக்க மரத்தில் சாஞ்சு உக்காந்திருந்தா. பக்கத்துல ஒரு பை., மடியில குழந்தை வாயில் விரலைப் போட்டு  சப்பிகிட்டுக், கொட்டக் கொட்ட முழிச்சுகிட்டிருந்துது.. தெருவில் நடமாட்டம் அதிகமாயிருந்தும்..யாருமே இவங்களைக் கண்டுக்கலை.. எனக்கு இவங்களைத் தாண்டிப் போகவே மனசு வரலை..

இவங்களையே கண்ணெடுக்காமப் பாத்துகிட்டு நின்னவளைப் பாத்து,

 வாயிலிருந்த விரலை எடுத்துட்டுப் பொக்கை வாயைத் திறந்து  குழந்தை என்னைப் பார்த்து கையை நீட்டி சிரிக்க, உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போனது எனக்கு! இப்படி ஒரு குழந்தை பாக்கியம் இல்லாம எத்தனை விவாகரத்துகளும், தற்கொலைகளும் நாட்டுல நடக்குது.. உடனே இவங்களை என்னோட அழச்சுகிட்டுப் போயிடணும்னு முடிவெடுத்தேன்.

என்னோட தோழி உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு எவ்வளவோ தடுத்தா. கோமதியும் சென்னைக்கு வரப் பயந்தா. நான் விடாப்பிடியா இங்க கூட்டிகிட்டு வந்தப்புறம்., கோமதிக்கு இப்படி ஒரு அநீதி இழைச்சவங்களைத் தேடினேன். கோமதியைக் கூட்டிகிட்டு வந்த அந்த இரண்டு பொம்பளைகளும் கொரோனால இறந்துட்டாங்களாம். கோமதி சொன்ன அந்த ஹாஸ்பிடல்ல இப்படி சமூகவிரோத செயல் நடக்கறது தெரிஞ்சு அந்த ஹாஸ்பிடலை சீல் வெச்சுட்டாங்கன்னு தெரிய வந்துது. அப்புறமாத்தான் கோமதி நிம்மதியானா. நீ நல்லா சமைக்கிற கோமதி..உனக்கு சின்னதா ஒரு மெஸ் வெச்சுக் குக்கறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டா.

உங்ககூடவே, உங்க நெழல்லயே இருக்கேன். உங்க எல்லோருக்கும் சமைச்சுப் பரிமாறுற வேலையை ஆத்மார்த்தமா செய்யறேன். அதுவுமில்லாம அம்முக்குட்டி உங்க மேற்பார்வைலதான் வளரணும்கிறது என்னோட ஆசைன்னு சொல்லிட்டா. அம்முக்குட்டியை நான் வளத்துக்கறேன்..உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை இருந்தா சொல்லு, நானே மாப்பிள்ளை பாக்கிறேன்னு சொன்னேன். அதை கேட்டதும் என்னைப் பாத்து மொறைச்சா பாரு.. அய்யோடா! நானே பயந்துட்டேன். இப்போ பாரு.. எனக்கே நிறைய விஷயங்கள் ல யோசனை சொல்றா”

சொல்லிட்டு அக்கா சிரிக்க,. கோமதி அக்காவும் கூடவே சேந்து சிரிச்சாங்க..”

அடுப்படிலருந்து ஏதோ சத்தம் வரவும்,

“அச்சச்சோ….! அடுப்புல சாதம் வெச்சேனே..”னு கிச்சனுக்கு ஓடினவங்களப் பாத்து..

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி !

சாதம் படைக்கவும் செய்திடுவோம் ;தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம். னு அக்கா பாடினாங்க.

அக்கா பாடி முடிச்சதும்..

“அக்கா..உங்களுக்குப் பாரதியார் கவிதைகள் மேல இப்படி ஒரு தீராக் காதல் எப்பிடி வந்துது” ன்னு கேட்டேன்.

“நாளைக்கு எனக்கு கோர்ட் லீவுதான் பொன்னி..சாவகாசமா நாளைக்கு என்னைப் பத்திப் பேசலாம்..”னு சொல்லிட்டு அக்கா தன்னுடைய ரூமுக்குப் போயிட்டாங்க.




What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!