Serial Stories

தீயினில் வளர்சோதியே-3

3

பவானி:

இதோ இப்போ துள்ளி ஓடும் புள்ளி மான் போல இருக்கும் பவானி இங்கே வரும்போது எப்படி இருந்தா தெரியுமா? ஒரு வெறி பிடிச்ச வேங்கைகிட்ட இருந்து தப்பிப் பிழைச்ச ஒரு மான்குட்டி போல, மருண்ட விழிகளில் கண்ணீர் திரண்டிருக்க அக்காவோட முதுகுக்குப் பின்னால ஒடுங்கிப் போய் நின்னுகிட்டிருந்தா.

அப்போ ராத்திரி நேரமாயிடுச்சுங்கறதாலயும், பவானிக்கு ரொம்பக் காய்ச்சலா இருந்ததாலயும் யாரும் அக்காகிட்ட எந்த விவரமும் கேக்கல. மறுநா..அக்கா டாக்டரம்மாவைக் கூப்பிட்டு காமிக்க டாக்டர் பவானிக்கு ஊசி போட்டு, நல்லா தூங்கறதுக்கு மருந்து குடுத்திருக்காங்க. டாக்டர் பவானியப் பத்தி விவரம் கேக்க, அக்கா மொபைல்ல ரெகார்ட் பண்ணி வெச்சிருந்த ஒரு ஆடியோவைப் போட்டுக் கேக்க சொன்னாங்க. அது பவானியோட க்ளாஸ் டீச்சர் தமயந்தி பேசினது.

. அவங்க  கங்காக்காவோட ஃப்ரெண்டாம். அவங்கதான் அக்காவுக்கு ஃபோன் பண்ணி ,நடந்த விஷயங்களை எல்லாம் சொல்ல, அக்காவும் ஒரு ஆதாரத்துக்காக அதை ரெகார்ட் பண்ணி வெச்சிருந்திருக்காங்க .நீங்களும் கேளுங்களேன்.

“ஹல்லோ கங்கா. நான் தமயந்தி பேசறேன். என்னோட மாணவி பவானி குற்றாலத்துக்குப் பக்கத்துல இருக்கற ஒரு கிராமத்துப் பொண்ணு. பக்கத்து டவுன்ல இருக்கற ஒரு கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல பத்தாவது படிச்சுகிட்டிருக்கா.

போன வாரம் பவானியோட க்ளாஸ் ரூம்ல அட்டெண்டென்ஸ் எடுத்துகிட்டிருந்தேன்.

அகிலா, ப்ரசன்ட் டீச்சர்

ஆனந்தி.. ப்ரசன்ட் டீச்சர்

பவானி..பவானி ..

பதில் குரல் வராது போகவே நிமிர்ந்து வகுப்பறை முழுசையும்  ஒரு சுத்து என் பார்வையை ஓட விட்டேன். என் பார்வை மேகலா மேல விழுந்தது.

எல்லோரும் நார்மலா இருக்க, பவானியோட நெருங்கின தோழி மேகலா மட்டும்,  நான் அவளையே பாக்கறதைப் புரிஞ்சுகிட்டு, எங்கே பவானி ஆப்சென்ட் ஆனதுக்கான காரணத்தை அவகிட்ட நான் கேட் டுவேனோ னு அச்சப்பட்டுகிட்டு  தலையக் குனிஞ்சுகிட்டு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதற மாதிரி  கிறுக்கிட்டிருந்தா.  “மேகலா! .”.னு அதட்டலா கேட்டுகிட்டே அவ எதிரே நான் போய்  நிற்கவும் பதறிக்கிட்டு எழுந்து நின்னா!

.

“டீ..டீச்சர்..நாக்குழறியது.. அவளுக்கு!”

“எழுந்துருச்சு என்னோட வெளில வா… “

கை,கால்கள் வெல வெலக்க பலியாடு போல எம் பின்னால வந்தா மேகலா.




மத்த பிள்ளைக எல்லாம் காரணம் தெரியாம முழிக்குதுங்க.

வகுப்பறையை விட்டு மைதானத்தில் இருந்த மரத்தடிக்குப் போனோம். அதுக்குள்ள மேகலாவுக்கு கண்ணு ரெண்டுலயும் தண்ணி குளம் கட்டிருச்சு.

“சொல்லு மேகலா…நீ பவானியோட  டியரஸ்ட் ஃப்ரெண்டுதான..?”

“ஆமாம் டீச்சர்..!”

“அப்போ நான் கேக்கறதுக்கு நேர்மையா பதிலைச் சொல்லு.  பவானி ஏன் அடிக்கடி லீவ் எடுக்கறா.? பத்தாவது பொதுத் தேர்வு நெருங்குது. நீங்க ரெண்டு பேரும்தான் நம்ம ஸ்கூலோட நம்பிக்கை நட்சத்திரங்கள் இப்போ போய் பவானி  இப்படி லீவெடுக்கறா. நீயும் எதையோ பறி குடுத்த மாதிரியே இருக்க. என்ன ஏதாச்சும் லவ் அஃபேரா..?”

“ஐயய்யோ..அப்படி எல்லாம் இல்ல டீச்சர்…பவானியை நினைச்சுதான் என்னோட கவனமும் சிதறிப் போகுது டீச்சர். விவரம் தெரிஞ்ச நாள்லருந்து நானும் அவளும் உயிர்த்தோழிகள்.  ஆனா அவளுக்கு இப்போ நான் எதுவும் உதவி செய்ய முடியாத நிலைமைல இருக்கேங்கிறதை நினைச்சு எனக்கு அழுகை,அழுகையா வருது…”

 கதறிக் கதறி அழுத மேகலாவை சமாதானப்படுத்தி அவளிடமிருந்து விவரங்களைக் கிரகிச்சுகிட்ட நான்  அதிர்ச்சியில் உறைஞ்சு போயிட்டேன்..

“டீச்சர்..டீச்சர் ..தயவு செஞ்சு இந்த விஷயத்தை யாரு கிட்டவும் சொல்லிடாதீங்க டீச்சர்..வெளில தெரிஞ்சா பவானிக்குத்தான்  ஆபத்து “   பதறிப் போன மேகலாவை அணைச்சு ஆறுதல் சொன்னேன்..

“பயப்படாத மேகலா..நான் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்..ஆனா..உன்னோட உயிர்த்தோழிய எப்படியாவது இந்தப் ப்ரச்னையிலிருந்து மீட்டாகணும் இல்லையா..? அதுக்கு உன்னோட உதவி எனக்கு கண்டிப்பா வேணும்..நான் சொல்றதைத் தட்டாம செய்யணும் சரியா..” என்று அவகிட்ட   வாக்குறுதி வாங்கிட்டு அவளை வகுப்பறைக்கு அனுப்பி வெச்சேன். அதுக்கப்புறமா என்ன செய்யலாம்னு யோசனை பண்ணினேன்…

கிராமமும் இல்லாத நகரமும் அல்லாத இந்த இரண்டுங்கெட்டான் ஊரில் குடிகாரர்களும், சூதாடிகளும்தான் நிறைய. படிப்பறிவு என்பதே மருந்துக்கும் கிடையாது.  இந்த லட்சணத்தில் பவானியை மீட்க யார்கிட்ட உதவி கேக்கறது? இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிஞ்சா எங்கதி  அவ்வளவுதான்.

“ஸ்கூலுக்குப் போனியா..பாடம் எடுத்தியா..வீட்டுக்கு வந்தியான்னு இருக்கணும். இந்த ஊரு பொல்லாத ஊரு..யார் கிட்டயும் வாய் குடுத்து மாட்டிக்காதே..உன்னோட சமூக சேவை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிரு ஆமா..சொல்லிட்டேன்..”

இந்த ஊருக்கு மாறுதலாகி வந்த நாள் முதல் தினமும் அவர்  என்னை எச்சரித்தே அனுப்புவது வழக்கம்..ஆனா பவானியை இந்தப் ப்ரச்னையிலிருந்து மீட்டு அவளுக்கொரு நல்வாழ்வு தரணும்னு என்னோட உள்மனசு என்னைத் தூண்டிகிட்டே இருந்தது. நீண்ட யோசனைக்குப் பிறகுதான் உங்கிட்ட உதவி கேக்கலாம்னு எனக்குத் தோணுச்சு.

பவானியப் பத்தி மேகலா சொன்ன விஷயங்கள் இதுதான்.

பவானியின் அம்மா ஒரு விவசாயக் கூலி.  அப்பா ஒரு மொடாக் குடியர். ஒரு முறை விஷச்சாராயம்னு  தெரியாம குடிச்சு இறந்து போயிட்டார்.

.ஒருமுறை பக்கத்து ஊர் திருவிழாவில் பவானியைப் பாத்த ஒரு மைனர் ,  அவள் மீது காம வயப்பட்டு அவளிடம் பேசப் போக, அவனோட ஆபாசப் பேச்சுகளும், காமந்தகாரப் பார்வையும் அருவருப்பைத் தர அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல்  ஓடிப் போய் விட்டாளாம்.




அதன்பிறகு அவளை வழிக்குக் கொண்டு  வர, கடன் சுமையில் இருந்த பவானியின் தாய்க்குப் பணத்தாசை காமிச்சு அவளைத் தன் கைக்குள் போட்டுக்கிட்டான்..  ஆனா.. பவானியோ கழுவுற மீனில் நழுவுற மீனாக அவன் கையில் சிக்காமல் போக.. கொந்தளிப்பான மனநிலையில் இருந்தவனுக்குப் பெண்களின் கருமுட்டைக்கு ஏக டிமாண்ட் இருப்பதும், அந்த வியாபாரம் தொடர்பான விவரமும் தெரிஞ்சிருக்கு. . மிகவும் நல்லவன் போல அவம்மா கிட்ட போய்,..

 “பவானி ரொம்ப பலவீனமா இருக்கா..பத்தாங்கிளாஸ்ல நல்ல மார்க் வாங்கினாத்தான் டவுன் ஸ்கூல்ல ப்ளஸ் டூ ல இடம் கிடைக்கும்.,  எனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டரிடம் கூட்டிப் போய் சத்து மாத்திரை,டானிக் எல்லாம் வாங்கித் தர்றேன்” னு சொல்லவும் அவம்மா பவானியை அவனோட அனுப்பி வெச்சிருக்கா..

பவானியின்   படிப்பார்வத்தை காரணம் காட்டி அவளை நம்ப வெச்சு..மாசாமாசம் அவளுக்குக் கருமுட்டை உருவாகற நாள்ல அவளை அந்த மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் கருமுட்டை எடுக்க வெச்சு  பணம் பண்ணியிருக்கான்.. இதற்கு அந்த ஆஸ்பத்திரி டாக்டரும்,இன்னொரு புரோக்கரும் மட்டுமில்ல பவானியோட அம்மாவும்  இவனோட கூட்டுக் களவாணிகள்.

ஆரம்பத்தில் இவனோட பசப்புத் தனத்தை உண்மைன்னு நம்பின பவானி , ஒருமுறை அந்த மைனரும் டாக்டரும் பேசியதை மறைஞ்சிருந்து  கேட்டிருக்கா. அவளுக்கு சந்தேகம் வந்து அடுத்த மாசம் டாக்டர் கிட்ட வர மாட்டேன்னு முரண்டு பிடிச்சிருக்கா.

“எனக்கு உங்க விவகாரம் எல்லாம் தெரிஞ்சு போயிடுச்சு..உங்களைப் பத்தி போலீஸ்ல புகார் குடுக்கப் போறேன்” னு சொல்லி இருக்கா.

“எம் பேச்சைக் கேட்டு ஒழுங்கு மரியாதையா ஆஸ்பத்திரிக்கு  வரலேன்னா..ஊருக்குள்ள உன்னப் பத்தியும், உங்கம்மா பத்தியும் மோசமா அவதூறு பரப்பி..உங்களை ஊருக்குள்ள நமாட வுடாம செஞ்சிருவேன்.  எம் பண பலத்தை வெச்சு உன் படிப்பை நிறுத்தி உன்னை  என் சின்ன வீடா செட்டப் பண்ணிடுவேன். இதுவரைக்கும் என்னோட விரல் நகம் கூட உம்மேல பட்டதில்ல. நீ எம் பேச்சைக் கேக்கலேன்னா உன்னை என்ன வேண்ணாலும் பண்ணுவேன்.

 அப்பறம் என்ன சொன்னே..? போலீஸ்கிட்ட போவியா..ஹஹ்ஹா ..போலீசே என் சட்டைப் பைலதான்”னு பேசிட்டிருக்கும்போதே அவனோட கை அவ மேனியில் விளையாட ஆரம்பிக்க,

 .

அம்மாகிட்ட போய் முறையிட்டவளுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சிதான்.

“அதெல்லாம் எனக்கும் தெரியும்டி.மாசாமாசம் உருவாகி, வீணாப்போகிற   கருமுட்டைக்கு இம்மாந் துட்டு கிடைக்கறப்ப எதுக்கு அத  வீணாக்கணும்? வாய மூடிட்டு அந்த தம்பியோட போ. இந்த விஷயம் வெளில தெரிஞ்சுது,.உன்னைப் படிக்க அனுப்ப மாட்டேன்..தெரிஞ்சுக்க.”!

“அம்மா.. அடிக்கடி இப்படி செஞ்சா எனக்குத்தான் ஆரோக்கியம் கெட்டுப் போகும். அதுவுமில்லாம இது சட்டவிரோதமான செயல்மா. அந்த மைனர் நல்லவன் இல்லம்மா. எம்பேச்சைக் கேளும்மா…”

கதறி அழுதவளைத் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறது தாயுருவில் இருந்த அந்த பணத்தாசை பிடித்த பேய்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” னு  இந்த மாதிரி ஆட்களைப் பார்த்துதான் பாரதியார் பாடியிருப்பாரோ?.

இந்த சட்ட விரோத செயல் தொடர்கதையாக… மாதமொருநாள் பவானி பள்ளிக்கு விடுமுறை எடுப்பதும் தொடர்கதையாக, மேகலாவுக்கு சந்தேகம். அதுவுமில்லாம படிப்பில் சூட்டிகையான பவானி மொகத்துல எப்பவும் ஒரு சோகநிழல். ஏதோ ஒரு தொய்வு. அவளிடம் கிடுக்கிப்பிடி போட்டு விசாரிக்க..மனசு இத்துப் போன ஒரு தருணத்தில்..ஆருயிர்த் தோழியிடம் ஆதியோடந்தமாக எல்லாத்தையும்  சொல்லி..யார்கிட்டவும் சொல்லக் கூடாது னு சத்தியமும் வாங்கிகிட்டா.

.

என் மூலமா   தன் தோழிக்கு ஒரு விடிவுகாலம் பிறக்குங்கிற நம்பிக்கையில் மேகலா எல்லா உண்மைகளை சொல்லிட்டா. நான் உங்கிட்ட உதவி கேக்கறேன் கங்கா. எப்படியாவது அந்த சதிகாரனிடமிருந்து பவானியை மீட்டுக் கொடுன்னு உங்கிட்ட கெஞ்சிக் கேக்கறேன்”னு முடிச்சிருந்தாங்க.

 இதைக் கேட்டு பதறிப் போன கங்கா அக்கா, பெரிய போலீஸ் அதிகாரிகளைத் துணைக்கு அழைச்சுகிட்டு அந்த ஊருக்குப் போய்  குறிப்பிட்ட அந்த ஆஸ்பத்திரியைச் சுத்தி வளைச்சு சம்பந்தப்பட்ட ஆட்களைக்கைது செய்து.ஆவணங்களைக் கைப்பற்றி, குற்றவாளிகளைக் கோர்ட்டில் ஆஜர் படுத்திட்டாங்க.

உப்பைத் தின்னா  தண்ணி குடிச்சேயாகணும்கிற நியதிப்படி தப்பு செஞ்ச பவானியோட அம்மாவும் இப்போ ஜெயிலில்!  நிர்க்கதியா விடப்பட்ட பவானி,  அக்காவோட அரவணைப்பில்.எங்க தோழமை நெருக்கத்தில் நிம்மதியா இருக்கா. அநீதி கண்டால் அழக் கூடாது.ரௌத்திரம் பழகணும் னு பவானி புரிஞ்சுகிட்டா! அதுவும் எங்கிட்ட ரொம்பவே பிரியமா இருக்கா. என்னைப் பத்தியும், நான் எப்படி கங்கா அக்காகிட்ட வந்தேன்னு தெரிஞ்சுக்கறதுலயும் ரொம்ப ஆர்வமா இருக்கா. நீங்களும் ஆர்வமா இருப்பீங்க. இதோ என்னைப் பத்தி நான்..!




What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!