Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-2

2

“ஒண்ணுமில்லைம்மா, வழக்கம் போல அவர் குல பெருமையை பேசிட்டிருந்தாரு” சகுந்தலா சிறு சலிப்போடு சொல்ல மானசி “பாட்டி” என அதட்டினாள்.

“ஜாதி பற்றி பேசுவதே தப்பு, இதில் ஒரே ஜாதிக்குள் இருந்து கொண்டு அந்த வகையறா இந்த கூட்டம் என்று ஏன் பாட்டி இப்படி பிரித்து வைக்கிறீர்கள்?”

 ரோஜாமணி பேத்தியை முறைத்தார். ” ஆரம்ப காலத்தில் சாதி என்ற ஒன்றே கிடையாது தெரியுமா? அவரவர் செய்யும் தொழிலுக்கு தகுந்த மாதிரி அவர்களை பெயரிட்டு அழைத்தார்கள். அப்படி பரம்பரை பரம்பரையாக ஒரு தொழிலை பார்த்தவர்களுக்கு அந்த தொழில் சொந்தம். அந்த தொழிலை முன்னிட்டு அவர்கள் பரம்பரைக்கு ஒரு பெயர் வைக்கப்பட்டது. அதுதான் இந்த வகையறா, கூட்டம் என்று சொல்லிக் கொள்வது. பின்னாளில் ஒரே தொழிலை நிறைய குடும்பங்கள் எடுத்து செய்ய ஆரம்பிக்க அந்த குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து ஒரே ஜாதி என்று ஆனது. ஆனால் ஆரம்பத்தில் அந்த தொழிலை செய்தவர்கள் பெருமையாக தங்கள் குடும்ப பெயரைச் சொல்லி அந்த வகையறா என்று சொல்லிக் கொண்டனர். இதுதான் ஜாதிக்கு முந்தைய நிலை. இதில் பிரிவினையோ ஒருவரை தாழ்த்துவதோ கிடையாது. எங்கள் குடும்பத் தொழில் என்று அறிவிக்கும் பெருமிதம் மட்டும்தான். நீயாக இதற்கு வேறு ஏதாவது முலாம் பூசிக் கொண்டால் நான் அதற்கு பொறுப்பேற்க முடியாது”

மானசி விழி விரித்தாள் .அட இந்த வகையறா, கூட்டங்களுக்கு பின்னால் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறதா, அடிக்கடி இப்படி குறித்து பேசும் பாட்டியிடம்  சண்டை போட வேண்டும் என்று நினைப்பாள். இன்று கிடைத்த விளக்கம் அவளை ஆச்சரியப்படுத்தியது.

ஆக பாட்டி இவ்வளவு நாட்களாக அந்த கூட்டம் இந்த வகையறா என பெருமை பேசியது அவர்கள் பரம்பரை குடும்பம் பெருமை போலும். ஆணோ பெண்ணோ அவரவர் பிறந்த வீட்டு பெருமை என்பது இருக்கத்தானே செய்யும்! சிறு நெகிழ்வுடன் பாட்டியை பார்க்க, ரோஜாமணி “சக்கு இந்த பருப்புத் துவையல்ல இரண்டு கல் உப்பு கூடுதலா போட்டிருக்கலாம்ல… நாக்குக்கு ருசியே இல்லை” சலித்தபடி கேப்பை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்.

” என்ன பாட்டி உன்னை பேசியே கவிழ்த்திருப்பார்களே?” கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தான் வெற்றிவேலன்.

“அண்ணா இந்த வகையறா…”  ஆரம்பித்தவளை கையுயர்த்தி நிறுத்தினான். “தாயே உனக்கு முன்னால அந்த கதையை நான் பல தடவை கேட்டாச்சு. இப்போ உன் பங்குக்கு நீயும் திரும்ப ஆரம்பிக்காதே”

“என்னண்ணா கொட்டப்பாக்கம் வகையறா வாரிசு இப்படி குடும்ப பெருமை தெரியாமல் பேசுகிறாயே!” மானசி கிண்டல் செய்தாள்.

“வேண்டாம் மானசி இந்த பேச்சு பேச நான் விரும்பவில்லை”எழுந்து போய் விட்டான்.மானசி  பாட்டியை பார்க்க அவரோ ஓரக்கண்ணால் வெற்றி எழுந்து போவதை பார்த்த பிறகும் “சக்கு கொஞ்சம் தூள் உப்பாவது எடுத்துட்டு வா, லேசா தூவினால்தான் இது தொண்டைக்குள் இறங்கும்” என கேட்டுக் கொண்டிருந்தார்.

“தாய்க்கிழவிக்கு கொழுப்பு ஜாஸ்தி” முணுமுணுத்து விட்டு மானசி எழுந்து அண்ணனை தேடி போனாள்.

முன் வராண்டாவில் இருந்த மூங்கில் சேரில் சாய்ந்து கொண்டு வாசலில் இருந்த பன்னீர் மரத்தை வெறித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

“அண்ணியிடமிருந்து போன் வந்ததா அண்ணா?” மென்மையாக கேட்டாள்.

ஒரு விரக்திச் சிரிப்பை சிந்தினான். “ஆஹா வெண்ணத்தி பரம்பரை  இறங்கி வந்து போன் செய்வார்களாக்கும்?”




” சரிண்ணா ,அவுங்க ஒட்டகத்திலேயே போகட்டும். நீங்கள் ஃபோன் செய்யலாமே?”

” நான் பலமுறை முயற்சி செய்து விட்டேன்மா. எதுவும் நடக்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்”

“அதெப்படிண்ணா விட முடியும்? நமக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்”

“ஆனால் அந்தப் பதிலை அவர்களாக சொல்வதாக இல்லை. நாமேதான் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்படி கேட்டு வாங்கி வருவதற்குத்தான் இங்கு ஆட்கள் இல்லை”

மானசிக்கு சுருக்கென தைத்தது.

“அண்ணா கணவன் மனைவிக்குள் மூன்றாவது ஆள் எதற்கண்ணா? நீங்களேதான்…” வெற்றி தலையசைத்து மறுத்தான்.

“என்னால் முடிந்த முயற்சிகளை செய்து விட்டேன்மா. இனி அந்தப் பக்கம் இருந்து ஏதாவது முயற்சி வரும் வரை நானாக எதுவும் செய்யப் போவதில்லை”

வெற்றிவேலன்  பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே போய் விட மானசிக்குள் எதெதெற்கோ யார் யார் மேலோ கோபம் பொங்கியது. குதித்து புஸ்வானமாய் மேலே எழுந்த கோபத்தை உதட்டை கடித்து அடக்க முயன்றபடி தெருப் பக்கம் பார்வையை திருப்ப எதிர் வரிசையில் ஷாலினி வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

அதிகாலை நேரம், கல்லூரிக்கு கிளம்பும் தோதில் இருந்தாள். “ரூபா கிளம்பிட்டாளா ஆன்ட்டி?” இவர்கள் பக்கத்து வீட்டிற்கு குரல் கொடுத்தாள். “இதோ வந்துடுவாம்மா” ரூபாவின் அம்மா அம்பிகாவின் குரல் கேட்க மானசி வேகமாக எழுந்து வாசல் படியை விட்டு கீழே இறங்கி “அம்பி சித்தி” என அழைத்தாள்.

“வேலை முடிந்ததா?” என்று சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு “என்ன ரூபா காலையில் நீயும் ஷாலுவும் போனில் எதையோ  நாலாவது தடவை அஞ்சாவது தடவை பார்ப்பதா பேசிகிட்டு இருந்தீங்களே! அவ்வளவு இன்ட்ரஸ்டான வீடியோவா அது?” சாதாரணமாக கேட்பது போல் கேட்டவளை அடி பாதகத்தி பார்வை பார்த்தாள் ரூபா. ஷாலினியோ தெருவில் கிடக்கும் கல் எடுத்து இவள் மண்டையை உடைக்கும் ஐடியாவில் இருந்தாள்.

இதற்கெல்லாம் பயப்பட மாட்டேனாக்கும் என இருவரையும் அலட்சிய பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் போனாள் மானசி.

“ரூபா உள்ளே வா” அம்பிகாவின் அதட்டல் அவள் பின்னால் கேட்க ஒருவகை திருப்தி அவளுள். இரண்டு அடி கூட அடிக்கட்டும். படிக்கிற வயதில் கண்டபடி சிந்தனையை அலைய விட்டுக்கொண்டு… இரு பெண்களுக்கும் மனதிற்குள் பழிப்பு காட்டிக் கொண்டாள்.

பொங்கிக் கொண்டிருந்த மானசியின் கோபத்திற்கு அடுத்த இரை.. பாட்டி ரோசாமணி. அண்ணனின் வாழ்க்கையில் இந்த பாட்டிக்கு எவ்வளவு அலட்சியம் அல்லது அவர்கள் பிறந்த வீட்டு பக்கம் எவ்வளவு ஆதுரம்!?

“உங்கள் கூட்டத்தைப் பற்றி இவ்வளவு பெருமை பேசுறீங்களே பாட்டி! அந்த உங்க பிறந்த வீட்டு கூட்டத்து பொண்ணுதானே சிவஜோதி. இப்படி அண்ணனோட வாழ்க்கையை கெடுக்கிறியேன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா?”

மென்மையாய் பறித்து நிழலில் சுத்தமான வெள்ளைத் துணியில் உலர்த்த பட்டிருந்த ரோஜா இதழ்களை பார்வையிட்டபடி இருந்த ரோஜாமணி திரும்பி மானசியை முறைத்தார்.

” என்னை கேட்டா இந்த கல்யாணம் நடந்தது? ” மானசி தலை குனிந்து கொண்டாள்.

” அண்ணன் லவ் பண்ணினாரு. நாமெல்லாம் சம்மதிக்க மாட்டோம்னு அவரே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதற்காக அவரை இப்படியே விட்டு விடுவதா?” முதலில் போல் உயர்ந்த அதிகாரம் இல்லை மானசி குரலில்.

 “பெரியவங்க ஒன்னு சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்டி. சொல்ல சொல்ல கேட்காமல்  அவளையே கட்டிக்கிட்டான். இப்போ அனுபவிக்கிறான். இதுல நான் என்ன செய்ய முடியும்? நான்தான் உன் அம்மாவை இந்த கூட்டத்துல கல்யாணம் பண்ணி கொடுத்த நாளிலிருந்து ஏன் பிறந்த வீட்டு வகையறாவை ஒதுக்கிட்டு இங்கேயே உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.என்னால் எப்படி அங்கே போய் பேச முடியும்?”




நியாயமான கேள்விதான். ஆனாலும் மானசிக்கு பாட்டி நினைத்தால் முடியும் என்றே தோன்றியது.பிறந்த வீட்டு சொந்தங்களை விட்டு இங்கே வந்து உட்கார்ந்திருந்தாலும் பாட்டிக்கு தனது பிறந்த வீட்டு ஆதிக்கம் குறையவில்லை என்றே மானசி நினைத்தாள்.

“ரொம்ப புத்திசாலித்தனமா ஒதுங்கிடலாம்னு நினைக்கிறீங்க பாட்டி.இதோட விளைவு என்னவாக இருக்கும்னு நினைத்து பார்த்தீர்களா?”

“அதையும் நீயே சொல்லிடுடி பெரிய மனுசி”

“உங்கள் பிறந்த வீட்டிலிருந்தே யாருமே நம்ம  பக்கமே வர முடியாமல் போய்விடும்.உங்க வெண்ணத்தி  கூட்டத்தினர் நம்ம தெரு பக்கம் மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் போயிடும் தெரியுமா?” கர்வத்துடன் மானசி தலைநிமிர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே தெருவில் ஏதோ பரபரப்பு எழுந்தது.

பாட்டி ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு மானசியை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துவிட்டு வீட்டிற்குள் போனார்.

மானசி அவசரமாக வீட்டு வாயிலுக்கு வர மிகச்சரியாக எதிர் வீட்டில் ஷாலினியும் பக்கத்து வீட்டில் ரூபாவும் ஆர்வமும் ஆசையும் மின்னும் முகங்களுடன் தோன்றினர்.

இவர்கள் இருவருக்கும் இன்னமும் புத்தி வரவில்லையா? மானசி அவர்களை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த சிறு பெண்களின் ஆர்வத்தையும் மானசியின் கோபத்தையும் ஒருங்கே பெற்றுக்கொண்டு சிறிதும் அசராமல் பைக்கில் நிதானமாக தெருவுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அந்த யு ட்யூப் காரன்.




What’s your Reaction?
+1
37
+1
17
+1
1
+1
3
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!