Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-4

4

“இன்று எப்படியாவது திவ்யாவிடம் பேசி விடும்மா” கற்பகம் சொல்ல தாரணி வேறு வழியின்றி தலையசைத்தாள். சும்மாவே உர்ரென்று இருப்பாள். இதில் கல்யாண விஷயம் வேறு பேசப் போனால் அவ்வளவுதான்…!

இடையிடையே தன்னுடைய திருட்டுத்தனத்தை அறிந்து கொண்டவள் என்ற பதட்டம் வேறு தாரணிக்கு இருந்தது. ஒற்றை பெண்ணாக இளவரசியாக வளைய வரவேண்டிய தனது வீட்டில் போட்டியாக இன்னொரு பெண்ணாக வந்து சேர்ந்தாளே, என்று திவ்யாவிற்கு தன் மேல் ஒருவகை வெறுப்பு இருப்பதை தாரணி அறிந்து கொண்டபோது, அவளுக்கு மிக நன்றாகவே உலகத்தை புரிந்து கொள்ளும் வயது வந்திருந்தது.

நானா? அவளா? என அடிக்கடி பெற்றோருக்கு திவ்யா வைக்கும் பரீட்சையை உணர்ந்த தாரணி அவளுடனான சிறு சிறு மோதல்களை தவிர்க்க ஆரம்பித்தாள். சரி என்று பெரும்பாலும் தலையசைத்து போய் விடுவதை வழக்கமாகக் கொண்டாள். ஆனாலும் எதையாவது சாக்கிட்டு அவளை வம்பிழுக்க திவ்யா தவறுவதில்லை.

என் அப்பா என் அம்மா என் வீடு என என்னில் அதிக அழுத்தம் கொடுப்பவள், இந்த வீட்டில் நீ அதிகப்படி என்ற பார்வையை அடிக்கடி இவளுக்கு கொடுப்பாள். அது போன்ற சமயங்களிலெல்லாம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவாள் தாரணி.

கற்பகமோ பெண்கள் இருவரும் ஒத்த தோழிகளாய் பழகுவதாக எண்ணிக்கொண்டு மகளின் திருமண விஷயத்திற்கு தாரணியை தூது போகச் சொல்கிறாள். உண்மையை சொல்வதானால் பெற்றோருக்கே மகளிடம் திருமண விஷயம் பேச ஒருவகை பயம். சற்றே தள்ளியிருந்து கொண்டு தாரணியை வெள்ளோட்டம் விடுகிறார்கள்.

பஸ்ஸில் பிடிவாதமாக அருகே அமர்ந்து கொண்ட தாரணியை முறைத்தாள் திவ்யா. இப்போது விட்டால் இவளை பிடிக்க முடியாது என்று உணர்ந்திருந்த தாரணி அவள் முறைப்பை அலட்சியப்படுத்தினாள். “உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் திவ்யா”

“அந்த கண்றாவியை வீட்டில் வைத்தே பேசி தொலைய வேண்டியதுதானே?”

நீதான் வீட்டிற்குள் நுழைந்ததும் போனிலிருந்து தலையை நிமிர்த்துவதில்லையே மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் “அங்கே பேச முடியாது ,உன் திருமண விஷயம் பேச வேண்டும்”

திடுக்கிட்டு அவளைப் பார்த்த திவ்யாவின் முகம் அடுத்த நொடியே இகழ்வாய் மாறியது. “உனக்கு கல்யாண ஆசை வந்தால் என் தலையை ஏன் உருட்டுகிறாய்?”

” எனக்கு கல்யாண ஆசையா? எப்படி சொல்கிறாய்?” பொறுமையாக கேட்டாள்.




“மரமேறி குதித்து வெளியே போய் வருபவளுக்கு வேறென்ன ஆசை இருக்க முடியும்?” தாரணி பற்களை கடித்து தன்னை அடக்கிக் கொண்டாள்.

நீயும்தான் எத்தனையோ முறைகள் குதித்து போயிருக்கிறாய்! எத்தனை திருமணங்கள் முடித்துவிட்டு வந்தாய்? இப்படி கேட்கத் துடித்த நாவை அடக்கியவள், “நான் சும்மா பக்கத்து கடையில் போய் டீ குடித்துவிட்டு வந்தேன் திவ்யா” பொறுமையாக விளக்கினாள்.

” அந்த டீக்கடையில் இருந்த மன்மதன் யாரோ?” திவ்யா கேட்க தாரணியின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. ஒருவகையில் திவ்யா கேட்பதும் உண்மைதானே?புவனாவுக்காக என்றாலும் அங்கே போனது அவனை பார்க்கத்தானே…?

தவறு செய்தது போல் திருதிருத்தவளை கூர்ந்து பார்த்தாள் திவ்யா “என்ன நான் சொல்வது சரிதான் போல?” 

தாரணி தலையை உலுக்கி கொண்டாள்.”உளறாதே திவ்யா.ஒரு ரோட்டோர ஹோட்டல்காரன் மேல் அபிப்ராயம் வைக்குமளவு பலவீனமானவள் அல்ல நான்.அந்த ஆள் மூஞ்சியும்,கலரும்..அதை விடு ,நீ பேச்சை மாற்றாதே. உனது திருமண விஷயம் பேசிக் கொண்டிருந்தோம்”

“என் திருமணத்தை பற்றி பேச நீ யாரடி? அதற்கு எனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள். உன்னை போல் இல்லை நான்” மளுகென்று உடைந்த மனதை தடவிக் கொடுத்து சரி செய்தபடி, “உன் திருமண பேச்சை எடுத்திருப்பது உன் அப்பாதான். மற்றபடி… எனக்கும் அப்பா இருக்கிறார்” என்றாள் தாரணி.

” ஓ.. உன் அப்பா உனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டாரோ?”

” நான் இன்னும் படித்து முடிக்கவில்லையே! இப்போது எப்படி திருமண ஏற்பாடு செய்வார்?”

” அதேதான் நானும். படிப்பை முடிக்கவில்லை. இப்போது என் திருமண பேச்சு தேவையும் இல்லை. இதனை உன்னை தூது அனுப்பினார்களே அவர்களிடமே போய் சொல்” கல்லூரி வந்து விட்டிருக்க திவ்யா இறங்கி போய்விட்டாள்.

“ஏன்டி என்னிடம் உட்கார வராமல் உன் அக்காவுடன் போய் உட்கார்ந்து கொண்டாய்?” புவனா குறைபாட்டுடன் வந்து நிற்க, தாரணிக்கு கோபம் வந்தது.

” ஏன்டி நீ சைட் அடிக்கிறதுக்கு நான்தான் கிடைச்சேனா? உனக்கு தேவைன்னா நீயே ஏறி குதிச்சு அந்த கரியனை பார்க்க போயிருக்க வேண்டியதுதானே? என்னை ஏன் படுத்துற?” தோழியின் திடீர் கோபத்திற்கு காரணம் புரியாமல் விழித்தாள் புவனா.

நாக்கை கடித்துக் கொண்ட தாரணி “ஏய் சாரிடி! ஏதோ கோபம்!” தோள் தொட்டு சமாதானப் படுத்தினாள்.

“அந்த திவ்யா கூட உட்கார்ந்துட்டு வந்த இல்ல? காரணமில்லாத கோபம்  வரத்தான் செய்யும். வா  கிளாசுக்கு போகலாம்” தாரணி தோழியுடன் இரண்டு எட்டு எடுத்து வைக்கவும, “அப்புறமாக டீ குடிக்க போகலாம்” என முடித்தாள்.




நொட்டென அவள் தலையில் கொட்டினாள். “கொழுப்புடி உனக்கு! இன்னைக்கெல்லாம் நான் வரமாட்டேன். நீயே போய்க்கொள்”

“சரிதான் சும்மா வாடி! ஆமா அது என்ன பெயர் சொன்ன?”

” என்ன சொன்னேன்?” தாரணிக்கு சுத்தமாக நினைவில் இல்லை.

” ஏதோ கரியன் என்று…”

முதல் நாள் இரவு அந்த சந்தன பொட்டு டீக்கடைக்காரனின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி இருந்தபோது, ஏனோ இந்த பெயர் தாரணியின் மனதில் தோன்றியது. இன்றோ அவளை அறியாமல் வாயிலும் வந்து விட்டிருக்கிறது.

“ஆமாண்டி கருப்பாக இருப்பதால் கரியன்…”

தலை சாய்த்து யோசித்த புவனா முகம் மலர்ந்து “அழகான பெயர்டி ,இதையே அவருக்கு வச்சிடலாம்”

“அடடா! பெற்ற தாய் தோற்றால் போ”

“ஏய் பெயர் வைத்தது நீ, கிண்டல் செய்வது என்னையா?”

எவ்வளவோ கேலி செய்து பேசினாலும் அன்று மாலையும் தாரணியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துப் போனாள் புவனா.

“தம்பி சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டாரேம்மா, நான்தான் டீ போடணும். என்ன போடவா?” டீ மாஸ்டர் தன் முன்னந்தலையை தடவிக் கொண்டார்.

“போய்யா நீயும் உன் டீயும், ஒரே உவ்வே… வாயில் வைக்க விளங்கல” அவர் முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டு தாரணியையும் இழுத்துக் கொண்டு திரும்பி விட்டாள் புவனா.

“கடவுளே முருகா! உனக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா? ஒரே ஒரு தடவைதானே அவரை பக்கத்தில் வைத்து பார்த்தேன்.”

“அடிப்பாவி!அந்த கடவுளையே தூது அனுப்புகிறாயா?”

“ஆமாண்டி காதல் தூது”

“என்னது காதலா? என்னடி பெரிய வார்த்தை எல்லாம் பேசுகிறாய்?, நான் சும்மா கிரஷ்னு…”

“கிரஷ்ஷோட அடுத்த கட்டம் என்னடி? காதல்தானே?”

தாரணி தலையில் அடித்துக் கொண்டாள்.”பார்த்த நாலே நாளில் காதலா?”

“காதல் வர்றதுக்கு ரெண்டே நிமிடம் போதும் தெரியுமா?”

தாரணிக்கு ஏனோ புவனாவை கன்னத்தில் அறையும் வேகம் வந்தது. எதற்கு இந்த பெண் இப்படி உளறிக் கொண்டிருக்கிறாள்?

அந்த நேரத்தில் தாரணியின் போன் ஒலித்ததால் புவனா தப்பித்தாள். “தாரு நீ எப்படியாவது திவ்யாவை கூட்டிக்கொண்டு உடனே வீட்டிற்கு வா” கற்பகம் போனில் பேசினாள்.

“எதற்கு பெரியம்மா?”

“வாயேன் சொல்கிறேன். ஒரு விஷயமும் சொல்லாமல் அவளை கூட்டி வா ” எந்த விஷயம் தெரிய வேண்டாம்…தாரணிக்கு மண்டை உடைவது போல் இருந்தது.

கற்பகம் பேசியதன் காரணம் வீட்டிற்கு போனதும் தெரிந்தது. அங்கே திவ்யாவிற்கு பார்த்திருந்த வரன் வந்திருந்தார். இது தாரணியை பெரிய அளவில் பாதிக்கவில்லை ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத அதிர்ச்சியை தந்தது அந்த மாப்பிள்ளை…

மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவன் பக்கத்து ஹோட்டல் சந்தன பொட்டுக்காரன்.




What’s your Reaction?
+1
32
+1
22
+1
4
+1
6
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!