Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-3

3

உறுமிக் கொண்டிருந்த ஸ்கூட்டரின் முன்னும் பின்னும் ஏற்றிக் கட்டிய சாமான்களுடன்,கால்களை தரையில் ஊன்றி அவன் நின்றிருந்தான். 

“டீயா ? காபியா ?  ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணினீங்கன்னா புரோட்டா ரெடியாகிடும். சூடா சாப்பிடலாம். நம்ம கடையில வாழை இலை பரோட்டா ரொம்ப நல்லா இருக்கும். வாங்க உள்ளே வந்து உட்காருங்க” ஹோட்டல் காரனாக அவன் அழைக்க, புவனாவும் தாரணியும் பேச முடியாமல்  தடுமாறினர்.

அரை மணி நேரம் காத்திருந்து வாழை இலை புரோட்டா சாப்பிட்டு முடித்து எப்போது அவர்கள் திரும்பவும் கல்லூரிக்குள் போய் சேர்ந்து கொள்ள..!?

“இல்லை… வேண்டாம்… நாங்கள் போகிறோம்” தாரணி ஒரு எட்டு எடுத்து வைத்து விட, புவனா அவள் கைப்பற்றி இழுத்தாள்.

இருவரையும் ஆச்சரியமாக பார்த்த அவன் தாரணி எட்டு வைத்த திசையை கவனித்து விட்டு ” இந்த  காலேஜ்ல படிக்கிறீங்களா?” என்றான்.

“செத்தேன், நாம காலேஜ் கட் பண்ணிட்டு வந்தது எல்லாருக்கும் தெரிய போகுது வாடி ஓடிடலாம்”

முணுமுணுத்த தாரணியை அலட்சியப்படுத்திய புவனா “நல்ல மசாலா டீ ,நீங்களே போட்டு தரணும்” என்று விண்ணப்பித்தாள்.

” அதற்கென்ன போட்டு கொடுத்துட்டா போச்சு, வாங்க உட்காருங்க” கடைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளில் ஒன்றை காட்டினான்.

“ஏய் இங்கே உட்கார்ந்து எப்படி சாப்பிட முடியும்? அதோ நம் வாட்ச்மேன் கண்ணில் பட்டது தொலைந்தோம்”

“சரிடி கடைக்குள்ள போய் உட்கார்ந்துக்கலாம்” புவனா தாரணியை இழுத்துக்கொண்டு கடைக்குள் கொஞ்சம் ஓரமான மேஜையில் போய் அமர, அவன் டீ போட ஆரம்பித்திருந்தான்.

“இந்த டீ ஆத்துற ஸ்டைல்தான்டி, அட…அட…இதுக்குத்தானே டீ கேட்டேன்” கையில் கன்னம் தாங்கி அவனை ரசித்துக் கொண்டிருந்தவளின் கழுத்தை நெரித்தாலென்ன தாரணி பற்களை நறநறத்தாள்.

ஏலக்காய் இஞ்சி மணக்க முன்னால் வைக்கப்பட்ட டீயில் இருவரது மன இறுக்கமும் குறையவே செய்தது. அளவான இனிப்பும் மசாலாவும் கலந்த டீ அமிர்தமாய் தோன்றியது.

“ரொம்ப ருசியாக இருந்தது சார்!” பாராட்டுதலை முதலில் சொன்னவள் தாரணி. 

“ரொம்ப நன்றிங்க, நம்ம கடையை பத்தி நீங்க உங்க காலேஜ்ல எல்லார்கிட்டயும் சொல்லணும்” இவர்களை விளம்பர தூதர்களாக்க முயன்றான்.

“நான் சொல்றேங்க” அவன் கடை சிம்பலான பட்டாம்பூச்சி பதித்த டி-ஷர்ட்டை போட்டுக் கொள்ளாத குறையாக மண்டியிட தயாராக இருந்தாள் புவனா.

“சந்தோசம்! போயிட்டு வாங்க. கை 

குவித்தான். திரும்பும் போது பிரமிப்போடு புவனா பேசியபடி வர ஒன்றும் பேசாமல் மௌனமாக வந்தாள் தாரணி.

“ஏய் என்னடி ஒரு மாதிரி பேஸ்து அடிச்சது போல இருக்கிற? நீயும் இம்ப்ரஸ் ஆயிட்டியா?” புருவத்தைச் சுழித்து ஒரு மாதிரி கேட்டாள்.

“மண்ணாங்கட்டி தப்பு செய்யும் போது தெரிய மாட்டேங்குது, இப்போ பயமா இருக்குது, குற்ற உணர்ச்சி குத்திட்டே இருக்குது” பேசியபடி இருவரும் மரம் ஏறி இறங்கி கல்லூரி மைதானத்தில் கால் பதித்த போது அதிர்ந்தார்கள்.




 அவர்களுக்கு எதிரே திவ்யா இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“தாரு ரொம்ப தேறிட்டேடி! யாரை மீட் பண்ணிட்டு வர்ற?”

“பக்கத்து கடை…” என்று ஆரம்பித்து விட்ட புவனா காலை ஓங்கி மிதித்தவள்,” சும்மா வெளியே போய் ஒரு டீ சாப்பிட்டு வர்றோம்” என்றாள்.

இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு “நம்பல” என்றாள் திவ்யா்

“பிராமிஸ் திவ்யாக்கா” புவனா தன் தலையில் கை வைத்தாள்.

“ம்..இருக்கட்டும் இதெல்லாம் எனக்கு பின்னாடி உதவும்” திவ்யா போய்விட, “உன் திவ்யாக்கா இதுக்கு முன்னாடி பல தடவை இந்த மாதிரி ஏறி குதிச்சிருக்காங்க தெரியுமா?” புவனா தாரணிக்கு தகவல் கொடுத்தாள்.

 தாரணியின் மனம் அந்த தகவலை கவனிக்காது திவ்யா சொல்லிவிட்ட போன ‘எனக்கு உதவும்’ வார்த்தைகளிலேயே நின்றது. 

ஏனோ ஒருவித பயம் தோன்றி மனதை பிசைந்தது.

 அன்று மாலை வீட்டிற்கு திரும்பியவளிள் மனம் அதிர்ந்தது. அதற்குள்ளா திவ்யா எல்லோருக்கும் சொல்லிவிட்டாள்? ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவரை வெறித்தாள்.

“தாரணி உள்ள வாம்மா! அப்பா வந்திருக்கிறார்” கற்பகம் சொல்ல, அதன் பிறகும் மகளை திரும்பிப் பார்க்கும் எண்ணமின்றி அப்படியே அமர்ந்திருந்தார் தசரதன்.

போன தடவை பார்த்ததைவிட இந்த முறை அப்பாவிற்கு முடி குறைந்து விட்டது.அவரின் பின் தலை வெற்றிடத்தை பார்த்தபடி மெல்ல உள் நுழைந்தாள்.” வாங்க” அவர் அருகே நின்று பொதுவாக பேசினாள்.

லேசாக அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு தலையசைத்தார் தசரதன் “நல்லா இருக்கியாம்மா?” ஒற்றை வார்த்தை விசாரிப்பு.

“நீங்க எப்படி இருக்கீங்க?”

மீண்டும் ஒரு தலையசைப்பு. “நல்லா படிக்கிறியா?”

பதிலாக தலையசைத்தாள், அவரைப் போலவே. மனதுக்குள் கேள்வி ராட்டினங்கள். இப்போது இவர் எதற்கு வந்திருக்கிறார்? திவ்யா தான் என்னைப் பற்றி எதுவும் சொல்லியிருப்பாளோ? அப்படியென்றால் வீடு இந்நேரத்திற்கு அதிர்ந்து கொண்டிருக்குமே!

ஸ்கூட்டரை வாசலில் நிறுத்திவிட்டு கனகலிங்கம் உள்ளே வர, தசரதன் மெல்ல எழுந்து நின்றார். அவரை பார்த்தும் பாராதவர் போல் கனகலிங்கம் உள்ளே நடந்தார்.” ஏங்க தாரணியோட அப்பா வந்திருக்கார்” கற்பகம் குரல் கொடுத்தாள்.

“மகளைப் பார்த்துட்டு கிளம்ப சொல்லு.என்னிடம் எதற்கு சொல்கிறாய்?” கனகலிங்கம் நடையை நிறுத்தாமல் அறைக்குள் போய் கதவை பூட்டி கொண்டார்.

தசரதனுக்கு எப்படியோ தாரணிக்கு அவமானமாக இருந்தது. வாய் திறந்தால் அழுகை வந்து விடுமோ என்ற பயத்துடன் உதடுகளை இறுக்கிக் கொண்டு வேகமாக தன்னறைக்குள் போய்விட்டாள்.

கற்பகம் சங்கடத்துடன் தசரதனை பார்க்க அவர் பரவாயில்லை என்பது போல் தலையசைத்து மீண்டும் சோபாவில் அமர்ந்து கொண்டார் “ஒரு கப் காபி கொடுங்க. குடிச்சிட்டு கிளம்புறேன்”

“மகளை எப்படி பார்த்துக்கிறோம்னு வேவு பார்க்க வந்தாரா?” அன்று இரவு உணவின்போது கற்பகத்திடம் சீறினார் கனகலிங்கம்.

“அப்படி இருக்காதுங்க,அவருக்கும் மகளை பார்க்கணும் போல இருக்காதா?”

“ஓ அப்போ அவனுக்கு மகள் மேல பாசம் இருக்குன்னு சொல்ல வர்றியா?”

“அ…அது எப்படியும் கொஞ்சமாவது பெற்ற பாசம்….”

“ஒரு மண்ணும் கிடையாது.பச்சைப் பிள்ளையை தூக்கிட்டு போயி கோவில் வாசல்ல போட்டவன்தானே இவன்? நாம மட்டும் இல்லைனா இவளை புதைச்ச இடத்தில் புல்லு முளைச்சிருக்கும்.”கனகலிங்கம் தாரணியை சுட்டிக் காட்டி சொல்ல உதடுகள் துடிக்க எழுந்து விட்டாள் தாரணி.

“எங்கே போகிறாய்? உட்கார்ந்து சாப்பிடு” கனகலிங்கம் அதட்ட, மீண்டும் அமர்ந்து கொண்டாள். ஒருவித கிண்டலோடு திவ்யாவும் சர்வேஷும் அவளை பார்க்க தொண்டைக்குள் உருண்டு கொண்டிருந்த துக்கப்பந்தை தாண்டி உள்ளே இறங்குவேனா என்று அடம் பிடித்த சாப்பாட்டை நீரூற்றி தள்ளினாள்.

“சரி பேச்சை விடுங்க,இப்படி பேசுவது தாரணிக்கு கஷ்டமாக இருக்கும்”

“ஏன் இவளுக்கு அவள் அப்பாவை பற்றி தெரிய வேண்டாமா? நான் பேசத்தான் செய்வேன்”




சொம்பில் மிச்சம் இருந்த நீரை வயிற்றுக்குள் சரித்துக்கொண்ட தாரணி எழுந்து நின்றாள் “நீங்க பேசுங்க பெரியப்பா, உங்களுக்கு உரிமை இருக்குது. என் அப்பாவை விட என் மேல் உங்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை எனக்கே அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவரை விட உங்களுக்கு தான் நான் கடமைப்பட்டிருக்கிறேன் பெரியப்பா”

குறைந்த குரலில் குன்றலாய் பேசியவள் கனகலிங்கத்திற்கு திருப்தியை தர “இனியொரு முறை மகளை எப்படி வைத்திருக்கிறோம் என்று வேவு பார்க்கும் எண்ணத்தோடு இங்கே வரக்கூடாது என்று உன் அப்பாவிற்கு சொல்லிவிடு” உத்தரவிட்டு விட்டு சாப்பிட தொடங்கினார்.

அதிர்ந்து அழும் சுதந்திரம் கூட இன்றி உள்ளுக்குள்ளேயே கண்ணீர் வடித்தபடி படுக்கையில் விழுந்தாள் தாரணி.

“அதென்ன தாரு, நீ மரம் ஏறி குதித்ததை மோப்பம் பிடித்தது போல் உன் அப்பா வந்து நிற்கிறார்?” பக்கத்தில் வந்து படுத்தபடி சீண்டிய திவ்யாவிற்கு பதில் சொல்லாமல் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

அந்த நேரத்தில் அவள் தன் தந்தையை மிகவும் வெறுத்தாள்.




What’s your Reaction?
+1
30
+1
26
+1
0
+1
1
+1
1
+1
1
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!