Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-1

1

பால் குக்கர் விசில் மெலிதாக கேட்க ஆரம்பிக்கவுமே கண்விழித்துக் கொண்டாள் தாரணி. பக்கத்து வீட்டிலிருந்து சுப்ரபாதம் லேசாக கசிந்து வந்து காதுகளில் விழுந்தது. சுவர் கடிகாரம் 6:10 என்று காட்டிக் கொண்டிருக்க பரபரப்பாக எழுந்து அமர்ந்தாள். ஆறு முப்பதுக்கு பெரியப்பா பூஜையில் அமர்ந்து விடுவாரே!

 வேகமாக கட்டிலிலிலிருந்து இறங்கி மாற்று உடைகளுடன் குளியலறைக்குள் நுழைய போகும்போது திரும்பி பார்த்தாள்.அதே கட்டிலில் அவள் அருகே படுத்திருந்த திவ்யா புரண்டு படுத்து மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

 ஒரே ஒரு வினாடி அது போல் தூங்க மனம் ஏங்கியது.மறு நொடியே அந்த எண்ணத்தை உதறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.  எம்பிராய்டரி போட்ட இளம் மஞ்சள் நிற சுடிதாருடன் வெளியே வந்தவள் நீண்ட தலைமுடியை உலர்த்த நேரமில்லாமல் ரப்பர் பேண்ட் போட்டு,நெற்றியில் மெருன் நிற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

” ஏன் இவ்வளவு லேட்?” கேட்டபடி அடுப்படிப்பில் இருந்து வந்தாள் கற்பகம். கையில் இருந்த காப்பி டம்ளரை தாரணிக்கு நீட்டினாள்.

” 12 மணி வரைக்கும் படித்தேன் பெரியம்மா. அதுதான் எழ முடியவில்லை.பூஜைக்கு பூ பறித்து வைத்துவிட்டு காபி குடிக்கிறேன்” உடன் கற்பகத்தின் கண்களில் சிறு சலிப்பு தெரிந்து மறைந்தது. காபி ஆறிவிட்டால் திரும்ப சுட வைக்க வேண்டும் என்ற சலிப்பு.

 உடன் வேகமாக காபி டம்ளரை வாங்கிக் கொண்ட தாரணி “இருக்கட்டும் பெரியம்மா, குடித்துக் கொண்டே பூப்பறித்துக் கொள்கிறேன்” வீட்டின் பின்பக்கம் இருந்த சிறு தோட்டத்தை நோக்கி நடந்தாள்.

தங்க அரளி, செம்பருத்தி, செவ்வரளி, பன்னீர் ரோஜா என பூஜைக்குரிய மலர்களை பறித்து பூக்கூடையில் நிரப்பியபடியே காபியையும் குடித்து முடித்தாள்.பூக்கூடையுடன் அவள் பூஜை அறைக்குள் நுழைவதற்கும் கனகலிங்கம் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவர் பார்த்த பார்வைக்கு அவசரமாக “கொஞ்சம் அசந்துட்டேன் பெரியப்பா.இதோ இப்போது சுத்தம் செய்து விடுகிறேன்” என்றபடி முதல் நாள் சுவாமி படங்களின் மேல் போட்டிருந்த பூக்களை வேகமாக எடுக்க ஆரம்பித்தாள். முதல் நாள் போட்ட பத்தி சாம்பிராணி சாம்பல்களையும் சுத்தம் செய்து பூஜை அறையை பெருக்கி மாப் போட்டுவிட்டு வெளியேறினாள். கனகலிங்கம் பூஜைக்கு உட்கார்ந்தார்.

“எதுவும் ஹெல்ப் வேணுமா பெரியம்மா?” தாரணி அடுப்படிக்குள் போய் கேட்டாள்.

“செய்யேன். இந்த வெங்காயத்தை உரித்து வை,தேங்காயை துருவி வை, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வை” என்று சிறு சிறு வேலைகளை கொடுக்க தாரணி அவற்றை செய்ய தொடங்கினாள்.

“தாரு, திவ்யா உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?” கற்பகம் கேட்க தாரணி நாக்கை கடித்துக் கொண்டாள்.பெரியம்மா இரண்டு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் திவ்யாவிடம் பேசுவதென்றால்…

“இன்று பேசி பார்க்கிறேன் பெரியம்மா”

“பேசுவதற்கே உனக்கு தயக்கம், என்ன செய்ய அந்த ராட்சசி எல்லோரையும் இப்படித்தான் படுத்துகிறாள்.ம்…உங்க இரண்டு பேரையும் நான்தான் வளர்த்தேன்.நீ எங்கள் மேல் நம்பிக்கை வைத்து எல்லாவற்றிற்கும் தலையாட்டுகிறாய்.ஆனால் என் வயிற்றில் பிறந்த அவள் இப்படி முறுக்கிக் கொண்டு திரிகிறாள்” வருந்திய கற்பகம், “எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்து இந்த திருமணத்தை முடித்தே ஆக வேண்டும்” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.




திவ்யாவிற்கு ஒரு திருமண வரன் பார்த்திருந்தார் கனகலிங்கம். திவ்யா கொஞ்சம் படபட அலட்டல் டைப். படித்து முடித்து இரண்டு வருடம் வேலை பார்த்து பிறகு ஒரு ஃபாரின் மாப்பிள்ளையுடன் திருமணம் என்பது திவ்யாவின் கனவு. கல்லூரி இறுதியில் இருக்கும்போதே நல்ல வரன் வந்திருப்பதாக அவளது திருமணம் விஷயம் பேசுகிறார்கள். இது குறித்து அவளிடம் பேசுமாறு கற்பகம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.

“ஜூஸில் கூலிங்கே இல்லை. இன்னொரு ஐஸ் கட்டி போட்டு எடுத்து வாங்க” சாப்பிட்ட பிறகு குடிக்க கொண்டு வந்து வைத்த சப்போட்டா ஜூஸை ஒற்றை விரலால் தள்ளினாள் திவ்யா. மகளை முறைத்தபடி ஜூஸ் தம்ளரை எடுத்துப் போனாள் கற்பகம்.

“அம்மா எனக்கு கிரீன் டீ” என்றபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் சர்வேஷ்.படித்து முடித்துவிட்டு வேலை வேட்டையில் இருப்பவன்.மொபைலை பார்த்தபடி தட்டில் இருந்த இட்லியை வாயில் வைத்துக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்தவன் மதிய சமையலுக்காக கற்பகம் வாங்கி வைத்திருந்த காய்கறி கூடையிலிருந்து பச்சை மிளகாயை எடுத்து திவ்யாவின் கையில் சொருகினான். திவ்யா கவனமின்றி வாயில் வைத்து கடித்து மென்ற பிறகே காரம் உணர்ந்து கத்தினாள் “அம்மார்ரர்ரர…” 

தாரணி வேகமாக எழுந்து உள்ளே போனாள். தாரணி

மொபைலை வைத்துவிட்டு சர்வேஷின் முதுகை மொத்த ஆரம்பித்தாள். “அடேய் எருமை மாடே! ஏண்டா இப்படி செய்கிறாய்?”

” கையில் இருப்பது இட்லியா? மிளகாயான்னு கூட தெரியாத அளவிற்கு ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கிறாய்…?” 

“உழைத்துக் களைத்த அண்ணாவிற்கும் அக்காவிற்கும் களைப்பை போக்க உங்கள் விருப்ப பானங்கள்…” விளம்பர பாணியில் இழுத்து சொன்னபடி இருவர் முன்பும் தட்டை நீட்டினாள்.

 சர்வேஷும் திவ்யாவும் தற்சமயத்திற்கு சண்டையை நிறுத்திவிட்டாலும் முறைப்பை விடாமல் கப்புகளை எடுத்துக் கொண்டனர். “ஆமாம், என்ன சொன்னாய் நீ?” நான்கு மடக்கு ஜூசை குடித்த பிறகு கேட்டாள் திவ்யா.

” அக்காவா? உன்னை விட 11 மாதங்களே முத்தவள். அதற்காக அக்கா போடுவாயா? அப்படி ஒன்றும் நீ சிறுவயதாக காட்டிக் கொள்ள வேண்டாம். பெயர் சொல்லியே கூப்பிடு” என்றவள், “எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏற மாட்டேனென்கிறது” முணுமுணுத்துக்கொண்டாள்.

 தாரணி முகத்தை புன்னகைத்தே வைத்துக் கொண்டாள். சிறுவயதில் கற்பகம்  அக்கா என்றழைக்க அவளை பழக்கப்படுத்தி இருக்க, விவரம் தெரியும் வயது வந்த முதலே திவ்யா பெயர் சொல்லிக் கூப்பிடுமாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள். இந்த குழப்பத்தில் அக்கா… திவ்யா என்று கலந்து கட்டி அழைத்துக் கொண்டிருக்கிறாள் தாரணி.

” அப்பா…” தலையை சொறிந்தபடி நின்றான் சர்வேஷ். கனகலிங்கம் அப்போதுதான் சாப்பிட நுழைந்திருந்தார்.விழி உயர்த்தி மகனை பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். 

“நூறு ரூபாய் பெட்ரோலுக்கு சம்பாதிக்க முடியவில்லை.என்னிடம் வம்பு வளர்க்கிறாய். அப்பா இவனுக்கு பணம் கொடுக்காதீர்கள் பா” பேக்கை முதுகில் மாட்டிக் கொண்ட திவ்யா இப்போது “அப்பா”  என குழைந்தாள். 

“நீ சம்பாதிக்க வேண்டியது தானே? என்னை மட்டும் சொல்கிறாய்?” 

” ஆம்பள தான்டா சம்பாதிக்கணும். பொண்ணுக்கு எதற்கு அந்த தலைவலி? அப்பா ப்ளீஸ் சீக்கிரம் கொடுங்க ,எனக்கு டைம் ஆகுது” 

கனகலிங்கம் சட்டை பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினார்.

“இந்த பாக்கெட் மணி எப்படிப்பா பத்தும்? இன்னொரு 500 ரூபாய் கொடுங்கள்”

” இப்போது இவ்வளவு தான் இருக்கிறது. இது தாரணிக்கும் சேர்த்துதான். போங்க கிளம்புங்க” 




” என்னது இரண்டு பேருக்குமா?”  அப்பாவை முறைத்தபடி  ரூபாய் தாளை வாங்கி தன் பேக்கிற்குள் சொருகினாள்.அதிலிருந்து ஒரு ருபாய் கூட தனக்கு வரப் போவதில்லை என உணர்ந்த தாரணி புன்னகைத்துக் கொண்டாள்.

 இருவரும் காஞ்சிபுரத்திலிருக்கும் பெண்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். காலேஜ் பஸ் தெருமுனை வரை வரும்.  இருவரும் வீட்டை விட்டு வெளியேறும் நிமிடம் வரை சர்வேஷ் அப்பா முன்பு தலையை சொறிந்தபடி நின்று கொண்டுதான் இருந்தான்.

“திவ்யா இங்கே வா” பஸ்சில் தனக்கு அருகே அமர அழைத்தாள் தாரணி. 

“எனக்கு என் பிரெண்ட்ஸ் வருவாங்க”  தள்ளிப் போய் அமர்ந்து கொண்டாள் திவ்யா. இப்படித்தான் திவ்யாவுடன் தாரணி பேச நினைக்கும் ஒவ்வொரு முறையும் தட்டிப் போகிறது. பிறகு பேசலாம் தாரணி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 திவ்யா இன்ஜினியரிங் இறுதி ஆண்டில் இருக்க, தாரணி மூன்றாவது வருட படிப்பில் இருந்தாள்.

தாரணியின் அருகே அவள் உடன்படிக்கும் தோழிகள் வந்து அமர பஸ் மகளிர் கல்லூரியை நோக்கி போக தொடங்கியது. கல்லூரியை  நெருங்கும் போது சொல்லி வைத்தாற் போல் எல்லோருடைய தலைகளும் ஜன்னல் வழியாக வலப்புறம் திரும்பியது.

“கரிச்சட்டியை கழுவி சந்தனம் குங்குமம் வைத்தது போல் இருக்கிறது” மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த திவ்யாவின் கமெண்ட் இங்கே வரை கேட்டது.தாரணிக்கும்அதனை மறுக்கமுடியவில்லை.

அவன் அப்படித்தான் இருந்தான்.நல்ல கறுப்பில், நெற்றியில் சந்தன கீற்றுடன் குங்குமப்பொட்டிட்டு, வெண்ணிற கையற்ற பனியனில்.அவன் புஜங்கள் செய்து கொண்டிருந்த வேலைக்கேற்ப ஒரு வித லயத்துடன் ஏறியிறங்க நெற்றி சந்தனம் வியர்வையில் வழிந்து நாசியை தொட்டிருந்தது.




What’s your Reaction?
+1
30
+1
35
+1
3
+1
3
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!