Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-2

(2)

‘அப்பா” அழைத்தபடியே மாதவி அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் அங்கிருக்கும் எல்லோரையும் அப்பா, அம்மா, ஐய்யா என்றுதான் அழைப்பாள். அவள் அப்படி அழைப்பது மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் அவருக்கு மட்டும் அப்பா என்ற அழைக்கும் அந்த வார்த்தை அவரை அப்படியே ஒவ்வொரு முறையும் உலுக்கிப் போடுவது உண்மைதான். 

‘அப்பா’ எத்தனை வருடங்கள்? எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது? இந்த அழைப்பைக் கேட்டு. சரேலென உமாபதியின் முகம் வந்து போனது. உடல் ஒரு கணம் தூக்கிப் போட்டது. 

‘அப்பா’  மேடிட்ட லலிதாவின் வயிற்றை ஆசையோடு தடவியபோதெல்லாம்  கேட்க ஏங்கிய வார்த்தை. ‘ப்பா…’ மடியில் தவழ்ந்த குழந்தை மழலையாய் உச்சரித்தபோது மனம் சிலிர்த்த வார்த்தை. ‘அப்பா’ என கழுத்தைக் கட்டிக் கொண்ட போது வெட்டிய தங்கத்தை கொட்டிக் கொடுத்ததைப் போல் கட்டுக்கடங்காமல் மகிழ்ச்சியை கரைபுரண்டோட வைத்த வார்த்தை. ‘போப்பா…’ என முறுக்கிக் கொண்டபோது வாரியெடுத்து முத்தாட வைத்த வார்த்தை. ‘எங்கப்பா போவேன்?’ என ஏக்கமாய் கேட்ட வார்த்தை. இன்றுவரை அவரை உருக்கி எடுத்து உருக்குலைய வைக்கும் வார்த்தை.   

அதே வார்த்தையைத்தான் இப்பொழுதும் கேட்கத் துடிக்கிறார். 

இதோ… இப்பொழுது கூட கேட்கிறார். ஆனால் அழைப்பது அவருடைய உமாபதி இல்லையே. அம்மா அப்பா என்னும் வார்த்தைகள் அனைவரும் அழைக்க கூடிய பொதுவான வார்த்தைகள். ஆனால் அவற்றை பெற்ற பிள்ளைகள் அழைக்கும் போதுதானே அந்த வார்த்தைகள் உயிர் பெறுகின்றன. 

“அப்பா…” மறுபடியும் அந்த அழைப்பு. அவரை நினைவுலகத்திற்கு திரும்ப வைத்தது. திரும்பினார்.

மாதவி கையில் காபி கோப்பையுடனும், முகம் முழுவதும் சிரிப்புடனும் நின்றிருந்தாள். 

அருகே வந்தாள். “காபி சாப்பிடுங்கப்பா”

வாங்கிக்கொண்டார். 

“என்னப்பா… வில்லுப்பாட்டுக்கு ஏதாவது தீம் கிடைச்சுதா?” என்றாள்.

“அடப் போம்மா… நீ வேற?’ சிரித்தபடியே காபியை பருகினார்.

“அடப்போம்மாவா? அப்படின்னா…நான் சொல்றதெல்லாம் விளையாட்டா நினைச்சுட்டிங்களா? எல்லாரும் ஒத்திகையே ஆரம்பிச்சுட்டாங்க. சங்கரய்யா சார் நாடகம் எழுதி எல்லாருக்கும் ப்ராக்டீஸ் கொடுத்துக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு கூட ஒரு கேரக்டர் தந்திருக்கார்.”

“உனக்கென்னம்மா… நீ அசத்திடுவே”




“இப்படியெல்லாம் சொல்லி தப்பிச்சுக்க முடியாது. சீக்கிரமா ஏதாவது ஒரு கதையை எடுத்து வில்லுப்பாட்டு எழுதுங்க.” சொல்லிவிட்டு அவள் காபி கோப்பையை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.

பெருமூச்சுவிட்டவாரே மறுபடியும் படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

‘என் கதையைத்தான் வில்லுப்பாட்டாக எழுத வேண்டும்’ திரும்ப திரும்ப மனம் இப்படித்தான் நினைத்தது. என் கதை வில்லுப்பாட்டாக அமைந்தால் அது என்னைக் கொல்லும் பாட்டாகத்தானே அமையும்.?’

அவருடைய உடலை வில்லாக வளைத்து, உயிலை கயிராக இழுத்துக் கட்டி , கட்டிய கயிற்றில் இருப்பதெல்லாம் வேதனை சலங்கைகள்தானே. அதை விதி தன் கை கட்டையால் அடித்து அடித்து அவருடைய உணர்வுகளை வேதனையாக அதிர வைக்கிறதே. 

அவரை அதிர வைத்த அவருடைய வில்லுப்பாட்டு அவருக்குள் விரிந்தது. 

                       ………………………………… 

                   

  கொசுவிய பட்டுப் புடவையை வயிற்றுக் மேல் சொருக சிரமப்பட்டாள் லலிதா. மேடிட்ட எட்டு மாத வயிறு தடுத்தது. 

“என்ன கிளம்பிட்டியா?” என்றபடியே உள்ளே வந்த வீரமணி லலிதா புடவையோடும், வயிற்றோடும் சிரமப்படுவதைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான். 

சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள். 

“என்ன… நான் சிரமப்படறது உங்களுக்கு சிரிப்பாயிருக்கா?” சிணுங்கினாள் லலிதா.

அருகே வந்த வீரமணி காதலுடன் அவளைப் பார்த்தான். லலிதா தன்னையே அவனுக்கு அர்ப்பணித்ததற்கான சாட்சியாக கர்ப்பிணி கோலத்தில் இருந்தாள். அந்தக் கோலம் தந்த ஜாலம் முகத்தில் ஜொலித்தது. பூசிய  அழகு பேசிய ரகசியம்  ஆயிரம். “ நான் வேணா உதவி செய்யட்டா?” என்றான்.

“ம்…: என வெட்கமாக தலையசைத்தவாறே கொசுவ மடிப்பு நழுவிவிடாமல் அவன் கையில் கொடுத்தாள்.

அதை வாங்கியவன் மென்மையாக சொருகினான். வயிற்றில் விரல்கள் பட்டதும் சிலிர்த்தான்.

“லலிதா நம்ம பையன் என்னை உதைக்கிறான்.”

அவனுடைய கையை வயிற்றிலிருந்து விலக்கிய லலிதா கண்ணாடி எதிரே முந்தானையை மடித்து தோளில் போட்டவாறே சொன்னாள். 

“பையன்னு சொல்லாதிங்க. பொண்ணுன்னு சொல்லுங்க”




“இல்லை பையன்தான்.”

“என்னமோ ஸ்கேன் பண்ணிப் பார்த்த மாதிரி சொல்றிங்க?”

“எதுக்கு ஸ்கேன் பண்ணனும்? குழந்தையோட நடவடிக்கையை வச்சே சொல்லிடலாமே”

“அட…வயித்துக்குள்ள இருக்கற எட்டு மாசக் குழந்தையோட நடவடிக்கை, குணமெல்லாம் கூட உங்களுக்கு தெரிஞ்சுட்டா?’ முல்லைப் பூச்சரத்தை முன்னாள் இழுத்துவிட்டு கண்ணாடியில் சரிப் பார்த்தாள்.

‘இல்லியா பின்னே? இப்படி என்னை எட்டி உதைக்கறான்னா அவன் பையனாத்தான் இருப்பான். பொண்ணு பெத்த அப்பனை இப்படியெல்லாம் எட்டி உதைக்க மாட்டா. ரொம்ப பாசமாயிருப்பா”

“அப்படியா?’ 

“ஆமா…”

“அதனாலதான் பொண்ணா பொறக்கனும்னு வேண்டிக்கறேன்.”

“நீ பொண்ணு வேணும்கறே. ஆனா… அம்மா புள்ளைதான் வேணும்ங்கறாங்க”

அவன் சொன்ன அதே நேரம்  சுந்தரவள்ளியின் குரல் கணீரென ஒலித்தது. 

“லலிதா… இன்னுமா கிளம்பிக்கிட்டிருக்கே? ராகுகாலம் வர்றதுக்குள்ள போயிட்டு வீடு திரும்பனும்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது?”

“இதோ.. அத்தை கிளம்பிட்டேன்” அவசரமாக அறையிலிருந்து வெளியே வந்தாள். 

சுந்தரவள்ளி ஒருவித முறைப்புடன் நின்றிருந்தாள். கையிலிருந்த அர்ச்சனைக் கூடையை அவளுடைய கையில் கொடுத்துவிட்டு இடுப்புப் பக்கம் புடவையை இழுத்து கொஞ்சம் தெரிந்த வயிற்றை நன்றாக மறைத்தாள்.

“வயிறு தெரியாம புடவைக் கட்டுன்னு எத்தனை தடவை சொல்றது? இந்த ஊர்காரிங்க கண்ணு ரொம்ப மோசம்.. பார்த்தலே பத்து மாச புள்ளைக் கூட களைஞ்சுப் போயிடும். இப்படி கண்ணு வச்சுத்தான் போன தடவை ஒன்னும் இல்லாமப் போச்சு.” சுந்தரவள்ளி நறுக்கென சொன்ன அந்த வார்த்தைகள் லலிதாவின் முகத்தில் இதுவரை இருந்த மலர்ச்சியை தளர்ச்சியாக்கியது. 

சட்டென்று விறு விறுவென வாசலுக்குப் போனாள் லலிதா. 

அம்மாவை எரிச்சலாகப் பார்த்தான் வீரமணி. “அம்மா… அவ மறந்திருக்கற விசயத்தை ஏம்மா ஞாபகப்படுத்தறே? பழைய வேதனையிலிருந்து இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்திருக்கா. இப்ப போயி..” குரலை தாழ்த்தி கிசு கிசுத்தாலும் கோபம் அதில்  இருந்தது. 

“உண்மையைத்தானே சொன்னேன். போன தடவை இவ எங்க காலடங்கி கையடங்கி இருந்தா? புருசனும் பொண்டாட்டியும் பிரசவம் ஆகற முதல் நாள்வரை ஊரை சுத்திக்கிட்டுத்தானே இருந்திங்க! அதுக்குத்தான் அனுபவிச்சோம். இந்த தடவையாவது ஒழுங்காயிருங்க.”

அதற்கு மேல் அம்மாவிடம் பேச முடியாது. அடங்கும் குணம் இல்லை அவளுக்கு. ஆட்டிப் படைக்கும் குணம். சொல்லாலும், செயலாலும் அனைவரையும் அடிமையாக்கும் குணம். பாவம் லலிதா. எதிர்த்து எதையும் பேசமாட்டாள். அமைதியாகப் போய்விடுவாள். அதனால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வீடு இருக்கிறது. 

காரில் செல்லும் போது லலிதாவின் கண்கள் புறக் காட்சிகளில் இருந்தது. சத்தியமாக அதில் இயற்கைக் காட்சிகளின் மீதான ரசனையிருந்திருக்காது. கடந்து போன தன் பழைய வாழ்க்கைக் காட்சிகளே படமெடுத்தாடிக் கொண்டிருக்கும். 

சற்று முன் அறையில் அவன் காதலோடு பார்த்தபோது கனிந்து சிவந்த அதே முகம் இப்பொழுது கறுத்து இறுகியிருந்தது.

இப்படித்தான் அம்மா. நேரம் காலம் தெரியாமல் பாரத்தை மனதில் இறக்கிவிடுவாள். பாவம் லலிதா. இழந்ததை இன்னொன்றைப் பெற்றதால் இதயம் கொஞ்சம் ஈடு செய்திருக்கிறது. இன்பமாக இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு வளைய  வருகிறாள். இந்நிலையில் இப்படித்தான் அம்மா எதையாவது இங்கிதம் இல்லாமல் இடித்துக் காட்டிவிடுவாள். இடிந்து போய்விடுவாள் இவள்.

“லலிதா…” காரை இயக்கியபடியே அழைத்தான் வீரமணி.

திரும்பிய லலிதாவின் கண்கள் இரண்டும் ரத்தம் தோய்ந்த அம்பாய் மின்னின.

“லலிதா…  அம்மாவைப் பத்தித்தான் தெரியுமே? அம்மா இப்படித்தானே பேசறாங்க!  நீயும் அதையெல்லாம் கண்டுக்காமத் தானே போவ. இப்ப மட்டும் என்ன ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டு.? கோவிலுக்குப் போற நேரத்துல வீணா கண் கலங்கிக்கிட்டு. கண்ணைத் துடை”

அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் இருவரிடத்திலும் அமைதி நிலவ கார் செல்லும் ஓசை மட்டும் கேட்டது. 

“என்னங்க…”

“சொல்லு லலிதா”

“நான்… டெலிவரிக்கு அம்மா வீட்டுக்குப் போகட்டா?”

இதைக் கேட்டதும் அவனுடைய முகம் மாறியது. அவன் எதுவும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டினான். 

“என்ன பதில் சொல்ல மாட்டேங்கறிங்க?”

“லலிதா… உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.”

லலிதா சிரித்தாள். 

“இப்படி சொல்லி என்னை அன்பால கட்டிப் போடப் பார்க்கறிங்க! உண்மையை சொல்லப் போனா நீங்க உங்க அம்மாவுக்கு பயப்படறீங்க!”

“ஆமா… அம்மாவுக்கு நீ உங்க அம்மாவீட்டுக்கு போறது பிடிக்காது. முதல் டெலிவரிக்கே உன்னை அங்க அனுப்பாதவங்க இப்பவா அனுப்பப் போறாங்க.?”




“எனக்கென்னமோ முதல் டெலிவரிக்கு அம்மா வீட்டுக்குப் போயிருந்தா என் குழந்தை செத்துப் போயிருக்காதுன்னு தோணுது.”

“ப்ச்… விதி. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும்.”

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. பெண்ணை பிறந்த வீட்டுக்கு டெலிவரிக்கு அனுப்பறது அவ மனசாலும், உடலாலும் பலமாயிருக்கனும்னுதான்.”

“ப்ச். அம்மா உன்னை பிறந்த வீட்டுக்கு அனுப்பாததுக்கும் காரணமிருக்கு. உன் அம்மா இருந்திருந்தா அனுப்பியிருப்பாங்க”

“அம்மா இல்லைன்னா என்ன? அப்பாயிருக்கார் தங்கச்சிங்க இருக்காங்க. பார்த்துக்க மாட்டாங்களா?  அத்தைக்கு மனசில்லை. இது ஒரு சாக்கு”

“ப்ச். அம்மாவைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே. அப்பறமென்ன? நடக்காததைப் பத்தி யோசிச்சு மனசை போட்டு ஏன் அலட்டிக்கனும்? மனசை சந்தோசமா வச்சுக்க” அவளை சமாதானப் படுத்தும் முயற்;சியில் இறங்கினான்.

ஊர் எல்லையின் ஆரம்பத்தில் அந்த கோவில் இருந்தது. மிகப் பெரிய அம்மன் கோவில். மிகவும் பிரசித்திப் பெற்றது. அந்தக் கோவிலால்தான் அந்த ஊருக்கே புகழ். வெளியூர்களிலிருந்தும் அங்கு வருபவர்களின் கூட்டம் தினமும் இருப்பதால் கோவில் எப்பொழுதுமே ஜே..ஜே என இருக்கும். சுற்றி வளைத்து ஆக்கிரமித்திருந்த கடைகளுக்கும் விற்பனையில் பஞ்சமில்லை.

பெரிய புளிய மரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு கோவிலை நோக்கி நடந்தனர்.

மாரியம்மனே குரல் கொடுத்து வரவேற்பதைப் போல் எல். ஆர் ஈஸ்வரி ஒலிப் பெருக்கியில் பாடிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு நல்ல வேளையாக அதிக கூட்டம் இல்லை. எளிதாக அர்ச்சனைக் கூடையை கொடுக்க முடிந்தது. 

“யார் பேருக்கும்மா அர்ச்சனை? ஐயர் கேட்க கைகளைக் குவித்தபடி லலிதா சொன்னாள்.

“மீனாள்”

இந்தப் பேரைக் கேட்டு தூக்கிப் போட அதிர்ந்தான் வீரமணி. 




What’s your Reaction?
+1
6
+1
14
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!