Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-1

(1)

இலைகளுக்கிடையே பூத்த ஒரு பூவைப் போல்…பூக்களுக்கிடையே கனிந்த ஒரு கனியைப் போல் அந்த இளமஞ்சள் நிறக் கட்டிடம் அடர்ந்த சோலைகளுக்கிடையே பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அதிலும் மாலைப் பொழுது தூவிய மஞ்சள் ஒளியில் நிறம் கூடி குதூகலம் நிறைந்த குழந்தையைப் போல் சிரித்தது.

ஆமாம் குதூகலம் நிறைந்த குழந்தைகளைத்தான் அந்தக் கட்டிடம் கொண்டிருந்தது. என்ன ஒரு வித்தியாசம்? எல்லாம் வயது முதிர்ந்த குழந்தைகள். அதே முடியில்லா தலை. பொக்கை வாய் சிரிப்பு. தத்தி தள்ளாடும் நடை. ஆனால் எடுத்துக் கொஞ்ச யாரும் இல்லாதக் குழந்தைகள். ஏன் என்று கேட்க யாரும் இல்லாதக் குழந்தைகள். பெற்றெடுத்த பிள்ளைகளால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டக் குழந்தைகள். பாசத்தால் மக்கிப் போக முடியாத குப்பைகள். வீசியவர்களுக்காக வினாடிக்கு வினாடி பிரார்த்தனை செய்யும் வினோத பக்தர்கள். இறப்பிற்காக ஏங்கும் இதயங்கள்.மறுபடியும் பிறப்பை நோக்கிய பயணம் தானே இறப்பு. 

இருளுக்கு தன் முதல் முத்தத்தைப் பதித்ததைப் போல் தோட்டத்து விளக்குள் ஒளிர்ந்தன. தோட்டத்து புல் வெளியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அந்த இல்லத்தின் வயதானவர்கள் மெல்ல மெல்ல வந்து அமரத் தொடங்கினர். சரியாய் ஏழுமணிக்கெல்லாம் அனைவரும் அங்கே கூடிவிட வேண்டும் என்பது மாதவியின் கட்டளை.

யார் மாதவி. அந்த இல்லத்தின் தலைவியா? நிர்வாகியா? இரண்டும் இல்லை. அங்கே வேலை செய்யும் தன்னார்வ தொண்டு செய்யும் ஒரு இளம் பெண். தலைவியைப் போல, நிர்வாகியைப் போல் மட்டுமல்லாமல் ஒரு வேலைக்காரியைப் போன்றும் அங்கிருப்பவர்களுக்கு ஊழியம் செய்பவள். 

மாதவி அங்கே வந்த போது கிட்டத்தட்ட எல்லோரும் வந்துவிட்டனர். வீரமணியை மட்டும் காணவில்லை. 

“வீரமணி அப்பாவைக் காணுமே. வாக்கிங் போனவர் இன்னும் வரலையா?” என்றுக் கேட்டாள். அங்குள்ள அனைவரையும் அவள் அம்மா அப்பா என்றுதான் அழைப்பாள். 

“அவர் இன்னைக்கு வாக்கிங் போகலை. மனசு சரியில்லைன்னு ரூம்லயே இருந்தார்” என்றார் அவருடன் எப்பொழுதும் நடைப் பயிற்சி செல்லும் மஞ்சுநாதன். 

“சரி… நான் போய் அவரை அழைச்சுக்கிட்டு வர்றேன்” என்று வீரமணியின் அறையை நோக்கி நடந்தாள். வீரமணியின் அறையை அடைவதற்குள் அவளுடைய மனம் வீரமணியைப் பற்றி சில நிமிடங்கள் நினைத்துப் பார்த்தது. 

வீரமணி அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. கிராமத்து மனிதர். பெரும்பாலும் இந்த இல்லத்தில் இருப்பவர்களெல்லாம் சென்னையை சேர்ந்தவர்கள். பிள்ளைகள் வெளிநாடுகளில் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைப் பார்ப்பவர்கள். தங்களுடன் அழைத்து சென்று வைத்துக் கொள்ள முடியாமல் பாதுகாப்பாக இங்கே விட்டுவிட்டு பாசத்திற்குப் பதில் பணத்தை மட்டும் அனுப்புபவர்கள். மெத்த படித்த உலகம் தெரிந்த முதியவர்கள் என்று சொல்லலாம்.

ஆதனால்தானோ என்னவோ வீரமணியால் அங்கிருப்பவர்களுடன் ஒன்ற முடியவில்லை. பெரும்பாலும் தனியாகத்தான் இருப்பார். நகரத்தை சேர்ந்தவர்கள்தான் தாய் தந்தையை தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாமல் இப்படி காப்பகங்களில் கொண்டுவந்து விடுகிறார்கள் என்றால் கிராமத்து மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என நினைத்துக் கொள்வாள். 

யாரிடமும் அவர் நெருங்கி பழகாததால் அவரைப்பற்றி அவளுக்கும் எதுவும் தெரியாது. அவளும் இங்கு வேலைக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. 

அவள் அவருடைய அறைக்குள் சென்ற போது அவர் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியிருந்தார்.

“அப்பா…” 

அவளுடைய அழைப்பிற்கு கண்களைத் திறந்தவர் “வாம்மா” என்றார். 

“என்னப்பா… எல்லாரும் அங்க இருக்காங்க. நீங்க மட்டும்…வராம இருந்தா எப்படி?”

அவள் கேட்கவும் தயக்கமாக எழுந்து அமர்ந்தார். 

“இல்லம்மா… எனக்கு மனசு கொஞ்சம் சரியில்லை. நான் வரலைம்மா.”




“அதெப்படி? இந்த மாதிரி டிஸ்கஸன்ல கலந்துக்கிட்டாத்தான் மனசு ரிலாக்ஸா இருக்கும். இங்க இருக்கற எல்லாருக்குமே மனசுல ஆயிரம் வேதனை இருக்கு. எல்லாரும் மூடி மறைச்சுக்கிட்டுத்தான் நடமாடறாங்க. அடுத்த வாரம் நடக்கப் போற இந்த முதியோர் இல்லத்தோட ஆண்டுவிழாவை எப்படி நடத்தறதுன்னு நாம டிஸ்கஸ் பண்ணப் போறோம். நீங்க மட்டும் அதுல கலந்துக்காமயிருந்தா எப்படி? எழுந்து வாங்க. உங்களோட கருத்துக்களையும் சொல்லுங்க” என்று வலுக்கட்டாயமாக அவரை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தாள். 

அங்கிருந்த காலியான இருக்கையில் அமர வைத்தாள். 

எல்லோரும் அமர்ந்திருக்க மாதவி மட்டும் நடுநாயகமாக நின்று பேசினாள். 

“அடுத்த வாரம் நம்ம முதியோர் இல்லத்தோட ஆண்டுவிழா நடக்கப் போறது எல்லாருக்கும் தெரியும். அதுல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு பண்ற பொறுப்பை மேடம் எனக்கு கொடுத்திருக்காங்க. அது சம்பந்தமா பேசத்தான் நான் உங்களையெல்லாம் இங்க வரவழைச்சிருக்கேன்.”

அனைவரும் கைத் தட்டினர்.




“போன வருசம் நம்ம ஆண்டுவிழாவுல பக்கத்தில இருக்கற டாக்டர். ராதhfpU\;ணன் மெட்ரிக் ஸ்கூல் பசங்க கலந்துக்கிட்டு நாட்டியம், பாட்டு. நாடகம்னு நிறைய நிகழ்ச்சிகள் கொடுத்தாங்க. இந்த முறையும் அந்த ஸ்கூல் பிள்ளைகளுக்கே நாம வாய்ப்புத் தரலாம்” ஒரு பெண்மணி கூற அனைவரும் அதை ஆமோதித்தனர். 

“ஆமா… ஆமா… அந்த குழந்தைகள் என்ன அருமையா தங்களோட திறமைகளைக் காட்டினாங்க. ஒரு நாட்டிய நாடகம் பண்ணினாங்களே… இன்னும் கண்ணுலயே நிக்குது.”

“ஆமா… ஆமா… அவங்களையே கூப்பிடலாம்”

“இல்லை இந்த முறை நாம அவங்களை கூப்பிடப் போறதில்லை.”

“அதுவும் சரிதான். ஒரே ஸ்கூல் குழந்தைகளை மறுபடியும் எதுக்கு கூப்பிடனும்? மத்த ஸ்கூல் குழந்தைகளுக்கும் வாய்ப்புக் கொடுக்கலாமே”

“இல்லை இந்த முறை யாரையும் வெளியிலேர்ந்து   கூப்பிடப் போறது இல்லை. கலை நிநழ்ச்சிகளை நாமதான் செய்யப்போறோம்.”

மாதவி சொல்லவும் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். 

“நாமா?”

“எஸ் நீங்களேதான்.”

“ஐய்யோ…இந்த வயசுல நாங்க என்ன பண்ணமுடியும்?”

“நிறைய பண்ணலாம். அப்படியே நீங்களெல்லாம் உங்க பழைய பள்ளி கல்லூரி காலத்துக்குப் போகனும், மலரும் நினைவுகளை மீட்டுப் பார்த்தா நிறைய விசயங்கள் நினைவுக்கு வரும். பானுமதியம்மா… நீங்க டீச்சராயிருந்து ரிடையர்டு ஆனவங்க. குழந்தைகளுக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்திருப்பீங்க?  சங்கரய்யா சார் நீங்க நிறைய பத்திரிக்கைகள்ல கதை எழுதியிருக்கீங்க. நீங்க ஒரு நாடகம் எழுதுங்க. எல்லாரையும் நான் பல குழுவா பிரிக்கப் போறேன். நாடகம், டான்ஸ், பாட்டு இப்படி அசத்தப் போறோம். வீரமணி அப்பா நீங்க கிராமத்து மனிதர். கிராமங்கள்ல கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு இதெல்லாம் ஃபேமஸ். நீங்க இதுல ஏதாவது ஒன்னு பண்ணறிங்க?”

எல்லோரும் கைத்தட்டினர்.

“ஆமா… ஆமா… வீரமணி சார் கரகாட்டம் ஆடனும்”

கிண்டலாகவும், கேலியாகவும் சொல்லி சிரித்தனர்.

“அடப் போங்கப்பா… பாவம் அவர் நடக்கவே க\;டப்படறார். அவர்தான் கரகாட்டம் ஆடப் போறாரா?”

எல்லோரும் தினமும் நடைப் பயிற்சிக்கு செல்லும் போது வீரமணி மட்டும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு போகாமல் இருப்பார். அதனால் வீரமணியை இப்படி கிண்டல் செய்தனர். 

“கரகாட்டமெல்லாம் ஆட வேண்டாம். வில்லுப்பாட்டு பாடுங்க. மறைஞ்சுக்கிட்டிருக்கிற கலையை நாம ஞாபகப்படுத்தின மாதிரியிருக்கும். நான் சொல்றது சரிதானே?”

வீரமணியைப் பார்த்து மாதவி சிரிக்க எல்லோரும் ஆமோதித்தனர். வீரமணி எதுவும் சொல்லவில்லை. சம்மதிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. அமைதியாகயிருந்தார்.

மறுபடியும் மாதவியே பேசினாள்.

“ஒரு நல்ல கிராமத்துக் கதையை அழகாக வில்லுப்பாட்டா பாடினா… அருமையாயிருக்கும். நாட்டுப்புற கதைக்கா பஞ்சம். வீரமணி அப்பா அதையெல்லாம் ஈஸியா பண்ணிடுவார். என்னப்பா நான் சொல்றது?”

வீரமணி விரக்தியாக சிரித்துக் கொண்டார். ‘என் கதையையே வில்லுப்பாட்டாகப் பாடலாம்.’ என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார். நினைத்த மாத்திரத்திலேயே அவருடைய சொந்தக் கதையின் மாந்தர்கள் மனதில் தோன்றி அவருக்குள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது அவருக்கு மட்டுமே தெரியும்.




What’s your Reaction?
+1
11
+1
22
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!