Cinema

கட்டா குஸ்தி: திரை விமர்சனம்

பாலக்காட்டை சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி), கட்டா குஸ்தி வீராங்கனை. அதனாலேயே அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. பொள்ளாச்சியில் கபடி விளையாட்டு, கட்டப்பஞ்சாயத்து என அலையும் வீரா (விஷ்ணு விஷால்), நீளமான கூந்தலுடன் இருக்கும் படிக்காத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.

பட்டதாரியான கீர்த்திக்கு சவுரி முடி வைத்து, படிக்காதவர் என பொய் சொல்லி வீராவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்க, வீராவைக் கொல்ல வரும் எதிரிகளை, குஸ்தியால் வீழ்த்தி கீர்த்தி காப்பாற்ற, அவர் குறித்த உண்மைகள் தெரியவருகிறது. இதனால், அவரை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விடுகிறார் வீரா. அதோடு, குஸ்தி போட்டியில் கீர்த்தியை வெல்லவும் ஆயத்தமாகிறார். இறுதியில் வெல்வது யார்? வீராவும், கீர்த்தியும் இணைந்தார்களா? கட்டா குஸ்தியில் சாதிக்கும் கீர்த்தியின் கனவு என்ன ஆனது என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக் கதை.




கட்டா குஸ்தி விமர்சனம்! படம் எப்படி இருக்கு?கட்டா குஸ்தி | Dinamalar

கேரளாவில் பிரபலமான கட்டா குஸ்திஎனும் மல்யுத்த தற்காப்புக் கலையைமையமாக வைத்து, கணவன் – மனைவி இடையே இருக்க வேண்டிய பரஸ்பர அன்பு, மரியாதை, புரிதல் ஆகியவற்றையும், பாலினசமத்துவத்தையும் வலியுறுத்தும் முற்போக்குக் கதையை கலகலப்புடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

பிற நாடுகளில் போட்டிகளில் சாதிக்கத்துடிக்கும் பெண்கள், களத்தில் நிற்கும்எதிரியை வென்றால் போதும். நம் நாட்டுப்பெண்கள் குடும்ப உறுப்பினர்களை வெல்வதேபெரும்பாடாக இருப்பதை அழுத்தமாகப்பதிவு செய்திருக்கிறார். அதேநேரம், நகைச்சுவைக்கும் பஞ்சம் வைக்காமல் ‘மெசேஜ்படம்’ எனும் முத்திரையை புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கிறார்.

தேவையற்ற காட்சிகள் வசனங்களாகவே நகர்வதால் சில இடங்களில் சற்று பொறுமையை சோதிப்பதும் உண்மைதான். நாயகன் நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், தேவையற்ற திணிப்பாக இருக்கின்றன. வீரா தன் தவறை உணர்ந்து திருந்திவிடும்போதே படம் முடிவடைந்துவிட்டாலும் அதற்குப் பிறகும் சண்டைக் காட்சி எனநீள்கிறது படம். திரைக்கதையின் முக்கியமான நகர்வுகளைத் தீர்மானிக்கும் காட்சிகளில், சவுரி முடி வைத்து பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அதை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் என்பது போன்ற தர்க்கப் பிழைகள், தலைதூக்குகின்றன.




விஷ்ணு விஷால், கதையின் தேவைஅறிந்து அடக்கி வாசிக்கிறார். குஸ்தி வீராங்கனையாகவும், தன் சுயமரியாதை, தனித்தன்மையை விட்டுக்கொடுக்க விரும்பாதவராகவும் ஐஸ்வர்யா லட்சுமி, அதகளம் பண்ணுகிறார். குறிப்பாக ‘சுயரூபம்’ வெளிப்படும்இடைவேளை மோதல், தமிழ் சினிமாவில் அரிதான, ‘ஹீரோயின் மாஸ் மொமன்ட்’!

ஆணாதிக்க மாமா கருணாஸ், நாயகனின் நண்பன் காளி வெங்கட், நாயகியின் சித்தப்பா ராமதாஸ், குஸ்தி மாஸ்டர் ஹரீஷ் பேரடி ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையானதை தருகின்றனர். ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை, சிரிப்பலைகளை எழுப்புகின்றன.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள், கதையின் ஓட்டத்துடன் ரசிக்க வைக்கின்றன. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் கதைக்கு தேவையானதை தருகிறது.

தற்காப்புக் கலையை முன்வைத்து ஆண் – பெண் சமத்துவத்தை அழகாகவும், அழுத்தமாகவும் பேசியிருக்கும் ‘கட்டா குஸ்தி’யை குறைகள் மறந்து வரவேற்கலாம் தாராளமாக!




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!