Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-1

1

 ” ஊர் வந்துடுச்சு. இனி கொஞ்சம் கண்ணை திறந்து பார்க்கலாம் ” காரின் முன் சீட்டிலிருந்து ஒலித்த அந்த கனத்த குரலில் அதிகாரமே மிகுந்திருந்தது. தாரிகா திக்கென்று விழிகளை திறந்து பார்த்தாள் .

ஊர் …வந்துவிட்டதாமே …எந்த ஊர் …? திடுதிடுத்து சுழன்ற அவள் விழிகளில் கடந்து போன பெயர் பலகை கண்ணில் பட்டது. பரமக்குடி. இ…இதுவா …? இதுதான் அவனது ஊரா ? இப்படி ஒரு ஊர் இருப்பது கூட இது வரை  அவளுக்கு தெரியாதே. இன்றோ அவள் இருக்க வேண்டிய ஊர் இதுவென்று வலியுறுத்தப்படுகிறதே …

ஆமாம்.சாதாரணம் போல் காட்டிக் கொண்டாலும் அவன் குரலில் இருந்தது வலியுறுத்தல் தான். உன் ஊரென கொண்டே ஆக வேண்டுமெனும் வலியுறுத்தல். இதே பிடிதான் அன்று காலையில் கூட அவனிடம். .உனக்குத்தானே தேவை .நீயே வந்து கேளேன் என்பதான திமிருடன் கை கட்டிக் கொண்டு நின்றிருந்தான். அதெப்படி நானாக அவனிடம் போய் நிற்க முடியும் …? தயக்கம் தாரிகாவிடம். கேட்காவிட்டால் போ …நான் போய் கொண்டே இருப்பேன் …தெளிவான விழி பதில் அவனிடம்.




இவனும் போய்விட்டால்…தாரிகாவின் உடல் நிராசையில் நடுங்கியது. இவர்கள் இருவருக்குமிடையே பரிதவித்து அலைந்தவள் சாந்தாமணிதான். போய் கேளேன் என இவளையும், சம்மதம் சொல்லி விடேன் என அவனையும் விழிகளால் மட்டுமின்றி மொழிகளாலும் கேட்டுக் கொண்டிருந்தாள் .

அம்மாவின் பரிதவிப்பு காண சகிக்காததாக இருக்க , தாரிகா தானே இறங்கி வந்தாள். மேலும் அவளுக்கென கைவசம் இருந்ததும் சொற்ப நேரமே. அவளது அப்பா ராஜவேலு நீலவேணி குடும்பத்தை அழைத்து வரவென போய்விட்டார். அவர்கள் திரும்ப  வருவதற்குள் தாரிகா ஒரு முடிவெடுக்க வேண்டும்.இதோ கலங்கி தவித்தலைகிறாளே அவளது தாய் . அவளையும் சமாதானம் செய்தாக வேண்டும் .

வேறு வழியின்றி அவள் அவன் முன் போய் நின்றாள். நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் கேள்வி இருந்தது.  என்ன …?

ஆமாம்…இவன் பெரிய காதல் நாயகன் …கண்ணாலேயே பேசுவான்…மனதிற்குள் அவனை திட்டியபடியே கேட்க திறந்தவளின் வாய் தடுமாறியது. இ …இதை எப்படி கேட்பது …அவனது முகத்திற்கு நேராக நின்று எ…எப்படி …?

தடுமாற்றத்தில் தனது உதடுகள் கொஞ்சம் கோணிக் கொண்டனவோ என்ற பயம் அவளுக்கு வந்தது. அவன் முகத்திலோ இன்னமும் அறியா பாவம்…? தாரிகா மனதிற்குள் பற்களை நறநறத்துக் கொண்டாள் .

அடேய்..நான் வந்து நிற்கும் காரணம் தெரியாதாடா உனக்கு ? என் அம்மா உனக்கு சொல்லவில்லையா …? சாந்தாமணி இரட்டைக்கோடு போட்ட தமிழ் கையெழுத்து நோட்டு எழுத்துக்கள்  போல் திருத்தமாக அவனிடம் எல்லா விபரங்களையும் சொல்லியிருப்பாள் என்பதில் அவளுக்கு துளி சந்தேகமும் இல்லை . எல்லாம் அறிந்திருந்தும் இவன் …கண்களில் கொஞ்சம் கனல் சேர்த்து அவனை பார்க்க, முறுக்கி நிமிர்த்தி  நிறுத்தி  இருந்த அவனது கரு மீசை நுனி லேசாக  துடித்தாற் போலிருந்தது. சிரிக்கிறானா என்ன …? என்  இக்கட்டு இவனுக்கு சிரிப்பையா தருகிறது ?




தாரிகா திரும்ப ஊன்றி பார்த்த போது அவனது முகம் வெகு சாதாரணமாக இருந்தது. சாப்பிட வாங்க என கல்யாண வீட்டில் விருந்தோம்ப வந்தவளை போல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். உன்னை விருந்துக்கு அழைக்கவா வந்தேன்… தனக்குள் வெதும்பியவள் இறுக விழி மூடிக்கொண்டு தனது தேவையை அவனிடம் நெட்டுரு போடத் தொடங்கினாள். சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுள் அந்த சந்தேகம் வந்தது.

ஒரு வேளை இவன் மறுத்துவிட்டால்…? அவளது இந்த பயத்தையே எதிரொலித்தது அவளது பேச்சு முடிந்ததும் அறையினுள் விரவிக் கிடந்த மௌனம் .

” நான் பிறந்தது இதே ஊர் தான் .அம்மா , அப்பா இருவருக்கும் இந்த ஊர் தான். எட்டு தலைமுறைகளாக இதே ஊரில் தான் வசித்து வருவதாக அப்பா சொல்லுவார் ” கணீரென்ற குரலில் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

அடைக்கப்பட்ட   சன்னல்களால் அடக்கப்பட்டிருந்த காற்றோசையால் அவனது கனத்த குரல் வஞ்சனையின்றி கார் முழுவதும் பரவியது. இது போல் உயர் குரலோசை பழக்கமில்லை தாரிகாவிற்கு. அவளது செல்போனின் ஒலியை கூட குழந்தையின் மென் சிணுங்கல் போலத்தான் வைத்திருப்பாள். அவளது பேச்சும் கூட அப்படித்தான் கொலுசின் ஒற்றை முத்து போல் சிணுக்கமாகவே இருக்கும் .

அவளிருந்த மாடர்ன்  உலகில் கடூர சத்தங்கள் நாகரீகமென்ற போர்வைக்குள் மறைபட்டிருந்தன .  எப்போதும் அவளுக்கு எரிச்சல் தரும் இது போன்ற பெரிய குரல் இப்போது அப்படி இல்லை. சொல்லப் போனால் சற்று முன்பு வரை நிசப்தம்   சூழ்ந்திருந்த கார், வழிந்து கொண்டிருந்த செயற்கை குளிரையும் தாண்டி அவளுள் ஒரு பய வியர்ப்பை அளித்துக் கொண்டிருந்தது. இப்போது ஏசி குளிரோடு சேர்ந்து உள் சுழன்ற அவன் குரல் ஓர் ஆதரவு வெப்ப கதகதப்பை தந்திருப்பதாக அவளுக்கு தோன்றியது .

அவனது பேச்சிற்கு மறு பேச்சோ  ஒரு ” உம் ” மோ கூட சொல்லவில்லை என்றாலும் , லேசாக தலையசைத்துக் கொண்டாள் .அதையும் கூட செய்யவில்லை என்றால் அவன் தன்னை காரிலிருந்து கீழே்உருட்டி விட்டு விட்டு தன் போக்கில் போனாலும் போவான் என்ற சந்தேகம் அவளுக்கிருந்தது.

” மருதமலை மாமணியே முருகய்யா …”

திடுமென காருக்குள்  பாடல் அதிரடியாக ஒலிக்க தொடங்க திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் . ரேடியோவா …சிடி ப்ளேயரா …? எது திடீரென இந்தக் கூப்பாடு போடுகிறது …? அவளது தேடலுக்கு விடை அவன் கையில் இருந்தது .

” ஹலோ சொல்லுங்கப்பா …” போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன் .

அடப்பாவி உன் போன் ரிங் டோனா அது …? எப்படிய்யா இப்படி ஒரு ரிங்டோன் வைக்க தோணுது …? வெறுத்துப் போய் அவனை பார்க்க,  அவன் கையிலிருந்த நோக்கியோ போன் வேறு அவளுக்குள் இன்னொரு அதிர்வை அனுப்பியது. இந்த மாடலெல்லாம் இன்னுமாடா மார்க்கெட்ல இருக்குது …? எங்கிருந்துடா இதையெல்லாம் பிடிக்கிறீங்க? விரக்தியின் விளிம்பை எட்டிப் பார்த்தாள். அவனோ   கன அக்கறையாக அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவனது குரலை மட்டுமல்லாமல் எதிர்புறத்தில் பேசிக் கொண்டிருந்தவரின் குரலையும் சேர்த்து வஞ்சனையில்லாமல்  காருக்குள் பரப்பியது அந்த விநோத  விஞ்ஞான கருவி. சாப்பிட்டியா …?தூங்குனியா ..?.ராப் பூராம் தூங்காம எப்படி கார் ஓட்டுற …? என்பன போன்ற விசாரணை எதிர் குரலில்.

அதெப்படி  ப்ரைவசியாக இருக்க வேண்டிய பேச்சுக்கள் ஊருக்கே கேட்கிறது …இது எந்த நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்குமென்ற ஆராய்ச்சியுடன்  தாரிகா நம்ப முடியாமல் அவன் கை போனை பார்த்தபடி இருந்தாள் .

திடுமென அவளுக்குள் ஒரு பரபரப்பு.இவன் இப்போது என்னை பற்றி என்ன சொல்வான் ? மகன் மட்டும் ஊருக்கு போய் திரும்பி வருவதாகத்தானே அப்பா நினைத்துக் கொண்டிருப்பார்? இப்போது திடுமென கல்யாணம் செய்து கொண்டேனென  என்னுடன் ஜோடியாக போய் நின்றால் , அப்பாவிற்கு அவனது குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக அது இருக்கும் ? இவனது குடும்பத்தினர் இவனை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள் தானே ? அவள் பார்க்க இதுவரை அலட்சியமும், அகம்பாவமுமாகவே நிமிர்ந்து நின்ற அவனது பாவனை நினைவு வர தாரிகாவினுள் ஒரு வன்மம் வளர்ந்து பரவியது.

தலையில் கிரீடம் வைத்திருப்பவன்  மாதிரி எப்பவும் தலைநிமிர்த்திக் கொண்டே  இருந்தானே …அவனும்தான் கொஞ்சம் தலை குனிந்து நிற்கட்டுமே..தயங்கி தயங்கி மெல்லிய குரலில் பேசட்டுமே …தாரிகா அவன் குடும்பத்தினர் முன்பு அவன் தடுமாறி நிற்கும்  அந்தக் கணத்திற்காக இப்போதே உற்சாகத்துடன் காத்திருக்க தொடங்கினாள் .




“இது செல்போன் முதன் முதலில் வந்த போது வாங்கிய போன்.எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் அதையே இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எத்தனையோ மாடல் போன்கள் வந்து விட்டாலும் அவையெல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை.  வாங்கிய எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு இந்த பழையதையே திரும்ப எடுத்துக் கொண்டேன் ” தாரிகாவின் பார்வை போனிலேயே இருப்பதை கவனித்து விட்டோ  என்னவோ அவன் இந்த விளக்கத்தை கொடுத்தான் .

அது சரி ஸ்மார்ட் போனெல்லாம் யூஸ் பண்ண தெரிய வேண்டுமானால் கொஞ்சம் படிப்பறிவு இருக்க வேண்டுமே …தாரிகாவின் மனதினுள் அவனது பத்தாவது பெயில் படிப்பு கசப்பாக பரவியது. கூடவே அவளது எம்.பி.ஏ படிப்பும்.  லேசாக தொண்டையை செருமிக் கொண்டாள். ஓரக்கண்ணால் அவன் கவனித்தாற் போல் தெரிய ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பிக் கொண்டாள் .

வெளியே விடிய ஆரம்பித்திருந்தது. கார் இப்போது ஊருக்குள் நுழைய தொடங்க , பட்டன் அழுத்தி வின்டோ கண்ணாடியை இறக்கினான் அவன்.  ” விடிஞ்சிடுச்சு . ஊரை பார் “

ஆமாம் பெரிய அமெரிக்கா பார்வையிட …தன்னிச்சையாக மன ஓட்டம் எழுந்த போதே அடுத்த மாதம் அமெரிக்கா போவதற்காக எடுத்து வைத்திருந்த விசா அவளது நினைவிலாடியது. பெரிய உருண்டையாக எதுவோ தொண்டையை அடைத்தது. இதோ… இந்தப் பட்டிக்காட்டிற்குள் நுழைய வேண்டியவளா அவள்….? ஏனிப்படி தாழ்ந்து போனேன் நான் …? கலங்கியது அவள் உள்ளம் .

கார் வேகமான ப்ரேக் அழுத்தலில் சட்டென நிலைக்கு வந்து அவளை முன்புறம் தள்ள , தடுமாறி முன் போனவளின் தோள் பற்றி அழுத்தி பின் இழுத்தான்  அவன் .

” கண்டதையும் நினைக்காமல் முகத்தை சிரிச்சாப்ல வச்சிக்கிட்டு கீழே இறங்கு ” உத்தரவிட்டான்.

முடியாது போடா என்று சொன்னால் தான் என்ன ? பிடிவாதம் உந்த முதுகை சீட்டில் அழுத்தி தாரிகா சாய்ந்து அமர்ந்து கொண்ட போது , வெளியிருந்து வந்த குரலில் விதிர்த்தாள் .

” தமயந்திக்கா புதுப் பொண்ணு , மாப்பிள்ளை வந்தாச்சு . ஆரத்தி கரைச்சு எடுத்தாங்க “




What’s your Reaction?
+1
28
+1
21
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!