Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 2

2

கணேசன்-சுதா தம்பதிகளைப் போல இன்னமும் பல சுவாரஸ்யமான குடித்தனவாசிகளைக் கொண்டதுதான் பஞ்சவர்ணக்கூடு என்றழைக்கடுப்படும் அந்த காம்பெளண்ட் வீடு, அதன் உரிமையாளரான பார்வதியம்மாளை அறிமுகப்படுத்தாமல் விடலாமா?! கனிவு ததும்பும் முகத்தில் கம்பீரத்திற்கும் குறைவில்லாதவர் அதிலும் வெண்மையான பருத்தி சேலையில் நெற்றியில் விபூதிக் கீற்றோடு நாள் கிழமைகளில் கோவிலுக்குப் புறப்படும் போது அவரைக் காண்பவர்கள் நிச்சயம் கையெடுத்துக் கும்பிடும் அளவிற்கு தகுதியானவர். 

பதினாறு வயதில் வரதனின் கையைப்பிடித்துக்கொண்டு தஞ்சாவூரில் பெரிய குடும்பத்தில் நுழைந்தபோது அவருக்கு அந்த வயதுதான் இருக்கும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்வதியம்மாள் கோவில் அம்மன் சிலைபோல அழகு, அந்த அம்சத்தின் காரணமாகவே அதிக வரதட்சணையின்றி வரதனுக்கு மனைவியானார். காதல் திருமணம் இல்லை ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில விழாக்களில் சந்தித்தபோது இருவருக்கும் ஒத்துப்போயிருந்தது. நம்ம கணக்குப்பிள்ளை மகன் வரதனுக்கு பார்வதியைக் கேக்குறாங்க என்று அப்பா அம்மாவிடம் அடுப்படியில் கிசுகிசுக்க 16வயது பருவமான தாவணியணிந்த பார்வதிக்கு கலர்கனவுகள் வரத்தான் செய்தன. நம்ம சக்திக்கு ஈடுகொடுக்கும் போது அவங்க கொஞ்சம் பெரிய இடமாச்சேன்னு அம்மாவின் சுருதியிறங்கிய குரல் கவலையளித்தது. 

அந்த பையன் வரதனுக்கு இவளை ரொம்பவும் பிடிச்சிட்டதாம் அதனால பெரிசா ஏதும் எதிர்பார்க்கலை இந்த நிலம் நீச்சின்னு ஏதோ கொஞ்சமிருக்கே அதை வித்திட்டா கல்யாணத்தை சீரும் சிறப்புமா நடத்திடலாம். பார்வதிமாதிரி ஒரு அழகும் குணமுமிக்க மருமக வந்தாதான் என் குடும்பத்தைக் கட்டிக்காப்பாத்த முடியுன்னு வரதனோட அப்பாவே கேட்கிறார் உனக்கு சம்மதமா சொல்லு, பார்வதிகிட்டேயும் சுருக்க ஒரு வார்த்தை சொல்லிவை. 

அதெல்லாம் சரிங்க நண்டும்சிண்டுமாய் அங்கே வதவதன்னு நிறைய பிள்ளைகள் இருக்கே எல்லாம் பெண் பிள்ளைகள் வரதன் ஒருத்தர்தான் ஆண்பிள்ளை நாளைக்கு வரவு செலவுன்னு எல்லாம் அவர் தலையிலேதானே விழும் இப்போதான் மூணு பெண்பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகியிருக்கு இன்னும் இரண்டோ மூணோ இருக்கே……

அதெல்லாம் அவன் சமர்த்தன்டி இப்போ பட்டணத்திலே ஏதோ வேலை கிடைச்சிருக்காம் எனக்குத் தெரிந்து அவன் நல்லா வருவான், பெண் பிள்ளைகளோட புழங்கினவன் நிச்சயமா நம்ம பிள்ளையையும் நல்லா வச்சிப்பான் எனக்கென்னவோ அவ பட்டணத்தில அவன் கூட தனிக்குடித்தனம் பண்ணுவாளோன்னு தோணுது.

எப்படியோ எம்பொண்ணு நல்லாயிருக்கணும் அவ்வளவுதான் என்று பார்வதியின் தாயார் முடித்துகொண்டாலும், அவர் பேசியதைப் போல வரதனின் திருமணமான அக்காமார்கள் அனைவரும் ஆளுக்கொன்றாய் பேசத்தான் செய்தார்கள். அதிலும் அந்த கல்யாணத்தன்று, பெரிய கோலாகலம் இல்லையென்றால் நகர சபை சங்கத்தில் தான் அவர்களுக்கு கல்யாணம். ஊர் வழக்கப்படி பெண் பிள்ளை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு விடுவாள்.




பெண்ணிற்கு தலைக்கு அலங்காரம் செய்யும்போதே லங்கிணி மாதிரி இரண்டு நாத்தனாருங்க ஊரிலிருந்து வந்திருக்காங்கடி வந்ததில் இருந்தே கல்யாண பட்சணம் சரியில்லை, லட்டு சின்னதாயிருக்கு, எலிவலை மாதிரியில்லை வரதனின் மாமனார் வீடு இருக்கு எங்க வரதனுக்கு பக்கத்தில் வைத்துப் பார்க்கும் போது பெண்ணு கொஞ்சம் மட்டம்தான் அப்படியின்னு ஒரே அலப்பறைதான். உங்க மாமியார் தேவலை அவளை கைக்குள்ளே போட்டுக்கு என்ன நான் சொல்றது புரியறதா என்று தலைக்கு பூவை வைப்பதைப் போல கொட்டும் வைத்தாள் தாய்மாமனின் மனைவி.

பார்வதிக்கு அது ஏதும் மண்டையில் ஏறியதாய் தெரியவில்லை, காலையில் மணவறையில் அத்தனைபேர் முன்னிலையில் தாலியைக் கட்டி யாரும் அறியாவண்ணம் கையைப் பிடித்து மெல்ல கிள்ளிய வரதனின் குறும்பு பிடித்திருந்தது. இதோ இப்போது சோபன அறையில் அதே குறும்புக்கார வரதனோடு தனிமையில் இருக்கப்போவது சிலிர்த்தது. அன்றே இனிதாய் ஆரம்பித்த இல்லறம் அதன்பின் வண்டியில்லாத சக்கரம் போல கொஞ்சம் ஆட்டம் கண்டு பின், சீராகிப்போனதென்னவோ உண்மை. தனக்கு இருக்கும் கடமைகளுக்கு நடுவில் மனைவியை அத்தனை அக்கறையாய் கவனிக்க முடியவில்லை, பட்டணத்தில் வேலைகிடைத்தாலும், குடித்தனம் நடத்தும் அளவிற்கு வசதியில்லை, அதனால் திருமணம் ஆன ஒரே வாரத்தில் மனைவியை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கூட பேச முடியாமல் அவர் பட்ட பாடு இருக்கிறதே , அப்படியே மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவது வாரம் ஒருமுறை ஆகியபோது பெற்றோரின் மேலெறிய புருவமும் நண்பர்களின் கிண்டல்களுக்கும் நடுவில் பார்வதியின் குழந்தை முகத்தை வரதனைக் கண்டதும் மெல்ல ஈரம் படரும் கண்களை தரிசிக்கவே அவர் வாரம் ஒருமுறை வந்து போய் கொண்டு இருந்தார்.

இந்தா வரதா இதென்னடா கூத்து இப்படி அவளே கதியின்னு அடிக்கடி வந்தா உத்தியோகம் என்னாகுறது? உன் மனைவியென்ன வெல்லக்கட்டியா கரைஞ்சுபோக, அதிலும் வீடு முழுக்க வயசுப்பொண்கள் இருக்கிற இடம் இதுக்கு மேல நான் உனக்கு எதையும் விளக்கி சொல்ல முடியாது என்று அம்மா சற்று கெடுபிடியாக பேசியபோதும் வாரம் இருமுறை என்று வருகையைச் சுருக்கிக்கொண்டாலும், அவர்களுக்குண்டான தனிமையும் சுருங்கித்தான் போனது. திருமணமாகாத பெண்களுக்கு நடுவில் திருமணமான சகோதரிகளும் வந்து அமர்ந்துகொள்ள துவங்கினார்கள். வெளியூரில் வேலை பார்க்கும் தமையனை காணும் ஆவல் என்று ! அந்த நெருக்கடியான தருணங்களில் கிடைக்கும் சில நிமிடங்களும் ஒற்றைப் படுக்கையறையில் சிறு சப்தம் வந்தாலும் நாளைக்கு மாமி நாத்தியின் முகத்தில் விழிக்க வேண்டிவருமே என்று சிரிப்பைக் கூட சிக்கனமாக செலவிடும் பார்வதியின் மேல் தனி அக்கறை உண்டு வரதனுக்கு.

வெறித்தனமாய் உழைக்க ஆரம்பித்தான், ஒரு மகன் பிறந்திருந்து தன் கடமைகளை எல்லாம் முடித்து சற்றே மூச்சு விடும் போது தந்தையும் தவறி மனைவியை தன்னோட பட்டணம் அழைக்க தாயிடம் அனுமதி கேட்டபோது, தாராளமா கூட்டிட்டுப்போ அவளும் பாவம் இத்தனை நாள் எங்களுக்கு ஊழியம் செய்தே காலத்தை கழிச்சிட்டா எனக்கு அங்கெல்லாம் சரிப்பட்டு வராது இப்போ வர்றாமாதிரி அப்பப்போ வந்து பார்த்திட்டுபோங்க இரண்டுபேரும் என்று அன்போடு வழியனுப்பி வைத்துவிட்டார் வரதனின் தாயார். 

புரசைவாக்கத்தில் ஒரு எட்டடுக்கு வீடு விலைக்கு வந்திருக்கிறது இப்போ அதை வாங்கிப்போட்டா நாளைக்கு எனக்குபிறகு உனக்காகுமே என்று கணவர் 10 வருடங்களுக்கு முன்பு சொல்லியபோது, கண்கலங்கிய அதே பார்வதியம்மாள் கிரிதர் படிக்க அமெரிக்கா போய் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து குடியுரிமையும் வாங்கிக்கொண்டு பெற்றவரின் மறைவிற்கு கூட நாலாம் மனிதனனைப்போல வந்திறங்கிய வேகத்திலேயே அங்கேயெல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்திட்டேன்னு கிளம்பிவிட்டான். 

அப்போது கைகொடுத்தது கூட இந்த வீட்டு மனிதர்கள்தான். அதனால் வாடகைக்காரர்கள் என்ற உரிமையைவிடவும் சற்று அதிகமாக உரிமை கொண்டுதான் பழகுவார் பார்வதியம்மாள். இந்த எட்டு அடுக்கு வீடுகளில் ஒவ்வொரு வீட்டுக் கதையும் அத்துபடி அவருக்கு. புறம் பேசும் பழக்கம் இல்லாமல் ஒரு கூட்டுக்கு தாய்பறவை போல அவர்களை அரவணைத்தார் என்று சொல்லலாம்

அப்படியில்லாமல் போனால் சிறுவயதிலேயே தாயும் தந்தையும் இறந்தபிறகு தூரத்துப் சித்திப்பாட்டியின் துணையோடு அந்த வீட்டின் 4வது நம்பரில் இருக்கும் அபிராமி நிலையெல்லாம் என்னவாகியிருக்கும். இந்த அபிராமி பற்றி கட்டாயம் வர்ணிக்கவேண்டும் இவள்தான் நம் கதையின் நாயகி… அபிராமியின் தாய் தந்தை காதலித்து மணந்தவர்கள். அவர்களின் அன்பின் வெளிப்பாடான அபிராமியின் மேல் ஆயிரம் கனவுகள் உண்டு அவர்களுக்கு பாதி தூக்கத்தில் கலைந்த கனவைப் போல விபத்தொன்றில் அவர்கள் இறந்துவிட தந்தை வழிப் பாட்டியின் பராமரிப்பில் வளர்கிறாள்.

பதிமூன்று வயதில் தாய் தந்தையை இழந்து தன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும் இரண்டு லட்சத்தோடு, கண்களில் மருட்சியோடு இனி உலமே சூன்யம் என்னும் நிலையில்தான் பாட்டி இந்த பஞ்சவர்ணக்கூட்டிற்கு அவளை அழைத்து வந்தாள். இரட்டை சடையும் சதா கண்களில் ஒருவித சோகமும் பரவியிருந்த அந்த குட்டிப்பெண்ணை பார்வதியம்மாளிற்கு ரொம்பவே பிடித்துப்போயிருந்தது. 

அவளுக்கு இருக்கிற பணத்துக்கு தனிவீடே எடுத்து தங்கியிருக்கலாம் பார்வதி ஆனா குதிரு மாதிரி வளர்த்திருக்கிற பெண்ணை வைச்சிகிட்டு அப்படி தனியா தங்கிட எனக்கு பயமா இருக்கு அதனாலதான் இப்படி ஆளும்பேருமா இருக்கிற வீட்டுக்கு குடிவந்திட்டோம் என்று பாட்டி தன் நடுங்கிய குரலோடு சொன்னாள் இன்னும் எத்தனை நாளைக்கு நான் இந்தப்பிள்ளைக்கு ஆதரவா இருக்கப்போறேனோ என்று பயந்தாலும், திண்ணையில் ஒரு கம்போடு காவலுக்குத்தான் இருக்கிறாள். 

அபிராமி என்ற அந்த பதிமூன்று வயதுபெண் இப்போது இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கிறாள். ஸ்ரீதேவியின் சாயலில் அச்சு அசலாய் அதே ஒடிசலான உடல்வாகுடன் கல்லூரியின் இறுதியாண்டை முடிக்கும் தருவாயில், கல்லூரிக்கு அருகிலேயே துணிக்கடை நடத்தும் மதன் ஸ்டோரின் உரிமையாளன் மதனின் மனதில் நிலைத்திருக்கிறாள்.




 

What’s your Reaction?
+1
13
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!