Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-7

(7)

இருகை கூப்பி வினயத்துடன் நின்றிருந்த ஆஞ்சநேயரைப் பார்த்தபடி நின்றார் அப்பா.

பிரம்மாண்டமாக கம்பீரமாக நின்றார் அனுவாவி ஆஞ்சநேயர்.

அப்பா அடிக்கடி இங்கு வருவது வழக்கம். அங்குள்ள முருகனை, கீழே மடத்தில் உள்ள சாரதாம்பாளைத் தரிசித்து விட்டுச் சென்றால் அவருக்கு ரொம்பத் திருப்தியாக இருக்கும். மனதின் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

அனுவாவி கோவை அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம்.

சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வரும்போது அனுமாருக்குக் களைப்பும், தாகமும் ஏற்பட, முருகன் தன் வேலால் ஒரு சுனையை ஏற்படுத்தி, அவர் தாகத்தைத் தணித்தார் என்பது தல வரலாறு.

யுகங்கள் தாண்டியும், சுனை நீர் வற்றாமல், அற்புத நிகழ்வுக்கு சாட்சியாக நிற்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த முருகனைத் தரிசித்து விட்டு, லலிதாம்பாள் சன்னதியில் அமர்ந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் சொல்வார்.

மாதம் ஒரு முறையாவது வந்து விடுவார்.

அங்குள்ள ஒரு கடையில் வெத்தலை பாக்கு, பழம் வாங்குவது வழக்கம். அவருடன் அமர்ந்து சில விஷயங்களைப் பேசி விட்டும் வருவார். ஆனால் இப்போது அங்கு போகப் பிடிக்கவில்லை. அப்படியே ஆஞ்சநேயருக்கு எதிரில், ஒரு நிழலான இடம் பார்த்து அமர்ந்தார்.

 




பாம்பு மேலே விழுந்து சத்யா படுத்த பிறகு அவர் மனம் சிறிது சலனம் அடைய ஆரம்பித்து விட்டது. வீட்டைச் சுற்றிலும் இருந்த மரங்கள், செடிகளை வெட்டி விட்டார். டிரெய்னேஜ் குழாய்க்கு மூடி போட்டு, சுற்றிலும் கான்கிரீட் தளம் போடச் சொல்லி விட்டார்.

       தெரிந்த ஜோசியர் ஒருவரிடம்  கேட்ட போது பாம்பு மேலே விழுந்து தலையிலிருந்து இறங்கிப் போனா, ராஜ வாழ்வுன்னு சொல்லுவாங்க. ஆனா சத்யா வாழ்வில் சில துக்கங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கு. மன வேதனை, துன்பம்னு நிம்மதி இல்லாத சூழல் வரலாம். விரும்பியது கிடைக்காமல் போகலாம். எல்லாமே ஒரு உத்தேசம்தான். முருகனைக் கும்பிடுங்க. வேலும், மயிலும் துணை நிற்கும். என்றார்.

சத்யா தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்வாள். ஒருவேளை அதுதான் அவளை எந்தக் கஷ்டமும் இல்லாமல் காப்பாற்றுகிறதோ?

இருக்கலாம் என்று நினைத்தபோதே, ஆமாம் என்று யாரோ சொல்லிக் கொண்டு கடந்து போனார்கள்.

இறைவன் இப்படித்தான் சூசகமாக சில விஷயங்களைக் கூறுவார் என்று நம்பினார் வாசுதேவன். இந்தப் பிரபஞ்சம் நமது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தருகிறது. ஆனால் அது நமக்குப் புரிவதில்லை. இது நல்லது, இது தீயது என்று சொல்கிறது. வழி காட்டுகிறது. மனதை நம்பிக்கையுடன் திறந்து வை. உன் எல்லாக் குழப்பங்களுக்கும் பதில் கிடைக்கும் என்பார். வாசுதேவனின் அப்பா.

அதன்படியே வாசுதேவனும் இதுநாள் வரை நடக்கிறார்.

இந்த விஷயம் எதைக் குறிக்கிறது?

‘இறைவா, எதுவாக இருந்தாலும் என் கண் எதிரில் என் குழந்தைகளை சுகமாக வாழ வை– அப்பா இருகண்கள் மூடி வணங்கினார்.

வண்டியில் கடைக்குத் திரும்பும் போது மதியம் இரண்டு ஆகி விட்டது. சாப்பாடு வந்திருந்தது. சாப்பிட்டு முடிக்கும் போது “வணக்கம் என்று சிதம்பரம் வந்து நின்றார்.

வாசுதேவன் அவரை இரண்டு மூன்று இடங்களில் சந்தித்து இருக்கிறார். விஜயின் கிளையன்ட். அவர் நடத்தும் லேபில்தான் அப்பா சர்க்கரை பரிசோதனை செய்வார்.

“வாங்க, வாங்க.– அப்பா வரவேற்றார்.

“சாப்பிடற நேரமா?– சிதம்பரம்.

“சாப்பிட்டு முடிச்ச நேரம்.– அப்பா சிரித்தார்.

“நல்ல நேரம். வாசு உங்க கிட்ட ஒரு விஷயம் பேச வந்திருக்கேன்.

“சொல்லுங்க.

“சத்யாவுக்கு இப்போ கல்யாண ஏற்பாடு செய்யற ஐடியா இருக்கா?

“ம். ஏதானும் நல்ல இடம் இருந்தா சொல்லுங்க.

“என்கிட்டே, அயனான ஒரு பையன் இருக்கான். கேட்கலாமா?

“இதென்ன கேள்வி? ஒரு வீட்டில் பொண்ணு இருந்தா, பையன் வீட்டில் தேடித்தான் வருவாங்க. நல்ல பையனா, என்னன்னு பேசி தீர்மானம் செய்யலாம்.

“அருமையான பையன். எம்.எஸ் பிலானியில் செஞ்சான். சொந்தமா ஐடி கம்பெனி நடத்தறான். எந்தக் கெட்ட வழக்கமும் இல்லை. கடவுள் பக்தி அதிகம். ஏழைகள் மேல் கருணையும், இரக்கமும் அதிகம். சினிமா ஹீரோ மாதிரி இருப்பான்.

“குட். அப்பா, அம்மா என்ன பண்றாங்க?

“அவங்க இல்லை. கூடப் பிறந்தவங்களும் இல்லை.

“அடடா, சொந்தம், பந்தம்னு வேண்டாமா?

சிதம்பரம் நிதானித்தார்.




“வேணும்னுதான். ஆனா இன்னைக்கு சொந்தங்களை விட நட்புகள்தான் உயிரோடு, உயிரா தோள் கொடுத்து நிக்கறாங்க. நம்ம மேல அன்பும், அக்கறையும் கொண்டவங்கதான் நமக்கு உண்மையான உறவுகள்.

வாசுதேவன் பேசவில்லை. அவருக்கு எதோ புரிந்தது.

“நான் சொல்றதை தப்பா நினைக்காதீங்க. பையன் நல்லவனா? பொண்ணு மேல அன்பா பிரியமா இருக்கானான்னு பாருங்க. நிறைய சொந்தங்கள் இருக்கலாம். ஆனா, உடனே ஓடி வரது நட்புகள்தான். நமக்கு ஏதானும் ஆச்சின்னா, பக்கத்து வீடுதான் உடனே ஓடி வரும். அதன் பிறகுதான் உறவுகள் வரும்.

“சரி, பையன் யாருன்னு சொல்லுங்க.

சிதம்பரம் தயங்கினார்.

“ம். சொல்லுங்க.

“நம்ம சிவசுதான்.

“நினைச்சேன்.– வாசுதேவன் உஷ்ணமானார். “வேலைக்குன்னு வர பொண்ணைப் பார்த்து காதலா?

“சேச்சே அப்படிச் சொல்லாதீங்க. நான்தான் கேட்க வந்தேன்.

“அவனுக்குக் காதலா?

“என்னால பொய் சொல்ல முடியலை.

“சிதம்பரம், உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா, இப்படிக் குலம், கோத்திரம் தெரியாத ஒருத்தனுக்கு கட்டி வைப்பீங்களா?

“நல்ல கேள்வி. ஆனா கட்டி வைப்பேன். ஏன்னா, சிவசு நல்ல பையன்.

“இருக்கலாமா. ஆனா நாளை என் சொந்தங்கள் மத்தியில் நான் என்ன பதில் சொல்ல முடியும்?– அப்பா தணிவாகப் பேசினாலும், அதில் காட்டம் இருந்தது.

“- – – – – – -“

“தயவு செய்து இனி இது விஷயமாப் பேச வேண்டாம்.

அப்பா எழுந்தார். கௌதம் ஓடி வந்தான். தூரத்தில் நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவன், அப்பா எழுந்ததும் அருகில் வந்தான்.

“கௌதம் சார் கிளம்பறார். நான் ஒரு பத்து நிமிஷம் தலை சாச்சுட்டு வரேன்.

“சரி அங்கிள். நீங்க வந்தாட்டு நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.

“என்ன விஷயம்?

“சத்யாவுக்கு ஜூஸ் போட பழங்கள் தீர்ந்து போச்சாம். அத்தை வாங்கிட்டு வரச் சொன்னாங்க.

“சரி– அப்பா ரெஸ்ட் ரூம் நோக்கி நகர, கௌதம் சிதம்பரத்தைப் பார்த்தான். அந்தப் பார்வை புரிய சிதம்பரம் மெதுவாக எழுந்தார். நடை தளர்ந்து, மெல்லப் படி இறங்கிப் போனார்.

அப்பாவுக்குப் படுக்க முடியவில்லை. முள் குத்தியது. உடனே சத்யாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

சிதம்பரம் வந்ததின் பின்னணியில் சத்யாவும் இருப்பாளோ? என்ற சந்தேகம் அவருள். ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். இன்றைய நாகரீகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தறி கேட்டு அலையும் நாகரீகம். அது சத்யாவையும் விட்டு வைத்திருக்காது.

எழுந்து வெளியில் வந்தார். கௌதம் இல்லை.

“வீட்டுக்குப் போய்ட்டு வரேன்னு போனாருங்க.

 




“ஒ– அவருக்கு ஞாபகம் வந்தது. தானும், சத்யாவுக்குப் பழங்கள்  வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

வீட்டில் கௌதம் சத்யாவை சாப்பிட வற்புறுத்திக் கொண்டிருந்தான். சோபாவில் அமர்ந்திருந்த அவளை கௌதம் சாப்பிடச் சொல்ல மறுத்துக் கொண்டிருந்தாள் சத்யா.

அவனின் வற்புறுத்தல் தாளாத சத்யா சட்டென்று எழுந்து நகர முற்பட, அப்படியே சரிந்து விழுந்தாள். மர சோபாவின் முனை பட்டு ரத்தம் பீறிட்டது. அப்பா என்று அலறிய சத்யாவை அப்படியே அள்ளிக் கொண்டு காருக்கு ஓடினான் கௌதம்.

என்ன முடிவு எடுப்பது என்று அப்பாவுக்குத் தெரிந்து விட்டது.




What’s your Reaction?
+1
5
+1
10
+1
0
+1
0
+1
0
+1
2
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!