Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-1

     (1)

கோலம் அழகாய் இருந்தது..

சின்னச் சின்ன வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்க நடுவில் அழகான ஒரு அன்னப் பறவை, கம்பீரமாய் கழுத்தை திருப்பிப் பார்த்தது. சத்யா சின்ன சாணி உருண்டையில் பரங்கிப்பூ சொருகி அதன் கொண்டையில் வைத்து, தூர நின்று அழகு பார்த்தாள்.




பச்சை, சிவப்பு, வெள்ளை என்று அழகழகான வண்ணங்கள் கோலத்தை இன்னும் அழகாக்கிக் காட்டியது. விலகி தூர நின்று கோலத்தை ரசித்தாள். எதிர் வீடு, அவள் வீட்டு வராந்தாவில் எரிந்த விளக்குகள் கோலத்தின் மீது பட்டு வர்ணஜாலம் காட்டியது.

மார்கழி காலை நேரக் குளிர் எலும்பை உருக்கியது. போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி குளிர் குத்தியது. என்றாலும் ரசித்து, ரசித்து கோலத்தை அழகு படுத்தினாள் சத்யா. அந்த நேரத்திலும் மாரியம்மன் கோவிலில் அதிகாலை பூஜை ஆரம்பித்து விட்டது. அந்தத் தெருவில் உள்ளவர்கள் சால்வை, ஸ்வெட்டர் என்று போர்த்திக் கொண்டு கோவிலை நோக்கி படை எடுத்தார்கள்.

“சத்யா நீ வரலியா?– எதிர் வீட்டு பத்மா மாமி.

“இன்னைக்கு என்ன பிரசாதம் மாமி?

“அவல் உப்புமான்னு நேத்து சொர்ணா சொல்லிட்டிருந்தா. அவ கட்டளை இன்னைக்கு.

“போங்க மாமி. எனக்கு அவல் உப்புமா பிடிக்காது.

“நல்லாச் சொல்லு. யாருக்குத்தான் அவல் உப்புமா பிடிக்கும்?

மாமியின் கணவர் சபேசன் பின்னாடியே வந்தார்.

“சகிக்கலை. கோவிலுக்கு வரது அம்மனைப் பாக்கவா? பிரசாதம் சாப்பிடவா?

“பிரசாதம் சாப்டுண்டே அம்மனைத் தரிசனம் செய்ய

“இது நல்ல பதில்?




“அம்மாடி சத்யா, நீ இந்தக் கோலங்களை சிஸ்டத்துல போட்டு இங்க காப்பி பேஸ்டா? பேங்கர் ராமன் வந்தார்.

“அதெப்படி? இதெல்லாம் கடைல விக்கிற புஸ்தகத்தைப் பார்த்து பழகறது.

“அப்போ நீ வேலைக்குப் போற இடத்துல இந்தக் கோலம் போடறதைத்தான் செய்யறியா?

“பாத்தீங்களா? உலை வைக்கறீங்களே?– சத்யா சிரித்தாள்.

“எங்க? அரிசி வேக மாட்டேங்குதே.– சபேசன்.

“இப்போ உனக்கு எந்த அரிசி வேணும்?

“சத்யா கல்யாண அரிசி.

“அரிசிக் கடைல சொன்னா அவன் அந்த பிராண்டு தரான்– சத்யாவின் அப்பா வாசுதேவன் வெளியில் வந்தார்.

“ஆச்சு, தத்துவமேதை வந்துட்டான். வாப்பா ஓஷியோகி– ராமன்

“அது யாரு ஓஷியோகி?




“யாருக்குத் தெரியும். எதோ வாய்க்கு வந்த பெயர். ஜென் குரூ.

“இப்ப நான் என்ன செய்யணும்? தரை குனிஞ்சு வணங்கனுமா?

“வேண்டாம், வேண்டாம். உன் தொப்பைக்கு தொந்தரவு வேண்டாம்.

“நானுன் என்னென்னவோ செய்யறேன். இந்தத் தொந்தி மட்டும் குறையவில்லை. அப்பா வருத்தத்துடன் பேசினார்.

“தொந்தி குறையனும்னு நினைச்சா மட்டும் போதாது. எக்ஸசைஸ் செய்யணும், சாப்பாட்டுல அதிக எண்ணெய், கொழுப்பு கூடாது.

“அதைச் சொல்லுங்க. சாயந்திரம் கடைக்கு எதிர்ல பஜ்ஜி, போண்டா வாங்கித் தின்னா? நைட் எப்பவும் தோசை, தேங்காய் சட்னிதான் வேணும்.– அம்மா தங்கம் வாசலுக்கு வந்தாள்.

“இன்னைக்கு என்ன குறை தீர்க்கும் நாளா?– சத்யா குறுக்கே புகுந்தாள்.

“அப்பாவை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கமே வராது.

“உங்கப்பாவைச் சொன்னா உனக்கு ஆகாதே.

அப்பா சின்னச் சிரிப்புடன் அவள் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு படி இறங்கினார்.

“கோவிலுக்கு போய்ட்டு அப்படியே வாக்கிங் முடிச்சுட்டு, காய்கறி வாங்கிட்டு வரேன்

“என்ன காய்னு சொல்லிட்டா, நான் ரெடி பண்ணுவேன்.– தங்கம்.

“சேப்பங்கிழங்கு ரோஸ்ட். உருளை, வெங்காயம் போட்டு சாம்பார். லெமன் ரசம்.– அப்பா நடந்தார்.




“ஏற்கனவே உடம்புல கொழுப்பு அதிகம். இதுல சாப்பிடற எல்லாமே கொழுப்பு.– தங்கம் புலம்பினாலும், அப்பாவுக்கு பத்து மணிக்கு சுடச்சுட அவர் கேட்டது டைனிங் டேபிள் மேல் இருக்கும். அவரின் ருசி, பசி அறிந்து செயல்படும் அம்மாவின் பேச்சில் அப்பாவின் மீதான அக்கறைதான் இருக்கும். சாப்பிட்டதும் சுக்கு போட்டு வெந்நீர். இரவு படுக்கும்போது பூண்டு தட்டிப் போட்டு பால் சுடச்சுட.

“நாள் பூரா சாப்பிடறது எண்ணெய் பலகாரங்கள்– என்பாள் அம்மா.

காலையில் அண்ணா சீக்கிரம் எழுந்து டவுன்ஹால் போய் கடை திறந்து விடுவான். ஒன்பதரை மணிக்கு அப்பா சாப்பிட்டு கடைக்குப் போனதும், அண்ணா வீட்டுக்கு வந்து குளித்து, அவனும் சாப்பிட்டு தன் ஆடிட்டர் அலுவலகம் இருக்கும் ஆர். எஸ். புரம் போய் விடுவான். அதுவரை அவன் மனைவி மைதிலி அங்கு இருப்பாள்.

சத்யாவுக்கு ஐடி பார்க்கில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை. அவளும் ஒன்பது மணிக்குக் கிளம்பி விடுவாள்.

“நீங்க கிளம்பினாத்தான் எனக்கு ரெஸ்ட்– என்பாள் அம்மா அடிக்கடி.

ஆனால் இரவு சாப்பாடு எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான். மைதிலி கிச்சனுக்குள் புகுந்து விடுவாள். தங்கத்துக்கு ரெஸ்ட். சத்யாவை விட மாட்டாள் மைதிலி.

“கல்யாணம் ஆகிப் போனா அங்க சமைக்கறது இருக்கவே இருக்கு.

“அப்புறம் அவ எப்படி கத்துக்கறது?

“தேவைன்னு வரப்போ எல்லாம் தானா வந்துடும். நான் இங்க வந்துதானே சமைக்கவே ஆரம்பிச்சேன். அத்தை எனக்கு எல்லாம் கத்துத் தரலையா? அப்படித்தான். ருசிச்சுச் சாப்பிடற புருஷன் இருந்தா எல்லா சமையலும் பழக்கமாயிடும்.– என்பாள் மைதிலி.

அண்ணா நன்றாக ரசித்துச் சாப்பிடுவான். இன்றைய நவீன சமையல் மைதிலி நன்றாகச் செய்வாள். ஸ்பைசி ஐட்டம் அண்ணா, சத்யாவுக்குப் பிடிக்கும் என்பதால் மைதிலி அடிக்கடி அதைச் செய்வாள்.

இன்று ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பதால் சமையல் கிராண்டாக இருக்கும். அப்பா வரும்போது கீரைக் கட்டு பசேல்னு இருந்தது என்று வாங்கி வந்தார்.

“சூப்பர் மாமா. நான் சமையல் செய்யறேன் இன்று. கீரை மசியல், பூசணிக் கூட்டு. மோர்க்குழம்பு. சேப்பங்கிழங்கு ரோஸ்ட், உருளை சின்ன வெங்காயம் போட்டு சாம்பார். அரிசி வடாம். மதியம் வெங்காய பக்கோடா. ராத்திரி சாதம் கரைச்சி ஆளுக்கு ரெண்டு டம்ளர் மோருஞ் சாதம்

“தேவாமிர்தம்.– அப்பா கையெடுத்துக் கும்பிட்டார்.

தங்கம் துணிகளை எடுத்து தோய்க்கப் போட்டாள். அண்ணா விஜய் ஒட்டடைக் குச்சியை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

“நான் என்ன செய்யட்டும்?– சத்யா.

“ஹால் சோபால படுத்துண்டு காலை ஆட்டிண்டு புஸ்தகம் படி.– அண்ணா.

“இன்னைக்கு லீவ். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளி.– அம்மா.

“ஞாயிற்றுக் கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.– சத்யா.

“ஏன்?




“அழகு போயிடும்.

“அங்க என்ன அழகு இருக்கு? போறதுக்கு.?– அண்ணா விஜய்.

“டேய்ய்! என் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்.?– அப்பா.

“சாமீ நான் எதுவும் சொல்லலை. ஊர்வசி, ரம்பாவை விட அழகு.

“அவங்கல்லாம் யாருடா?

“பழைய சினிமா நடிகைங்க.– அண்ணா.

“அடி வாங்கப் போற நீ

“ஒரு நல்ல ஐடியா சொல்லட்டா? அண்ணா

“நீ எப்பவும் உருப்படாத ஐடியாதானே சொல்லுவே. சொல்லு.

“ஞாயித்துக் கிழமை குளிக்கவே கூடாது.

“அப்படின்னா அந்த அன்னைக்கு பல்லும் தேய்க்கக் கூடாது.

“அதே, அதே

“அப்பா அவனை புன்சிரிப்புடன் பார்த்தார்.

“நைனாஜி உன் பார்வைல எதோ கள்ளம் தெரியுது.

“இல்லை, குளிக்கலை, பல் தேய்க்கலைன்னா சாப்பிடவும் கூடாதே.

“ஆமாம் மாமா. கரெக்ட். அப்போ மதியம் ராகிக் கூழ். தயிர்.– மைதிலி




“நைனா, அலறினான் அண்ணா. “பிதாஜி, பப்பா? – – – – தெய்வமே– அண்ணா அப்பாவை கட்டி பிடித்துக் கொண்டான்.

“விடுடா. ரொம்பப் பேசாதே.

“இப்படி சோத்துல கை வைக்கறதுன்னா, நான் மௌனம் சர்வார்த்த சாதகம்னு இருந்துடறேன்.

“அதைப் பண்ணு. இப்ப ஒழுங்கா ஒட்டடை அடி. நானும் வரேன்.

அப்பாவும் எழுந்த போது வாசலில் ஒரு ஆட்டோ  நின்றது.

“யாருன்னு பாரு.– அப்பா.

ஆட்டோவிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் இறங்கினாள். உடன் டிப்டாப்பாக ஒரு இளைஞன். ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி இருந்தான். தயங்கி உள்ளே நுழைந்த அவள் அப்பாவைப் பார்த்து

“அண்ணா நல்லா இருக்கியா?– என்றாள்.

அப்பா எதுவும் பேசாமல் திரும்பி நின்றார்.

“எல்லாத்தையும் இழந்துட்டு, நீ இருக்கேன்னு வந்திருக்கேன் அண்ணா. இன்னமும் உன் கோபம் தீரலையா?

“சிவகாமி– அம்மா பரபரப்புடன் முன் வந்தாள். அப்பாவின் பார்வை கண்டு பின் வாங்கினாள்.

“மாமா உங்க கோபம் நியாயமானது. ஆனா நான் என்ன பாவம் செய்தேன்? எனக்காக எங்களை மன்னிக்க முடியாதா?- இளைஞன் முன்  வந்தான்.

“அம்மா செஞ்சது சரி, தப்புன்னு சொல்ல வரலை. ஆனா அப்பா இறந்துட்டார். ஒரே பொண்ணு அவளும் போயிட்டா. நான் மட்டும்தான் இருக்கேன். நீங்க எல்லோரும் வேணும்னு வந்திருக்கோம்.– அவன் குனிந்து அப்பாவின் கால் தொட அப்பா சட்டென்று பின் வாங்கினார்.

கை கூப்பி நின்ற அவன் மேல் பார்வை விழுந்தது. மனம் கனிவது முகத்தில் தெரிந்தது.

“உள்ள வாங்க– என்றார்.

“அவளுடன் பிரச்சினைகளும் உள்ளே நுழைந்தது.




What’s your Reaction?
+1
13
+1
23
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!