Serial Stories

உறவெனும் வானவில் – 9

9

 

“இனி ரூபன் முழுக்க உன் பொறுப்பு.அம்மாவிடம் குழந்தை பக்குவம் கேட்டு பழகிக் கொள் ” அதிகாரமாய் குரல் உயர்த்தியவனை அற்ப புழுவே பார்வை பார்த்தாள்.

அந்த அலட்சியம் சக்திவேலின் கோபத்தை தூண்டியது.” ஏய் என்னடி பார்வை இது?”

“டி யா? நான் டா சொல்லவா?”

முகத்திலடித்த அவள் கேள்வியில் ஒரு நொடி அயர்ந்து நின்றவனின் இதழ்கள் கோணின.

“அந்த சித்தார்த்தை டா சொல்லித்தான் கூப்பிடுவாயா?”

யவனாவின் அலட்சியம் முனை மழுங்கியது.”காலம் காலமாக பெண்ணின் வாயை அடைக்க ஆண்கள் கையாளும் முறை.ச்சீ…” அறையை விட்டு வெளியேறினாள்.

அவளது ச்சீயில் ஆண் திமிர் தூண்டப்பட்டவன் அதிகார காலடியோடு முன்பக்க பால்கனியில் நின்று கொண்டிருந்தவளருகே வந்து நின்றான்.

“என்னடி உளறுகிறாய்?”

“நானா ? நீங்களா?”

“குழந்தையை பார்த்துக் கொள்ளென்றால் சரியென்காமல் திமிர் பேச்சு பேசுகிறாய்?”




“எனக்கு மனது சரியில்லை.கொஞ்ச நாட்கள் போகட்டும்.பிறகு முயற்சிக்கிறேன்” சொல்லிவிட்டு நகர போனவளின் தோளை பிடித்து நிறுத்தினான்.

“ஏய் நான் பேசிக் கொண்டிருக்கும் போது போய் கொண்டேயிருந்தால் என்னடி அர்த்தம்?”

“எனக்கு உங்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்டா”

“ஏய்ய்ய்…” சிறு கூச்சலுடன் அவள் இரு தோள்களையும் பிடித்து அப்படியே மேலே உயர்த்தியிருந்தான்.கால்கள் அந்தரத்தில் ஊசலாட,அவன் கைகளின் பலத்தில் காற்றிலாடிய தேகம் ஒரு வகை பதட்டத்தை கொடுத்தாலும்,குனிந்து அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

சக்திவேல் அவளை மெல்ல இறக்கி பாதங்களை தரையில் நிறுத்தினான்.”என்ன பிரச்சனை உனக்கு?” கொஞ்சம் மெதுவாகவே கேட்டான்.

யவனாவினுள் ஒரு வகை குரூரம் புகுந்து கொண்டது.” என் சித்தார்த் அத்தானுடன் பேச வேண்டும்.கொஞ்சம் தள்ளிப் போங்களேன்…” நிறுத்தி “போயேன்டா ” என்றாள்.

சக்திவேல் இருள் படர்ந்த முகத்துடன் அங்கிருந்து படபடவென வெளியேறினான்.இரண்டாவது நிமிடம் அவனது பைக் வீட்டின் சுற்றுச்சுவர் தாண்டி செல்வதை இங்கிருந்து பார்த்தாள் யவனா.

இவ்வளவு நேரம் அவளுள் வியாபித்திருந்த வீம்பு கரைய,உடல் பலமிழந்து தள்ளாட தொப்பென தரையில் அமர்ந்தாள்.கண்களை தொட்டுப் பார்த்தாள்.இல்லை…துளி நீர் கூட கசியவில்லை.எப்படி…அவளுக்கே ஆச்சரியம்தான்.எத்தனை அதிர்ச்சிகள்…தூற்றல்கள்…துரோகங்கள்.அத்தனைக்கு பிறகும் கண்கள் கலங்கவில்லையென்றால்…நான் ஒரு தைரியமான பெண்ணா?

உடன் கை கொட்டி சிரித்தது அவள் மனம்.இருப்பதையெல்லாம் வாரிக் கொடுத்து விட்டு கூடவே வாழ்க்கையையும் பட்டா போட்டு எழுதிக் கொடுத்து விட்டு நிற்கும் நீ தைரியமானவளா? துக்கமோ,சந்தோசமோ தன் மனதை திறந்து கொட்ட அவளுக்கு சதா யாரேனும் அருகில் வேண்டும்.சட்டென அவர்களை அணைத்துக் கொண்டு கேவுவாள்.அப்பா,சித்தி,வைஷ்ணவி என்ற பட்டியலின் பின் இப்போது அவளுக்கென யாருமில்லை.எதுவுமேயில்லை.

நீ அநாதையாக இருக்கிறாய்…மீண்டும் மீண்டும் அவள் உள்மனம் அவளை இடித்துரைத்து பலவீனப்படுத்த முயன்றபடியே இருக்க,யவனாவோ மனதிற்குள் சுருங்காமல் மீண்டும் மீண்டும் போனை முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

இல்லை அப்பா,சித்தியின் போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.வெளிநாட்டு பயணத்தில் இது எதிர்பார்த்ததுதான்.அமெரக்கா போய் இறங்கியதுமே புது சிம்கார்டு வாங்கி அவளுடன் பேசுவதாக சொல்லியிருந்த சித்தி இன்னமும் அமெரிக்கா போய் இறங்கியிருக்காத போது,இவளது போனிற்கு என்ன பலன்?

ஆனாலும் யவனா முயன்றாள்.என்ன எதிர்பார்க்கிறாளென்று தெரியாமலேயே மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தபடியே இருந்தாள்.

“உங்களை சாப்பிட கூப்பிட்டாக” காதில் கேட்ட பெண் குரலுக்கு…” எனக்கு வேண்டாம்” என்ற பதிலை போனை பார்த்தபடி நிமிராமலேயே சொன்னாள்.

“அதை உங்க மாமியார்கிட்ட நேரில சொல்லுங்க.கீழே கத்திக்கிட்டு கிடக்காக”

யவனா நிமிர்ந்து பார்க்க வீட்டு வேலை செய்யும் பெண் நின்றிருந்தாள்.கையில் விளக்குமாறும்,குப்பை தட்டும் இருந்தது.

“மாடியை தூத்து தொடைக்கனும்.நீங்க போயி சாப்பிட்டு வர்றதுக்குள்ள முடிச்சுடுறேன்”

வெளியே போ என அவள் மறைமுகமாக சொல்வதை உணர்ந்து எழுந்து கீழே வந்தாள்.வீடு அமைதியாக இருந்தது. சுகந்தியும்,தாராவும் உள்ளூரிலேயேதான் திருமணம் முடித்து கொடுக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் வீட்டிற்கு போயிருக்கலாமென ஊகித்தாள்.கண்களை சுழற்றி பார்த்து நின்ற போது திடுமென வீரிட்ட குழந்தையின் அழுகுரல் அவளுள் ஒரு திடுக்கிடலை கொடுத்தது.

அந்த குழந்தைதான்…ரூபன்.அவன்தான் அழுகிறான்.யவனாவின் உடல் இறுகியது.தசைகள் விரைத்தபடி குழைய மறுத்து நின்றன.ஹாலின் ஓரத்தில் ஊஞ்சல் போலிருந்த மரதொட்டிலின் கொசு வலைக்குள் படுத்திருந்தவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள்.




“அட…டா.அதுக்குள் முழிச்சாச்சா?” சலித்தபடி அவளது அறைக்குள்ளிருந்து வெளியே வந்த நிர்மலா,இவளைப் பார்த்ததும் எரிச்சலானாள்.

“தூக்க வேண்டாம்.தொட்டிலை ஆட்டியாவது விடலாமில்லையா?” சண்டைக்கு தயாராக நின்றாள்.

கணவனின் அண்ணன் குழந்தையையும் சேர்த்து பார்க்க இவளுக்கென்ன தலையெழுத்து?நிர்மலாவின் எரிச்சலை அங்கீகரித்துக் கொண்ட யவனாவின் மனம் தொட்டிலுக்குள் கத்திக் கொண்டிருந்த குழந்தையை அங்கீகரிக்கவில்லை.சலனமின்றி ஆடும் தொட்டிலை பார்த்து நின்றிருந்தாள்.

“நிம்மி போய் குழந்தையை தூக்கு.அவள் சாப்பிடட்டும்” அடுப்படிக்குள்ளிருந்து வந்த சண்முகசுந்தரி சொல்ல,முணுமுணுத்தபடி போய் குழந்தையை தூக்கினாள் நிர்மலா.மாமியார் தன்னை உற்றுப்  பார்ப்பதை உணர்ந்தும் கவனியாதது போல் டைனிங் ரூமிற்கு போய் டேபிளில் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து என்னவென்று உணராமலேயே தட்டில் போட்டு வாயில் திணித்துக் கொண்டாள் யவனா.

அன்று மூன்று வேளை உணவையும் இப்படித்தான் உண்டாள்.உணவு முடிந்ததும் மாடி அறைக்கு வந்துவிடுவாள்.போனை மீண்டும் மீண்டும் அழுத்தி அப்பா ,சித்தியை முயல்வாள்.சக்திவேல் இரவு திரும்ப வந்த போதும்,போனைத்தான் அழுத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன செய்கிறாய்?” முன் நின்று கேட்டவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

“உன்னைத்தான் கேட்கிறேன்”

“போன் பேசப் போகிறேன்”இப்போதும் தலை நிமிர்த்தவில்லை.

“யாருக்கு?”

விருட்டென நிமிர்ந்தாள்.”யாரிடம் பேச வேண்டுமென்றும் நீங்கள்தான் சொல்வீர்களோ?”

“அப்படி இல்லை.நீ பேசுபவர்களை தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது”

“சொல்ல முடியாது.நான் என் சித்தார்த் அத்தானுடன் பேசுவேன்,என் கல்லூரி் தோழர்களுடன் ஐ மீன் பாய் ப்ரெண்ட்ஸ் எனக்கு நிறைய உண்டு.அவர்களிடம் பேசுவேன்.என் தெருவில் எதிர் வீட்டில் ஒரு ஸ்மார்ட் கை இருந்தான்.அவனுடனும் எனக்கு பழக்கம் உண்டு.அவனிடம் பேசுவேன்.உங்களால் என்ன செய்யமுடியும்?என்னை ஒதுக்கி வைத்து விடுவீர்களா?டைவர்ஸ் செய்து விடுவீர்களா?”

என்ன பேசுகிறோம் என்ற ப்ரக்ஞை இன்றி பேசிக் கொண்டே போனவளை இடுப்பில் கை தாங்கி பார்த்தபடி நின்றவன் “நிச்சயம் இல்லை” என்றான்.

என்ன இல்லை…எது இல்லை?தன் வாய் வழி வார்த்தைகளை தானே உணராது குழம்பி அண்ணார்ந்து அவன் முகம் பார்த்தவளை குனிந்து தன் கைகளில் அள்ளினான் சக்திவேல்.

“நாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.நாம் இருவரும் கணவன்-மனைவி.ஒருவர் மேல் ஒருவர் உரிமையும் ஆதிக்கமும் உடையவர்கள்.என் உரிமையை விட்டுத் தரவோ,ஆதிக்கத்தை நிலை நாட்டவோ நான் எப்போதும் தவறியதில்லை.இப்போதும்…” என்றபடி அவளை கட்டிலில் சரித்து தானும் அருகில் சரிந்தான்.

“சை இது எனக்கு பிடிக்கவில்லை.தள்ளிப் போங்கள்” நெட்டி தள்ள முயன்றவளை எளிதாக அடக்கினான்.

“வாய்க்கு வந்ததை பேசினாயே!ஏற்ற கடமையை செய்ய மறுத்தாயே!பெரியவர்களை அலட்சியம் செய்தாயே!உனக்கு பிடிக்காததை ஏற்றுக் கொள்ளும் இந்த தண்டனை தேவைதான்”

நிதானமான அவனது வார்த்தைகளில் தப்பு செய்த குற்றவுணர்வு வர யவனா ஊமையாய் சுருண்டு கணவனது ஆதிக்கத்துள் அடங்கினாள்.




What’s your Reaction?
+1
20
+1
26
+1
2
+1
1
+1
0
+1
1
+1
15
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!