Serial Stories

உறவெனும் வானவில் – 5

5

 

“இந்த சேலை அழகா இருக்கே! என்ன விலை?” முந்தானையை நேர்த்தியான மடிப்புகளாக்கியபடி கேட்டாள் சுகந்தி.சக்திவேலின் அக்கா.

“டிஸ்கவுன்ட் போக அறுபதினாயிரம் வந்தது அக்கா”

“அவ்வளவா?” சுகந்தியின் விழி தெறிப்பை பார்த்த யமுனாவிற்கு ஏதோ தப்பு செய்து விட்டோமோ என்ற குழப்பம் வர,சரியாக அவள் இடுப்பை முழங்கையால் லேசாக இடித்தாள் நிர்மலா.சக்திவேலின் அண்ணன் மாதவனின் மனைவி.

“அதென்ன அக்கான்னு சொல்றீங்க? அவுங்க நமக்கு அண்ணி முறையாகனும்” பேசாதே என்னும் சாடையை யவனாவிற்கு காட்டியபடி உறவை விளக்கினாள்.

“ஓ..எனக்கு இந்த உறவு முறையெல்லாம் சரியா தெரியலை.நீங்க சொல்லிக் கொடுக்கிறீங்களா அக்கா?” யவனா நிர்மலாவை பார்த்து கேட்க,இப்போது அவள் முகம் சிவந்தாள்.

” அக்காவா ?”

சுகந்தி களுக்கென சிரித்தாள்.”ஆமாம்.யவனா வயசென்ன? உன் வயசென்ன? நீ அக்காதானே ?”

முன் கொசுவ மடிப்பிற்காக கீழே அமர்ந்திருந்த நிர்மலா எழுந்து மூக்கு விடைக்க நின்ற போது,தாரா உள்ளே நுழைந்தாள்.சுகந்தியின் தங்கை.அந்த வீட்டின் கடைக்குட்டி.

“அக்கா,அண்ணி புடவை கட்ட எவ்வளவு நேரம்?சீக்கிரம் வாங்க”

“இவுங்க….அண்ணி.சரியா?”யவனா கேட்க தாரா அவளை ஏற இறங்க பார்த்தாள்.

” ம்..ம்…உறவெல்லாம் சரிதான்.

வாங்க…வாங்க.அண்ணி ரூபன் அழுறான்.போய் என்னன்னு பாருங்க”

நிர்மலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.” நான்தான் சேலை கட்டி விட்டுட்டு இருக்கேன்ல.ஒருநாள் நீதான் குழந்தையை பாரேன்”




“எனக்கு வேறு வேலை இருக்கு.நீங்கதான் பார்க்கனும்.வாங்க “

அதிகாரமாய் கையசைத்து போனாள் அவள்.பின்னேயே சுகந்தியும் போக,நிர்மலா யவனாவின் தோளில் இடித்தாள்.

“இவளுக பிள்ளைகளை நாம தோள்லருந்து இறக்கி விடாம வளர்க்கனும்.நம்ம பிள்ளைகள் அலறி அழுதா கூட ஏன்னு கேட்கமாட்டாளுக.பார்த்தியா இந்த நாத்தனார்கள் அட்டகாசத்தை “

யவனா என்ன சொல்வதென்று தெரியாமல் எச்சில் விழுங்கினாள்.

” புடவை,நகை விலைகளெல்லாம் இந்த பொண்ணுங்களுக்கு அப்படியே சொல்லனும்னு அவசியமில்லை.புரியுதா?”

“எந்த பொண்ணுங்களுக்கு அக்கா?” யவனாவிற்கு நிஜமாகவே புரியவில்லை.

“ஐயோ தத்தி, இந்த குடும்பத்து பொண்ணுங்களுக்குத்தான்”

“நாமும் இந்தக் குடும்பத்து பெண்கள்தானேக்கா?”

” சரிதான்.மகா கனம் பொருந்திய சண்முகசுந்தரி அம்மா முன் இப்படி சொல்லிப் பாரு.அப்போ தெரியும் சேதி “

“சண்முகசுந்தரி அம்மான்னா…நம்ம அத்தைதானேக்கா?”

” ஆமாம் அறிவாளியே.நம்ம புருசன்களை பெத்த மகராசி.நம்ம மதிப்புக்குரிய மாமியார்.சரி வா…இதையெல்லாம் பேச இப்போ நேரமில்லை.முகூர்த்தத்திற்கு நேரமாச்சு.வந்து தாலியை கட்டிக்கோ”

தண்ணியை குடிச்சுக்கோ எனும் ரீதியில் நிர்மலா சொன்ன தாலியை கட்டிக்கோ யவனாவை உறுத்தியபடியே இருந்தது. சக்திவேலின் கையால் தாலி கட்டிக் கொண்ட பின்னும் அந்த உறுத்தல் மறையவில்லை.இங்கே எங்கேயோ ஏதோ தவறிருப்பதாக அவளுக்கு பட்டது.

உடனே அவள் கண்கள் சித்தி அருந்ததியை தேடின.அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.முதல் வரிசையில் முதல் சேரில் உட்கார்ந்து அவளைப் பார்த்தபடி இருந்த சித்தார்த்திற்கு சிறு புன்னகையை கொடுத்தவள் விழிகளை சுழற்றினாள்.

நிர்மலா தோளில் ஒரு அழும் குழந்தையை போட்டுக் கொண்டு சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.இன்னொரு வாண்டு கீழே நின்று அவள் முந்தானையை பிடித்து இழுத்தபடி ஏதோ அடமாய் கேட்டுக் கொண்டிருந்தது.நிர்மலா இரு குழந்தைகளை சமாளிக்க திணறியபடி இருந்தாள்.




சற்று தள்ளி சுகந்தியும்,தாராவும் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஏதோ பேசி சிரித்தபடி இருந்தனர்.சற்றுத் தள்ளியே ஒரு பெண் தன் இரு குழந்தைகளையும் சமாளிக்க திணறிக் கொண்டிருக்கும் போநு., எப்படி இவர்களால் இப்படி கவலையின்றி இருக்க முடிகிறது?

யவனாவின் மனதிற்குள் பெரிய குழியாய் ஒரு நிரப்ப முடியா வட்டம் விழுந்ததை போலிருந்த்து.எங்கேயோ அபஸ்வரம் தட்டியது.

“இந்த வெயிலோடு யாக புகை வேறு.யவனா சோர்ந்து தெரிகிறாள்.லேசாக முகம் கழுவி அழைத்து வருகிறேன்”

மேடையில் தவித்து அமர்ந்திருந்த யவனாவை நாசூக்காக பேசி எழுப்பி அழைத்துப் போனாள் அருந்ததி. அச் சிறு மண்டபத்தில் மேடையோரமிருந்த  மணமகள் அறைக்குள் நுழைந்ததும்,கதவை சாத்திய யவனா,சித்தியை கட்டிலில் அமர்த்தி சட்டென மடியில் படுத்துக் கொண்டாள்.

அருந்ததி அவள் தலையை இதமாக வருடியபடி கேட்டாள்” என்னம்மா என்ன விசயம்?ஏன் டல்லாக தெரிகிறாய்?”

“கவனித்தீர்களா சித்தி?”

“உன்னைக் கவனிப்பதை விட எனக்கு வேறு என்னடாம்மா வேலை?உன் முகம் கலங்கினால் என்னால் தாங்க முடியுமா?சொல்லுடாம்மா “

சித்தியின் அன்பில் மனம் நெகிழ முகம் திருப்பி அவள் மடியில் புதைத்துக் கொண்டாள்.” எனக்கு பயம்மா இருக்கு சித்தி”

” எதற்குடாம்மா பயம்?”

“அந்த வீட்டுப் பெண்கள் எல்லோரும்…வ..வந்து ஒ…ஒரு மாதிரி பேசுகிறார்கள்”

“ஏன்டாம்மா உன்னை ஏதும் திட்டினார்களா?சண்டை போட்டார்களா?”

“ம்ஹூம் இல்லை சித்தி.அவர்களுக்குள்ளாகவே வந்து …ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்கிறார்கள்.புறணி மாதிரி ஒருவரையொருவர் சொல்கிறார்கள்”

அருந்ததி கலகலவென சிரித்தாள்.செல்லமாக மகள் தலையில் கொட்டினாள்.”மண்டு.இதுதான்மா குடும்பம்.அண்ணிகள் ஒன்று கூடினால் நாத்தனாரையும்,மாமியாரையும் ,நாத்தானார்கள் ஒன்று கூடினால் அண்ணிகளையும் ஏதாவது குறை பேசுவது வழக்கம்தான்மா.அதுவும் சக்திவேல் குடும்பம் போல் கூட்டுக் குடும்பங்களில் இது சகஜம்.இதற்கா பயந்தாய்?உன்னை சொல்லி குற்றமில்லை.உன்னை இப்படி ஒரு அப்பாவியாய் வளர்த்த என் தவறு இது “

சித்தியின் சிரிப்பு அவளது அசட்டுத்தனத்தை உணர்த்த சிறு வெட்கத்துடன் ஆழமாக சித்தி மடியில் புதைந்தபடி “கிண்டல் பண்ணாதீங்க சித்தி” சிணுங்கினாள்.

“இந்த கிண்டலையும் இனி உன் நாத்தனார்கள்தாம்மா செய்வாங்க.நானும் காலையில் வந்ததிலிருந்து பார்க்கிறேன்,யவனா முழுக்க முழுக்க எங்கள் உரிமைன்னு மாப்பிள்ளை குடும்பத்திலுள்ள ஒவ்வொருத்தரும் சொல்லாமல் அவர்கள் செயல்களில் சொல்கிறார்கள்.நீ கொஞ்சம் முன்பு சொன்னாயே புறணி என்று.அதன் அர்த்தம் என்ன தெரியுமா?உன்னையும் அவர்கள் குடும்பத்தோடு சேர்த்துக் கொண்டார்கள் என்பது.”

யவனா முகம் நிமிர்த்தாமல் உம் கொட்டியபடி கேட்டிருந்தாள்.அருந்ததி அவள் கூந்தலுக்குள் விரல் நுழைத்து இதமாக கோதியபடி பேச்சினை தொடர்ந்தாள்.சித்தியின் வருடலை அனுபவித்து கிடந்தவளுக்கு சித்தி வாயுதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும், பிரம்மன் கை தலையெழுத்து போல் மனதிற்குள் பதிந்தது.

“குடும்பம்னா அப்படித்தான்மா.மாமியார்,மாமனார் மூத்தவங்க.அவுங்க சொல் கேட்டு நடக்கனும்.வீட்டு வேலை செய்ய அஞ்சக் கூடாது.மற்ற பெண்கள் செய்யாவிட்டாலும் நீ எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யனும்.அந்தக் குடும்பத்துக்குள் புது மருமகளாக நுழைகிறாய்.இப்படி வேலைகளை செய்துதான் அவர்கள் மதிப்பை உன்னால் பெற முடியும் “




“ஆனால் எனக்கு எந்த வேலையும் செய்து பழக்கமில்லையே சித்தி?” கேட்டவளுக்கு சித்தி தனக்கு எந்த வேலையும் செய்ய பழக்கப்படுத்தவில்லை என்பது குண்டூசியாய் குத்தியது.

“ஆமாம்மா.நான் உன்னை செல்லமாகவே வளர்த்துவிட்டேன்.அதோடு உன்னை வீட்டு வேலை ஏதாவது செய்ய வைத்தேனென்றால்,உன் அம்மா வழி உறவினர்கள் சும்மா இருப்பார்களா?கொடுமைக்கார சித்தி என்று என்னை ஒரு வழி செய்து விட மாட்டார்களா?” அருந்ததியின் குரல் கலங்கியது.

“ஐயோ சித்தி.அப்படியெல்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க.என் செல்ல சித்தியை நான் ஏதாவது சொல்ல விடுவேனா?”

“நீ என் பக்கம்தான்டாம்மா.ஆனாலும் அவர்கள் என்னைக் கண்காணித்துக் கொண்டுதானே இருந்தார்கள்.இதோ இப்போது கூட பாரேன்.உன் மாமா அவர் வராமல் அவரது மகனை அனுப்பி வைத்திருக்கிறார் .சித்தார்த்திற்கு ஏற்கெனவே உன் மேல் ஒரு கண்.அவனையே உன் திருமணத்திற்கு அனுப்பி வைத்தால் எப்படி?அவன் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு தேவதாஸ் பார்வையோடு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.எனக்கு பக்..பக்கென்று அடித்துக் கொண்டிருக்கிறது”

யவனா யோசித்துப் பார்த்தாள்.சித்தார்த் அப்படியா காதல் தோல்வி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்?இல்லையே நன்றாக சிரிப்போடு இவளுக்கு கட்டைவிரல் உயர்த்தி வாழ்த்துக்கள் சொன்னானே! தாலி கட்டும் போது உற்சாகமாக அட்சதை போட்டானே!

அன்று போனில் கூட வாழ்த்துக்கள்தானே சொன்னான்.அப்பா வரவில்லையென்றாலும் நான் நிச்சயம் திருமணத்திற்கு வருவேன் என்றானே!இதோ சொன்னது போல் வந்தும் விட்டான்.

“இல்லை சித்தி.சித்தார்த் அத்தான் தப்பாக எதுவும் செய்யமாட்டார்.அவர் என் கல்யாணத்தை பார்க்கும் ஆசையில்தான் வந்திருக்கிறார்.அன்று போனில் கூட வாழ்த்து சொன்னாரே!”

“போனிலா ? இரண்டு பேரும் இப்படி போனில் பேசிக் கொள்கிறீர்களா?நீ என்னிடம் சொல்லவேயில்லையே?”

சட்டென கடினமாகிவிட்ட சித்தியின் குரலில் திடுக்கிட்டாள் யவனா.தலையை வருடிக் கொண்டிருந்த அருந்ததியின் கை விரல்களிலும் அந்தக் கோபம் தெரிந்தது.

” சித்தி எனக்கு உங்களை தெரியாதா?நீங்கள் இதிலெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்தானே? யாருடனும் இப்படி பேச விடமாட்டீர்களே! நீங்கள். சொன்னது போல் அத்தானுடன் நான் எப்போதும் பேசியதில்லை சித்தி.அன்று என் திருமணத்திற்காக வாழ்த்து சொன்னதால் பேசினேன்.மற்றபடி மாப்பிள்ளை வீட்டினரை பற்றி விசாரித்த போது கூட எனக்கு நிறைய விபரம் தெரியாது.சித்தியிடமே பேசிக் கொள்ளுங்கள் என்றுவிட்டேன். அவர் மாப்பிள்ளையை உனக்கு பிடித்திருக்கிறதா என்றுக் கேட்டதற்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றேன்.பிறகு அவரும் வேறு பேசவில்லை “தன் முடிகளுக்கூடே வலிய அழுந்திய சித்தியின் விரல்களை லேசாக தளர்த்தி விட்டபடி விளக்கினாள்

சற்று அமைதியான அருந்ததியின் குரல் மீண்டும் ஒலித்த போது கிண்டல் கலந்திருந்தது.” எப்படி …மாப்பிள்ளையை ரொம்ப பிடித்திருக்கிறதா ? ம்…?”

யவனா நாக்கை கடித்துக் கொண்டாள்.இப்படித்தான் அன்று சித்தார்த்திடமும் உளறி வைத்தாள்.அவனும் ஒரு நிமிடம் அமைதியாகி பின் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டான்.அவன் கிண்டலிலிருந்து தப்பிக்க வேகமாக போனை வைத்துவிட்டாள்.

“சித்தி…” என அவள் சிணுங்க,அறைக்கதவை திறந்து கொண்டு வைஷ்ணவி உள்ளே நுழைந்தாள்.இவர்கள் இருவரையும் பார்த்ததும் இடுப்பில் கை வைத்துக் கொண்டாள்.

” சரிதான்.அங்கே பொண்ணைக் காணோம் காணோம்னு மண்டபம் முழுவதும் ஒரே அலறலா இருக்கு.இங்கே வந்து பார்த்தால் சின்னம்மாவும்,மகளும் இப்படி மடி மீது தலை வைத்து கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?”

“என் மகள். நான் கொஞ்சுவேன்”

“ஏய் பொறாமைப்படாதடி “

மூவருமாக சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த போது ஒரு வேகத்துடன் அறைக் கதவு திறந்தது. வாசலில் சக்திவேல் நின்றிருந்தான்.மூன்று பெண்களையும் ஆராய்ச்சியுடன் பார்த்தவனது முகத்தில் நிச்சயம் கோபம் இருந்தது.யவனா வேகமாக எழும் போதே,அருந்ததியும் அவளை தள்ளிவிட்டு எழுந்துவிட்டாள்.

” முகம் கழுவ இவ்வளவு நேரமா?இன்னமும் ஏதோ சடங்கு இருக்கிறதாம்.வா ” யவனா பக்கம் கை நீட்டினான்.

அருந்ததியும்,வைஷ்ணவியும் வேகமாக வெளியேற,அவன் கை பற்ற தயங்கி அவனுடன் வெளியேற தோதாக நகர்ந்தவளின் கையை அழுத்தமாக தானே பற்றியவன் குரல் குறைத்து காதுக்குள் கர்ஜித்தான்.

” பொம்பளை புறணிகளுக்கெல்லாம் நேரம்,காலம் வைத்துக் கொள்ளக் கூடாதா?”




What’s your Reaction?
+1
37
+1
23
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!