Serial Stories

மித்ரஹாசினி 2-விநாசகாலே விபரீத புத்தி

2

குடிலைச்சுற்றி சாணக்கியரின் சீடர்கள் காவல் காப்பதே தெரியாமல் காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தனர். இது வழமைதான். விஷ்ணுகுப்தரின் சீடர்கள் விஷ்ணுவின் மாயாலீலைகள் போலவே ஒற்றுவேலை, காவல் வேலை, மாறுவேடம் புனைதல் என்று அனைத்துவிதமான பணிகளையும் இரண்டாம் பேரறியாமல் போகிறபோக்கில் இயல்பாய் ஆனால் அழுத்தமாய் செய்து விடுவதில் சமர்த்தர்கள். ஆச்சார்யாரின் பார்வையிலேயே நொடியில் நடந்தேறிவிடும். இப்போதும் அப்படித்தான்

உள்ளே முக்யமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.




ஆம்!

மௌரியப் பேரரசின் படையெடுத்து வர கலிங்க தேசம் முனைப்போடு முயன்று கொண்டிருந்தது. அதற்காகவே இந்த மந்திராலோசனை!

கலாசாலை கல்வி முடிந்து தலைநகர் திரும்ப வேண்டிய சமயம் ஆசார்யர் யுவராஜனை உஜ்ஜையின் மாகாணத்துக்கு சென்று விடும் படியும் கலிங்கம் போருக்கு சன்னத்தமாயிருப்பதையும் கூறினார்.

இதற்கான திட்டங்களை வழிவகுப்பதும் அவசியம் என்றார்.

இதுவே

உன் முதல் யுத்தமாகவும் அமையும் என்று சொல்ல பிம்பிசாரன் மனம்  பேருவகையடைந்தது.

‘நீயும் சுருதனும் தர்மாவும்  முன்னிற்க வேண்டும். உஜ்ஜைன் மாகாணத்தில் கால்பகுதி கூட இல்லாத கலிங்கத்துக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்றும் கூறி

“ஜெயவிஜயீ பவ” என்று ஆசிர்வதித்தும் அனுப்பினார்.




சுருதன் தலைநகர் போய் கிரேக்க அறிஞரின் சுற்றுலாக் கூட்டத்தோடு கலந்து கலிங்கம் போனான்.

தர்மா நாடெங்கும் குறிப்பாக நதியோர நகரங்களை ஒற்றறிந்து சேதிகளை அவ்வப்போது அனுப்பினான்.

இளவரசனோ கல்வி முடிந்து மகாகாலேஷ்வரின் அருளைப் பெற வேண்டி உஜ்ஜையின் நகரம் வந்ததாகக் கூறிக் கொண்டு நகர் வலம் வந்தான். மக்களை கூர்ந்து கவனித்தான்.

முந்திய இரவே மூவரும் சத்திரத்தில் சந்தித்து திட்டம் தீட்டிக் கொண்டனர்.

தர்மா பிம்பிசாரன் யோசனைப்படி அமராவதி நதி தீரத்துக்கு விடியலிலேயே பயணமாகிவிட்டான்…அவனுக்கான கட்டளைகளை நிறைவேற்ற.

இப்போது இதோ ….

விடியலிலேயே ஆசானை தரிசிக்கவும் வந்தாயிற்று.

ஆச்சாரியார் இளவரசனைப் பார்த்து

“நாம் கலிங்கப்படைகளை எங்கே சந்திக்கப் போகிறோம். திட்டமேதும் வகுத்தாயா?”

எனக் கேட்க அவனோ இடுப்பிலிருந்த பட்டுத்துணியை எடுத்து விரித்தான்.




அதில்

நீலநிறக்கோடுகளும்

சிவப்புநிற கோடும்

முக்கோண உருவங்களும் காணப்பட்டன. சிற்சில இடங்களில் வட்டத்தினுள் சதுரம் முக்கோணம் என்று வரையப்பட்டு ஆங்காங்கே அளவில் சற்றே பெரிதாய் கருநிறப் புள்ளிகளும்  இடம் பெற்றிருந்தன.புதிதாய் பார்ப்பவர்களுக்கு அது ஏதோ குழந்தையின் கிறுக்கலாகவே படும்.

யுத்த அறிவோடும் கூர்த்த மதியுடையோருக்கும் அதில் உள்ள அர்த்தமும் அது அறிவிக்கும் அனர்த்தமும் புரியும்.

ஆசார்யரின் முகம் மலர்ந்தது. சிஷ்யனை ஒரு நொடி பார்த்த பார்வையில் மெச்சுதல் தெரிந்தது  .

சேனாதிபதி அவநம்பிக்கையும் ஐயமுமாய் தலையாட்டிக் கொண்டார்.

பேரரசர் “பலே! பலே!! “என்றார்.

 சுருதன் தனை மறந்து இளவரசனை கட்டிப் பிடித்தான்.

“இது சாத்யம் தானா இளவரசே! “




“கடவுள் அருளிருக்குமானால் இது சாத்யமே சேனாதிபதி அவர்களே! “

கலிங்கர்கள் நீர்வழியாகத் தான் வரப்போவதாக சுருதன் கொண்டு வந்த சேதிக்கு தர்மாவின் செய்திகளும் வலுவூட்டின. கலிங்கம் படகுகள் நாவாய்கள் என அனைத்தும் செப்பனிட்டுக் கொண்டிருப்பதாகவும் போர்ப்பயிற்சிகள் மிக ரகசியமாய் தீவிரப்பட்டு வருவதாகவும் தர்மா செய்தி தந்தான்.. ஆகவே தான் அவர்களை நதியோர முகத்துவாரத்திலேயே சந்தித்து திருப்பியனுப்ப உத்தேசித்து திட்டம் தீட்டினேன்.

ஆசானே! குறைகளை சுட்டிக் காட்டுங்கள். செப்பமிட்டு விடலாம். “

“இவை ….இந்த முக்கோணப் பசுமை சாத்பூரா மலைத் தொடர் கானகம் தானே? “

“ஆம் ஆசானே! “

“அங்கு ஏன் இத்தனை வட்டமும் புள்ளிகளும்? “

ஆசானுக்கு விடை தெரிந்தும் மாணாக்கனை சோதிப்பது புரிந்து புன்னகையைத் தேக்கி விடையிறுத்தான் யுவராஜன்.

“ஐயனே! நமக்கு இந்த கானகம் எத்துணை இயற்கை அரணாக விளங்குகிறதோ அத்தனைக்கு அத்தனை எதிரிகள் ஊடுருவுவதும் சுலபமே! கதிரவனின் ஒளியைக் கூட புக விடாத அடவி எதிரியையும் மறைத்துக் கொள்கிறது இயல்பாக. அத்துடன் காடு நமக்கு இயற்கையின் கொடை இதை அழித்து எரித்து விடவே எதிரி விரும்புவான். இதை முறியடிக்க நான் மலைக் காட்டில் வசிக்கும் பூர்வ குடிகளின் உதவியை நாடப்போகிறேன். “




“பூர்வ குடிகளா? அவர்கள் எந்த சட்டதிட்டத்துக்குமே அடங்காதவர்கள். அவர்களை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்”

சேனாதிபதி ஆட்சேபித்தார். பேரரசரோ மௌனித்தபடியே திரைச்சீலையையும் புதல்வனையும் ஆசாரியரையும் பார்த்தார். சிந்தனையின் விளைவாக நெற்றி மேட்டில் கோடுகள் எழுந்தன.

குடிலே நிசப்தத்தில் அமிழ்ந்தது. அனைவருமே ஆச்சார்யர் முகம் நோக்க அவரோ மேலே சொல் என்பது போல சைகை செய்தார்.

இளவரசன் தன் திட்டத்தை விவரித்தான்…

“விநாசகாலே விபரிதப் புத்தி”

ஆச்சார்யாரின் முணுமுணுப்பு ஸ்பஷ்டமாகக் கேட்டது.

(தொடரும்)




What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!