Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 5

5

 


இளைக்க இளைக்க தன் முன் வந்து நின்றவளை லேப்டாப்பிலிருந்து பார்வையை உயர்த்தி எரிச்சலாகப் பார்த்தாள் உஷாந்தி .

” என்ன ? “

” நா…நான் …அ…அவர் …என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார்”

” வாட் …? “

” ஆ…ஆமாம்.வ…வந்து கையை பிடிக்கிறார் .கண்டபடி பேசுகிறார் “

உஷாந்தி ஓரு அலுப்பு பெருமூச்சை வெளியிட்டாள் .” அவர் அப்படிபட்டவர் இல்லை .நீ போகலாம் “

அப்படி ஒரு நம்பிக்கையா கணவன் மேல் ? சுடரொளிக்கு ஆத்திரம் மிக , ” எனக்கு இந்த வேலை வேண்டாம் .நான் கிளம்புகிறேன் ” என்றாள் .

” செய் .ஆனால் இதனை நீ சொல்ல வேண்டியது அவரிடம்தான் .முதலிலிருந்தே இப்படி குழந்தைக்கு ஆள் வைப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது .நீயே சொல்லு , நம் வேலையை நாம் பார்த்தால் குழந்தை தானாக வளர்ந்து விட்டுப் போகிறது .எந்நேரமும் டிவி பார்ப்பது ஒரு தவறா ? நமக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறான் என்று சந்தோசப்படாமல் …ம் …சரி…சரி .அதெல்லாம் உனக்கு வேண்டாம் .நீ கிளம்பி விடு .இவ்வளவு தூரம் காட்டுக்குள் வந்து வேலை பார்க்க வேறு ஆள் கிடைக்க போவதில்லை . ஆனந்த் தேடி தேடி அலுத்து விட்டு விடுவார் .பிறகாவது என் யோசனையை கேட்கிறாரா என்று பார்க்கலாம் “

உஷாந்தி பேசப் பேச அதிர்ந்து கொண்டே போன சுடரொளிக்கு  அவளது யோசனையில்  சந்தேகம் வந்தது. ” உங்கள் யோசனை என்ன மேடம் ? ” குரலில் பவ்யத்தை வழிய விட்டாள் .




” வேறொன்றும் இல்லை .குழந்தையை ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்றிருக்கிறேன் .எங்களுக்கு கொஞ்சம் ப்ரைவசி கிடைக்குமில்லையா ? இதை சொன்னால் அவர்…ஏய் என்ன அப்படியே போகிறாய் ? வேலையை விட்டு விடுவாய்தானே ? ” பின்னால் கத்தலாக கேட்ட குரல் காதில் விழாதது போல் மாடியிறங்கி மீண்டும் ஆனந்தபாலன் முன் நின்றாள் .

” என்ன சொன்னாள் என அருமை டார்லிங் ? ” ஆனந்தபாலன் கால் மேல் கால் போட்டமர்ந்து இவளுக்காகவே காத்திருந்தான் .

டார்லிங்காம் …காதுகளுக்குள் இரண்டு சொட்டுக்கள் கொதிக்கும் எண்ணெயை விட்டுக் கொண்டாலென்ன என்று தோன்றியது அவளுக்கு .

” அவரவர் செய்த வினை அவரவர்கள் வாழ்க்கை துணையாக வந்து அமையும் என்று என் அம்மா சொல்வார்கள் .அது நூற்றுக்கு நூறு உண்மையென்று இப்போது தெரிந்து கொண்டேன் .உன் தலையெழுத்தை நான் எழுத வேண்டியதில்லை .அவளே பார்த்துக் கொள்வாள் .நான் எப்போதிருந்து  வேலையை ஆரம்பிக்க வேண்டும் ? “

” அப்போ நீ என் குழந்தையை கவனிக்கும் வேலையில் சேர்ந்து கொள்கிறாய் .சரிதானே ? “

” ஆமாம் .அந்த பிஞ்சுக் குழந்தைக்காக .கொஞ்ச நாட்கள் இருந்து அவனை சரி செய்துவிட்டு கிளம்பி விடுவேன் “

” அந்தக் கொஞ்ச நாட்கள் எனக்கு போதும் ” திருப்தியாய் எழுந்தவனை சந்தேகமாக பார்த்தாள் .

” எதற்கு போதும் ? “

ஆனந்தபாலன் அவளையே பார்த்தபடி நிற்க , அந்தப் பார்வை சுடரொளிக்கு அவளது காதல் காலங்களை நினைவுறுத்த , அவளாலும் பார்வையை பிரித்துக் கொள்ள முடியவில்லை .திடுமென அவன் கண்களை சிமிட்ட அந்த அதிர்வில் தன்னிலை மீண்டவள் அவனை முறைத்தாள் .

” எந்தக் கண்றாவி நினைப்பை மனதில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? “




” கண்றாவி இல்லை.அழகான நினைப்பு ” இப்போது அவனது ஒற்றைக்கண் மூடித் திறந்தது .

இல்லை இவன் சரியில்லை .இவனை நம்பி இங்கே இருப்பது அவளுக்குத்தான் ஆபத்தாக முடியும் . அவள் வேலையை விட்டு விட்டு கிளம்பும் முடிவை அவசரமாக

மீண்டுமொரு முறை எடுத்தாள்.

” என்ன திரும்பவும் முருங்கைமரமா ? ” அவள் முகபாவம் படித்து அவன் அலுப்பு காட்டிக் கேட்க அவள் கொதித்தாள் .

” பின்னே நீ கூப்பிட்டதும் ஓடி வந்து உன் மடியில் விழுவேனென்று நினைத்தாயா ? “

” நான் எப்போது உன்னை என் மடிக்கு கூப்பிட்டேன் “

சுடரொளி குழம்பினாள் .” நீ…நீங்க என்னை தவறாக பார்க்கவில்லை .கண்களை சிமிட்டவில்லை ? “

” இல்லை ” என்றான் நிர்தாட்சண்யமாக .” என் கண்களில் தூசு .சிமிட்டிக் கொண்டேன் “

சுடரொளிக்கு ஓ வெனக் கத்த வேண்டும் போலிருந்தது .” ரொம்ப பொய் சொல்லுகிறீர்கள் “

” நானா ? நீயா ? “

” ஷ்…ஷப்பா …ஆளை விடுங்கள் .இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? “

” போ…போய் பிள்ளையை பார் ” அதிகாரம் சேர்ந்திருந்த அவனது குரலுக்கு பணிய அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை .ஆனால் …ஓ.வென்ற கதறலுடன் மாடியிலிருந்து வந்த அமிர்தபாலனை கண்டதும் அவளது வீம்புகளெல்லாம் வடிந்து போயின.

இரு கைகளையும் நீட்டியபடி அமிர்தனருகே போனாள் .” கண்ணா ஏன்டா அழுகிறாய் ? இங்கே வா “

கையிடுக்கில் வைத்திருந்த கரடி பொம்மையை அவள் முகத்தில் எறிந்தான் குழந்தை .” தள்ளிப் போ …”

எரிச்சலுடன் அவள் நகர்ந்து நிற்க பின்னிருந்த ஆனந்தபாலனிடம் கை நீட்டியபடி போனான் .” பாலா ஆஆஆஆ…”

ஆனந்தபாலன் குனிந்து மகனை தூக்கிக் கொண்டான் . ” அழாதே கண்ணா “




குழந்தையின் அழைப்பில் சுடரொளியினுள் சிறு அதிர்வு .” எப்படி கூப்பிட்டாய் ? ” வேகமாக அவர்களருகில் போய் கேட்டாள் .

தகப்பன் தோளில் தொற்றியிருந்த குழந்தையை அண்ணாந்து பார்த்தாள் .

” உனக்கு ஏன்மா பொறாமை ? ” ஆனந்தபாலனின் கேள்வியில் இருந்த எதிர்பார்ப்பில் விழித்துக் கொண்டாள் .

” அப்பாவை பெயர் சொல்லியா கூப்பிடுவது ? இப்படியா பிள்ளை வளர்த்து வைப்பீர்கள் ? “

” ஓ…அப்படி போகிறாயா ? ரைட் .என் மகன் .என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவான் .உனக்கென்னம்மா ? “

கேள்வியோடு மகனை தன்னோடு சாய்த்துக் கொண்ட தகப்பனையும் , கொஞ்சலாய் தகப்பன் மேல் சரிந்து கிடந்த மகனையும் பார்த்தவளுக்கு ஏனென்று சொல்ல முடியா ஏக்கமொன்று நெஞ்சமெங்கும் பரவியது .

வெறுமையும் , ஏக்கமும் அவளை பந்தாட ” சிறு குழந்தைகளை இப்படி பெயர் சொல்லி அழைக்கவா பழக்குவீர்கள் ? சீச்சி …” வெறுப்பைக் கக்கினாள் .

” ஏய் ….” உயர்ந்து விட்ட குரலோடு அவன் கண்களும் சிவந்து விட்டன. ஒற்றை விரலை அவளது முகத்திற்கு நேராக பத்திரம் காட்டினான் .

” என் மகன்…என் வாழ்வை சீராக்க வந்த வரம் அவன் .அவனையா சீ என்கிறாய் ? “

” கு…குழந்தையை சொல்லவில்லை. அவனது பழக்க வழக்கத்தை சொன்னேன் ” சுடரொளிக்கு கண்கள் கரித்தன. மீண்டும் ஒரு வகை ஏக்கம் அவள் உள்ளமெங்கும் பரவியது .

” அதையெல்லாம் மாற்றி சரி் செய்வதற்குத்தான் நீ இருக்கிறாய் .உன் வேலையை ஒழுங்காக செய் .அது போதும் .” ஆனந்தபாலன் அவளிடம் எப்போதும் இவ்வளவு கடுமை காட்டிப் பேசியதில்லை .பழக்கமற்ற இந்தக் கடுமை சுடரொளியை மிகவும் சோர்வுற வைத்தது .

குழந்தைக்காக கையை நீட்டியவளை தட்டி விட்டான் அமிர்தன் .” பாலா இவள் வேண்டாம் .வெளியே அனுப்பு “




” அச்சோ தப்புடா செல்லம் , உன்னை விட வயதில் பெரியவர்களை இப்படி ஒருமையில் பேசக் கூடாது ” கொஞ்சலாய் பேசியபடி குழந்தையை வாங்கிக் கொண்டாள் .

அமிர்தன் அழுது அடம் பிடிக்கத் துவங்கினான் .

” குழந்தையை கீழே விடு சுடர் .அவனைக் கட்டுப்படுத்தாதே “

” கட்டுப்பாடு தேவையான நேரத்தில் விதித்துதான் ஆக வேண்டும் சார். குழந்தையின் அடத்தை மாற்ற வேண்டுமானால் அவனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியிருங்கள் ” சொல்லிவிட்டு அமிர்தனை திமிற திமிற அங்கிருந்து அழைத்துப் போனாள்.

” முதலில் அவனை சாப்பிட வை சுடர் ” போய் கொண்டிருந்தவளுக்காக கத்தியவன் , தன்னருகே வந்து நின்றவளை கவனிக்கவில்லை .

” யார் சுடர் ? ” கேட்டபடி நின்றிருந்தாள் உஷாந்தி .

” உஷா அதற்குள்ளே உன்னுடைய கிளாஸ் முடிந்து விட்டதா ? “

” ஆமாம் .அதென்ன சுடர் ? “

” அது …அவள் பெயர் “

” ஓஹோ ,  என்னிடம் அவள் வந்து உங்களை பற்றி என்னென்னவோ சொல்கிறாளே ? “

” ம் .சொல்லுவாள் .அதுவெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது ? “

உஷாந்தி தன் அருகில் நின்ற சர்வ லட்சணம் பொருந்திய ஆண்மகனை ஏறிட்டுப் பார்த்தாள் .இவன்தான் எத்தனை அழகாக இருக்கிறான் ? எப்போதும் போல் அவளுக்கு அவன் மேல் மையல் பொங்க ,இடம் ,சூழல் பார்க்காமல் சட்டென அவனைக் கட்டிக் கொண்டாள் .

” ஆனந்த் நீங்க ரொம்ப அழகு .அந்த பாட்டிம்மா கையை பிடித்து இழுத்தீர்களென்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது ? ” கொஞ்சிப் பேசியபடி அவன் மார்பில் முகம் தேய்த்தாள் .

அமிர்தனின் சாப்பாட்டு விபரம் கேட்க வந்த சுடரொளி இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து அதிர்ந்தாள் .




What’s your Reaction?
+1
47
+1
34
+1
4
+1
2
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!