Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது – 1

1

 

 2019 டிசம்பர் .

 

எப்போதும் போல் அதிகாலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட்டது சுந்தரபுருசனுக்கு . இரு கைகளையும் தேய்த்து தன் முகத்தின் முன் கொண்டு வந்து உள்ளங்கையில் கண் விழித்தார் .உடன் உடலில் ஒரு சுறுசுறுப்பு வந்து ஒட்டிக் கொண்டது .கட்டிலை விட்டு இறங்கி நின்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி திரும்பிப் பார்க்க அலர்மேல்மங்கை அருகே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் .

 

உறக்கம் கலைந்து விடாமல் மனைவியின் தலையை ஜாக்கிரதையாக வாஞ்சையுடன் வருடியவர்  கழுத்தை முன்னும் , பின்னும் , இடமும் , வலமும் அசைத்து வார்ம்அப் செய்தபடி படுக்கை அறையைவிட்டு வெளியே வந்தார் .கழுத்து , தோள் , இடுப்பு , கை , கால்கள் என தொடர்ந்து வார்ம்அப்களை ஹாலில் நின்று பத்து நிமிடங்களுக்கு

செய்துவிட்டு , வாசல்கதவை திறந்தார் .

 




காம்பௌன்ட் கேட்டில் மாட்டியிருந்த துணிப்பையிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்துப் போய் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு வெளியே வந்து , வீட்டின் முன் இருந்த செம்பருத்தி , பவளமல்லி , மல்லி , பிச்சி ,ரோஜா செடிகளுக்கு  ட்யூப் மூலம் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார் .தொடர்ந்து முற்றத்திற்கும் நீர் தெளித்து நனைத்தார் .

 

” என்ன ஓய் சுந்தரரே ! வாசல் தெளிக்க ஆரம்பிச்சிட்டீர் போல ! எங்கே உம் தர்மபத்தினி ? சுகமான தூக்கமா ? ” நக்கலாக கேட்டவர் நான்காவது வீட்டு பத்மநாபன் .காலை வாக்கிங்கிற்காக கையில் நாயை பிடித்திருந்தார் .

 

” குட்மார்னிங் பத்மநாபரே ! என்ன  நாயை கக்கா  கூட்டிப் போறீங்க போலவே ? எங்கே உங்க வீட்டுக்காரம்மா ?  கக்கா மட்டும் உங்க பொறுப்பாக்கும் ?

 

பத்மநாபரின் முகம் விழுந்துவிட்டது .இந்த உயர்ஜாதி  நாய் அவரது மனைவி வனஜாவின்  பிறந்தநாள் பரிசாக அவளது தோழி ஒருத்தியால் கொடுக்கப்பட்டது . இந்த நாயை பரிசாக பெற்ற அன்று வனஜாவின் கால் தரையை தொடவில்லை .இரண்டடி மேலேயே மிதந்து கொண்டிருந்தவள் , அந்த நாயை தன்னை தவிர வேறு யாரும் தொடக்கூடாதென்ற உத்தரவு பிறப்பித்து வைத்திருந்தாள் .சாப்பாடு , தூக்கம் என அதனை பார்த்து பார்த்து கவனிப்பவள் இந்த கக்கா கூட்டிப் போகும் வேலையை மட்டும் கணவனின் தலையில் கட்டியிருந்தாள் .அதுவும் நூறு ஜாக்கிரதை விதிகளை சொல்லி .

 

நாயின் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு உரோமத்திற்கும் மனைவியிடம் கணக்கு சொல்லும் நிலையில் இருப்பவர் , அடுத்த வீட்டு கணவன் , மனைவியை நக்கல் செய்வது நியாயம் இல்லைதானே ? இதனை இலை மறைவாக சுட்டிய சுந்தரபுருசனை வெறித்து பார்த்தார் பத்மநாபன் .அவரது மனைவி வனஜா குற்றம் , குறையற்ற உடல் சீரோடு ,  பெட்டி நிறைய நகை , பணமென்ற சீரோடும் இவரை திருமணம் செய்து வந்தவள் .ஆனால் இதோ சுந்தரபுருசருடைய மனைவியோ …?

 

இந்த விசித்திர தம்பதிகளின் அழகான தாம்பத்தியத்தை  புரிந்து கொள்ள முடியாத பத்மநாபர் வெறுமனே ஒரு தலையசைப்புடன் விடைபெற்றார் .பணமும் , செல்வாக்கும் நிறைந்த தங்களது வாழ்க்கையில் இல்லாத நிறைவு இவர்களுக்கு நிறைவே வாழ்க்கையென்று எப்படி அமைந்தது ? எப்போதும் போல் இப்போதும் விடை தெரியா இக் கேள்வியோடு தன் மனைவியின் செல்லப்பிராணியின் காலைக்கடனுக்கான இடம் தேடி நடந்தார் .





“காலை வணக்கம் சார் ”

 

உற்சாகமான குரலில் திரும்பி புன்னகைத்தார் சுந்தரபுருசன்  .மாடசாமி , அவர்கள் வீட்டு மாடியில் தங்கியிருப்பவன் .அந்நேரமே குளித்து முடித்து நெற்றியில் நடுவிரல் தடிமன் விபூதிக் கீற்றோடு தெரிந்தான் .அவனது நீருண்ட மேக நிறத்திற்கு எதிர் நிறமாய் பளிச்சென தெரிந்தன நெற்றி விபூதியும் , சிரிப்பு பல் வரிசையும் .

 

” என்னடாப்பா எழுந்தாச்சா ? டாண்ணு ஐந்து மணிக்கு எழுந்து குளிச்சிடுறியே ? ”

 

” தெருமுனை பிள்ளையார் கோவிலுக்கு போகனும் சார் .அதுதான் .வரட்டுமா ? ”

 

” ம் … இன்னைக்கு பிள்ளையார் , நேற்று முருகன் , முதல்நாள் அம்மன் . தினமும் ஒரு கோவில் .அதிகாலை குளியல் .இந்தக் கால பையனா நீ ? வித்தியாசமானவன்பா  .சரி உள்ளே வா .ஒரு கப் காபி குடிச்சுட்டு போ ”

 

” பால் வேண்டாம் சார் .கடுங்காப்பி போதும் ” தயக்கத்துடன் உள்ளே வந்து சோபா நுனியில் அமர்ந்த மாடசாமி எப்போதும் போல் இப்போதும் அவருக்கு ஆச்சரியம் அளித்தான் .

 

அவரது மகள் சுகந்தியை விட இரண்டு வயது பெரியவன் . ஆனால் அவளுக்கிருக்கும் உலக ஞானத்தில் கால்வாசி கூட மாடசாமிக்கு கிடையாது .படிப்பை போல படிக்கும் இடமும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவி செய்கிறதென்பதனை இந்த ஆறு மாத நகர வாழ்விற்குப் பின் இப்போதுதான் கொஞ்சமாக உணரத் தொடங்கியிருக்கிறான் மாடசாமி என நினைத்தார் சுந்தரபுருசன் .




சுகந்திக்கும் , மாடசாமிக்கும்  ஒரே படிப்பு , ஒரே இடத்தில்  வேலை . மனித உயிர் காக்கும் உன்னத மருத்துவ வேலை .நகரின் பிரபல மருத்துமனையில் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர் .முதல் நாள் பணியின் போது எங்கே ..? எது …? எப்படி ….? எனத் தெரியாமல் அப் பிரமாண்ட மருத்துவமனையின் வரவேற்பறையில் விழித்துக் கொண்டு நின்ற மாடசாமியை பாவமாய் பார்த்து , வழிநடத்தினாள் சுகந்தி .

 

கிராமத்தில் வளர்ந்து , படித்து இப் பரபர நகரத்தில் அதுவும் இந்த பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்து தான் நின்றிருப்பதையே நம்ப முடியாமல் இருந்த மாடசாமி , பணியிடத்தில் மட்டுமில்லாமல் நகர வாழ்க்கை முறையையும் போதித்த சுகந்தி மற்றும் அவள் தாய் , தந்தை மேல் மரியாதையான பாசம் வைத்திருந்தான் .அவனது பெரும்பகுதி சம்பளம் படிப்பு கடனிற்கும் , ஊரிலிருக்கும் தாய் , தந்தைக்கும் செல்வதை அறிந்தவர்கள் , மிகக் குறைந்த வாடகையில் தங்கள் வீட்டு மாடியறையில் அவனைத் தங்க அனுமதித்திருந்தனர் .

 

சுந்தரபுருசன் இருவருக்கும் கையில் காபி கலந்து கொண்டு சோபாவில் அமர்ந்தபடி , டிவியை உயிர்ப்பித்து செய்தி சேனலை வைக்க , படுக்கையறை கதவு திறந்து அலர்மேல்மங்கை வந்தாள் .அவள் முகமெங்கும் குற்றவுணர்வு விரவிக் கிடந்தது. நொடியில் மனைவியின் மனக்கிடக்கை உணர்ந்து கொண்ட சுந்தரபுருசன் ஆதரவாய் புன்னகைத்தார் .

 

” என்னம்மா , ஓரு நாள் லேட்டா எழுந்தால்தான் என்ன ? எதற்கிந்த பார்வை ? இங்கே வா உட்கார் .உனக்கு காபி எடுத்து வருகிறேன் ” கைகளை ஆட்டி அசைத்து அபிநயித்து மனைவியிடம் பேசினார் .

 

” வேண்டாம் .நானே எடுத்துக் கொள்கிறேன் ” கையசைவுகளிலும் , கண்ணசைவுகளிலும் பதில் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் போனாள் அலர்மேல்மங்கை .

 

ஆதுரமாய் மனைவியின் முதுகை தொடர்ந்த அவரது பார்வையை கண்டு கொண்ட மாடசாமி , ” எங்கள் கிராமத்து காவல் தேவதைகள் கேட்பதில்லை , பார்ப்பதில்லை சார் .அது போலத்தான் அம்மாவும் ” என்றான் .சுந்தரபுருசனின் மனம் நிரம்பி தளும்பியது ..




” மிக வேகமாக பரவி வரும் இந்த நோய் அதிகமானோரின் உயிரைக் குடிக்கிறது .இதன் ஆரம்பம் சைனாவாக இருந்தாலும் மிக விரைவிலேயே இந்நோய் உலக நாடுகள் முழுவதும் பரவி விடுமென்ற அச்சத்தில் உள்ளனர் மருத்துவ வல்லுநர்கள் ”

 

டிவியின் சத்தத்தை அதிகரித்த சுந்தரபுருசன் கூர் கவனத்துடன் செய்தியைக் கவனித்து , முகத்தில் கவலை காட்டிய போது , சடாரென சேனல் மாறி ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி ஓடத் துவங்கியது .

 

” என்னப்பா காலங்காத்தால உலகச் செய்தி ? நான் சாப்பிடும் வரை காமெடி சீன்ஸ்தான் ” தட்டிலிருந்த இட்லியை பிட்டு வாயில் போட்டவாறு , டிவிக்கு நேராக அமர்ந்தாள் சுகந்தி .

 

திடுமென அந்த அறையில் குளிர்சாதன வசதி வந்துவிட்டதாக உணர்ந்தான் மாடசாமி .

 

What’s your Reaction?
+1
7
+1
8
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!