Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 23

23

 

” இன்று நாம் கூட போகலாமே சௌமி ….? ” சபாபதி கேட்க எள்ளும் , கொள்ளும் வெடித்தது சௌதாமினியின் முகத்தில் .

” அந்த மாதிரி இடத்திலெல்லாம் போய்  உட்கார்ந்து ஆளோடு ஆளாக கோஷம் போட்டெல்லாம் எனக்கு பழக்கமில்லை ….”




” அதானேம்மா ….நீங்கெல்லாம் யாரு …? ராஜ வம்சமில்லையா …இப்படியெல்லாம் ரோட்டில் வந்து உட்காருவீர்களா …? ” ஜீவிதா தாயை நக்கல் செய்தாள் .

” ஆமான்டி நான் ராஜவம்சம்தான் .மண்ணில் கால்படக் கூடாதுன்னு , என் அப்பாவும் , அம்மாவும்  காரை வாசல்படியிலே கொண்டு வந்து நிறுத்துவார்கள் .வாசல்படியிலிருந்து நான் நேராக காருக்குள்தான் காலையே வைப்பேன் தெரியுமா …? ” சௌதாமினி பொங்கினாள்.

” ஆனால் …என் அப்பா அம்மா அப்படி இல்லையம்மா. வீட்டுச் சாப்பாட்டு தராமல் என்னை ஹாஸ்டலில் சேர்த்து படின்னு அனுப்பிட்டார்கள் .அதுவும் வயிற்றை அறுத்து , குடலை எடுத்து எனும்படியான ஒரு படிப்பு .அந்த படிப்பை வைத்துக்கொண்டு இப்போது  நான் திண்டாடிக் கொண்டிருக்கிறேன் .ம் ….நீங்க கொடுத்து வைத்தவர்களம்மா .சரி ..சரி இந்த வெயிலுக்கு தோதாக ரூமிற்குள் போய் ஏஸியை போட்டு ரெஸ்ட் எடுங்கள் .நான் போய் அங்கே அந்த போராட்டத்தை என்னவென்று பார்க்கிறேன் ….”

மகளின் பேச்சில் விழித்தாள் சௌதாமினி .இதென்ன இப்படி சொல்லிவிட்டாள் ….இதற்கு என்ன பதில் சொல்வது …? சரிதானென்றால் தாங்கள் மகளை கஷ்டப்படுத்தி வளர்த்தோமென்றாகி விடும் .இல்லையென்றால் தன்னை பெற்றோர்  கஷ்டப்படுத்தி வளர்த்தார்களென்று ஆகிவிடுமே …

விழித்து கொண்டு நின்றவளின் முகத்தின் முன் சொடுக்கிட்டு ” என்னம்மா சரிதானே …? ” என்றாள் .

என்ன சொல்ல …? சௌதாமினி கணவரை திரும்பி பார்க்க , அவர் எனக்கு தெரியாது என தோள்களை குலுக்கிவிட்டு இருவரையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க தொடங்கினார் .இவரையும் சேர்த்துத்தானே பேசுகிறாள் …மனுசன் கொஞ்சமாவது அசைகிறாரான்னு பாரேன் …

” இல்லை பாப்பு நாங்கள் உன்னையும் நன்றாக , வசதியாகத்தான் வளர்த்தோம் ….” அவசரமாக சொன்னாள் .ஜீவிதா இடுப்பில் கை தாங்கி அம்மாவை பார்க்க …

” இன்னைக்கு உங்களோடு சேர்ந்து நானும் வரலாம்னு இருக்கேன் …” கொஞ்சம் அசடு வழிந்த்து சௌதாமினியின் குரலில் .

” ம்…சரி…சரி கிளம்புங்க ” அவசரமாக கிளம்பும் பாவனையில் திரும்பிக் கொண்ட ஜீவிதா  பீறிட்டு  வந்த சிரிப்பை மறைத்துகொண்டாள்.




” அதோ அந்த ஸ்பெசல் சேரை எடுத்துட்டு வாங்க .நல்லா தூசி தட்டி போடுங்க .இதோ இந்த பேன் கிட்டே போடுங்கப்பா .அவுங்க பெரிய வி.ஐ.பி  …” சிவபாலன் யாரையோ உபசரித்துக் கொண்டிருக்கிறான் என சௌதமினி இருக்க , அவளையே அமர சொன்னபிறகுதான் அவனது அந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் தனக்கானது என உணர்ந்தாள் சௌதாமினி .

அவளுக்காக சேரை எடுத்து வந்து போட்டவன் பக்கத்து ஊர்க்காரன் போலும் .இவளை தெரியாததினால், இவளுக்கு சேரை போட்டுவிட்டு ” நீங்க போலீசுங்களாம்மா ….? ” எனக் கேட்டான் .சௌதாமினி நெற்றிக் கண்ணை திறந்து பார்த்தாள் கேட்டவனை அல்ல ….சிவபாலனை .இவனை ….பல்லைக் கடித்தாள் .

” இப்படியே  முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் , அவன் நிச்சயம் உங்களை போலீஸ் என்றுதான் நினைப்பான் அத்தை .இங்கே இருக்கிறவங்களோட இப்போதைய விரோதி போலீஸ்காரங்கள்தான் .போலீஸ்னாலே இவுங்கெல்லாம் செம வெறுப்பில் இருக்குறாங்க .சொல்றதை சொல்லிட்டேன் .அப்புறம் உங்க இஷ்டம் …..” சௌதாமினியின் அருகே குனிந்து முணுமுணுத்தான் சிவபாலன் .

அவளுக்கு திக்கென நிமிர்ந்து பார்த்தாள் .அந்த சேரை கொண்டு வந்து போட்டவன் , இவளைத்தான் முறைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் .கொஞ்சம் இசகு …பிசகாக இவள் அசைந்தாலும் ,ஆளைக் கூட்டி இவளை அடித்து துவைக்கும் எண்ணத்தில் இருப்பவன் போல் தோன்றினான் .

பொல பொலவென உடல் வியர்க்க , சற்று தள்ளி நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஜீவிதாவை இழுத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டு ” நான் டாக்டரம்மாவின் அம்மா ….” எனக் கூட்டத்திற்கு அறிவித்துக் கொண்டாள் .அம்மாவின் படபடப்பில் குழம்பி நிமிர்ந்து சிவபாலனை பார்த்த ஜீவிதா , அவன் சிரிப்பை உதட்டிற்குள் மென்று கொண்டிருப்பதை காணவும் அவனை செல்லமாக முறைத்தாள் .

” அம்மாகிட்ட என்ன வம்பு பண்ணுனீங்க ….? “

” நானா …நான் ஒண்ணும் பண்ணலை பாப்பு .அவுங்கதான் முகத்தை அந்த மாதிரி வச்சுக்கிட்டாங்க . முறைப்பா , வெறுப்பா , விரைப்பா …அந்த கிரன்பேடி மாதிரி …” சிவபாலன் கிண்டலை தொடர்ந்தான் .




” சும்மாயிருங்க பாலா .அம்மா பாவம் .பயப்படுறாங்க ….”

” யாரு ….உன் அம்மாவா …? இவுங்களாவது பயப்படுறதாவது . அகப்பட்டவங்களையெல்லாம் பயமுறுத்துறதுதானே இவுங்க பழக்கம் ….”

” இல்லை பாப்பு நம்பாதே .இவன்தான் என்னை எப்போதும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான் .அன்னைக்கு காரில் ஏற்றிக் கொண்டு …காலை உடைத்து விடுவேன்னு சொன்னான் தெரியுமா …? “

” பாலா ….” ஜீவிதா இடுப்பில் கை தாங்கி முறைக்க ,

” காலை மடக்கி உள்ளே வச்சுக்கோங்கத்தை .இல்லைன்னா உடைஞ்சிடும்னு …நியாயமாகத்தான் சொன்னேன் பாப்பு .பின்னே  கார் ஓடிட்டிருக்கும் போது காலை வெளியே நீட்டினால் சொல்லமாட்டேனா …? “

” ஐய்யோ …உங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண என்னால் முடியாது ….” ஜீவிதா காதுகளை மூடிக்கொண்டாள் .

” சொன்னால் நீ நம்ப மாட்டாய் .ஆனால் இதுதான் உண்மை இவனுக்கு இன்னைக்கு இங்கே வைத்து என்னை அடித்து , உதைக்கும் எண்ணம்தான் .அதற்காகத்தான் அவன் நணபர்களையெல்லாம் கூட்டு சேர்த்து வைத்து இங்கே உடகார வைத்திருக்கிறான் .அவனுங்களும் சேர்ந்து என்னை முறைச்சிட்டிருக்காங்க …”

” என்னம்மா சொல்றீங்க …? ” ஜீவிதா சலித்தாள் .

” ஆமாம் அந்த தியாகு , நடேஷ் , கீஷோர் எல்லோரும் இங்கேதான் இருக்காங்க .நான் வரும்போது பார்த்துக் கொண்டேதான் வந்தேன் ….”




ஏதோ உளறிக் கொண்டிருக்கிறாள் ….என நினைத்து அலடசியமாக அந்தப் பக்கம் திரும்பியிருந்த சிவபாலன் பரபரப்பாய்  சௌதாமினி பக்கம் வந்தான் .

” என்ன சொன்னீர்கள் அத்தை …? யாரைப் பார்த்தீர்கள் …? ” சிவபாலனின் வேகத்தில் பயந்த சௌதாமினி பேசாமல் வாயை மூடிக் கொள்ள …

” சொல்லுங்க  யாரை பார்த்தீங்க …? எங்கே பார்த்தீங்க …? ” சிவபாலனின் வேக குரலில் ஜீவிதாவிற்கே பயம் வந்த்து .

” யார் பாலா ….?எதற்கு இவ்வளவு டென்சன் …? ” அவளது குரலை கவனியாமல் ” திரும்ப சொல்லுங்க …” என சௌதாமினியை விரட்டினான் .

” அவுங்கதான் உன் நண்பர்கள் .தியாகு , நடேஷ் ….கிஷோர் ….”

” தியாகுவையும் , நடேசையும் நான்தான் வரவைத்திருக்கிறேன் .ஆனால் கிஷோர. …..இங்கே இருக்கிறானா …? அவனை பார்த்தீர.களா …? “

” அதோ ….அங்கே அந்த பந்தலில் ஓரமாக உட்கார்ந்திருந்தான் .நான் பார்த்தேன் .என்னைக் கூட பார்த்து முறைத்தான் ….”

” உங்களுக்கு யார் பார்த்தாலும் முறைப்பது போல்தான் இருக்கும் .உங்களுக்கு நன்றாக தெரியுமா ….? நீங்கள் பார்த்தது கிஷோர்தானா …? “

” சந்தேகம்னா நீயே போய் பாரேன் ….” சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் காட்டிய திசையில் ஓடினான் சிவபாலன் .பின்னாலேயே ஜீவிதாவும் ஓடினாள்.

சுகன்யாவின் கர்ப்பத்திற்கு காரணம் சிவபாலனின் ஒரு நண்பன் என மட்டுமே ஜீவிதா சௌதாமினியிடமும் , சபாபதியிடமும் சொல்லியிருந்தாள் .அது கிஷோர் என சௌதாமினிக்கு தெரியாது .எனவே அவள் அவனை சாதாரணமாக சொல்லிக் கொண்டிருக்க , சிவபாலனும் ,ஜீவிதாவும் பதறி ஓடினார்கள் .

அங்கே …அவன் இருந்தான் .கிஷோர் ….அந்த போராட்ட குழுவிற்கு தலைமை தாங்குவதறகாக புதிதாக அழைத்து வரப்பட்டவன் அவனாகத்தான் இருந்தான் .




ஊருக்கு சம்பந்தமற்ற வெளியூர் ஆள் ஒருவனை போராட்டத்திற்குள் இழுக்க , சிவபாலன் தரப்பு சம்மதிக்கவில்லை .நமது தேவைகளை நாமே போராடி வாங்கிக் கொள்வோமென ஊர் மக்களிடம் எடுத்து சொன்னான் .ஆனால் போலீஸின் அராஜகத்தில் நொந்திருந்த ஊர் மக்கள் அதனை கேட்பதாக இல்லை .எப்படியாவது எதை செய்தாவது தங்கள் தேவைகளை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருந்தனர் .அவர்கள் அந்த போராட்ட குழுவை அழைப்பதில் உறுதியாக இருக்க , ஊர்மக்களை தள்ள முடியாமல் சிவபாலன் மௌனமாகி விட்டான் .

அவனுக்கு பிடிக்காத திசையில் திரும்பி விட்ட இந்த போராட்டத்தை விட்டு இப்போது அவனால் விலகமுடியும் .ஆனால் அப்படி திடுமென தன் ஊர் மக்களை விட்டு விலக அவன் விரும்பவில்லை .எனவே அரை மனதாக போராட்டத்தில் கலந்து கொண்டவன் , புதிதாக வந்த போராட்ட குழுவினரின் பக்கம் திரும்பவில்லை .ஒரே பந்தலில் எதிர்திசையில் புதியவர்கள் இருக்க ,இவர்கள் வழக்கம் போல தங்கள் இடத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தியபடி இருந்தனர்.

சுளீரென்று தன் தோள்களில் விழுந்த அறையில் திடுக்கிட்டு கோபத்துடன் திரும்பிய கிஷோர் , எதிரில் கோபமாக நின்று கொண்டிருந்த சிவபாலனை பார்க்கவும் முகம் மாறினான் .திருதிருவென விழித்தான் .

சிவபாலன் அவன் சட்டையை கொத்தாய் பற்றி அவனை அள்ளி எழுப்பினான் .” எந்திரிச்சு வாடா .உன்கிட்ட பேசனும் …”

கிஷோருடன் வந்திருந்த அவனது தோழர்கள் ” ஏய் கலாட்டா பண்றியா …? ” கோபத்துடன் கைகளை முறுக்கிக் கொண்டு வந்தனர் .

” ஏய் …கிட்ட எவன் வந்தாலும் அவன் தலையை சீவ தயங்கமாட்டேன் .தள்ளிப் போங்கடா .உங்க தலைவனுக்கும் , எனக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு …”




” உனக்கு நாங்க இங்கே வர்றது பிடிக்கலைதானே , அதனால்தானே எங்க லீடர் மேலேயே கை வைக்கிற …நாங்க விட மாட்டோம்யா ….” அவர்கள் சிவபாலனை தாக்க தயாரானார்கள் .

ஒரு கையால் கிஷோரின் சட்டையை பிடித்திருந்தவன் , மறு கையால் அந்த நால்வரையும் சுலபமாக பிடித்து தள்ளினான் .”பக்கத்தில் வந்தால் , பிழைச்சி போக மாட்டீங்கடா …” என எச்சரித்தவன்…

” ஏய் …பெரிய லீடராடா நீ .ஒழுங்காக உன் ஜால்ராக்களை விட்டுட்டு என் கூட வா .பேசனும் .இல்லை பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறேன் லைசென்ஸ்சோடு.  எடுத்து உன்னை சுட்டுவிட்டு  கூட்டத்தில் வீண் கலாட்டா பண்ணினாயென்று என் ஊரையே சாட்சி சொல்ல வைத்துவிட்டு போய்கொண்டே இருப்பேன் .என்ன செய்ய போகிறாய் …? ” உலுக்கினான் .

” வர்றேன் …” என்றான் கிஷோர் .அவனை காரிலேற்றி இழுத்துக் கொண்டு போனான் சிவபாலன் .

————————–

” இப்போதும் நான் சுகன்யாவை விரும்புகிறேன் .அவளைத் தவிர வேறு ஒருத்திக்கு என் வாழ்வில் இடம் கிடையாது …”

” பிறகு ஏன்டா அவளை ஏமாற்றிவிட்டு ஓடினாய் …? “

” என் வாழ்க்கை பாதை வேறு .அவள் வாழ்க்கை வேறு .இரண்டும் சேர முடியாது .அதனால்தான் நான் இந்த பிரிவு முடிவை எடுத்தேன் ….”

” உன் வியாக்கியானம் எனக்கு புரியவில்லை ….” சிவபாலன் பல்லை இறுக கடித்தான் .அதில் அவன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டிருந்த்து நன்கு  தெரிந்த்து .

” சிவா நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளு .உங்கள் வீட்டில் சுகன்யாவை முதலில் பார்த்த அன்றே அவள்தான் என் வாழ்க்கை என எனக்கு தோன்றி விட்டது .அவளுக்கும் அப்படித்தான் தோன்றியதாக என்னிடம் பிறகு சொன்னாள் .நாங்கள் ஜாலியாக உங்கள் அனைவரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஊர் சுற்றினோம் .விளைவு அவள் கர்ப்பமானாள. நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம் .பிரச்சனைகள் வரத் துவங்கின .




காதலர்களாக இருக்கும் போது வராத …தோன்றாத பிரச்சனைகள் எல்லாம் கல்யாணம் என பேசத் துவங்கியதும் வரத் துவங்கியது .உடுத்திய சேலையுடன் வீட்டை விட்டு வா என்றால் , நீ எனக்கு பெட்டி நிறைய துணி எடுத்து வைத்திருக்கிறாயா …எனக் கேட்கிறாள் சுகன்யா .மஞ்சள் கயிறு வாங்கி கோவிலில் வைத்து திருமணம் முடிப்போமென்றால் , ஐந்து பவுனில் உனக்கு ஒரு சங்கிலி வாங்க முடியாதா …எனகிறாள் .

என்ன வேலை …? என்ன சம்பளம் …? என்னையும் குழந்தையையும் எப்படி கவனிப்பாய் …..அப்பப்பா …கேள்விகள் …கேளவிகள் .திருமணம் என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே இத்தனை கேள்விகளென்றால் ….மணம் முடித்த பின்…என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை .இதுதான் என் வேலை .இவ்வளவுதான் என் சம்பளம் .இந்த தொகைக்குள்தான் நாம் குடும்பம் நடத்தியாக வேண்டுமென்றால் …இப்படியெல்லாம் குடும்பம் நடத்த நான் என்ன பிச்சைக்காரியா …என்கிறாள் .வேறு வழியின்றி நான் பிரிவு எனும் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று …”

பேசி முடித்தவனின் கன்னத்தில் பளாரென அறைந்தான் சிவபாலன் .” ஏன்டா ஒரு சின்னப்பொண்ணு மனசை கெடுத்து , காதல் பேசி அவள் கூட குடும்பம் நடத்தி பிள்ளையைம் குடுத்துட்டு …உன் இழுவைக்கு அவள் வரலைன்னு பிரிஞ்சிட்டேங்கிறியே …வெட்கமாக இல்லை …? எழுந்திருடா என்னோடு வா …இப்போதே நீ  என் கண் முன்னாலேயே சுகன்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் .அவளை கல்யாணம் பண்ணனும் .எழுந்திரி …” அவன் தோள்களை இழுத்து எழுப்ப …அவன்

” அவசரப்படாதே சிவா ….” எனத் திணற , அப்போது உள்ளே வந்த ஜீவிதா அவசரமாக இவர்களுருகே ஓடி வந்தாள் .

” பாலா என்ன இது …விடுங்கள் அவரை .நீங்கள் இப்படி அவசரப்படுவீர்களென தெரிந்துதான் நான் ஓடி வருகிறேன் .” சிவபாலனை பிடித்து தள்ளினாள.பேசுவதற்காக கிஷோரை ஜீவிதாவின் க்ளினிக்கிற்கு அழைத்து வந்திருந்தான் சிவபாலன் .

ஜீவிதாவின் கையை பிடித்து கிஷோரின் முன் நிறுத்தியவன் ” இவளை பார் .என் மாமன் மகள் .சிறு வயதிலிருந்தே ஒருவரையொருவர் மனதில் நினைத்து வந்தோம் .நீ செய்த ஆகாத செயலால் நாங்கள் இருவரும் சேர முடியாமல் தனித்து நின்று கொண்டிருக்கிறோம் .என்ன நடந்த்தென தெரியுமா …? “




” தெரியும் ….” சிவபாலனின் பேச்சை பாதியில் வெட்டினான் கிஷோர. .

” என்ன தெரியும் ….? ” சிவபாலனின் அவசரம் மறைந்து கூர்மை வந்த்து .

” சுகன்யாவிறகும் உனக்கும் நடந்த திருமணம் தெரியும் .சுகன்யாவையும் , குழந்தையையும் நீ பாதுகாப்பாக வைத்திருப்பது தெரியும் …”

சிவபாலன் தன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கைலாஷின் நெற்றியில் பொருத்தினான் .

What’s your Reaction?
+1
8
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
T GEETHA
T GEETHA
3 years ago

அதோ அந்த நதியோரம் –climax இல்ல mam

Aieshak
3 years ago

Hahahaha podu thagida thagida…

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!