Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 17

  17

தவறென்று பட்ட தவறியவைகளுக்கெல்லாம்
வெண் சிரிப்பொன்றுடன் வெள்ளையடித்து விடுகிறாய்

ம்மா …என்னம்மா …? ” வேகமான் ஓட்டத்தில் மூச்சிரைக்க நின்ற தாயை வியப்பாய் பார்த்து கேட்டான் அமரேசன் .மகனின்    உயர்ந்த தோள்களை  தள்ளி  எட்டி  பார்த்தாள் மங்கையர்கரசி .வேதிகாவை காணவில்லை .எப்போதோ பறந்து விட்டிருந்தாள் .குட்டிப்பிசாசு …அடிக்கடி சாமிநாதன் தன் மகளுக்கு சூட்டும் பட்டத்தை இப்போது  மருமகளுக்கு கொடுத்தவள் , பதிலுக்காக தன் முகம் பார்த்து நின்ற மகனுக்கு ஒரு அசட்டு சிரிப்பை பதிலாக தந்தாள் .




ஒரு அவசர நொடியில் மகனின் கைகளிலிருந்து தனது தோள்களை விடுவித்து கொண்டவள் , வேகமாக வீட்டினுள் வந்து டிவியை போட்டு அமர்ந்து கொண்டாள் .ஓரக் கண்ணால் தன்னை உறுத்தபடி சென்ற மகனை கண்டுகொள்ளாமல் டிவிக்குள் புதைந்து கொண்டாள் .

உற்சாகமான மனநிலையுடன் தையல் மிஷினை மிதித்து கொண்டிருந்த வேதிகாவிற்கு என்னவோ அந்த மிஷின் பியானோ வாசிப்பது போலிருந்த்து . இதற்கு முன்பு இது போலொரு தைத்தலை அவள் செய்ததில்லை .கைகளும் , கால்களும் ஒரு வித சங்கீத லயத்துடன் மிஷினில் இயங்கின .பின்னணி இசை போல் அவளது வாயிலிருந்து துள்ளல் பாடல் ஒன்றுக்கான ஹம்மிங் வந்தபடியிருந்த்து .

” ஏய் …” அவள் முன் விரல் சொடுக்கி , கையசைத்து அவளை தன் பக்கம் திருப்பிய கௌரி அதிசயித்தாள் .” என்னடி இது என் தோழி ஙேதிகாதானா இது ..? எப்போது பார்த்தாலும் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வந்து விட்டதேன்னு முந்தானை நனையிற அளவு கண்ணீர் விட்டுட்டு இருப்பாளே …அவளா நீ …?

” அது யாருடி அவா …அரை லூசு . அமைந்து விட்ட வாழ்வின் அருமை தெரியாமல் அழுது குமைபவள் …? ” கேட்டுவிட்டு பின்னாலேயே ஒரு லா…லாவை பேக்ரவுண்ட் மியூசிக் போல ஒலிக்க விட்டு விட்டு , திடுமென விழி விரித்து …

” ஏய் கவனித்தியாடி , எல்லா வார்த்தையிலும் ” அ ” .ஆஹா  என்ன இலக்கிய நயம் . …வர வர கவிதாயினியாக மாறிட்டு வர்றேன்டி .பேசாமல் கவிதை எழுத டிரை பண்ணட்டுமா …? ” கௌரி தலையிலடித்துக் கொண்டாள் .

” கஷ்டம் .இந்த கண்றாவிக்கு பெயர் இலக்கிய நயமா …? நீயெல்லாம் கவிதை எழுத யோசிக்கிறதாலதான்டி கவிஞர்களுக்கெல்லாம் மதிப்பில்லாமல் போயிடுச்சு …”

” உனக்கு பிடிக்கலைன்னா போடி .நான் என் அமர்கிட்ட கவிதை சொல்லிக்கிறேன் ….”

” என் …அமரா …அது யாருடி …? ” கௌரியின் திறந்திருந்த வாயை , தன் கையால் மூடினாள் .

” என் புருசனை நான் அப்படித்தான்டி கூப்பிடுவேன் .”

” பெயர் சொல்லியா …? “

” மங்கை அப்படித்தான் கூப்பிடுறாங்க .அதனால் நானும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சிட்டேன் …”

” மங்கையா …அது யாரு …? “




” என் மாமியார் …மங்கையர்கரசி .அவுங்களை மங்கைன்னுதான் கூப்பிடுவேன் …”

கௌரிக்கு தலை சுற்றி மயக்கம் வரும் போல் இருந்த்து .” அடியேய் மயங்கி விழுந்து தொலையாதே .மூஞ்சியில் தெளிக்க தண்ணியில்லை .குடிதண்ணி கேன் இன்னும் வரலை “

” வேதா என் கையை கொஞ்சம் கிள்ளுடி .எனக்கு எங்கேயோ மிதப்பது போல் , என்னவோ நடப்பது போல் இருக்குடி .நான் பூலோகத்தில் தான் வாழ்கிறேனா…? ” கையில் வைத்திருந்த ஊசியால் லேசாக தோழியின் கையில் குத்தினாள் வேதிகா .

” ஷ் …ஆ …ஏன்டி பிசாசே …ஏன் இப்படி கொலைவெறியோடு அலைகிறாய் …? ” தோழியின் முதுகில் மொத்த தயாரானவளை …

” ஹலோ கௌரி என்ன பண்றீங்க …? கண்டிப்போடு வந்த அமரேசனின் குரல் தடுத்தது .

” போச்சுடா …” முணுமுணுத்தபடி கைகளை இறக்கிய கௌரி , ” வேதா முதுகில் தூசுண்ணா .அதை தட்டி விட்டேன் …” என்று சமாளித்தாள் .

” அப்படியா …” நம்பாமல் கௌரியை பார்த்தவனின் பார்வை மனைவியின் முதுகையும் ஆராய்ந்த்து .

” இப்போதாண்ணா …வேதா மங்கையை பற்றியும் , அமரை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் ….” பேசாதே என்ற தோழியின் ஜாடையை அலட்சியப்படுத்தி மிகத் தெளிவாக பேசிவிட்டு , டேபிளில் போய்  …விட்ட கட்டிங்கை தொடர்ந்தாள் .

புரிந்தும் , புரியாத பாவனையில் தன்னை பார்த்த கணவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசிக்களானாள் வேதிகா .” வா வேதா கொஞ்சம் வெளியே போய்விட்டு வருவோம் …” தப்பமுடியாது என உணர்த்தினான் அமரேசன் .கௌரியை முறைத்தபடி கிளம்பினாள் வேதிகா .

” இன்று காலை நான் அம்மாவிடம் ஒரு வேறுபாட்டை பார்த்தேன் வேதா …” ஹோட்டலில் ஜில்லாக பாதாம்கீர் ஆர்டர் சொல்லிவிட்டு  வேதிகாவின் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டு நெகிழ்வாக பேசினான் அமரேசன் .

அம்மாவும் , மகனும் ஒருவரொடொருவர் மோதிக் கொண்டதை பார்த்துக் கொண்டுதானிருந்தாள் வேதிகா .எதுவாக இருந்தாலும் இருவருமாக பேசி முடிவெடுக்கட்டுமென நினைத்துத்தான் மறைந்து நின்று இருவரையும் நோட்டம் விட்டாள் .ஆனால் மங்கையர்கரசி தப்பித்து போய்விட்டாள் .அமரேசன் புரியாமல் நின்றான் .

இப்போதும் மாமியாரை பற்றி கணவனிடம் எதையும் சொல்ல முடியவில்லை .இன்னமும் அவளாக மங்கையர்கரசியை பற்றி கணிக்க முடியவில்லையெனும் போது , கணவனிடம் என்ன சொல்ல முடியும் …? ஆனாலும் தாய்க்கும் , மகனுக்குமிடையேயான இயற்கை பாச உணர்வை வெளிக் கொணர முடியுமென்ற நம்பிக்கை அவளிடம் இருந்த்து .




” நீ அன்று கேட்டாயே …? இதுதான் அவர்கள் இயல்பென உங்களுக்கு தெரியுமா ….என்று .அன்றிலிருந்து அம்மாவை பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு தன் நகைகளை கொண்டு வந்து கொடுத்தார்களே , அன்றும் எனக்கு வித்தியாசமாகத்தான் தோன்றினார்கள் .சிறு குழந்தை போல் நம்முடன் அடித்து விளையாடினார்களே .இன்று காலை கூட அது போலொரு முக பாவம் அவர்களிடம் . உருண்டு ஓடும் பந்தை பிடிக்க போகும் குழந்தையின் குதூகலம் முகத்தில் .நான் நெருக்கி கேட்ட போது , ஏதோ சமாளித்து விட்டு போய்விட்டார்கள் …”

” இதைத்தான் நானும் சொன்னேன் .அத்தையின் இயற்கை குணம் இதுதான் .இது போன்ற கலகலப்பான சுபாவமுடையவர்கள் அவர்கள் என்றுதான் எனக்கும் தோன்றியது .”

” இத்தனை வருடங்களாக இதனை நான் எப்படி கவனிக்காமல் போனேன் வேதா …? “

” அதற்கெல்லாம் தலைக்குள் மூளையென்ற ஒன்று வேண்டும் …” தலையை குனிந்து நிதானதாக பாதாம்கீரை ஸ்பூனால் கிண்டியபடி சொன்னாள் .

” ஏய் ….என்னடி சொன்ன …? ” அவள் புறம் குனிந்து கேட்ட அமரேசனின் குரலில் கோபமில்லை . வேறேதோ தாபமிருந்த்து .

அவன் இதழ்களுக்கும் , தன் கன்னத்திற்கும் இஞ்ச் அளவே இடைவெளியிருப்பதை உணர்ந்த வேதிகா , அவசரமாக நகர்ந்து ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்து கொண டாள் .

” நகர்ந்து வராதீர்கள் .வெளியிடத்தில் வைத்துக் கொண்டு …இது…தப்பு ”  கண்டித்தாள் .

” சரி அப்போது எங்கே வைத்துக் கொள்வோம் …? ” அமரேசன் தனது கணவனின் உரிமைக்கு அடிக்கோலிட்டான் .

” அம்மாவை பற்றி பேச வந்தீர்கள் …” அவனது பார்வை தீயில் வெந்த தன் மனத்தைவெளி காட்ட முடியாமல் பேச்சை திசை திருப்பினாள் .

” ம் …அம்மாவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை வேதா .சில நேரம் உன்னைக் கூட .நீங்கள் பெண்கள் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருப்பீர்களா …? “

” உங்கள் அம்மாவை பற்றி பேசும் போது என்னையும் எதற்கு இழுக்கிறீர்கள் …? ” முகம் சுளித்தாள் .

” எனக்கு நீங்கள் இருவரும் ஒன்றுதான் வேதா .நீங்கள் இருவருமே என் வாழ்வின் முக்கியமான அங்கங்கள் . ஆனால் இருவருமே விநாடிக்கு ஒரு உருவம் காட்டிக் கொண்டருக்கறீர்கள் .எந்த வகையில் எப்படி உங்களை அணுகுவதென்று தெரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் ….”

” எப்போதும் ராணுவ அதிகாரி போல் விறைப்பாக இல்லாமல் , மகனாக , கணவனாக இறங்கி வந்து பாருங்கள் .எல்லாம் சரியாக நடக்கும் ….” குழைந்து விட்ட தன் மனத்தை முகத்தில் காட்டாதிருக்க பெரும் பிரயத்தனபட்டாள் .

” ஓ…நான்   இயல்பாக இருக்கிறேன் , தெளிவாக பேசுகிறேன் .பாசமாக பழகுகிறேன் . எங்கே என்ன  தவறு செய்கிறேன் வேதா.நிஜம்மாகவே எனக்கு தெரியவில்லை … ப்ளீஸ் நீதான் சொல்லேன் ….”என்ன செய்யட்டுமென அவள் முன் நிற்கும் கணவன் குழந்தை போல் தோன்றினான் வேதாவற்கு .அவனை இழுத்து மடியில் போட்டுக் கொள்ள தோன்றியது அவளுக்கு .அது போல் மடி சுகம் அறிந்திருப்பானா அவன் …மனம் கணவன் பால் பாசமாக உருகிய து .

” நீங்கள் அம்மா மடியில் படுத்திருக்கிறீர்களா …? அவர்கள் முந்தானையால் முகம் மூடி உறங்கியிருக்கிறீர்களா …? அந்த சுகம் தெரியுமா உங்களுக்கு …? பெண்களை வசப்படுத்துவது மிக எளிது .நீ வேண்டும் எனக்கு என்று அவள் புறம் சரிந்துவிட்டால் போதும் .ஜென்ம்ம் முழுவதும் மனதால் , உடலால் அவனை தாங்குவாள் …”

” ம் …அதாவது முழு சரணாகதியாக வேண்டுமென்கிறாய் …கடவுளை அடைக்கலமாகும் பக்தனை போல் …ம் …”




” இல்லை தாயின் மார்பிலுறங்கும் குழந்தை போல் …”

” ஆசையில்லாமலில்லை வேதா . ஆனால்  ஒரு குழந்தையாக அவர்களிடம் நெருங்க அம்மா அனுமதித்ததில்லையே .எனக்கு விபரம் தெரிய சாப்பாடு போட்டதில்லை .பாடம் சொன்னதில்லை .சரியாக பேசியது கூட இல்லை .அவராக அழைத்துக் கொள்ளாத போது நானாக எப்படி …? “

” ஏன் …உங்கள் அம்மா கூப்பிட்டால்தான் மடியில் படுத்து கொள்வீர்களா ..? ” அவன் பேச்சை பாதியில் வெட்டினாள் .சிந்தக்க ஆரம்பித்து விட்ட அவன் முகத்தை பார்த்தபடி , தனது பாதாம்கீரை ரசித்து சாப்பிட துவங்கினாள் .

” நான் இது வரை …அம்மாவிற்கு பிடிக்காது என்று நினைத்துதான் தள்ளியே இருந்துவிட்டேன் .இனி அம்மாவுடன் பேசி பழக முயல்கிறேன் .அம்மாவுடன் எங்கே வைத்து பேசலாம் .உன் மல்லிகை கொடிக்கடியில் வைத்துக் கொள்ளலாமா …? ” மகனிலிருந்து கணவனுக்கு மாறியிருந்த்து அவனது பேச்சு .

” அங்கே எதற்கு …? ” வேதிகாவின் பார்வை கணவனின்   கால் பெரு விரலில் இருந்த்து .

” அந்த மல்லிகை கொடி எனக்கு ரொம்ப ராசியான இடம் வேதா .நான் நினைப்பதெல்லாம் அங்கேதான் நடந்திருக்கிறது .அதுவும் மிகவும் இனிமையாக ….”

” இல்லை …அதிகாரமாக …” தன் மனக்கிடக்கை வெளிப்படுத்தனாள் .

” ம் …அதிகாரம்… இருக்கலாம் .ஆனால் அது அன்பதிகாரம் வேதா .என் அன்பை என்னால் அதிகாரமாகத்தான் வெளிப்படுத்த முடிகிறது .”

” அன்பு அநிச்ச மலர் போன்றது .அதனை வருடித்தான் பெற முடியும் .வருத்தி அல்ல …”

” அன்று உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேனா வேதா …? ” மீண்டும் வேதிகாவின் அருகிலிருந்த நாற்காலிக்கு மாறி குரலை தழைத்திருந்தான் .

” வெறுப்பு வரும் அளவு கீழாக நடந்து கொண டேனா …? அதனால் என்னை பார்த்தால் உனக்கு அரு ஙெறுப்பாக இருக்கிறதா ..?  சாரிவேதா .எனக்கு பெண்களை தெரியாது .அவர்களை கையாள தெரியாது .அதனால் அன்று ஏதாவது தவறாக நடந்திருந்தால் ….உனக்கும் விருப்பமென்றுதான் நான் …”  தடையின்றி பேசிக் கொண்டு போனவனின் வாயை பொத்தனாள் .




” ஐயையோ …போதும் .எதை சொல்கிறீர்கள் …? நா …நான்…அ …அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை …”

” ஆனால் நம்மிடையே பேச அது மட்டும்தானே இருக்கறது .கணவன் மனைவிக்கான அன்றைய அந்த இயற்கை நிகழ்வினால் தானே நாம் இன்னும் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறோம் .அதை தவிர நமது திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் நாம்  என்ன வாழ்ந்திருக்கிறோம் …?

அமரேசனின் பேச்சலிருந்த உண்மை தாக்க மௌனமானவள் , பிறகு மெல்லிய குரலில் ” நாம் முதலில் உங்கள் அம்மாவை பற்றி மட்டும்  பேசுவோம .” என்றாள் .

பெருமூச்சொன்றுடன் அவளை அளந்தவன் ” சரி .ஆனால் எனக்கென்னவோ …உங்களை …பெண்களை ….அம்மாவை , மனைவியை  புரிந்து கொள்ள முடியுமென்று தோன்றவில்லை ” என்றான் .

அவனது பேச்சை மெய்யாக்குவது போலத்தான. மங்கையர்கரசியும் நடந்து கொண்டாள் .

7

What’s your Reaction?
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!