30

நிமிர்ந்தென்னை பார் ..
உனக்கு அதிர்ச்சி தரும் சொல்லொன்றை
சுமந்து நிற்கிறேன் ,
மீண்டும் பிரிக்க வசதியாக
விரல் சொருகி வைத்திருக்கும்
புத்தக பக்கம் விடுத்து ,
மடித்து உள் சொருகியிருக்கும்
வார்த்தை வளரும் முன்
உரசி உதிரும் பற்கள்
பற்றிய கவலை விடுத்து
முத்தமிட்டு இதழ் பூட்டி விடு ,
நிமிர்ந்தென்னை பார் .

” இன்னும் நீ இங்கேதான் இருக்கிறாயா …? உன் அம்மா வீட்டிற்கு போயிருப்பாயென்று நினைத்தேனே …? ” தனக்கு கதவு திறந்து விட்ட மீராவை நக்கலாக கேட்டாள் மிருணாளினி .

அதுதானடி இன்னும் போகாமல் இருக்கிறேன் மனதிற்குள் நினைத்தபடி அவளை முறைத்துக் கொண்டே உள்ளே போனாள் .

” அத்தானை எங்கே அத்தை …உள்ளேதானே இருக்கிறார்  ” சுந்தரியிடம் கேட்டு விட்டு ஓரக்கண்ணால் மீராவை பார்த்தபடி அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டாள் .

மீராவிற்கு கொதித்து வந்தது .அந்த வேப்பமரத்தடி கல்லில் போய் உட்கார்ந்து கொண்டாள் .

கொஞ்ச நேரத்திலேயே அவளருகில் வந்து அமர்ந்தான் நந்தன் .தன்னையே பார்க்கும் அவன் பார்வையை உணர்ந்தும் பார்க்காதது போல் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா .

” இப்போது கிளி இல்லையா மீரா …? “

” இறக்கை முளைத்து பறந்து போய்விட்டது …” இயந்திரமாக பதில் சொன்னாள் .

” என்ன பிரச்சினை மீரா உனக்கு …? ” மென்மையாக அவள் கையை வருடினான் .

கையை விடுங்கள் …” இழுத்துக் கொண்டாள் .

” மீரா …உன் பிரச்சினையை சொன்னால் …”

” உங்களிடம் சொல்லும்படியான பிரச்சினை இல்லை ” வெடித்தாள்.

” ஆனால் ஏதோ இருக்கிறது .அப்படித்தானே …? “

” அப்படி இருந்தாலும் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும் …? “

” என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் மீரா ..? “



” ஒன்று சொல்லுங்கள் .மனைவியென்றாலே எல்லாவற்றையும் கணவனிடம் கொட்டியே ஆக வேண்டுமா …? அவளுக்கென்று ப்ரைவஸி கிடையாதா …? “

“‘: என்னாச்சு மீரா உனக்கு …? “

” நான் ஒரே குழப்பத்தில் இருக்கிறேன் .என் குழப்பம் தீரும் வரை தயவுசெய்து என்னை விட்டு தள்ளியிருங்கள் .பேசக்கூட வேண்டாம் ….”

நந்தகுமார் முகத்தில் அடி வாங்கிய பாவம் தெரிந்தது .

” சாரி மீரா ….” எழுந்து போனான் நந்தகுமார் .

அறைக்குள் அவளிடம் பேசிவிட்டு வெளியே என்னிடமும் வந்து எப்படி இப்படி கொஞ்ச முடிகிறது …? இது இந்த ஆண்களுக்கே கை வந்த கலையோ ..?

அந்த குமரேசன் இருக்கவில்லை …? வீட்டில் மனைவியிடமும்….வெளியில் வேறு ஒரு பெண்ணிடமும் ..குடும்பம் நடத்திக் கொண்டு ….சை …அருவெறுப்பில் உடல் சுருங்கியது மீராவிற்கு .

எழுந்து பாட்டி வீட்டினுள் சென்றாள் .

” என் மனது திக்கற்று தவிக்கிறது பாட்டி …” பாட்டி தோள்களில் சாய்ந்து விசும்பினாள் .

” அவர் …அந்த மிருணாவுடன் அத்து மீறி பழகுகிறாரோ என்று இருக்கிறது பாட்டி .இந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களா ..?? ,” விசும்பினாள் .

” என் நந்தன் அப்படி இல்லை மீரா .அதை என்னால் உறுதியாக கூற முடியும் .நீ அந்த மிருணாளினியை நந்தனின் முன்னாள் காதலியாக மட்டும் பார்க்காதே .அவள் அவனின் தாய்மாமன் மகள் .அவர்களுக்கிடையே அந்த உறவுதான் முதலில் ..அந்த உறவை கொச்சைப்படுத்தாதே …” பாட்டி அதட்டினார் .

” ஆனால் அத்தைக்கு …அவள் தன் மருமகள் .மகனின் மனைவி என்ற எண்ணம்தானே இருக்கிறது .அம்மா சொன்னால் …அந்த மிருணாளினியை திருமணம் செய்து கொள் என்று அம்மா சொன்னால் இவர் தலையாட்டி விடுவாரே …”

” அப்படி என்ன அந்த மிருணாவிற்கு வேறு ஆம்பளை கிடைக்கவில்லையா …? என் பேரன் ஒருத்தன்தான்  ஆண்பிள்ளையா …? “

” உண்மையான காதலுக்கு விரும்பியவன் ஒருவன்தான் ஆணாக தெரிவான் பாட்டி .”

” மண்ணாங்கட்டி …அந்த மாதிரி காதல் எதுவும் அந்த மிருணாளினியிடம் கிடையாது ….,”

” இருக்கிறதென்று அவள் சொல்கிறாளே பாட்டி ….”

” எங்கே இரண்டு பேரையும் கூப்பிடு .கேட்டுவிடுவோம் ….”

” பாட்டி …” பதறி தடுத்தாள் .

” ஆமாம் …அப்படித்தான் என்றுவிட்டால் ..நான் என்ன செய்வேன் பாட்டி …? ” விம்மினாள் .

” நான் உன்னை புத்திசாலி என்று நினைத்தேன் மீரா .இப்படி மட்டியாக இருக்கிறாயே …”

” இந்தக் காதல் பெரிய புத்திசாலியை கூட முட்டாளாக்கி விடும் பாட்டி .என் மீது ஆணை .இது விசயம் நீங்கள் என் அனுமதி இல்லாமல் யாரிடமும் பேசக்கூடாது ….”



பாட்டியின் வாயை அடைத்து விட்டு வெளியேறினாள் மீரா .

” ஆமாம் மீரா….நீ முட்டாள் .பெரிய முட்டாள் .என் வாயை அடைத்து விட்டாய் .ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் ….”

பாட்டி வீட்டினர் அனைவரையும் கூட்டினார் .

” என் சொத்துக்கள் எல்லாவற்றையும் பிரித்து கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன் …” பாட்டியின் பேச்சில் அனைவரும் அதிர்ந்தனர் .

” அம்மா ..என்னம்மா …ஏன் இப்படி பேசுகிறீர்கள் …? ” கலக்கத்தோடு அம்மா அருகில் அமர்ந்தார் குருநாதன் .

” எண்பத்தியிரண்டு வயசாச்சுடா எனக்கு .எப்போ வேண்டுமானாலும் எனக்கு ஒரு முடிவு வரலாம் .அதற்குள் உங்கள் எல்லோருக்கும் நான் என்னுடையதென்று வைத்திருந்ததை தர வேண்டாமா …? “

” அதற்கு இப்போது என்ன அவசரம் பாட்டி …? ” அதட்டலோடு மறுபுறம் அமர்ந்தான் நந்தகுமார் .

” அவசரம்தான்டா ..மனதிலிருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது பார் ….,” பாட்டியின் பார்வை மீராவை துளைத்தது .மீரா தலை குனிந்து கொண்டாள் .

” பாட்டி ஒண்ணும் புரியவில்லை .இப்போதாவது புரியும்படி பேசுங்களேன் .சொத்து பிரிக்கும் போதும் எப்போதும் போல்  புரியாமலேயே பேசினீர்களானால் என் பங்கு சொத்தின் அளவு  கடைசி்  வரை எனக்கு புரியாமலேயே போய்விடும் .அதற்குத்தான் ….'” வழக்கம் போல் கிண்டல் பேசிய சசிகுமாரை முறைத்தான் நந்தகுமார் .

” ஏய் என்னடா …இப்போதும் கிண்டல் ….”

” அண்ணா பாட்டி பேசுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுதான் …இப்படி பேசி சமாளித்தேன் ….”

” டேய் கொஞ்ச நேரம் பேசாமல் இருங்கடா ….” அதட்டிய பாட்டி …தொடர்ந்து வீடு , நிலம் என தன்னுடைய சொத்துக்களை பிரித்து சொல்ல தெடங்கினார் .குருநாதனுக்கு , சசிகுமாருக்கு  அசையா சொத்துக்களை சொன்னவர் …பெண்களுக்கு நகைகளை பிரித்தார் .நந்தகுமாருக்கும் , மீராவிற்கும் எதையும் சொல்லாமல் விட்டார் .

” பாட்டி நந்தனுக்கு ..மீராவிற்கு …? ” பிரவீணா இழுத்தாள்.

” இரண்டு பேரும் என் பக்கத்தில் வாங்க ….”

இருவரும் பாட்டியின் இரு பக்கமும் அமர்ந்தனர் …

” நந்தா ..இந்த சொத்துக்களை எல்லாம் விட மிகப்பெரிய சொத்தை உனக்கு நான் தேடி கொடுத்திருக்கிறேன் .இது வரை உணர்ந்தாயோ இல்லையோ …இனியாவது உணர்ந்து இந்த புதையலை நீ காலம் முழுவதும் கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டும் ….”

மீராவின் கையை பிடித்து நந்தனிடம் கொடுத்தார் .

” மீரா …இது உன் வீடு .இங்கிருக்கும் மற்ற பெண்களை விட உனக்குத்தான் இங்கே உரிமை அதிகம் .இந்த வீட்டின் எனக்கடுத்த பெண் வாரிசாக என் இடத்தில் உன்னை வைக்கிறேன் .அதற்கு அடையாளமாக ….”

தன் கரத்தில் இருந்த அந்த தங்க காப்பை கஷ்டப்பட்டு கழட்டினார் பாட்டி .

” இது என் மாமியார் எனக்கு கொடுத்தது .குடும்ப கௌரவத்தை கடைசி வரை காக்க வேண்டுமென என்னிடம் வாக்கு வாங்கிக்கொண்டு இதை எனக்கு கொடுத்தார் .இதன் நடுவில் ஒரு வைரம் இருக்கிறது .சுற்றிலும் இருக்கும் சின்ன கற்கள் மாணிக்கங்கள் .ஓரளவு விலை மதிப்பு வாய்ந்தது. எத்தனையோ கஷ்டங்களிலும் இதை நான் என் கையிலிருந்து கழட்டவில்லை .இப்போது இதை உனக்கு தருகிறேன் .தவறுபவர்களை நல்வழிப்படுத்தி உன் காலம் வரை இந்தக் குடும்பத்தை நீதான் வழி நடத்த வேண்டும் ….”

அந்தக் காப்பை மீராவின் கையில் போட்டார் .

” இந்தக் குடும்பத்தை இறுதி வரை காப்பது உன் கடமை மீரா . இவளை இறுதி வரை காப்பது உன் கடமை நந்தா ….”

கணவன் , மனைவிக்கிடையேயான குழப்பத்தை ஒரே செய்கையில் எளிதாக தீர்த்துவிட்டார் பாட்டி .

உன் தலையில் பொறுப்பிருக்கறதடி …உதறிவிட்டு நீ போக முடியாது…இதை சொல்லத்தானே பாட்டி இந்த பங்கு பிரிப்பு ….பாட்டியிடம் கேட்க மீரா இரவு போனபோது …அவளால் பேச முடியாது போனது .

ஏனென்றால்…

முட்டாள்களே …நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர்…பிரிய வேண்டுமென மனதாலும் நினைக்காதீர்கள்  என கணவன் ..மனைவி இருவரையும்  உணர வைத்துவிட்டு அன்று இரவே பாட்டி உலகை விட்டே போய்விட்டார் .



What’s your Reaction?
+1
25
+1
27
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3

Radha

View Comments

Recent Posts

உடலென நான் உயிரென நீ-5

5 " தமிழ்நாடு எல்லை ஆரம்பம் " வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது. என்ன ஒரு துல்லியமான ப்ளான் ... ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே ... பிடிக்காத திட்டமென்றாலும்  இந்த  தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது . அது வரை  இருக்கை நுனியில் பயணித்த  கார் பயணத்தை  மெத்தென பின் சாய்ந்து  ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் . " அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் ..."  சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .…

2 hours ago

உங்க சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில்…

2 hours ago

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாமும் உதவலாமே: இதோ 14 எளிய குறிப்புகள்!

சுற்றுச்சூழல் பற்றிய பிரச்னைகளைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் நம் அனைவருக்குள்ளும் ஒரு சிறிய கேள்வி எழும்: ‘நம் அளவில் ஏதாவது செய்து சுற்றுச்சூழல்…

2 hours ago

பாடல் பிறந்த கதை(எந்த ஊர் என்றவனே )

ஏ.சுப்பராராவ் இயக்கத்தில் 1963 இல் வெளிவந்த குடும்பப்பாங்கான திரைப்படம் காட்டு ரோஜா.மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. எம்.எஸ்.சோலைமணி…

2 hours ago

ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்: 18 கிளைகள்… போத்தீஸ் வெற்றிப் பயணம்!

விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் டெக்னிக்குகளில் புதுமை காட்டி ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிறுவனம் போத்தீஸ். ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்களாகத் தடம்…

4 hours ago

ஆதாரத்தை திரட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில்…

5 hours ago