12

சைந்தவியின் திருமணத்தின் போது அணிந்து கொள்ளப் போகும் பட்டுச்சேலைகளுக்கான சட்டைகளை  வாங்கிக் கொண்டு வந்தாள் அஸ்வினி. லிப்ட்டிலிருந்தே வெளியே வந்து வீட்டு வாசலை நெருங்கிய போதே மூடியிருந்த கதவையும் தாண்டி சத்தமான பேச்சுக் குரல் உள்ளிருந்து கேட்டது.

 யார் இப்படி கொஞ்சம் கூட டிசென்சி இல்லாமல் கத்துவது? வேகமாக கதவை திறந்தாள். ஹாலில் நடுவில் நின்று கத்திக் கொண்டிருந்த அந்த பெரிய மனிதர் இவள் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கத்தலை தொடர்ந்தார்.

” ஒரு இடத்தில் சம்பந்தம் பேசும்போது அந்த வீட்டு மனிதர்களின் சொந்த பந்தங்களை விசாரிக்க மாட்டீர்களா? இப்படியா ஒரு ஆண் பிள்ளை கிடைத்தால் போதும் என்று அமுக்குவீர்கள்?”

” சார் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்.உங்கள் வீட்டுப் பையனை எங்கள் பெண்ணிற்கு திருமணம் செய்ய பேசியிருக்கிறோம். வேறு எந்த தப்பான விஷயமும் நாங்கள் செய்யவில்லை” சுரேந்திரன் அதட்டலாய் பேசினார்.

” ஏற்கெனவே நிச்சயமான பையனுக்கு திரும்பவும் கல்யாணம் பேசுவீர்களா?”

 அவர் பேச்சில் அஸ்வினி அதிர்ந்தாள். இவர் என்ன சொல்கிறார்? ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி அறைக்குள் போனாள். அங்கே சைந்தவி கட்டிலில் அமர்ந்து விம்மி அழுது கொண்டிருந்தாள். “அக்கா எதற்கு அழுகிறாய்?யார் இந்த ஆள்? ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறாரே?”

” இவர் விதார்த்துடைய  தாய் மாமாவாம். இவருக்கு ஒரு பெண் இருக்கிறாளாம்.விதார்த்திற்கும் அவளுக்கும் திருமணம் செய்ய பேசி வைத்திருந்தார்களாம். பிறகு குடும்பத்திற்குள் ஏதோ பிரச்சனை வந்து மாமாவிற்கும் மச்சானுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட  திருமணப் பேச்சு நின்று விட்டிருக்கிறது.இப்போது விதார்த்திற்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது என்று தெரிந்து இங்கே வந்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்”

” அடக்கடவுளே! இப்படி ஒரு பேக்ரவுண்ட் ஸ்டோரியா? இந்த அத்தை மகள், மாமன் மகள் தொந்தரவு தாங்க முடியவில்லையே” அஸ்வினி தலையில் கை வைத்துக் கொண்டாள். 

“அஸ்ஸு எனக்கு பயமாக இருக்கிறதுடி. இந்த ஆளைப் பார்த்தால் கொஞ்சம் கரடு முரடானவர் போல் தெரிகிறது.வெட்டுவேன் குத்துவேன்னு சாதாரணமாக பேசுகிறார். ஏதாவது செய்து எங்க கல்யாணத்தை…”

 அஸ்வினி சைந்தவியின் வாயை பொத்தினாள். “அபசகுனமாக எதையாவது பேசாதே அக்கா! அதெல்லாம் ஒன்றும் ஆகாது. உன் கல்யாணத்திற்கு வந்த, இதைவிட பெரிய பெரிய தடைகளையே சமாளித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆளெல்லாம் ஜுஜூபி” காமெடியாக பேசி அக்காவின் மனநிலையை மாற்ற முயன்றாள்.

” யாரைடி சொல்கிறாய் அந்த வசந்தையா?”

“அவரேதான். அவரை நினைத்து பார்த்துவிட்டு ஹாலில் நின்று கத்திக் கொண்டிருக்கும் ஆளையும் நினைத்துப் பார். தேக்கு மரம் போல் நிற்கிற வசந்தையே சமாளிக்கிறோம், இந்த பஞ்சை பறக்கடிக்க முடியாதா? பயப்படாதே இரண்டு பேரும் சேர்ந்து ஓங்கி ஊதி தள்ளி விடுவோம்” அக்காவை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, என்னக்கா இது உன் கல்யாணத்தில் இவ்வளவு சிக்கல்? என்ற எண்ணவோட்டமும் அவளுள் நைத்தபடியே இருந்தது.

திருமணத்திற்கு வெளியில் இருந்து வரும் சிக்கல்களை கூட சமாளித்து விடலாம் ,ஆனால் மணப்பெண்ணே சிக்கலானால்… சைந்தவி விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. மறுநாள் விதார்த்தை சந்தித்து விட்டு வந்த சைந்தவி மிகுந்த சோர்வுடன் இருந்தாள். 

“அஸ்ஸு என் திருமணம் நடக்குமென்று தோன்றவில்லைடி” விரக்தியான குரலில் பேசிவிட்டு படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

“என்னக்கா சொல்கிறாய்?அந்த தாய் மாமன் பிரச்சனையை அப்பா மாப்பிள்ளை வீட்டினருடன் பேசி விட்டாராம்.அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை,கவலைப்பட வேண்டாம்னு சொன்னார்.நீ அதையே நினைத்து மனதை உளப்பிக் கொள்ளாதே” 



“அப்பா,அம்மா பேச்சை விடு அஸ்ஸு.இவர் என்னிடம் ஒழுங்காக பேச வேண்டாமா?நேற்று வந்து கத்திவிட்டு போனதை சொல்லி,எல்லாம்  உண்மைதானா என்று கேட்டால் ஆமாம் என்று அலட்சியமாக சொல்கிறார். என்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்றால் அவசியமென்று தோன்றவில்லை என்கிறார். இது எப்படி சரியாக வரும்?”

“ஆம்பளை திமிர்”அஸ்வினி பற்களை கடித்தாள்.

” அதேதான் இப்படி ஒரு ஆளுடன் காலம் முழுவதும் வாழ முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இரண்டு மூன்று நாட்கள் பார்த்திருந்து விட்டு அம்மா அப்பாவிடம் பேச வேண்டும்” சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

 என்ன இது… ஒரு திருமணம் முடிவாவதும் பிறகு முறிவதும் அவ்வளவு எளிதா? அஸ்வினி மறுநாள் விதார்த்தை சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்தள்.ஆனால் மறுநாள் காலையே வசந்திடமிருந்து மெசேஜ் வந்து விட்டது. “இன்று இரவு 7:00 மணிக்கு சந்திக்க வேண்டும்.அண்ணா நகர் பிராஞ்சுக்கு வா” 

அஸ்வதிக்கு அந்நேரம் ஆண் பிள்ளைகள் மேலிருந்த ஆத்திரத்திற்கு “முடியாது போடா” என்று டைப் செய்து அனுப்பினாள்.

” டாவா…?” அவன் பதில் மெசேஜ் அனுப்ப, “ஆமாண்டா.. டா… டா …டா” என பதில் அனுப்பினாள். உடனே அவள் போன் ஒலித்தது.

“என்ன அஸ்வினி மேடத்திற்கு என் மேல் பயம் குறைந்த மாதிரி தெரிகிறது” குத்தலாக கேட்டான்.

” இங்கே பாருங்க நான் ஏற்கனவே நிறைய டென்ஷனில் இருக்கிறேன். இதில் உங்களை சந்தித்தால் இன்னமும்தான் டென்ஷன் ஏறும். ஒரு வாரத்திற்கு என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.நமக்கிடையே இருக்கும் பிரச்சனையை பிறகு பேசிக் கொள்ளலாம்”

” ஓ இதுதான் உன் முடிவா?”

” ஆமாம் நான் நிச்சயம் உங்களை சந்திக்க வர மாட்டேன்”

” சரி அப்போது எனக்கு வேறு வழியுல்லை, என் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க வேண்டியதுதான்”

” என்னவோ பண்ணிக் கொள் போ” கத்திவிட்டு போனை கட் செய்தாள். உடனே அவள் போனுக்கு வீடியோ ஒன்று வந்திருப்பதாக செய்தி வர அஸ்வினிக்கு திக்கென்றது. வீடியோவா? என்ன வெடியை அனுப்பி வைத்திருக்கிறான்… வேகமாக திறந்து பார்த்தவள் ஹக் என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

 “உங்கள் ஏரியாவில் இருக்கும் பார்க்கில் இருக்கிறேன்.உடனே கிளம்பி வா” மெசேஜும் அனுப்பினான்.

” ஏய் சாப்பிட்டுவிட்டு போடி” சரிதாவின் கத்தலை காதில் வாங்காமல் வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் அஸ்வினி.

“உனக்கு என்ன ஃபிளேவர் வேண்டும்?” பார்க் ஓரமாக நின்றிருந்த ஐஸ்கிரீம் வண்டியில் கோன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டிருந்த வசந்த் கேட்ட கேள்வி அஸ்வினிக்கு அமிலத்தை முகத்தில் ஊற்றினாற் போலிருந்தது. 

“எனக்கு எதுவும் வேண்டாம்”

” அட பரவாயில்லை ஒன்று சாப்பிடு. ரெண்டு வெண்ணிலா கொடுங்க” என்று வாங்கிக்கொண்டு பார்க்கின் ஓரத்தில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்து அவளையும் அருகே அமரும்படி செய்கை காட்டினான். உள்ளுக்குள் பொங்கிய எரிமலையை சிரமப்பட்டு மறைத்தபடி அமர்ந்தவள் அவன் நீட்டிய கோனை வாங்கிக் கொண்டாள்.

” இங்கே பாருங்க ஏற்கெனவே வீட்டில நிறைய பிரச்சனை போயிட்டிருக்கு. இதுல நீங்க வேற பிரச்சனை பண்ணாதீங்க”

” உன் வீட்டில் பிரச்சனைகள் நடந்தால் எனக்கென்ன?” தோள்களை குலுக்கினான்.

” எங்கள் வீட்டு பிரச்சனையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு பத்து நாட்கள் மட்டும் என்னை சந்திக்காமல் இருந்தீர்களானால் போதும்”

“ம்… பத்து நாட்கள். அதற்குள் உன் அக்கா திருமணம் முடிந்து விடும். நீயும் பெங்களூர் போய்விடுவாய். கரெக்டா?”

 அவன் நிதானமாக கேட்க அஸ்வினி அதிர்ந்தாள் . “உ…உங்களுக்கு தெ…தெரியுமா?”

” நான் எப்போதுமே ஒன்றை செய்ய நினைத்து விட்டால் அதனை ஒரு போர் மாதிரிதான் கையாள்வேன். நிறைய வியூகங்கள் கூட வைப்பேன். என் போர் சிப்பாய்கள் நீயும் உன் அக்காவும்.உங்கள் நிலைமையை தெரிந்து கொள்ளாமலா இருப்பேன்?”நிதானமாக ஐஸ்கிரீமை ருசித்தபடி கேட்டவனை ஒன்றும் செய்ய முடியாமல் பொங்கிய கோபத்தில் கையில் இருந்த ஐஸ்கிரீமை தூக்கி கீழே எறிந்தாள்.

” அச்சோ இப்படி சாப்பிடும் பண்டத்தை வீணாக்குகிறாயே!என்னை போன்ற சமையல்காரர்களுக்குத்தான் சாப்பிடுவதன் அருமை புரியும். உன்னை போல் பட்டனை தட்டுபவர்களுக்கு என்ன தெரியும்?”

” அப்படி நாங்கள் பட்டனை தட்டினால்தான் இங்கே நீங்கள் வகை வகையாக சமைத்துக் கொடுக்க முடியும். அவரவர் தகுதியைப் பார்த்து ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆசையில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்” அஸ்வினி படபடக்க அவள் கண்களை உற்றுப் பார்த்தான்.

” அப்படி என்ன ஆசை வைத்திருக்கிறேன் என்கிறாய்?” 

 வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டாள். “எனக்கு தெரியாது. உங்கள் மனதிற்குள் என்ன கண்றாவி நினைப்பு இருக்கிறதோ, அது எனக்கு பிடிக்கவில்லை”

” உனக்கு பிடித்ததை மட்டுமே நான் நினைக்க வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன?”

” உன் மனது உன் நினைவு ,என்னவும் நினைத்துக் கொள். இப்போது எனக்கு என்ன பதில்?”

” அட இது நான் உன்னை கேட்க வேண்டிய கேள்விம்மா. எனக்கு என்ன பதில்?”

 அஸ்வினி திணறினாள். “வந்து… அக்கா பாவம்.அவளை விட்டு விடுங்கள். அவளுக்கு அடுத்த வாரம் திருமணம். அது நல்லபடியாக நடக்க வேண்டும்”



” அது உன் கவலை. என் கவலைக்கு என்ன பதில் சொல்” விட்டேத்தியாய் பேசுபவன் மீது ஆத்திரம் கனன்றெழ “சீ நீயெல்லாம் ஒரு மனிதனாடா? ஒரு பெண்ணின் திருமணம் என்கிறேன், அதை பற்றி கவலைப்படாமல் பேசுகிறாயே? இந்த நிமிடம் இந்த உலகிலேயே நான் வெறுக்கும் ஒரே மனிதன் நீதான்.உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. என்னை விட்டு ஒதுங்கிப் போ”

 தன் வயமிழந்து கத்தி விட்டு அஸ்வினி எழுந்து கொள்ளப் போக சட்டென அவள் இடக்கையை பற்றி அவள் முதுகுக்கு பின்னால் வளைத்து அமர வைத்தான். “ஏய் என்னடி உன் நிலைமை தெரியாமல் இந்த துள்ளல்? நான் அனுப்பிய வீடியோவை பார்த்தாயா இல்லையா? திரும்ப பார்க்கிறாயா?”பின்புறம் வளைத்த அவள் கையை விடாமலேயே மறு கையால் அவன் ஃபோனை முகத்திற்கு நேராக கொண்டு வந்து ஆன் செய்தான்.

அந்த வீடியோவில் சைந்தவி இருந்தாள். சுற்றும் மற்றும் திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைகிறாள். கையில் வைத்திருந்த பென் டிரைவின் கவரை பிரித்து கீழே போட்டவள், டேபிள் மேல் வைத்திருந்த அவன் லேப்டாப்பில் பென்டிரைவை சொருகினாள். பிறகு மீண்டும் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

 சைந்தவியின் முகம் மிக தெளிவாக வீடியோவில் பதிவாகியிருந்தது. “உன் அக்காவிற்கு திருமணமா? மாப்பிள்ளை வீட்டுக்கு இந்த வீடியோவை அனுப்பட்டுமா? அல்லது போலீஸிற்கு போகலாமா?” யோசனை போல் அவன் கேட்க அஸ்வினியின் கண்கள் கலங்கியது.

” வேண்டாம் அக்கா பாவம். அவளை விட்டு விடுங்கள்”

” உன் அக்கா பாவம்தான். அவளை எனக்கு தெரியும். சும்மா பேச்சில் சலம்புவாளே தவிர இந்த அளவு அவளுக்கு துணிச்சல் கிடையாது. அவளுக்கு பின்னால் இருக்கும் கிரிமினல் நீதான்” பின்னால் மடக்கியிருந்த கையில் அவன் அழுத்தம் கூட்ட சுள்ளென தோள்பட்டையை தாக்கிய வலியை பல்லைக் கடித்து பொறுத்தாள்.

” இல்லை. நான் அப்படி இல்லை. இதை செய்தால்தான் அக்கா திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்றுதான்…”வலியுடன் முனகலாக பேசினாள்.

” அப்படி அவள் திருமணத்தில் உனக்கு ஏன் அவ்வளவு தேவை?” வசந்தின் குரலில் இப்போது கோபம் போய் சாந்தம் வந்திருந்தது.

” அவள் உங்களை மனதில் நினைத்து…” ஆரம்பித்தவள் சட்டென நிறுத்தி “திருமணம் ஆகப் போகிறவள், அவளைப் பற்றி தவறாக பேசமாட்டேன். ஆனால் அவளை இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியது நீங்கள்தான்.நீங்கள் அவளை நிராகரித்ததால்தான் அவள் கோபம் வந்து…”

” முட்டாள்தனம், சைந்தவி கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பதை தனக்குரியதாக்கும் எண்ணும் வெகுளியான குழந்தை உள்ளம் கொண்டவள். அதனை உணர்ந்தே அவளை கண்டித்தேன். கோபப்பட்டுக் கொண்டு போய்விட்டாள். சில தினங்களில் அவள் கோபம் மாறியிருக்கும். வேறு செயல்களுக்கு மனம் திரும்பியிருக்கும். ஆனால் அவள் கோபத்தை… மனதை… மாறவிடாமல் இப்படி வஞ்சம் பக்கம் திருப்பியவள் நீதான்”

 வசந்தனின் எளிதான குற்றச்சாட்டில் கண்ணுக்குள் தளும்பி கொண்டிருந்த கண்ணீர் அஸ்வினியின் கன்னங்களில் கோடிழுத்தது. எப்படியெல்லாம் அவள் மேல் பழி போடுகிறான்! அவன் முன்னால் குற்றவாளியாக தான் மட்டுமே இருக்கும் இந்த நிலைமை அஸ்வினிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. 

ஆனாலும் அக்காவின் வாழ்வை மனதில் நிறுத்தியவள் நினைத்தவள் “சரி உங்கள் கூற்றுப்படி நானே கிரிமினலாக இருந்து விட்டுப் போகிறேன். தண்டனையை எனக்கே கொடுங்கள். அக்காவை விட்டு…” பேச முடியாமல் நா தளு தளுக்க, தன் கலக்கத்தை அவனுக்கு காட்ட விரும்பாமல் பேச்சை நிறுத்தி உதட்டை பற்களால் கடித்துக் கொண்டாள்.

 வசந்த் முன்னால் சாய்ந்து அவள் முகத்தை பார்த்துவிட்டு மெல்ல அவள் கைகளை விடுவித்தான். “ரொம்ப வலிக்கிறதா?” மிருதுவாய் அவள் தோள்பட்டையை வருடி கொடுத்தான்.

” சாரி தகுதிக்கு மீறி ஆசைப்படாதே, என்று நீ குத்தலாக பேசவும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது” கொஞ்சலான குரலில் மன்னிப்பு கேட்டவனை ஆச்சரியமாக பார்த்தாள் அஸ்வினி.

வலது கையால் அவள் கன்னத்து நீரை துடைத்தவன் இடது கையால் மெல்ல தோள்பட்டையிலிருந்து கைவரை மென் அழுத்தமாக பிடித்து விட தொடங்கினான். 

உடல் முழுவதும் அலை அலையாய் புரியா உணர்வுகள் தோன்ற ஆரம்பிக்க அவன் பிடியிலிருந்து விலகிக் கொள்ள முயன்றவளை “ஒரு நிமிடம் அசையாமலிரு .உனக்கு உதவி தான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று செல்லமாக அதட்டினான்.

” உண்மையிலேயே எனக்கு உதவுவதாக நினைத்தால் அக்காவை விட்டு விடுங்கள். இனி அவள் விஷயத்தில் தலையிடாதீர்கள்” யாசகம் போல் கேட்டுவிட்டு அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறினாள் அஸ்வினி.



What’s your Reaction?
+1
41
+1
23
+1
2
+1
1
+1
4
+1
0
+1
1

Radha

View Comments

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

3 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

3 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

3 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

3 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

7 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

7 hours ago