உடலென நான் உயிரென நீ-5

5

” தமிழ்நாடு எல்லை ஆரம்பம் ” வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது.

என்ன ஒரு துல்லியமான ப்ளான் … ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே … பிடிக்காத திட்டமென்றாலும்  இந்த  தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது .

அது வரை  இருக்கை நுனியில் பயணித்த  கார் பயணத்தை  மெத்தென பின் சாய்ந்து  ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

” அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் …”  சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .

அவளுக்கென ஒரு தலையணை நீட்டப்பட அதனை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள் .பின் தலை மட்டும் தெரிந்து கொண்டிருந்த டிரைவரை இவனை எந்த அளவு நம்பலாம் என்ற சந்தேக பார்வையோடு் பார்த்தபடி புரண்டு படுத்தாள். பழக்கமற்று உடம்பை அழுத்தியிருந்த அந்தக் கனமான பட்டுப்புடவை அவளை அசௌகரியப்படுத்தியது .

சமாளித்து ஒருக்களித்து படுத்த போது ஜாக்கெட்டினுள் மார்பை அழுத்தியது தாலிக்கயிற்றின் மஞ்சள். மார்பையா …மனதையா ….? தாலி மஞ்சளை தடவிப் பார்த்துக் கொண்டாள் . இது இப்போது ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் , வழியில் ஒரிடத்தில் காரை நிறுத்தி , ஒரு கோவிலில் அவளது கழுத்தில் கணநாதனால் கட்டப்பட்டது . இது போல்  மஞ்சள் கிழங்கை கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டிவிட்டால் திருமணமாம். இது தமிழ் முறை திருமணமாம் . வீடியோ காலில் இவர்கள் திருமணத்தை ஆசீர்வதித்த ரூபா தகவல் சொன்னாள் .

அந்த அதிகாலையில் இருள்  பிரியா நேரத்தில் அந்த சிறிய ஊரின் மிக சிறிய விநாயகர் கோவிலில் அவர்கள் கார் நின்றபோது அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எளிமையான திருமண ஏற்பாடுகள் அவளை ஆச்சரியப்படுத்தின .  இரண்டு தம்பதிகள் , இரண்டு பெரிய மனிதர்கள் , ஒரு ஐயர் . அந்த ஊர்காரர்களாம் . இவர்களை வரவேற்க தயாராக ரோட்டிலேயே நின்றனர் அமைதியான ஆர்ப்பரிப்போடு வரவேற்றனர் .

காரிலிருந்து புது புடவையை எடுத்துக் கொடுத்து, மாற்றி வரும்படி கணநாதன் சொல்ல கோவிலுடன் இணைந்த சிறு மண்டபத்திற்குள்  சென்று எப்படி புடவை கட்டுவதென தெரியாமல் இவள் விழித்து நின்ற போது , அந்தப் பெண்கள் உள்ளே வந்தனர்.



” என்னம்மா பட்டணத்து பெண்ணிற்கு சேலை கட்ட தெரியாதாக்கும் …? ” கேலி பேசியபடி அழகாக கட்டி விட்டனர் . இப்படி சொல்லி அவன்தான் அனுப்பி வைத்தானா ? முன்னின்று புடவை கொசுவம் வைத்துக் கொண்டிருந்தவர்களை தாண்டி நிமிர்ந்து பார்க்க  எதிரே அவன் தலை தெரிந்தது .

மணமகள் அறை மணமகன் அறை என பெயருக்கு தேக்கங்கட்டை தட்டிகளை வைத்து மறிக்கப்பட்ட எதிரெதிர் அறைகளில் சராசரி உயரத்தை தாண்டியவர்களின் தலைகள் மேலே தெரிய , அங்கே வெண்ணிற பட்டு சட்டையை கைகளுக்குள் நுழைத்தபடி அவன் தெரிந்தான். இவள் பார்த்த அதே கணத்தில் அவனும் பார்க்க ,  என்னவென புருவம் உயர்த்தினான். இவள் இமைகள் படபடக்க தலை குனிந்து கொண்டு இடுப்பு புடவை கொசுவத்தை சரி செய்யலானாள் .

” மாப்பிள்ளை , பொண்ணு பெயர் நட்சத்திரம் , ராசி சொல்லுங்க …”  ஹோமம் முன் அமர்ந்ததும் ஐயர் கேட்க இவள் திகைத்தாள் .ராசி , நட்சத்திரத்திற்கு அவள் எங்கே போவாள் ? யாருக்கு தெரியும் ….தவித்தபடி இருந்த போது அவன் தனது பெயரையும் ராசி் நட்சதிரத்தையும் சொல்லிக் கொண்டிருந்தான் .

என் பெயரும் தெரியாது …  எனக்கு  ராசியும் கிடையாது …விரக்தியாக நினைத்தபடி எனக்கு எதுவும் தெரியாது என சொல்ல அவள் நினைத்துக் கொண்டிருந்த போது , கணநாதன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான் .

” இவள் பெயர் மதுரவல்லி ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் …”

அதிர்ந்து திரும்பி் அவனை பார்த்தாள். ஆனந்த அதிர்ச்சி. உடலெல்லாம் ஒரு வித புளகாங்கிதம் .என் பெயர் .இந்த பெயரைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆயிற்று ? கண்கள் தளும்ப அவனை பார்க்க ,  அவன் தன் போன் கேமராவை அம்மாவிற்காக  சரி செய்து கொண்டிருந்தான் .

” ஐயரை கவனித்து மந்திரம் சொல்லு மதுரா ”  இதோ இந்த அழைப்பு.   சீஷா …மாஷா என்று மனதிற்கு பிடிக்காத அந்த பெயர் இனி அவளுக்கு தேவையில்லை. அதனை தூக்கி எறிந்து விடலாம் .இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும் ….? அக் கணத்தில் வேறு எந்த தேவையுமின்றி குனிந்து சிரத்தையாக மந்திரம் சொல்லலானாள்.

வீடியோவில் வந்து புன்னகைத்த ரூபாவிற்கு கையசைத்தாள்.   ஐயரின் வழிகாட்டுதல்படி சாஸ்திரப்படி மாலை மாற்றி தாலி கட்டிக் கொண்டாள். இடையில் தொலைந்து போயிருந்த தன்னை மீட்டு விட்டதாக மிக நிறைவாக உணர்ந்தாள் .

” என் தோழி …உன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் .  உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டேன் . இனி நீ ரொம்ப ஷேப். கணா உன்னைக் காப்பாற்றி விடுவான்…” போனில் பேசிய ரூபா குரல் தழுதழுத்து  சற்று தலை திருப்பி குனிந்து சுடிதார் ஷாலால் முகம் துடைத்தாள் .

மிஸஸ் .ரூபா அழுகிறார்களா என்ன ?   லேடி ரூலர் என ஆஸ்பத்திரி வளாகத்தில்  பெயர் எடுத்தவர் .நிமிர்ந்த நடையும் நேரான பார்வையுமாக ஹாஸ்பிடலை வலம் வருபவர் .நேருக்கு நேர் நின்று அவரிடம் பேச பயந்தவர்கள் ஏராளம் .அவர்  இப்படி நெகிழ்ந்து அழுவாரென அவள் எதிர்பார்க்கவில்லை . எதற்கிந்த அழுகை …?

காரணம் கேட்க அவள் வாய் திறந்த போது ” மம்மி என்ன இது ? ”  அதட்டிக் கொண்டிருந்தான் கணநாதன் .

” சந்தோசம்தான் கணா …வேறொன்றுமில்லை …” கண்ணீர் துடைத்து புன்னகைத்தாள் ரூபா .

ஓ …மகனின் கல்யாண சந்தோசமா …?  அவளது எண்ணத்தை இடையிட்டவன் “வா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம்…” அவள் கை பற்றி எழ , இருவருமாக போனில் கீழே விழுந்து வணங்கினர் .ரூபா அட்சதை தூவி ஆசீர்வதித்தாள் .

அவ்வளவுதான் …கல்யாணம் முடிந்தது .அந்த ஊரை விட்டு கிளம்பி இதோ வந்து கொண்டிருக்கின்றனர் . மூடிய இமைகளுக்குள் அவளது திருமண நினைவலைகள் ஊர , உறக்கம் வர மறுத்தது .

முதல் நாளிரவு அவள் பயந்தது போல் இந்த திருமணம் அத்தனை கொடூரமாக இருக்கவில்லையென இப்போது தோன்றியது .  அவன் தாலி கட்டும் போது இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்தது .ஆனாலும் சிறு மன நெருடல் .

அவளுக்குத்தான் இந்த திருமணத்தை தவிர வேறு வழியில்லை .அவனுக்கென்ன …,?  தனக்கு கொஞ்சமும் பிடிக்காதவளை திருமணம் செய்ய அவன் எப்படி சம்மதித்தான் ? அவன் அம்மாவிற்காகவா ? அப்படித்தானென இப்போது உறுதியாகவே தோன்றியது . இப்போது என்னை பார்க்கும் யாராவது திருமணத்திற்கு சம்மதம் சொல்வார்களா ?



மதுரவல்லி புரண்டு படுத்தாள். எதிர் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவன் கண்ணில் பட்டான். இப்போது நன்றாகவே விடிந்து விட காரினுள் பகல் வெளிச்சம் வர ,  இருளற்ற அவன் தோற்றம் தெளிவாக தெரிந்தது. முன்பு முகத்தில் அடர்ந்த மீசையும் , தாடியுமாக இருப்பான் .இப்போது அடையாளம் மாற்றவோ என்னவோ முழுதாக அவற்றை எடுத்துவிட்டிருந்தான் .

மளுமளுவென்ற முகத்துடனும்  , ரோஸ் உதடுகளுடனும் ,  காற்றில் அலையும் அடர் கேசத்துடனும் இருந்தான் .நீள கைகளை மடித்து தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு கால்களை நேராக நீட்டி படுத்து தூங்கியபடி வந்த அவன் என்றோ கோவிலில் பார்த்த ஏதோ ஓர் கற்கால படைவீரன் சிற்பத்தை நினைவுபடுத்தினான் .

” இந்த மாப்பிள்ளைக்கு இந்த பெண்ணா ? காலக் கொடுமையை பார்த்தீங்களா அக்கா ? “

” உஷ் . எதையாவது பேசாதே .இதெல்லாம் பெரிய இடத்து சங்கதி. நாம் பேசக்கூடாது “

சேலை கட்டி விட வந்த பெண்கள் மறைவாக நின்று கிசுகிசுத்துக் கொண்டது நினைவு வர , சிதைந்து கிடந்த தனது முகத்தை தடவி பார்த்தவளுக்கு வேதனை எழுந்தது.



What’s your Reaction?
+1
16
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

View Comments

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago