Serial Stories

உடலென நான் உயிரென நீ-17

17

” காஸ்மெடிக் சர்ஜரி ” மதுரவல்லி முணுமுணுத்தாள் .

” அ …அப்படின்னா ? ” சங்கரவல்லியின் கிராமத்து மூளைக்கு எட்டாத விசயங்கள் இவை .

” ப்ளாஸ்டிக் சர்ஜரி கேள்விப்பட்டிருப்பீர்களே அம்மா ? முகத்தை  ,உடலை அழகுபடுத்தும் சிகிச்சை.  அதற்காகத்தான் உங்கள் மகள் எங்களிடம் வந்தார் “

” ஆனால் என் மகள் முன்பே அழகுதானே டாக்டர் தம்பி …? “

” என்ன செய்வது அம்மா …சிலருக்கு எவ்வளவு  அழகு இருந்தாலும் பற்ற மாட்டேனென்கிறதே ? ”  அவன் கண்கள் குற்றச்சாட்டுடன் மதுரவல்லி மீது பதிய அவள் முகம் திருப்பிக் கொண்டாள் .

ஆமாம் இவன் பெரிய இவன் …என்னை சொல்ல வந்துட்டான் …முதலில் உன் முதுகை பாருடா …பிறகு அடுத்தவர்களை சொல்லு …மனதிற்குள் பேசிக் கொண்டாள்.




” இல்லை தம்பி .இப்படியெல்லாம் என் மகள் நினைக்கமாட்டாள் .இது அந்த திருட்டுப்பயல் வேலையாகத்தான் இருக்கும் ” சங்கரவல்லி சத்தியம் பண்ண தயாரானாள்.

”  நீங்கள் சொல்வது சரிதான் அம்மா .உங்கள் மகள் கொஞ்சமம் விருப்பமில்லாத வாழ்வைத்தான் அந்த சந்திரலாலுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் “

” அந்த பாவி என் மகளை கொடுமைபடுத்தினானா தம்பி ? நாங்கள் பூப்போல் வளர்த்த பெண் தம்பி அவள்.  திடீரென்று புத்தி கெட்டுப் போய் அந்தப் பொறுக்கிப்பய பின்னால் போய்விட்டாள் . அப்பாவும் , மூன்று அண்ணன்களும் சேர்ந்து அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அவள் காதலென்று யார் பின்னேயோ போனதை அவர்கள் யாராலும் தாங்க முடியவில்லை .இப்போது வரை அவள் வாடையே நம் வீட்டின் மேல் விழக்கூடாது என்ற வைராக்கியத்தில்தான் இருக்கிறார்கள் ….” பேசியபடி சங்கரவல்லியின் பார்வை மதுரவல்லியை  பார்த்து நகர்ந்தது .

”  எவனையோ நம்பி பெத்தவங்களை ..கூடப் பிறந்தவங்களை உதறிட்டு போனவ..நல்ல வாழ்வு வாழ்ந்திருந்தால் கூட திருப்தியாகி இருப்போம். ஆனால் அவள் சினிமாவில் நடிப்பதாக எங்களுக்கு தகவல் வர நாங்கள் ரொம்பவும் நொறுங்கிப் போனோம். அவரும் , பசங்களும் அவள் மீது வைத்திருந்த  கொஞ்ச நஞ்ச பாசத்தையும் துடைத்து எறிந்து விட்டனர் . இங்கே ஊருக்குள் நிறைய பேருக்கு  அவள் வீட்டை விட்டு ஓடிப் போனது தெரியும். ஆனால் சினிமா படத்தில் நடிப்பது தெரியாது .அவள் ஏதோ வேற்று மொழியில்தானே நடிக்கிறாளாம் .அந்த மொழி பற்றி இங்கே தெரிந்தவர்கள் அதிகம் இல்லாத்தால் இது வரை இந்த விசயம் இங்கே ஊருக்குள் தெரியாமல் இருந்து விட்டது .அவளை பார்க்க வேண்டி வந்து விடுமோ என்று பயந்து வீட்டில் டிவி கூட போடுவதில்லை . இப்படி சினிமாவில் நடிக்க அழகு படுத்திக் கொள்ளத்தான் உங்களிடம் வந்தாளா ? “

” ஆமாம் அம்மா. ஆனால் அவர்கள் மனம் ஒப்பி இதனை செய்யவில்லை.  அந்த சந்திரலாலின் வற்புறுத்தலுக்காகத்தான் நடிக்கவும் வந்தார்கள் . தன்னை மேலும் மேலும் அழகு படுத்தியும் கொண்டார்கள் .”

” சீச்சி கட்டின புருசன் சொன்னான் என்பதற்காக எந்த மானம் கெட்ட வேலையையும் செய்வாளா அவள் ? நாங்கள் அவளை அப்படி வளர்க்கவில்லையே தம்பி .தைரியமான தன்னம்பிக்கையுடைய சுய மரியாதை பெண்ணாகத்தானே வளர்த்தோம் .ஏனிப்படி செய்தாள் ? “

” புத்தி கெட்டுப் போய் பெற்றவர்களை உதறிவிட்டு நான்  போய் சேர்ந்தவன் சரியானவனில்லை எனத் தெரிந்து விட்டது .உடனே அவனை உதறி மீண்டும் என் பெற்றவர்களிடம் போக ஒரு வகை தயக்கம் .தன்மானமுள்ள குடும்பம் என் பெற்றோருடையது .இப்போது கெட்ட பெயருடன் அவர்கள் முன் போய் எப்படி நிற்பேன் ?  முன்பே ஊருக்குள் நான் அவர்களுக்கு செய்து விட்டு வந்த அவமானங்கள் போதாதா ? இப்படி தயக்கத்துடனேயே நான் கழித்த சில மாதங்களில் என் வாழ்க்கை அவன் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. மீண்டு வர முடியாத புதை குழிக்குள் நான் அமிழ்த்தப்பட்டு விட்டேன். என் முகத்தை பார்க்க எனக்கே கூசும் போது என் நிர்மலமான உறவினர்களுக்கு இந்த பாவியின் முகத்தை எப்படி காட்டுவேன் ?”

”  மனதுக்கு பிடிக்காத இந்த தொழிலுக்கு ஏன் வந்தாய் …உன் பெற்றோரிடமே திரும்பி போயிருக்கலாமே …என என் அம்மா உங்கள் மகளிடம் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் இது.” கணநாதன் சொல்லவும் இரண்டு பெண்களுமே வெடித்து அழுதனர் .

” ஐயோ என் தங்கமே …”  சங்கரவல்லி அரற்றினாள்.மதுரவல்லி முகம் மூடி விசும்பினாள் .கணநாதன் இருவரையும் பார்த்தபடி நின்றான்.




” சரி தம்பி போனது போகட்டும் .இ…இப்போது அவள் என்ன சொல்கிறாள் ? நான் அவளை பார்க்கவேண்டும் ” சங்கரவல்லி் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள் .

” அத்தனை துயரத்திலும் உங்கள் மகளுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அவர்களது குழந்தைதான் அம்மா .  அவர்கள் சினிமா வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என அந்த சந்திரலால் அழித்து விடச் சொன்ன கரு. அவர்கள் பிடிவாதமாக தன் வயிற்றில் வளர்த்து பெற்று , மதுரநாயகி என்ற உங்கள் குலதெய்வத்தின் பெயரையும் , உங்கள் பெயரின் பாதியையும் சேர்த்து மதுரவல்லி எனப் பெயரிட்டு ஆசையோடு வளர்த்த உங்கள் பேத்தி …இதோ இவள்தான் அம்மா …” கணநாதன் கை காட்ட சங்கரவல்லி திரும்பி தன்னருகே அமர்ந்திருந்தவளை பார்த்தாள் .அவளும் இவளை பார்த்தாள்.

 ”  உன் அம்மாவை பெற்றவர்கள் .உன் பாட்டி மதுரா…”  கணநாதன் உறவை எடுத்துக் கொடுக்க சங்கரவல்லி பாய்ந்து மதுரவல்லியை அணைத்துக் கொண்டாள். மதுரவல்லியும் அவளை அணைத்துக் கொண்டு தேம்பினாள் .

” மொட்டு போல் இந்த பொண்ணையாவது எங்களிடம் கொடுத்திருக்கலாமே அவள் ? “

”  அதற்காக அவர்கள் மிகவும் முயன்றார்கள் அம்மா .ஆனால் அந்த சந்திரலாலின் கண்காணிப்பின் கீழ்  அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை .இவள் முதலில் சந்திரலால் வெறுத்த பெண்தான். ஆனால் வளர ..வளர மனைவியை போல் மகளையும் சினிமாவில் நடிக்க வைத்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது “

” அடப்பாவி …உருப்படுவானா அவன் …? ” சங்கரவல்லி கையை நொடித்து சாபமிட்டாள் .

”  தந்தையின் கழுகு பார்வையிலிருந்தே மகளை மறைக்க வேண்டிய நிர்பந்தம் தாய்க்கு .சினிமாவின் நிழல் கூட மகள் மீது படுவதை அவர்கள் விரும்பவில்லை .மகளை பெரும்பாலும் ஹாஸ்டலிலேயே விட்டு வளர்த்தார்கள் . இப்படி ஒரு மகள் இருப்பதை வெளியுலகுக்கு அவர்கள் காட்டிக் கொள்ளாததினால் அந்த மாதிரி வளர்ப்பு சாத்தியமாகவே இருந்தது . அப்பாவும் , அம்மாவும் என்றாவது பார்க்க வருவார்கள்.அந்த நாளை எதிர்பார்த்தபடி ஹாஸ்டலிலேயே வளர்ந்தாள் மதுரா ” கணநாதன் மதுரவல்லி பக்கம் கை காட்ட உறவினர்கள் அருகேயிருந்தும் அநாதையாக  தான் வளர்ந்த தன் இளமை காலம் மனதை தாக்க மதுரவல்லி வெடித்து அழுதாள். சங்கரவல்லி அவளை இழுத்து மடி மேல் போட்டுக் கொண்டாள் .

எத்தனையோ நாள் பிரிந்திருந்த பாசத்தை பாட்டியும் பேத்தியும் அழுகையிலும் அணைப்பிலும் வருடலிலும் காட்டிக் கொண்டனர் .

” அவளுக்கு போன் போடுங்கள் தம்பி. நான் அவளிடம் பேசுகிறேன் ”  சங்கரவல்லி கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

கணநாதன் அமைதியாகி விட மதுரவல்லி அழுகையின் வேகம் கூடியது .




What’s your Reaction?
+1
20
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
1 month ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!