Categories: Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-14

14

பெரிய பெரிய ஆச்சரியங்களை சுபவானியிடம் இறக்கி வைத்துவிட்டு அனன்யா நிம்மதியாக தூங்க ஆரம்பித்து விட்டாள். சுபவாணிக்குத் தான் தூக்கம் வராமல் சண்டித்தனம் செய்தது.வெகு நேரம் புரண்டு கொண்டே இருந்துவிட்டு பின் மெல்ல எழுந்து ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த ரியோவின் அருகில் வந்து நின்று அவனை பார்த்தபடி நின்றாள்.

 தூக்கத்தில் ஜாக்கிரதையும், இறுக்கமும் குறைந்து இயல்பாக இயற்கையாக இருந்தது அவன் முகம்.அடர்ந்த தலைமுடி களைந்து பாதி நெற்றியை மறைத்திருந்தது. ஏனென்று தெரியாமல் அவன் முகத்தை பார்த்தபடியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவள்,நெற்றி முடியை ஒதுக்க நீண்டு விட்ட தன் கரத்தை நம்ப முடியாமல் பார்த்தாள்.

 அவன் மறுபுறம் திரும்பி படுக்க வேகமாக அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள். சற்று முன் நிர்மலமாய் இருந்த அவன் முகத்தை மனக் கண்ணிற்குள் கொண்டு வந்து நிறுத்தியதும் சுபவாணிக்கு தூக்கம் வரத் துவங்கியது. மறுநாள் காலை அவள் விழித்த பொழுது விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது.

 அவசரமாக எழுந்தவள் அனன்யா “இன்னும் அரைமணியில் வந்து விடுவீர்களா?” என்று போனில் கொஞ்சிக் கொண்டிருந்ததை கேட்டபடி வேகமாக பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். முதல் நாள் மெஷினில் போட்டு துவைத்து வைத்திருந்த தன்னுடைய உடையையே அணிந்து கொண்டவள் வெளியே வந்த போது வாசலில் தன்வீரின் ஆட்டோ வந்து நின்றது.

சுற்றுப்புறம் மறந்து ஆரத் தழுவிக் கொண்ட தம்பதியரை கண்டதும்,வேகமாக உள்ளறைக்குள் மறைந்து கொண்டாள்.சிலீரென்ற பனிக்கட்டி ஒன்று தொண்டைக்குள் நழுவியதை உணர்ந்தாள்.கணவன் மனைவி என்றால் இப்படித்தானா? காதலென்றால் இதுதானா? திருமணம் முடிந்து மண வாழ்வை பற்றி எல்லாம் தெரிந்தவள்தான்.ஆனால் இப்போதுதான் காதல் உலகம் அறிந்த இளம்பெண் போல் தன்னை உணர்ந்தாள் சுபவாணி.

திரும்பத் திரும்ப தன்வீர் சொன்ன நன்றிகளுக்கு தலையசைத்தபடி இருந்தவளின் கண்கள் வீட்டிற்குள் சுழன்றது. “காலையிலேயே எழந்து போயாயிற்று. நீ அசந்து தூங்கிக் கொண்டிருந்தாய். எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனார்” என்றாள் அனன்யா.

” ஓ சரி மேடம். காலேஜுக்கு நேரமாயிற்று, நான் கிளம்புகிறேன்” சுபவாணி அவசரமாக ஆட்டோ பிடித்து கல்லூரிக்கு வந்த போது பாடவேளை ஆரம்பித்துவிட்டது. போச்சு, இன்றும் லேட்டா பதறியபடி வகுப்பறை வாசலில் நின்றவளை பாடம் எடுத்துக் கொண்டிருந்த ரியோ கோபமாக திரும்பிப் பார்த்தான்.

” உன்னை என்னதான் செய்வது?”இடுப்பில் இரு கைகள் தாங்கி முறைத்தான்.




” சாரி சார், இனிமேல் கரெக்டாக உங்கள் கிளாஸ் அட்டென்ட் செய்து விடுவேன்” இதுவரை ஒரு முறை கூட அவனிடம் சாரி கேட்டிராதவள்தான். இன்றைய அவளது சாரிக்கு பிறகு தலையசைத்து அவளை வகுப்பறைக்குள் அனுமதித்தான்.

 வழக்கம்போல் கடைசி பெஞ்சுக்கு போகாமல் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளை இடித்துக்கொண்டு முன்னாலேயே அமர்ந்தாள் சுபவாணி. அவள் கண்கள் ரியோவின் மேலேயே இருந்தன. 

மூன்றாவது பெஞ்சில் இருந்த தக்ளா “ஷ்…ஷ்” என்று சத்தமிட்டு அவளை அழைக்க தன் கண்களை நகர்த்தாமல் பின்னால் ஒற்றை விரலை மட்டும் தக்ளா பக்கம் நீட்டி எச்சரித்து விட்டு கன்னத்தில் கை தாங்கி ரியோவை கவனிக்க துவங்கினாள். ரியோவோ அவள் பக்கமே திரும்பாமல் தன் பாட்டில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

 சுபவாணியும் அவன் மேலிருந்த பார்வையைக் கூட சிமிட்டவில்லை.

அனன்யா ரியோவின் குடும்பத்தை பற்றி முதல் நாள் சொன்ன விசயங்கள் நினைவில் வந்தன.

” ரியோவின் அப்பா யார் தெரியுமா? வரான் பட்டோலி. இந்த இந்தூர் நகரின் கலெக்டர்” சுபவாணி கண்களை ஆச்சரியமாய் விரித்தாள். 

“ரியோவுடைய அம்மா அன்னக்கொடி. உங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் அப்பா படித்து முடித்ததும் முதல் போஸ்டிங் தமிழ்நாட்டில்தான் போட்டார்கள். அங்கே அவர் அம்மாவை பார்த்து இருவருக்கும் காதல். எத்தனையோ எதிர்ப்புகளைத் தாண்டி இருவரும் திருமணம் முடித்துக் கொண்டார்கள். இப்போது இங்கே இந்த ஊரில் கலெக்டராக இருக்கிறார்”

” ஆனால் இவ்வளவு உயர்பதவியில் இருக்கும் அம்மா அப்பா உடன் இருக்காமல் இவர் ஏன் இப்படி தனியாக இருக்கிறார்?”

“ரியோவிற்கும் அவர் அப்பாவிற்கும் அவ்வளவாக ஒத்து வராது. இருவரின் பாதையும், எண்ணங்களும் வேறு வேறு. ரியோவிற்கு அவர் அப்பாவின் பணத்தையோ பதவியையோ பயன்படுத்திக் கொள்ள பிடிப்பதில்லை. அதனால் அவர் தன்னுடைய சொந்த திறமை உழைப்பு இவற்றை மட்டும் கொண்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்”

“கிரேட்..” தன்னை அறியாமல் சுபவாணி முணுமுணுக்க அனன்யா சிரித்தாள். ரியோ எப்பவுமே கிரேட்தான் சுபா. அவர் மீது நீ எத்தனையோ குற்றச்சாட்டுகளை கூறினாலும் அவை எல்லாவற்றிற்கும் ஆதாரமும் இருந்தாலும் இதெல்லாவற்றிற்கும் பின்னால் ஏதோ ஓர் நியாயமான  காரணம் இருக்கும் என்று நான் கடந்து போய்க்கொண்டே இருப்பேன்”

 அனன்யா சொல்ல சுபவாணி விழிகளை இருக்க மூடிக்கொண்டாள். இதற்கு முன்  அவனை சந்தேகித்த தருணங்களை நினைவிற்குள் கொண்டு வர தொடங்கினாள். ஏனோ இப்போது அவளுக்குமே அனன்யா போல் எல்லாவற்றிற்கும் ரியோவிற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது..

எவ்வளவு பெரிய ஆள் இவன்! இப்படி இங்கே எளிமையாக நின்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறானே! காரணம் தோழியான அனன்யாவின் நட்பு. இப்படி தன் நிலை விட்டு இறங்கி சாதாரணமானவனாக இங்கே நிற்கிறான். இந்த அளவுக்கு நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இவன் மேல் ஏதாவது களங்கம் இருக்குமா? நிச்சயம் இவன் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவனாகத் தானே இருக்க முடியும்?

 சுபவாணியின் சிந்தனை இப்படி ஓடிக்கொண்டிருக்க தட்டென்ற சத்தத்துடன் அவள் முன் பெஞ்சில் வந்து விழுந்தது டஸ்டர்.”ஹலோ மிஸ் கவனம் எங்கே சிதறுகிறது? என் வகுப்பில் கவனம் என் மீது மட்டும்தான் இருக்க வேண்டும்” அதட்டினான் ரியோ.

 உன்னை தவிர என் கவனம் வேறு எங்கும் போகவில்லையே… மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் எழுந்து நின்று தலை குனிந்தாள். “சாரி சார் இனி சரியாக நடந்து கொள்வேன்” அவளுடைய மன்னிப்பில் வகுப்பில் உள்ளோர் அனைவருக்குமே ஆச்சரியம்தான்.

 எப்போதும் நீயா நானா பார்த்து விடுவோம் என்று முனைத்துக் கொண்டு நிற்பவர்கள் ஆயிற்றே இருவரும்.இப்போது இந்த சரணடைதலுக்குப் பிறகு வேறு வழியின்றி ஒற்றை விரலை ஆட்டி அவளை அமர சொன்னவன் பாடத்தை தொடர்ந்தான்.

 “என்ன ஆச்சு பட்டர் உனக்கு?” தக்ளா பாட இடைவெளியில் கேட்க முதல் நாள் அனன்யா வீட்டிற்கு சென்றதையும் தொடர்ந்து நடந்ததையும் தெரிவித்தாள். 

“எவ்வளவு பொறுப்பான மனிதர் பார்த்தாயா!” தக்ளா இரு கைகளையும் கன்னத்தில் வைத்து நெக்குருகினாள்.அவள் தலையில் கொட்டி “ஓவர் பெர்பாமென்ஸ் பண்ணாதடி அடங்கு” என்றாள் எரிச்சலுடன்.

” ம்…நான்தான் அன்றே சொன்னேனே ,அவர் தவறு செய்பவர் போல் இல்லை என்றேனே! உனக்குத்தான் அவரை கணிக்க தெரியவில்லை பட்டர்”

சுபவாணி விரக்தியாய் உச் கொட்டினாள். “ஆமாம் தக்காளி எனக்கு எப்போதுமே மனிதர்களை எடையிடத் தெரியாது” ஒரு நொடியே தன் பழைய வாழ்வை நினைத்தவள் தலையை உலுக்கி சட்டென  வெளியில் வந்தாள். 

“இனி நானும் கொஞ்சம் விவரமாக மாற வேண்டும். மாறிவிடுவேன் என்று நினைக்கிறேன்”




“மாறுவதற்கு முன் கொஞ்சம் வழி விட்டீர்களானால் எனக்கு வசதியாக இருக்கும்” பின்னால் ரியோவின் சத்தம் கேட்டு அலறியடித்து திரும்பினர் தோழிகள்.

டிபார்ட்மென்ட் போகும் வழியில் இருவரும் பேசியபடி நடந்து கொண்டிருந்த போது இரு பக்கமும் பெரிதாய் இருந்த குத்துச்செடி நடுவிலிருந்த குறுகிய இடத்தை அடைத்து நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“சாரி சார்…” இருவரும் ஒதுங்கி நிற்க,”சமையல் பற்றியா பேசுகிறீர்கள்?” கேட்டபடி கடந்து போனான்.

சமையலா…? இருவரும் விழித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்து இவன் எந்த அளவு கேட்டான் கவலை கொண்டனர்.

அன்று மாலை பி.ஜியில் தனக்கான டீயை கப்பில் ஊற்றிக் கொண்டவள் “லெமன் டீ ஒன்று வேண்டுமே அக்கா” என்றாள் சமையல் பெண்ணிடம்.

 “அதோ அங்கே லெமன் இருக்கிறது.  போட்டுக்கொள்” இரவு சமையலுக்கு போய் விட்டார் அவர்.

ஒரு கப் நீரை கொதிக்க விட்டு அளவாய் டீத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு, இரண்டு சொட்டு லெமன் சாறை விட்டு கலக்கி மற்றொரு கப்பில் எடுத்துக்கொண்டு பிஜியின் பின்பக்கம் சென்றாள். அவள் நினைத்தாற் போன்று ரியோ அங்கேதான் அமர்ந்திருந்தான்.

 தன் முன் நீண்ட கப்பில் ஆச்சரியமாகி நிமிர்ந்தான். “நீ ஏன் டீ எடுத்து வந்தாய்?”

” உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமே சார். அனன்யா மேடம் பேச்சுவாக்கில்  சொன்னார்கள்”

ரியோ வெகு ஆச்சரியமாக அவளை பார்த்தான்.ஏனெனில் சுபவாணி சுத்தமான தமிழில் பேசிக் கொண்டிருந்தாள்.

“அனன்யா வேலையாக்கும்” அவன் முகம் இறுகியது.




 

What’s your Reaction?
+1
42
+1
22
+1
2
+1
2
+1
4
+1
0
+1
0

Radha

View Comments

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-14

14 " அஸ்ஸு அவன் இங்கேயே வந்து விட்டான்டி" மண்டபத்தின் பால்கனியில் நின்று அப்போதும் விதார்த்துடன் போனில் பேசிக் கொண்டிருந்த…

3 hours ago

இயற்கையான முறையில் கஸ்தூரி மஞ்சள்

அழகான முகம், வசீகரமான முகம், கலையான முகம் ,கவர்ந்திருக்கும் முகம். கருகரு என்று ஆரோக்கியமாக வளரும் தலைமுடி, மாசு மருவற்ற…

4 hours ago

வாழ்வை வளமாக்கும் அட்சய திருதியை:குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

அட்சய திருதியை வந்துவிட்டால் தங்கம் வாங்க வேண்டும் வெள்ளி வாங்க வேண்டும் என்று பலரும் அட்சய திருதியை வருவதற்கு முன்பாகவே…

4 hours ago

பட்டணத்தில் பூதம் விமர்சனம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல்…

4 hours ago

உடலென நான் உயிரென நீ-5

5 " தமிழ்நாடு எல்லை ஆரம்பம் " வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது. என்ன ஒரு துல்லியமான ப்ளான் ... ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே ... பிடிக்காத திட்டமென்றாலும்  இந்த  தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது . அது வரை  இருக்கை நுனியில் பயணித்த  கார் பயணத்தை  மெத்தென பின் சாய்ந்து  ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் . " அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் ..."  சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .…

8 hours ago

உங்க சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில்…

8 hours ago