Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15

மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள்.

“என்னடா பாப்பா எழுந்து கொள்ளும்போதே இவ்வளவு பதட்டம்? பார்த்துடாம்மா..” பரிவுடன் பேசியபடி அருகில் வந்து அமர்ந்த தன் தாயை ஆச்சரியமாக பார்த்தாள் சஷ்டிகா.

“அம்மா, நீங்கள் இங்கே எப்படி?”

“இன்று அதிகாலை ஃப்ளைட்டில் வந்தோம்டா” என்றார், சற்று தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த சந்திரகுமார்.

பெற்றோரை பார்த்தவுடன் முதலில் மகிழ்ந்த சஷ்டிகாவினுள் இப்போது ஒரு பதட்டம் சேர்ந்து கொண்டது. ‘ஐயோ, இங்கே நடந்தவை எல்லாம் அப்பா அம்மாவிற்கு தெரிய வந்தால்?’ உடல் நடுங்க.. அவர்களைப் பார்க்கவும் கூசி கண்கள் கலங்க, சட்டென எழுந்து அருகிலிருந்த கதவைத் திறந்து நுழைந்தாள். அது பால்கனி.

அந்த இடத்தை பார்த்ததுமே தெரிந்துவிட்டது அது கனகவேலின் அறை. அதோ அவள் தங்கியிருந்த அறை பால்கனி. அங்கே நின்றிருப்பவளைத்தான் இதோ இங்கே இருந்து அவன் பார்ப்பான்.அவனது அறையில் நானா? மந்தித்திருந்த மூளையை கசக்கி யோசிக்க, முன்தின நினைவுகள் அலையலையாக வந்தன.

‘சீச்சி.. எவ்வளவு மட்டமானவன்? மிக கேவலமான செயல் ஒன்றை செய்துவிட்டு, இப்போது அப்பா அம்மாவை கூட்டி வந்து அமர வைத்து, நல்லவனாகிவிட நினைக்கிறானா? இதோ இப்போதே அவனது முகத்திரையை கிழிக்கிறேன்..’ என அறைக்குள் வந்தவள்,  “அம்மா..” என்று அழைத்தபடி ஒரு பெரிய அழுகைக்கு தயாராக.. வாயில் கதவை திறந்துகொண்டு வேகமாக உள்ளே வந்தான் கனகவேல்.

“எழுந்து விட்டாயா பேபி? காபிக்கு சொல்லி இருக்கிறேன். குடித்து விட்டு சீக்கிரம் குளித்து தயாராகு..”

அவனைப் பார்த்தவுடன் இன்னமும் பதட்டம் அதிகமாக, ஒற்றை விரல் நீட்டி பேசப் போனவளை கைப்பற்றி அழுத்தினான்.. “15 நாட்கள் மீட்டிங் அட்டென்ட் பண்ணிவிட்டு கடைசி நாள் வர மாட்டேன் என்றால் எப்படி பேபி? சீக்கிரம் கிளம்புடா” என்றான் கொஞ்சம் குரலில்.

மகளிடம் கனகவேல் பேசுவதை ரசித்த வைதேகி, “அதென்ன தம்பி, மூச்சுக்கு மூச்சு பேபி என்கிறீர்கள்!” என்றாள் கிண்டலாக.

“நீங்கள் இருவரும் பாப்பா.. பாப்பா என்று கொஞ்சுகிறீர்களே! அதைப் போலத்தான் என் பேபியும்” கூச்சமின்றி ஒப்புக் கொடுத்தான்.

“வைதேகி! சில நேரங்களில் சிறியவர்கள் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்வது தான் பெரியவர்களாகிய நமக்கு மரியாதை” என்று சிரித்தார் சந்திரகுமார்.




இவர்கள் பேச்சு புரியாமல் மலங்க மலங்க மூவரையும் மாறி மாறி பார்த்திருந்தாள் சஷ்டிகா. கனகவேலின் போன் ஒலிக்க, அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, சஷ்டிகாவை கிளப்பும்படி கையால் வைதேகிக்கு ஜாடை சொல்லிவிட்டு வெளியே போனான்.

“வாடாம்மா..” வைதேகி சஷ்டிகாவின் கைப்பற்றி எழுப்பினாள்.

“நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்மா?”

“கனகவேல் தம்பிதாம்மா வரவழைத்தார். அவர் கம்பெனிக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டதாம். அதற்கு காரணமே நீதானாமே. இன்று பெரிய பார்ட்டி இருக்கிறது.. நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நேற்று போன் செய்து ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்தார்!”

அவனுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் பெரியவர்கள் வரை ஆஃபீஸ் விஷயத்தை கொண்டு போவான்? ஆனால், என்னால் எப்படி இந்த கான்ட்ராக்ட் கிடைக்கும்! அவனே இல்லாத தகிடுத்தத்தம் செய்து வாங்கிய கான்ட்ராக்ட்தானே இது! என்னை ஏன் குறிப்பிடுகிறான்? சுமேரியா என்ன ஆனாள்?

பல்வேறு குழப்பங்களுக்கிடையே குளித்து தயாரானவள், அம்மா நீட்டிய பட்டுப் புடவையை பார்த்ததும் தயங்கினாள். “வேண்டாம்மா ஏனோ சேலை என்றாலே அலர்ஜியாக இருக்கிறது!”

“பாப்பா சேலைதான் நம்முடைய பண்பாடு. இதுபோன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சேலைதான் கட்டிக்கொள்ள வேண்டும். ஒழுங்காக கட்டிக் கொண்டு வா..”

தாயை மீற முடியாமல் சேலை கட்டிக்கொண்டு நகைகளையும் அணிந்துகொண்டாள். கெட்டியாய் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்துடன் வந்த தாயிடம் “வேண்டாம்மா” என்று உறுதியாக மறுத்தாள்.

“பாப்பாவிற்கு பிடிக்கவில்லையென்றால் விடு வைதேகி, நீ மீட்டிங் முடித்துவிட்டு வாடாம்மா. நாங்கள் பின்னாலேயே வருகிறோம்..” பெற்றோர் வழி அனுப்ப அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவள், எதிர் அறையிலிருந்து வெளியே வந்த கனகவேலைப் பார்த்து திகைத்தாள்.

அவன் தங்கியிருந்த அறையை அவர்களுக்கு கொடுத்து விட்டு எதிர் அறைக்கு மாறினான் போலும். ஆனால், அவன் இருந்த தோற்றம்..?! பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்தான்! என்ன கண்றாவிக்கு இப்படி சிங்காரித்துக் கொண்டிருக் கிறானாம்? எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கனகவேல் விரிந்த விழிகளுடன் இவளருகில் நெருங்கினான். “அழகாக இருக்கிறாய் பேபி.. பூ வைத்துக் கொள்ளவில்லை?”

“ஆஹா.. இன்று யாரை மயக்க வேண்டும்?” அவளது கேள்வியில் ஒளியிழந்தவன் கீழுதட்டை அழுந்தக் கடித்தான்.

“தவறுகளை சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு பேபி..”

“சரி செய்யவே முடியாத தவறுகளும் நிறைய உண்டு. நேற்று நடந்த தவறுக்கான தீர்வு எனது உயிர் போவது ஒன்றுதான்”

சட்டென அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான். “அப்படி சொல்லாதே பேபி. தவறுக்கு காரணகர்த்தா நான்தான். அப்படி உயிர் போக வேண்டுமென்றால் அது என்னுடையதாகத்தான் இருக்கும்.உனக்கு செய்த அநியாயத்திற்கு நான்தான் பலியாக வேண்டும்.அதுவும் உன் கையில்தான் இருக்கிறது. ப்ளீஸ்.. இந்த ஒரு முறை என்னை நம்பி வா பேபி..”

தடதடவென காதிற்குள் கேட்ட அவன் நெஞ்சத் துடிப்பு அவனது தவிப்பை கோடிட்டு காட்டுவதாய் தோன்ற, சட்டென மறுக்க முடியாமல், மெல்ல தள்ளி அவன் அணைப்பிலிருந்து விடுபட்டாள். “எங்கே போகவேண்டும்?” பார்வையை சுவருக்கு திருப்பிக் கொண்டாள். இவன் கண்கள் கலங்கியிருக்கிறதா என்ன? ஆனால், ஏன்?

“வா, சொல்கிறேன்..” அவள் கை பற்றி அழைத்து போன இடம் மீட்டிங் ஹால்.

வாசலில் பாதங்களை தரையில் அழுந்த ஊன்றி நின்றாள். “நான் வரமாட்டேன். அந்த ப்ரெட்ரிக் மூஞ்சியில் என்னால் முழிக்க முடியாது”

“ப்ரெட்ரிக் எப்போதும் நம் மிகச் சிறந்த நண்பன் பேபி. வாயேன், உனக்கு எல்லா விளக்கங்களும் தருகிறேன்..”




மனமின்றி குனிந்த தலையுடன் உள்ளே நுழைந்தவளிடம் முணுமுணுத்தான். ”தலையை நிமிர்த்தி வா பேபி. நீ என்ன தவறு செய்தாய்? கம்பீரமாக, இங்கே நடக்கும் எல்லா நல்லவைகளுக்கும் நான்தான் காரணமென்று பெருமிதத்தை கண்களாலேயே காட்டி நடந்து வா!”

கனகவேலின் ஊக்கமான பேச்சின் பின்னும் சஷ்டிகாவால் தலை திமிர முடியவில்லை. ஆனால், அவர்கள் உள்ளே நுழைந்ததும் படபடவென எழுந்த கை தட்டல் சத்தத்தில் திகைத்தாள். எல்லா டேபிளிலும் அமர்ந்திருந்த இந்தியாவின் தலைசிறந்த போன் தயாரிப்பாளர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் கை தட்டி வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் சுமேரியாவும், ஜெர்சியும் கூட இருந்ததை ஓரக் கண்ணால் கவனித்தவள் வியப்புற்றாள்.

ஓரமாக அமர்ந்திருந்த முரளிதரனைக் கண்டதும் ஒருவித பதட்டத்தில் உடல் வியர்த்தாள்.

பழக்க தோஷத்தில் சுமேரியா பக்கம் நகரப் போனவளின் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவன், “நம் டேபிள் இங்கே..“ என அவனது டேபிளுக்கு அழைத்துப் போனான்.

“வெல்கம் மேடம்” என எழுந்து நின்று கை கொடுத்த நவீனனின் முகத்தில் சூரியப் பிரகாசம்!

மேடையில் அமர்ந்து இவர்களை வரவேற்ற அமெரிக்க நிர்வாகிகள் அவர்கள் கம்பெனி சட்ட திட்டங்களை விவரித்து, அந்த சட்டங்களுக்கு ஒத்து வரும்  வேல்ஸ் கம்பெனிக்கு கான்ட்ராக்ட் தரப்படுவதாக அறிவித்தனர். ஐ போனின் பகுதிகளை தயாரிப்பதோடு, போனை அசெம்பிள் செய்யும் உரிமையையும் வேல்ஸ் கம்பெனிக்கு அளிப்பதாக உறுதி செய்தனர். வேல்ஸ் கம்பெனி உரிமையாளர் வி.கே.வி&யை மேடைக்கு பேச அழைத்தனர்.

பலத்த கை தட்டலுக்கிடையே மேடையேறிய வி.கே.வி., தனக்கு ஒப்பந்தத்தை அளித்த அமெரிக்க கம்பெனிக்கு நன்றி கூறினான். ‘‘போனின் பாகங்களை தயாரிக்கும் கம்பெனி ஓசூரிலும், பாகங்களை இணைத்து (ணீssமீனீதீறீமீ) போனாக மாற்றும் கம்பெனி சென்னையிலும் விரைவில் தொடங்கப்படும். பெங்களுரின் குவால்காம் (னிuணீறீநீஷீனீனீ) கம்பெனியுடன் டை&அப் செய்து கொள்ளப்படும். ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இனி ஐ.போனில் மேட் இன் இந்தியா என்ற வாசகம் இடம் பெறும்..’’ என பெருமையாக சொன்னதும், அனைவரும் உணர்ச்சி பொங்க கைகளை டேபிளில் தட்டி ஒலி எழுப்பினர்.

“இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் இந்த வேல்ஸ் கம்பெனியின் உண்மையான உரிமையாளரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன்..” என்று அவன் சொன்னதும் ஆச்சரியம் கலந்த ஒரு அமைதி அரங்கில் பரவியது. மைக்கில் குழைவான குரலில் “அப்பா..” என அவன் அழைக்க, மேடைக்கு பின்னிருந்து வந்தார் வஜ்ரவேல்.

“இந்த வேல்ஸ் கம்பெனியின் விதை இவர்தான். வஜ்ரவேல்.திருச்செந்தார் முருகன் மேல் அளவற்ற பக்தி வைத்திருக்கும் என் அப்பா. அந்த முருகனின் பெயரால் ஆரம்பித்த கம்பெனி இது. எனது பெயர்கூட அந்த கடவுளின் பெயர்தான். வஜ்ரவேலின் மகன் கனகவேல் நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். இனி வி.கே.வி என்ற வியாபார பெயரை விட்டு, வஜ்ரவேலின் மகன் கனகவேலாக அறியப்படவே விரும்புகிறேன்..” உணர்ச்சி மிக கனகவேல் பேசி முடித்ததும், வஜ்ரவேல் பாசத்துடன் மகனை அணைத்துக் கொணடார்.

நிர்வாகிகளில் முதன்மையானவர் எழுந்து வந்து, “இந்தியர்கள் குடும்பங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று கண் முன்னால் பார்க்கிறோம். குடும்பத்திற்கு, தந்தைக்கு முக்கியத்துவம் தரும் உங்களுக்கு எங்கள் கம்பெனி கான்ட்ராக்டை தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்!” என்றார்.

“நன்றி சார். எங்கள் குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினரை இப்போது எல்லோருக்கும் அறிமுகம் செய்கிறேன். மிஸ்.சஷ்டிகா..” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என மென்குரலில் பேசினான் கனகவேல்.

“மேடம் போங்க..” நவீன்ன் சஷ்டிகாவை மேடையை நோக்கி தள்ள, கனவில் நடப்பது போன்ற பிரமையுடன் நடந்தாள் சஷ்டிகா.கனகவேலுக்கு கிடைத்த ஒப்பந்தத்திற்கும், பாராட்டிற்கும் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் தன்னை மீறி மகிழ்ந்து கொண்டிருந்தவள்,  வஜ்ரவேல் மேடைக்கு வந்ததும், தகப்பனும்,மகனும் இணைந்து கொண்டதும் கனகவேல் என தன் பெயரை அவன் அறிவித்துக் கொண்டதும் தன் கட்டுப்பாட்டை உதறி எல்லோருடனும் இணைந்து கரகோஷம் எழுப்பினாள். இப்போது கனகவேல் அழைக்கவும் ஒரு வித கனவு மயக்கத்துடனேயே மேடையேறினாள்.அவ்வளவு நேரமாக மேடையின் ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த பிரெட்ரிக் எழுந்தான். ”வெல்கம் சஷ்டிகா..” என அவளுக்கு மேடையேற கை நீட்டினான்.

தொட்டாச் சுருங்கியாய் தனக்குள் கூனி சுருங்கினாள் சஷ்டிகா.




What’s your Reaction?
+1
36
+1
21
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!