Serial Stories

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12

அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஐந்து நிர்வாகிகளில் இவன் ஒருவன் மட்டுமே கொஞ்சம் இலகுவாக தெரிவான். வேலை தவிர ஒன்றிரண்டு பிற விஷயங்களை பேசுவான். எப்போதும் புன்னகை முகத்துடன் இருப்பான்.

“ஹாய் ப்ரெட்ரிக்.. என் பெயர் சஷ்டிகா” தன் பெயரை அழுத்தி சொல்லி அவன் அழைப்பை மறைமுகமாக மறுத்தாள்.

” இட்ஸ் ஓகே பேபி, எனக்கு அந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. உன்னை இப்படி அழைக்க எனக்குப் பிடிக்கிறது..”

ஆனால், எனக்குப் பிடிக்கவில்லையே! மனதிற்குள் நினைத்தபடி, “இல்லை என் பெயரை மாற்றுவது எனக்கு பிடிக்காது” வலியுறுத்தலாய் ஆங்கிலத்தில் பேசி அவன் அழைப்பை மாற்ற முயன்றாள்.

அவனோ அவள் பேச்சை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. “வாயேன் பேபி அங்கே போய் ஏதாவது சாப்பிடலாம்” ஹோட்டல் வளாகத்தின் ஓரமாக இருந்த கேக் ஷாப்பை காட்டினான்.

மறுக்க நினைத்த சஷ்டிகாவினுள் சுமேரியா சொன்னது நினைவிற்கு வந்தது. இங்கே யாரையும் தவிர்க்க கூடாது சஷ்டிகா, இந்த போட்டி நிறைந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நமக்கு உதவுவார்கள் என்றது நினைவிற்கு வர, இந்த வியாபார உலகிற்குள் நானும் என்னை நிரூபிக்க வேண்டுமே என எண்ணியபடி மென்புன்னகையுடன் “ஓகே” என்றாள்.

“கிங் கேக் ஆர்டர் செய்யவா பேபி?” ப்ரெட்ரிக் கேட்க, சரி என்று தலையாட்டினாள். ப்ரெட்ரிக் ஆர்டர் சொன்னான். கேக்கிற்காக காத்திருந்த நிமிடங்களில் அவளைப் பற்றி விசாரித்தான்.

தனது படிப்பு, குடும்பம் என சொன்னவள், அவள் ஊரைப் பற்றி, ,திருச்செந்தூர் முருகன் கோவிலை பற்றி உற்சாகத்துடன் விவரிக்கத் தொடங்கினாள். அப்போது கேக் ஷாப்பினுள் சுமேரியாவும், கனகவேலும் நுழைந்தனர்.

கனகவேல் கண்கள் இடுங்க இவர்களையே பார்த்தபடி கடந்து போனான். ஏனோ சஷ்டிகாவிற்கு ஒரு மாதிரி இருக்க, நான் கிளம்புகிறேன் என்று ப்ரெட்ரிக்கிடம் சொல்ல நினைத்தவள் பார்வை தன்னை அறியாமல் அவர்கள் பக்கம் செல்ல.. அவன் சிவந்த முகத்துடன் இவர்களையே பார்த்திருப்பது தெரிந்தது. உடன் சஷ்டிகாவினுள் மெல்லிய சவால் ஒன்று உருவானது.

உன் தேவைக்கு நீ யாரிடம் வேண்டுமானாலும் கைகோர்த்துக் கொள்வாய், எனக்கு மட்டும் கட்டுப்பாடுகள் சொல்வாயா! இப்போதும் அவன் தோள் இழைந்தபடி அருகில் அமர்ந்திருந்த சுமேரியாவை பார்த்தபடி அழுத்தமாக தனது சேரில் பின்னால் சாய்ந்து கொண்டாள்.

இவர்களை பார்த்த சுமேரியாவும் கண்களில் ஆச்சரியம் காட்டினாள். குனிந்து கனகவேலிடம் ஏதோ சொல்ல, இவர்கள் மேலிருந்து பார்வையை நகர்த்தாமல் மெல்ல தலையசைத்தான் அவன். சஷ்டிகா முன்னிலும் அதிக உற்சாகத்துடன் பிரெட்ரிக்குடன் பேசத் துவங்கினாள்.

அரை மணி நேரத்தில் கோல்டனும் பர்பிளும் பச்சையும் கலந்த வண்ணத்தில் ஓவல் வடிவத்தில் டேபிளுக்கு வந்த கேக், உண்மை யிலேயே மனதை கொள்ளை கொண்டது. வாய் திறந்து கேக்கை பாராட்டியவளை புன்னகையுடன் பார்த்தான் ப்ரெட்ரிக்.

“இது எங்கள் கிறிஸ்துமஸ் பாரம்பரிய கேக் வகைகளில் ஒன்று. இந்த ஊதா நிறம் நீதியையும், பச்சை நிறம் நம்பிக்கையையும், தங்க நிறம் அதிகாரத்தையும் குறிக்கிறது. முதலில் நீயே கட் பண்ணு.அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறது என்று பார்க்கலாம்..” கத்தியை அவளிடம் கொடுத்தான்.

அவர்கள் டேபிளில் இருந்து கனகவேல்  என்ன சாப்பிடுகிறார்கள் என்று எட்டிப் பார்ப்பது தெரிந்தது. சுமேரியா எழுந்து நின்றே பார்த்து விட்டு அமர்ந்தாள். சஷ்டிகா சுமேரியாவை பார்க்க, தொடருங்கள் என்பதாக கையசைத்தாள் அவள். இனி இந்த மேடம்  அந்த ப்ரெட்ரிக் மூலமாக நமக்கு ஏதாவது கிடைக்குமா பார் என்பார்கள், மனதிற்குள் சலித்தபடி கேக்கை ஒரு ஓரமாக சிறியதாக கட் செய்து தன் தட்டில் வைத்துக் கொண்டாள்.




“நீங்களும் சாப்பிடுங்கள்..”

“ம்.. எனக்கு கொடுப்பாய் என்று நினைத்தேன். பரவாயில்லை..” சற்று பெரியதாக ஒரு துண்டை கட் செய்து அவன் வைத்துக் கொண்டான்.

இருவரும் சாப்பிட ஆரம்பிக்க, இரண்டாவது விள்ளலில் கேக்கில் எதுவோ தட்டுப்படுவது போலிருக்க, ஸ்பூனில் எடுத்து பார்த்தாள். வெண்ணையும் சீனியும் கலந்து செய்யப்பட்டிருந்த சிறு உருவம் ஒன்று தெரிந்தது. அதனைப் பார்த்ததும் ப்ரெட்ரிக் “வாவ்..” என்று கூச்சலிட்டான்.

ஆம், கிட்டத்தட்ட கத்தல்தான். கேக் ஷாப்பிற்குள் அமர்ந்திருந்த எல்லோருமே திரும்பிப் பார்த்தனர். அந்த குட்டி பொம்மையை ஸ்பூனில் எடுத்தவன், “இதுதான் அதிர்ஷ்டம் பேபி. எங்கள் மத முறைப்படி அரச குடும்பங்களில் இந்த கிங் கேக்கை உண்ணும்போது யாருக்கு இந்த பொம்மை போகிறதோ, அவரே இயேசு கிறிஸ்துவின் அருள் பெற்றவர். அடுத்த அரசராகும் தகுதியுடையவர். பிறகு காலப் போக்கில் விழாக்களில் இந்த பொம்மை கிடைக்கப்பெற்றவர்கள் சிறந்த பரிசுகள் பெறுவார்கள். இப்போது உனக்கு பொம்மை கிடைத்திருக்கிறது..”

“அப்படியென்றால் நீங்கள் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும்” சட்டென்று இடைமறித்து பேசினாள் சஷ்டிகா.

“நிச்சயமாக உனக்கு தேவையானதை கேள்.. தருகிறேன்!”

சஷ்டிகாவினுள் பல யோசனைகள் ஓடின. “எனக்கு கொஞ்சம் டைம் வேண்டுமே, யோசித்து சொல்கிறேனே..”

“நிச்சயமாக உனக்காக நான் காத்திருக்கிறேன்” ப்ரெட்ரிக் வலது கையை நெஞ்சில் வைத்து இடது கையை விரித்து தேர்ந்த அடிமை போல் குனிந்து நிமிர்த்தான்.

ரௌத்திரம் தெறிக்கும் விழிகளுடன் அமர்ந்திருந்த கனகவேலை பார்த்ததும் பெரும் மனதிருப்தி சஷ்டிகாவினுள் பரவியது.

“இந்தக் கேக்கை என் சார்பாக இங்கிருக்கும் எல்லோருக்கும் கொடுங்கள்” ஹோட்டல் பணியாளிடம் கூறிய ப்ரெட்ரிக், “போகலாம் பேபி..” என்று எழுந்தான்.

சவாலான பார்வை ஒன்றை கனகவேல் பக்கம் விட்டபடி அவனுடன் சென்றாள் சஷ்டிகா.

‘‘ஹேய் சஷ்டிகா, எப்படி அந்த பிரெட்ரிக்கை பிடித்தாய்?” சுமேரியா கேட்ட தொனிக்கு முகம் சுளித்தாள் சஷ்டிகா.

“அவராகத்தான் வந்து பேசினார் மேடம். ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்லியாகத்தான்!”

“அட, இரண்டு பேரும் கேக் ஷாப்பில் உட்கார்ந்து கேக் ஷேர் செய்து சாப்பிடுகிறீர்கள். அந்த கேக்கின் விலை தெரியுமா உனக்கு? எவ்வளவு பேச்சும், சிரிப்பும், ம்.. ஃப்ரெண்ட்ஸ் என்கிறாயே! அதென்ன கடைசியில் அப்படி உன்னைப் பார்த்து குனிந்து ஒரு போஸ் கொடுத்தான்! என்ன சொன்னான்?”

“ஒன்றும் இல்லை மேடம், ஏதோ கிஃப்ட் தருவதாக சொன்னார். அவ்வளவுதான்!”

“என்ன இப்படி சாதாரணமாக பேசுகிறாய் சஷ்டிகா? உனக்கு அந்த ப்ரெட்ரிக் பற்றி தெரியுமா? உலகத்தில் டாப் 10 பணக்கார குடும்பங்கள் வரிசையில் இவனது குடும்பம் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அவனாகவேவா உன்னிடம் வந்து பேசினான்? அப்படி என்ன பேசினான்?”

“எங்கள் ஊர் திருச்செந்தூர் பற்றி பேசினோம். கடல், முருகன் கோவில் எல்லாவற்றையும் இன்ட்ரஸ்ட்டாக கேட்டார்..”

ஜெர்சி சட்டென சிரித்து விட்டாள். “பார்த்தீர்களா மேடம், இவள் முட்டாள் என்று நிரூபித்துவிட்டாள். அவ்வளவு பெரிய ஆளுடன் பேச கிடைக்கும் நேரத்தில் எவளாவது திருச்செந்தூர் முருகனை பேசுவாளா?”

“நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் மேடம்?” சஷ்டிகா கோபத்தை அடக்கிக் கொண்டு ஜெர்சியை நேருக்கு நேர் கேட்டாள்.

“என்ன, சஷ்டிகா மேடத்திற்கு தைரியம் கூடிவிட்டது போல! எதிர் கேள்வி கேட்கிறார்கள்?” ஜெர்சி கோபத்துடன் முறைக்க, “ஜெர்சி..” அதட்டி அடக்கினாள் சுமேரியா.

“சஷ்டிகா உன் ப்ரெண்ட் ப்ரெட்ரிக்கிடம் நமக்கே இந்த கான்ட்ராக்ட்டை கொடுக்க சொல்லி கேட்கலாமே!”

“இந்த கான்ட்ராக்ட் உங்களுக்கு தானே கிடைக்கப் போகிறது மேடம்?”

“உனக்கு யார் சொன்னது?” சுமேரியாவின் விழிகள் அவளை ஆராய்ந்தன.




“அ..அது.. கேள்விப்பட்டேன் மேடம்!”

“இல்லை.. இன்னமும் நம்மை விட இரண்டு பாய்ண்ட் முந்திய இடத்தில் வேல்ஸ் கம்பெனிதான் இருக்கிறது. நாம் இருவரும் ஒரே மொழி, ஒரே மாநிலம் ஒன்றாக சேர்ந்து கான்ட்ராக்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த வி.கே.வி&க்கு குழையடித்து வைத்திருக்கிறேன். அவனும் சம்மதித்திருக்கிறான். இப்போது நேரடியாக நம் கம்பெனிக்கு கான்ட்ராக்ட் வருவதென்றால், அவனை கழட்டி விட்டு விட வேண்டியதுதான்!” சுமேரியா சொல்ல, சஷ்டிகாவிற்கு தலை சுற்றுவது போலானது. அடேங்கப்பா! எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்!

ஆனால், ஏன் கூடாது என்று கேட்டது சஷ்டிகாவின் மனது. உறவுகளை மதிக்காமல் பணத்தின் பின்னால் ஓடும் ஒரு வெறிபிடித்த மனிதனை வீழ்த்துவதற்கு அவள் ஏன் இந்த வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளக் கூடாது?

“நான் என்ன செய்ய வேண்டும் மேடம்?”

முகம் மலர்ந்த சுமேரியா அவள் செய்ய வேண்டியதை சொல்லத் தொடங்கினாள்.

*****************—-

“வாவ், வெல்கம் பேபி..” ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் ப்ரெட்ரிக். “உன்னுடைய டிரெஸ் மிகவும் அழகாக இருக்கிறது!”

குனிந்து தன் உடையை பார்த்தாள் சஷ்டிகா. தாழம்பூ நிறத்தில் ரத்த சிவப்பு பார்டர் ஓடிய அந்த மென்மையான பட்டுச் சேலை சஷ்டிகாவின் உடலை ஆசையோடு வளைத்திருந்தது.

“இந்த மாதிரி வித்தியாசமான அழகான இந்திய உடைகளால்தான் உன்னை நான் கவனித்தேன்..” ப்ரெட்ரிக் சொல்ல, அந்நேரத்தில் சுமேரியாவை ‘அட!’ என்று வியந்தாள் சஷ்டிகா.

“அலுவலக விஷயம் தாண்டி நம் கம்பெனி பக்கம் அமெரிக்கர்கள் கவனம் திரும்ப வேண்டும் என்ற ஐடியா ஒன்று என்னிடம் இருந்தது. அதனால்தான் இந்திய உடைகளில் ஆர்வமாக இருந்த உன்னை அதுபோன்ற உடைகளையே அணிய தூண்டினேன். சேலை, சுடிதார் என்று இதுபோன்ற வித்தியாசமான உடைகளில் உன்னைப் பார்த்து தானே ப்ரெட்ரிக் தானாக உன்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும்? இல்லாமல் வேறேதும் காரணம் இருக்கிறதா என்ன?”

வேறேதோ யூகமாய் சுமேரியா வலியுறுத்த நினைத்த செய்தியை மறுத்து, தனது உடையையே காரணமாக எடுத்துக் கொண்டாள் சஷ்டிகா. ஆனாலும், கவனிக்கப்பட வேண்டும் என்றே அணிய வைக்கப்பட்டதா தனது உடைகள் என்ற நெருடல் தோன்றியபோதே அலுவலக நேரத்தில் எதற்கு இந்த அலங்கார உடைகள் என்ற கனகவேலின் வாதமும் நினைவிற்கு வந்தது.

அப்போதைய சூழ்நிலையில் கனகவேல் பக்கம் சாதகமாக ஒரு வார்த்தைகூட நினைக்க மனமற்று கவனத்தை சுமேரியா பக்கம் திருப்பினாள். “மேடம், நான் ஜஸ்ட் இரண்டு வார்த்தைகளில் பேசி விட்டு வந்து விடுவேனே.. இதெல்லாம் எதற்கு..” தனது அலங்கார திட்டத்தில் தயங்கினாள்.

“நமக்கு தேவை என்று ஒருவரிடம் போய் நிற்கும்போது அவர் மனதிற்கு பிடித்தபடி போவதுதானே முறை?” என்றபடி ஜெர்சி வாங்கி வந்த பூவை சஷ்டிகாவின் தலையில் சூட்டினாள்.

“பிப்த் ஃப்ளோரில் டென்த் ரூம் ப்ரெட்ரிக்குடையது. நேரடியாக அவரை சந்தித்து நமது கம்பெனிக்கு கான்ட்ராக்ட்டை கன்ஃபார்ம் செய்துவிட்டு வா..”

சுமேரியாவிற்காக என்றல்ல, தனக்காகவுமே.. அந்த கனகவேலுக்கு போகக்கூடாது என்றுதான் இந்த கான்ட்ராக்ட்டை ப்ரெட்ரிக்கிடமிருந்து பெற விரும்பினாள் சஷ்டிகா.

தனக்கு ஒரு பரிசு கொடுக்க காத்திருப்பவனிடம் நான்கே வார்த்தைகளில் மிக சுலபமாக சுமேரியா கம்பெனிக்கு கான்ட்ராக்டை பெற்றுவிடலாம் என்ற எண்ணம் தான் சஷ்டிகாவிற்கு.

ஆனால், செல்லும் வழியில் ஒரு இடறல். முரளிதரன் அவளை பார்த்துவிட்டு பின்னாலேயே லிப்டில் வந்தான். அவன் பின் தொடர்வதில்  உறுத்தலுமின்றி சஷ்டிகா முகம் திருப்பிக்கொண்டாள். .இயல்பாக ப்ரெட்ரிக்கின் அறையருகே அவள் சென்றதும் பின்னேயே வந்தவன், ப்ரெட்ரிக் அறை கதவு எண்ணுடன் சஷ்டிகாவை சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டான்.

“ஓஹோ கதை அப்படி போகிறதா? எப்படியும் காண்ட்ராக்டை பிடித்துவிடும் திட்டம் போல? உன்னைப் போய் பத்தினிகளின் வரிசையில் வைத்து  உயர்வாய் நினைத்து விட்டேனே! இப்போதே எல்லா கம்பெனிகளிடமும் உன் விஷயத்தை சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்” என்றபடி போய்விட்டான்.

மனது உள்நோக்கம் எதுவுமின்றி நிர்மலமாய் இருக்க, சஷ்டிகாவை முரளிதரன் பேச்சு பெரிய அளவில் பாதிக்கவில்லை. அவள் இருந்த குழப்பமான மனநிலையில் அவன் பேச்சை முழுவதுமாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த அறையை விட்டு வெளியேறி வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவளுக்கு.

நான்கே வார்த்தைகளில் கேட்க வேண்டியதை பேசி முடிக்க வேண்டும் என்றெண்ணியிருந்தவள், இப்போதோ ப்ரெட்ரிக்கிடம் கேட்க வார்த்தைகளின்றி தடுமாறி நின்றாள்.

“யு ஆர் வெரி க்ளாமர் பேபி..” ப்ரெட்ரிக் சொல்ல, கூச்சத்துடன் இடுப்பு சேலையை உயர்த்திவிட்டுக் கொண்டாள். தொண்டையை செருமிக் கொண்டு “ப்ரெட்ரிக்..” என்றாள்.

“வெயிட், ஒரு ஃப்ரெண்ட் வரவேண்டும். வந்ததும் மூவருமாக பேசலாம்..” சொல்லிக் கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அழைக்க, ப்ரெட்ரிக் சென்று கதவை திறந்தான்.

உள்ளே வந்தவனை கண்டு திடுக்கிட்டு எழுந்தாள் சஷ்டிகா. கனகவேல் கேலியான பார்வையுடன் உள்ளே நுழைந்தான்.

“உங்கள் தமிழ்நாட்டுப் பெண்கள் மிகவும் அழகானவர்கள் கே.வி” என்றபடி ப்ரெட்ரிக் கனகவேல் தோளில் கை போட்டுக் கொண்டான்.

சஷ்டிகாவின் தலை சுழலத் துவங்கியது. ஆக, அவள் திரும்பவும் ஏமாற்றப்பட்டு விட்டாளா?

“உனக்கு அழகை ரசிக்கப் பிடிக்குமே ப்ரெட்ரிக்! அதனால்தான் இந்தப் பரிசு உனக்கு!” என்று கனகவேல் சஷ்டிகாவை கை காட்டினான்.

உச்சந்தலையில் பனிக்கத்தி ஒன்று சொருகி நின்றாற்போல் சிலையாக உறைந்து நின்றாள் சஷ்டிகா.




What’s your Reaction?
+1
30
+1
10
+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!