Cinema Entertainment

’காதல் கசக்குதய்யா’ விமர்சனம்

யுடியூபில் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்பட்ட 10 நிமிட குறும்படம் ஒன்றை நீட்டி இழுத்து, முழு நீளப்படமாக உருவாகியிருக்கும் இந்த ‘காதல் கசக்குதய்யா’ எப்படி என்று பார்ப்போம்.

ஐடி துரையில் பணியுரியும் ஹீரோ துருவாவை, பிளஸ் 2 மாணவியான வென்பா காதலிக்கிறார். போனில் தனது விருப்பத்தை ஹீரோவிடம் சொல்லும் போது, செம பிகர் மாட்டிக்கிச்சி, என்ற ஆசையில் அவரை சந்திக்க செல்லும் ஹீரோ, அவரை பள்ளி சீருடையில் பார்த்ததும், அதிர்ச்சியடைகிறார். ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே இவளையா காதலிப்பது, என்று ஹீரோ யோசிக்க, எந்தவித நெருடலும் இல்லாமல் ஹீரோயின் வென்பா துருவாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.




முதலில் வென்பாவின் காதலை நிராகரிக்கும் துருவா, பிறகு அவரது காதலை ஏற்றுக்கொண்டாலும், அவரது நண்பர்கள் அந்த காதலை ஏற்க மறுக்கிறார்கள். இப்படி வயது வித்தியாசத்தோடு உருவாகும் இந்த காதல் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கின்றன, அதனால் காதலர்களுக்கு ஏற்படும் விளைவு என்ன, இந்த வயதில் காதலிப்பது சரியா தவறா, என்று பல விஷயங்களை அலசிவிட்டு முடிவில் சுபமாக முடிகிறது படம்.

குறும்படமாக பார்க்கும் போது ரசிக்கும்படியாக இருக்கும் பல படங்கள், முழு நீளப்படமாக உருவெடுக்கும் போது உருப்படாமல் போய்விடும். இந்த ‘காதல் கசக்குதய்யா’ இரண்டாம் ரகம் என்று சொல்லலாம்.

பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல, அது ஒருவித ஈர்ப்பு, என்பதை பல தமிழ்ப் படங்கள் சொல்லியிருப்பதையே வேறு விதத்தில் இப்படத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இறுதியில் பள்ளி பருவத்தில் கூட சில சிறுமிகள் பெரிய மனிதர்கள் போன்ற பக்குவத்தில் இருப்பார்கள், அப்படிப்பட்டவர்கள் காதலிப்பதில் தவறு ஏதுமில்லை, என்று கூறி தனது கதையை நியாயப்படுத்தியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் துவாரக் ராஜா.

ஹீரோ துருவா  ஆறடி உயரத்தில் லட்சணமான முகத்தோடு இருந்தாலும், நடிப்பில் ரொம்பவே தடுமாறுகிறார். அவர் வசனம் பேசும்போது தனக்கு மட்டுமே கேட்டால் போதும் என்ற ரீதியிலேயே பேசுவதோடு, எக்ஸ்பிரஷன்கள் காட்ட வேண்டிய பல காட்சிகளில் ரோபோ போலவே நடித்திருப்பது காட்சிகளை பலவீனப்படுத்தியுள்ளது. ஹீரோவைக் காட்டிலும் ஹீரோயின் வென்பா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு பக்கம் பார்த்தால் அழகாகவும், மறு பக்கம் சுமாராகவும் இருக்கும் வென்பா, நடிப்பில் மட்டும் முழுவதுமாக அசத்தியிருக்கிறார். ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் காமெடி என்ற பெயரில் ரொம்பவே கடித்துவிடுகிறார்கள்.




ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் ஒரு திரைப்படத்திற்கான பணியை செய்யாமல், குறும்படத்திற்கான பணியை மட்டுமே செய்திருக்கிறது.

மனதிற்குள் காதல் இருந்தாலும், வயது வித்தியாசத்தால் அந்த காதலை முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் ஹீரோ தடுமாறும் காட்சிகளும், குழந்தைத்தனம் மாறாத சின்ன பொண்ணாக இருந்தாலும், காதலில் பெரிய மனுஷியாக செயல்படும் ஹீரோயினின் சில காட்சிகள் படத்தை சற்று சுவாரஸ்யமாக்கினாலும், படத்தில் ஒரே விஷயத்தை, அடுத்த அடுத்த காட்சிகளில், வெவ்வேறு விதத்தில் திரும்ப திரும்ப சொல்லியிருப்பது ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறது.

புதிய முயற்சியாக வித்தியாசமான கருவை தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் துவராக் ராஜா, குறும்படத்திற்கு எந்த மாதிரியான திரைக்கதை யுக்தியை கையாண்டாரோ, அதே யுக்தியை முழுநீள திரைப்படத்திற்கும் கையாண்டிருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘காதல் கசக்குதய்யா’ ரசிகர்களை கொஞ்சமாக ரசிக்க வைத்து, அதிகமாக கஷ்ட்டப்படுத்திவிடுகிறது.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!