gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அதிரதன்?யாரிந்த அதிரதன்?

“சுடர் விடும் சூரிய நாராயணர் வலம் வருகையில், நட்சத்திரங்களின் பிரகாசம் கவனிக்கப்படுவதில்லை” , அது போல், மகாபாரத காவியத்தில், பல உயர்ந்தவர்களின் தியாகங்கள், குணநலன்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன், யுதிஷ்டிரன், போன்ற சூரியன்களின் முன் கவனிக்கப்படாமல் போனவர்களைப்  பற்றி காண்போம்.



“அகண்ட அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தில், அதன் சக்கரவர்த்தியாம் திருதுராஷ்டிரரின் ரத சாரதியாக முதலில் பணி புரிந்தவர் தான் “அதிரதன்”.

ரதம் செலுத்துவதில் நிபுணராக விளங்கிய அதிரதர், அஸ்தினாபுர அரச வம்சா வழியினர் மேல் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தார், தர்ம சிந்தனை மிக்க அதிரதர், அடக்கத்தை அணிகலனாகவும், எளிமையே வடிவாகவும் வாழ்ந்து வந்தார்…

அதிரதரின் மனைவி ராதை ஆவார் (கண்ணனை நேசித்த ராதை அல்ல) அன்பான இத்தம்பதியினரின் இல்லம், அகண்ட கங்கைக் கரையின் அருகில் அமைந்திருந்தது, நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை போல, அன்பான இத்தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது, இவ்வேதனையை மனதுள் மறைத்து, ராஜ விசுவாசத்தோடு மன்னருக்கு பணி புரிந்து வந்தார் அதிரதர்…

அத்தகு சூழ்நிலையில், ஒரு நாள் அதிகாலை வேளைதனில், கங்கை நதியின் கரையோரத்தில் நின்று, அதிரதர் சூரிய நாராயணரை வணங்கிய வேளையில் நதியின் பிரவாகத்தில் ஒரு பேழை அடித்து வரப்பட்டது, அதனுள் குழந்தையின் அழுகுரல், அதிர்ச்சியுற்ற அதிரதர், விரைந்து சென்று அப்பெட்டியை கைப்பற்றி, கரை சேர்த்து, திறந்தார், வியந்தார்!

ஆம்!

அகண்ட வானில் ஒளிர்ந்திடும் சூரியனுக்கு இணையாக அழகு பெட்டகத்தில் தேஜஸோடு இருந்தது ஒரு அதிசய ஆண் மகவு… ஆண் மகவில் என்ன அதிசயம்? தன் உடலோடு ஒட்டிய கவச குண்டலங்களை கொண்டிருக்கும் குழந்தை அதிசயம் தானே?






தன் பிள்ளையில்லா குறையை தீர்க்க சூரிய நாராயணரின் வரப்பிரசாதமாக ஏற்று, அன்னை ராதையிடம் ஒப்படைத்தார் அதிரதர்… தங்களின் தவ வாழ்விற்க்கு கிடைத்த வரமாக, பிணிக்கு கிடைத்த மருந்தாக எண்ணி அக்குழந்தைக்கு “ராதேயன்” என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்…

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த “ராதேயனுடன்” அவனது குறும்புகளும் வளர்ந்து வந்தது, ரதம் செலுத்துவதில் கற்றுத் தேர்ந்த உடன், வில்லை ஏந்தி வித்தை காட்டிட துணிந்தான் “ராதேயன்”. அதிரதன் அந்த பக்கம் அரண்மனைக்கு சென்றால், ராதையை ஏமாற்றி இந்தப் பக்கம், விளையாடிட ஒடி விடுவான் “ராதேயன்”, இது அதிரதருக்கு பெரும் வேதனையை தந்தது, பிள்ளை விளையாட சென்றால், தந்தைக்கு என்ன வேதனை? சந்தோஷம்தானே ஏற்பட்டிட வேண்டும்? ஆம், ஆனால் பிள்ளை மற்ற பிள்ளைகளோடு விளையாட சென்றால் பரவாயில்லை, குதிரையில் ஏறி, கையில் வில்லேந்தி, வித்தை காட்டினால்? எந்த தந்தைக்கும் அச்சம் ஏற்படுவது இயற்கை தானே? அதிலும் அன்றைய கால சூழ்நிலையில், அந்தனர், சத்ரியர் தவிர மற்ற இனத்தவர் அஸ்திரம் ஏந்துவது பெரும் குற்றமாக கருதப்பட்டது. அச்செயல் செய்பவர் சமூகத்தால் விலக்கப்பட்டனர், அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டனர்… எனவே மகனின் நலன் அக்கறை கொண்ட தந்தையாக அதிரதரின் கவலை நியாயமானதே… காலம் இப்படியே கழிந்து கொண்டிருந்த வேளையில், ஒரு சமயம் ராதேயன் தன்னை இகழ்ந்த சில இளைஞர்களை நையப் புடைத்து எடுத்த செய்தி அதிரதர் செவிகளை எட்டியது, தன்னால் தன் மகன் ராதேயன் வாழ்வை சீராக்கிட இயலாதோ? என்ற அச்சம் மேலோங்கியது அதிரதருக்கு, அரசாங்கப் பணிச்சுமை, அவனை (ராதேயனை) கண்காணிக்கவிடாமல் தடையாக நின்றது…

அரசாங்கப் பணியா? அன்பு மகனின் நல் வாழ்வா? என்று வந்த போது அன்பு மகனான ராதேயன் நல் வாழ்வே முக்கியம் என்றெண்ணி, அரசாங்க பணியை உதறிட முடிவெடுத்தார்…

உண்மையில், இது பெரிய தியாகம், அதிகாரம் மிக்க அரசரின் அருகிலேயே எப்போதும் இருக்கும் ஒரு நிலையை, மகனின் நல் வாழ்விற்க்காக தியாகம் செய்தார் அதிரதர், ஆனால் ராதேயன் தன் இலக்கை நோக்கியே பயணம் செய்தான், அஸ்திர, சஸ்திர பயிற்சி பெற்றிட குரு குலம் தோறும் முட்டி மோதினான், ஆனால் அக்கால பழக்க வழக்கங்கள் பெரும் தடையாக நின்று, ராதேயனை விரட்டியடித்தன, மகனின் ஆசையை நிறைவேற்ற அதிரதர் தானும் முயர்ச்சிகள் மேற்கொண்டார், சில ஆரம்ப கட்ட பயிற்ச்சிகளே கற்பிக்கப் பட்டது, ஆனால் ராதேயன் எதிர்பார்த்ததோ, நிபுணுத்துவ கல்வி, அதாவது அஸ்திர சஸ்திர வித்தையில் தனிநிகர் பெற்றிட எண்ணிணான், ஆகவே, இறுதியாக, துரோணாச்சாரியரிடம் சென்று கல்வி கற்பிக்க வேண்டிர், அவரும் அரச குலத்தவருக்கன்றி வேறொருவருக்கு வித்தை கற்பிக்க இயலாது என்று மறுத்துவிட்டார்… இனி விதிவிட்ட வழியென்று மகனை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தார் அதிரதர்… ஆனால், தன்னுள் இருந்த வேட்கை உந்தித் தள்ள ராதேயன், சொல்லாமல், கொள்ளாமல், கிளம்பிவிட்டான் தனக்கொரு குருவை (பகவான் பரசுராமர்) தேடி…






ஆண்டுகள் பல உருண்டோடின, பிள்ளை பாசம், பிள்ளையின் பிரிவு, இரண்டும் அதிரதன், ராதை தம்பதியரை வாட்டியது, திடீரென்று, திரும்பினான் ராதேயன், தேர்ந்த வீரனாக, சூரிய தேஜஸோடு ஜொலித்தான்… மனதில் பாசத்தோடு வாரியணைத்தார்… வந்த சிறிது நேரத்தில் கையில் வில்லேந்தி புறப்பட்டான் ராதேயன், அவன் கால்கள் சென்று நின்றது, அஸ்தினாபுர இளவரசர்கள் போட்டியிடும் போட்டிக்களம்…

அங்கு நடந்தவை தாம் அறிந்ததே, அங்கு அதிரதன் மகன் ராதேயன், அங்க மன்னன் ஆனான், அதன் பிறகு அரண்மனை வாசம், தன் பெற்றோரை தன்னோடு தங்க விரும்பி அழைத்தான், ஆனால், அதிரதர் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்டார், காரணம், தன் மகன் ராதேயன் அதர்மத்தின் பக்கம் சேர்ந்திருப்பதை உணர்ந்திருந்ததால்…

தான் பெறாவிட்டாலும் தன் சொந்த மகனை போல் வளர்த்த பிள்ளையின் நலத்திற்காக, தன் சொந்த சுக, துக்கங்களை, அதிகாரம் கொண்ட அரசாங்க பணியை, துறந்து, அவன் விருப்பத்திற்காக சமூகத்தையே எதிர்த்து, அவனை தர்ம சிந்தனை கொண்டவனாக வளர்த்து, தர்ம வழி நிற்ப்பதற்காக, அதர்மிகள் கொடுத்த அரண்மனை வாழ்வை தூக்கியெறிந்த அதிரதர், உண்மையிலேயே மகாபாரத மாணிக்கம் தான்…




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!