Serial Stories நீயில்லாமல் வாழ்வது லேசா!

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8

‘‘யார் அவர்?” சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான்.

முதலில் அவனை அறைக்குள் அனுமதிக்கும் எண்ணமே சஷ்டிகாவிற்கு இல்லை. ஆனால், ஒருவனை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும் அளவிற்கு அடித்திருக்கிறானே, அதை எதற்கென்று கேட்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வியில் எரிச்சலுற்றாள். “அது எதற்கு உங்களுக்கு? முதலில் இதைச் சொல்லுங்கள், அந்த முரளிதரனை எதற்காக அப்படி போட்டு அடித்தீர்கள்?”

“காரணம் உனக்குத் தெரியாதா?”

“ஆனாலும் லேசாக இரண்டு தட்டு தட்டி எச்சரித்து அனுப்பி இருக்கலாமே! ஏன் இவ்வளவு வன்முறை?”

“அவனை கொலையே செய்யும் அளவு ஆத்திரம் என்னிடம் இருந்தது. இது ஒரு சின்ன எச்சரிக்கைதான். அவனை விடு. இன்று காபி ஷாப்பில் யாருடன் பேசிக் கொண்டிருந்தாய்?”

“எனக்கு தெரிந்தவர்..”

“எந்த அளவு தெரிந்தவர்?”

“ஹலோ, நீங்கள் யார் சார்? எங்கள் கம்பெனி எதிரி. உங்களிடம் ஏன் நான் என் பர்சனல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்?”

” உன்னுடைய பர்சனல்கள் கம்பெனியை பாதிக்கலாமில்லையா? அதிக பிரசங்கித்தனமாக இன்று சேலை கட்டிக் கொண்டு வந்தாயே, அதுபோல!” அவன் பார்வை இப்போதும் அதே சேலையில் இருந்தவளின் மேல் படிந்தது.

“ஏன், இந்த சேலைக்கு என்ன? அழகாக இருக்கிறது என்று எங்கள் அங்கிள் கூட சொன்னார்..”

“ம்.. அழகாகத்தான் இருக்கிறது..” அவளை வருடியவனின் பார்வை இப்போது வேறு விதமாக இருக்க, சஷ்டிகாவிற்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

விநாடியில் பார்வையை மாற்றிக் கொண்டான். “அந்த அங்கிளை பற்றிச் சொல்லு. எந்த அளவு உனக்கு தெரிந்தவர்? உனது ரிலேசனா?”

அவனது தொடர் கேள்விகளில் எரிச்சலானவள், “ஆமாம்! ரொம்பவும் நெருங்கிய சொந்தம்! எனக்கு மாமனாராக போகிறவர்!”

“புரியவில்லை..”

“அவர் மகனை எனக்கு மணம் பேசி இருக்கிறார்கள். அவர் எனக்கு மாமனாராகப் போகிறார்”

“வாட்..?”அவன் அதிர்வது துல்லியமாக தெரிந்தது. கண்களில் வரி வரியாக சிகப்பு கோடுகள் தெரிய ஆரம்பித்தன.

“திருமணமா? சம்மதம் சொல்லிவிட்டாயா?” கருங்கற்களை பற்களால் கடிப்பவன் போலிருந்தது அவன் குரல்.

என் திருமண விசயத்தில் உனக்கென்னடா உரிமை என்று எண்ணியவள், “அநேகமாக சொல்லி விடுவேன் என்று நினைக்கிறேன்” என அறிவித்தாள்.

“ஷிட்..” தன் கையிலேயே குத்திக்கொண்டான்.”பாரு பேபி..”

“சஷ்டிகா..”

“ஓகே சஷ்டி! இது மாதிரி திருமண முடிவெல்லாம் உடனே எடுக்கக் கூடாது. நன்றாக யோசித்து..”

“ஹலோ, என் வாழ்க்கை முடிவுகளை எப்படி எடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்தீர்களென்றால் நன்றாக இருக்கும்!”




“உம்..” ஒருவித உறுமலுடன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான். மிருக்காட்சி கூண்டு சிங்கத்தை நினைவுபடுத்தினான் அக்கணம்.

இப்படி அவனை சீண்டி கோபம் வரவைப்பது சஷ்டிகாவிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க, “அப்புறம் பால்கனிக்கு வான்னு மெசேஜெல்லாம் இனி அனுப்பாதீங்க சார்!” என்றாள் இனிய குரலில்.

அவனது விருக்கென்ற திரும்பலில் கொத்த தயாராகும் அரவத்தின் அப்பட்டமான ஜாடை!

“இன்னொருவரை கல்யாணம் செய்துகொள்ளப் போகும் பெண். நீங்கள் இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்பினால் நன்றாகவா இருக்கும்?”

அவன் முகம் சிவப்பது நன்றாக தெரிந்தது. அந்த முக பாவனையில் தானாகவே ஒரு நடுக்கம் உடல் முழுவதும் பரவ, தன்னை மீறி பின்னால் ஒரு எட்டு எடுத்து வைத்தாள் சஷ்டிகா. ஆனால், கண நேரத்தில் முகச் சிவப்பை மாற்றிக்கொண்டான்.

“ஃப்ரெண்ட்ஸ்..” என்று அவளை நோக்கி கை நீட்டினான். முகம் நிறைய சிரித்தான்!

நீண்ட கையை சந்தேகமாக பார்த்தாள். அதெப்படி ஒரு மனிதனால் இப்படி விநாடியில் பாவனைகளை மாற்ற முடியும்? இ..இவன் மனிதன்தானா? நெஞ்சம் தடதடக்க அவள் இதழ்கள் நடுங்கின.

“ஒரு நட்பிற்காகத்தான் பால்கனிக்கு அழைத்தேன்.. நீ வேறு ஏதோ நினைத்துக் கொண்டாய் போல. அப்படி என்ன நினைத்தாய் பேபி?”

ஏனோ இப்போது இந்த பேபியில் அவளது உள்ளம் நடுங்கியது.

“நடுராத்திரி ஒரு பெண்ணை அறைக்கு வெளியே அழைத்தால் என்ன நினைப்பது?” சீறினாள்.

“வெளியேதானே அழைத்தேன்! உள்ளே இல்லையே!”

“என்னது?” அலறினாள். அப்படிக் கூட அழைப்பானா இவன்!

“இரவு நேரம் அறைக்கு உள்ளே அழைத்தால்தான் தவறான அர்த்தம் வரும். அறைக்கு வெளியே, வெட்ட வெளிக்கு.. நிலவொளிக்கு அழைத்தால் நட்பை தவிர வேறென்ன தோன்றும்?”

சஷ்டிகா திகைத்தாள். நியாயம்தானே என்றது அவள் மனது. நாலு பால்கனி தள்ளி இருளுக்குள் நின்றிருப்பவன், பெரிதாக என்ன தவறு செய்துவிட முடியும்?

“தினமும் இரவு நிலவை ரசிப்பவளை காணோமென்றதும், ‘வாயேன் நிலவை பார்க்கலாம்..’ என்று மெசேஜ் செய்தேன். நிலவை பார்த்ததும் உன் நினைவு வந்தது. சும்மா உன்னை நிலவொளியில் பார்க்கலாமென்ற எண்ணம்தான்!”

இந்த மாதிரி பேச்செல்லாம் நட்பிற்கு கீழ்தான் வருமா? குழப்பத்துடன் அவனை பார்க்க.. “நட்பேதான்!” என்று மீண்டும் கையை நீட்டினான்.

“அதெப்படி எங்கள் தொழில் எதிரி உங்களுடன் நான் எப்படி ஃப்ரெண்டாக இருக்க முடியும்?”

“ஒரே தொழிலில் இருப்பவர்கள் எதிரிகளாக இருக்கமுடியாது பேபி. உன் மேடத்தையே எடுத்துக்கொள்ளேன். என்னிடம் விரோதமா பாராட்டுகிறாள்?”

இல்லைதான். சுமேரியா நேரடியாக வெறுப்பை காட்டுவதில்லை என்றாலும், அவள் உள்ளுக்குள் வி.கே.வி மேல் மறைந்து கிடக்கும் வன்மத்தை சஷ்டிகா அறிவாள்.

“ஒரே தொழிலில்தான் போட்டியும் பொறாமையும் இருக்கும்!”

“அது தொழிலில்! சொந்த வாழ்க்கை என்று வரும்போது எல்லாம் மாறிப் போகும்!”

யாருடைய சொந்தம்? என்ன வாழ்க்கை? என்ன சொல்ல நினைக்கிறான்? ஒன்றும் புரியாமல் எரிச்சலாக அவனைப் பார்த்தாள்.

“எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது பேபி. ஆனால், இப்போது கொஞ்சம் தெளிவாகி விட்டேன்!”

“என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த கான்ட்ராக்ட் அநேகமாக ‘மெரினாஸ்’ கம்பெனிக்கு போகும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்கு லீட் கிடைத்திருக்கிறது..”

சஷ்டிகாவின் முகம் மலர்ந்தது. “நிஜமாகவா? இப்போதே மேடத்திடம் சொல்கிறேன். சந்தோஷப்படுவார்கள்!” சஷ்டிகா எடுத்த போனை இரண்டு விரல்களால் பற்றி தள்ளி வைத்தான்.

“பெண்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம்” என்று அமெரிக்க நிர்வாகம் நினைக்கிறார்களாம்.




“வாவ்..” இரு கை தட்டி ஒரு குதி குதித்தாள். “நல்ல செய்தி சொன்னதற்கு மிகவும் நன்றி சார், நான் இப்போதே..” மீண்டும் அவள் கையில் இருந்து போனை தள்ளி வைத்தான்.

“இந்த கான்ட்ராக்ட்டிற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக இரவு பகலாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன் பேபி. இதனை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”

“ஆனால், உங்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?”

“ஹா! அவ்வளவு எளிதாக நான் எதையும் விட்டுவிட மாட்டேன் பேபி. எனது தொழில் என் உயிர் மூச்சு. இதனை எப்படி விடுவேன்?”

உனக்கேதும் மனநிலை பாதிப்பா என்பதுபோல் அவனை பார்த்தாள் சஷ்டிகா. அமெரிக்க கம்பெனியின் முடிவுகளை நீ எப்படி எடுப்பாய்? அதற்கு வாய்ப்பில்லாமல்தானே இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறாய்!

“உனக்கு பைத்தியமா என்று நினைக்கிறாய்தானே? நான் வேறு மாதிரி யோசிக்கிறேன் பேபி..”

அதுதானே உடனிருப்பவர்களின் மூளையை மழுங்கடித்து பைத்தியமாக்கும் வல்லவன் நீ.. உனக்காவது பைத்தியம் பிடிப்பதாவது! பார்வையை அவன் மேலிருந்து நகர்த்திக்கொண்டு “என்ன யோசனை?” என்றாள்.

“நீ மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்தாயானால், இந்த இக்கட்டிலிருந்து வெளியே வந்துவிடுவேன். போனின் ஒவ்வொரு பாகத்திற்கும் உன் கம்பெனி கோட் செய்திருக்கும் அமௌன்ட்டை மட்டும் எனக்கு தெரிவித்து விட்டாயானால்..”

சஷ்டிகா இவன் உண்மையிலேயே பைத்தியம்தான் என்ற முடிவிற்கே வந்தாள். “இதனை நான் எப்படி சொல்வேனென்று  நினைக்கிறீர்கள்?”

“ஒரு நம்பிக்கைதான்! அந்த இரவும், நிலவும் நம் நட்பும் என்னை உன்னிடம் பரிந்துரைக்குமென்று எதிர்பார்த்தேன்!”

ஆக, இவன் பால்கனிக்கு அழைத்ததன் காரணம் இதுதான்.மனதிற்குள் எதுவோ மளுக்கென உடைவதுபோல் தோன்ற கலங்கிய கண்களை தாழ்த்தியபடி உறுதியாக சொன்னாள்.. “முடியாது!”

“உடனடியாக முடிவு சொல்ல வேண்டாம் பேபி. நன்றாக யோசித்து, இன்று இரவு பால்கனியில் பார்க்கும்போது..”

எவ்வளவு குழைவு குரலில்! தன்னை அந்நேரம் அடி முட்டாளாக உணர்ந்தவள், “ஒழுங்காக பெயர் சொல்லி அழையுங்கள். இந்த கொஞ்சலெல்லாம் வேண்டாம். நீங்கள் தலை கீழாகவே நின்றாலும் நான் வாய் திறக்க போவதல்லை!”

“தலைகீழாகத்தானே? தினமும் காலை சிரசாசனம் செய்வேனே! நாளை காலை ஆறு மணிக்கு என் அறைக்கு வந்தாயானால் நான் தலைகீழாக நிற்பதை பார்க்கலாம். வருகிறாயா? அப்போது கோட் அமௌன்ட் சொன்னால் போதும்!”

பொறுமை மொத்தமாக விடைபெற்றுச் சென்றுவிட, “ப்ளீஸ், தயவுசெய்து வெளியே போங்க..” பற்களை கடித்தபடி பேசியவளை உறுத்துப் பார்த்தான்.

“உன் உதவி இல்லாவிட்டாலும் என்னால் கோட் தெரிந்துகொள்ள முடியும் சஷ்டி”.

“ஹா.. நல்லது! அப்போது அந்த வழியையே உபயோகியுங்கள்!”

“நீ வருத்தப்பட மாட்டாயே?”

“இனியொரு முறை உங்களை தனிமையில சந்திக்கும் நிர்பந்தத்திற்கு தவிர வேறெதற்கும் நான் வருந்தப்போவதில்லை!”

“நல்லது. இன்று இரவு பார்ட்டியில் சந்திப்போம்” போய்விட்டான்.

சஷ்டிகா நிம்மதி மூச்சு விட்டாலும் ஏதோ ஓரு வகை கலவர உணர்வு அவள் உடல் முழுவதும் பரவிக் கிடந்தது.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நிர்வாகிகளில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்று தெரிந்து, அவருக்கு பார்ட்டி கொடுப்போம் என்று இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசி முடிவு செய்திருந்தனர். ஒரு வகையில் அமெரிக்கர்களை மனம் குளிர வைக்கவும்தான் இந்த பார்ட்டி ஏற்பாடு.

மிகுந்த யோசனைக்குப் பிறகு தயக்கத்துடன்தான் சஷ்டிகா அந்த பார்ட்டிக்கு கிளம்பினாள். அதற்கு முன் கவனமாக தான் அணிந்திருந்த சேலையை மாற்றி சுடிதார் அணிந்துகொண்டாள்.

அரை இருட்டான ஹாலுக்குள் வண்ண வண்ணமாய் விளக்குகள் ஒளிர, கையில் ட்ரிங்க்ஸுடன் ஆண்களும் பெண்களும் குழுமி இருந்தனர். சுமேரியாவும் ஜெர்சியும்  கையில் ஆல்கஹால் வைத்திருக்க.. தான் கையில் எடுத்த ஆப்பிள் சாறு மீதும் சஷ்டிகாவிற்கு சந்தேகம் வந்தது.

விரைவில் கிளம்பிவிட வேண்டும் என்று அவள் எண்ணியிருந்த போதுதான் டி ஜே மியூசிக் மாற்றப்பட்டு ஜோடிகளாக நடனமாடத் துவங்கினர். எரிச்சலுடன் கிளம்ப நினைத்தவளின் பார்வை ஒரு இடத்தில் பதிய.. உறைந்தது.

அங்கே சுமேரியாவும் வி.கே.வி&யும் ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்தனர். வழக்கமாக மேலே அணிந்துகொள்ளும் கோட்டை சுமேரியா கழட்டிவிட, உள்ளே டி ஷர்ட் இல்லை. கையற்ற கச்சை போன்ற ஒரு வகை உடை உள்ளே அணிந்திருந்தாள். வெற்றுத் தோள்களும், வெளிர் முதுகும் வெளியே தெரிய, வி.கே.வி&யுடன் இழைந்து அவள் ஆடிய நடனத்தை நட்போடு சேர்க்க முடியாது.

வி.கே.வி&யின் கழுத்தில் கைகோர்த்துக்கொண்ட சுமேரியா, அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். வி.கே.வி அதனை ஆமோதித்து அவளை அணைத்துக் கொண்டான்.




What’s your Reaction?
+1
29
+1
20
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!